ஊரின் ஒதுக்கு புறத்தில் ஏதாவது ஒரு பாலத்தின் அடியில் மற்றும் அதன் நீட்சியில்... சாலையோரங்களில்... சாக்கடை கழிவு நீர் ஓடும் இடத்தை ஒட்டியபடி இருக்கும் இடத்தில்.... எல்லா ஊரிலும்.... ஒரு கூட்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது...

விளிம்பு நிலை மக்கள் என்று கூறுகிறோமே அவர்கள்தான் அவர்கள். 

அன்றன்றைக்கு உழைத்து அன்றன்றைக்கு உண்ணும் ஜீவ ராசிகள். நாம் எதையெல்லாம் கேவலமாக எண்ணுகிறோமோ.... அந்த வேலையை எல்லாம் தினமும் வேலையாகவே செய்யும் மக்கள். அந்த அடித்தட்டு மக்களின் அஸ்திவாரத்தில்தான் நம் மேம்பாலங்களும்... மேல் தட்டு சாக்கடைகளும்.....கழிப்பறைகளும் சுத்தமாகின்றன. தலை குனிந்து குடிசைக்குள் மட்டுமல்ல..... இந்த சமூகத்துக்குள்ளும் நுழையும் இந்த மக்களின் வாழ்வே இந்தப் படம்.

Paambhu Sattai Movie
என்ன பேர் ........."பாம்பு சட்டை" என்று யோசித்துக் கொண்டுதான் பார்த்தேன்.. முதல் அரைமணி நேரம் என்ன யோசனையை சரி என்றே நம்ப வைத்தார் இயக்குனர் "ஆடம் தாசன்". கதை நாயகன் பாபி கள்ள நோட்டு கும்பலுக்குள் நுழையும் இடத்திலிருந்து கதையின் போக்கும்.. காட்சி படுத்தலின் தாக்கமும்... இது வேற மாதிரி படம் என்று தெரிய வைத்தது.

"உங்கப்பா செத்துட்டா உங்கம்மாவ வீட்டை விட்டு தொறத்திடுவியா"ன்னு ஒரு வசனம் வருகிறது. அதற்கு பின்னால் ஒளிவட்டமாய் சிதறும் அம்மாவும் அண்ணியும் ஒன்னுடா என்ற கருத்தை  செருப்பைக் கழட்டி அடிக்கிறது ஒரு படைப்பாளியின் ஆன்மா. வணக்கம் சொல்லி டைட்டில் கார்ட் போடும் இடம் இது. பாபி சும்மாவெல்லாம் சினிமாவில் இல்லை என்று தாரா ளமாக நம்பலாம். கடைசி அந்த ஒரு சண்டை போதும். விரட்டி விரட்டி அடிக்கும் நடிப்பும்..... ஆக்ரோஷமும்.. படமாக்கிய விதமும்... ஆடம் தாசனின் டீமுக்கு மிகப்பெரிய கைகுலுக்கல். 

படத்தின் தொடக்கமே ஒரு பெண்ணும் ஆணும் ஒரே குடிசையில் ஒன்றாக வசிக்கிறார்கள் என்று தான் காட்டப்படுகிறது. கதையின் போக்கில் அது பாபியின்  அண்ணனின் மனைவி என்று தெரிய வருகிறது. மாற்றங்களை இப்படித்தான் புகுத்த முடியும். சமூகத்தில் புரையோடிய சில கண்கள் எப்போதும் அப்படித்தான். தப்பே அத்தனை தீவிரமாக இருக்கும் போது நல்லது எத்தனை தீவிரமாக இருக்க வேண்டும். அதன் படி நகரும் கதையில் பாபி கீர்த்தியின் காதல். கீர்த்தியின் அப்பா சார்லி. நீண்ட இடைவெளிக்கு பின் சமீபமாக தன் நுணுக்கமான நடிப்பால்.. அனுபவத்தின் சாயலால்... கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் மனிதர் வெளுத்து வாங்குகிறார். ஒரு லட்சத்துக்காக விஷ வாயு நிறைந்திருக்கும் சாக்கடைக்குள் மூழ்கும் இடம்.. வெறும் காட்சி அல்ல. இன்றும் நாம் கண்டும் காணாமல் செய்தியாக மட்டுமே கடந்து செல்லும் விஷ வாயு தாக்கி இருவர் பலி என்ற மானுட துரோகம்.

அண்ணிக்கு மறுமணம் ஏற்பாடாகும் சமயத்தில் எங்கெங்கோ கஷ்டப்பட்டு காதலியிடமும் கையேந்தி கடன் வாங்கி சேர்த்த 5 லட்சமும் கள்ள நோட்டு கும்பலால் பறிக்கப்படும் போது பதறி நிற்கிறது காட்சி. "அயோ பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கே" என்று நாயகன் புலம்பும் இடம்.. அவன் ஒரு வழக்கம் போல அதி தீவிர நாயகன் என்பதை கடந்து விட்டு நிஜமாகவே விளிம்பு நிலைக்காரனின் கோபத்திலும்.....பயத்திலும் திரைக்கதையாகி திரை விரிக்கிறது. சமீப காலத்தில் எனக்கு தெரிந்து இத்தனை அற்புதமான வில்லனை நான் சினிமாவில் பார்க்கவில்லை. வில்லனை ரசிக்கும் நேர்த்தி ஒப்பனையில் கனக்கச்சிதம். வஞ்சத்தை நெஞ்சில் கொண்டு குரூரத்தை கண்களில் கொண்டு வாய்மொழியில் நிதானத்தை கையாளும் கொடூரத்தன்மையில் மிக அழகாக ஒலிக்கிறது "தம்பி... தம்பி" என்று நாயகனை வழிக்கு கொண்டு வரும் இடம். இருள் தேசத்தில் கொலையும் கொள்ளையும்.. வாழ்வும் மரணமும்.. அதி பயங்கரமாக விரிகையில் உயிரை தாண்டிய வலிமை இந்த பணத்துக்கு உண்டு என்று மருண்டு மிரண்டு நம்பத் தோன்றுகிறது.

நாம் தெரிந்தோ தெரியாமலோ வீண் செய்யும்  ஒவ்வொரு பருக்கைக்கு பின்னும் ஒரு உழவனின் கால் வலி... கை வலி... உயிர் வலி..... இருக்கிறது....என்பதை மகள் புரிந்து கொள்ள சார்லி பேசும் ஒரு வசனம்.... கண்டிப்பாக உங்களை தூங்க விடாது. அரிசிக்கு பின்னால் அரசியல் இருக்கிறதோ இல்லையோ தெரியாது.... நல்ல ஆன்மாக்களின் பரந்த மனசு இருக்கிறது.அது தீரா வலியின்பால் மீண்டும் மீண்டும் தன்னையே தூற்றிக் கொண்டிருக்கிறது. மலம் அள்ளும் கூட்டம் இல்லை என்றால் சாக்கடை அள்ளும் கூட்டம் இல்லையென்றால்.... உங்கள் சுத்தத்தை வைத்துக் கொண்டு எந்த சோற்றை சமைப்பீர்கள் தோழர்களே....உழவன் இல்லாத தேசத்தில்.... கம்பியூட்டரை உண்டு வாழ முடியுமா.....? கேள்விகளை அடுக்குகிறது.

வஞ்சத்தை வஞ்சத்தாலே வெல்லும் க்ளைமாக்ஸ் அற்புதம். வனாந்திர காட்டில் காகம் கூட கரையா சாலையில்... வெயில் பட.... வண்டி நிற்கையில் வண்டியை விட்டு வில்லனும் தெரிந்தே இறங்கி நிற்க... நாயகனும் தெரிந்தே இறங்கி நிற.... சிறு மௌனம்.. சிறு இடைவெளி.. ஆசுவாசம் கூட மூச்சிரைக்கும் மெல்லிய கோடுகளின் நீட்சியில்... திரைமொழி படு வேகமாக பாவனைகளை அள்ளித் தெளிக்க... படக்கென்று வில்லன்.. "பொருளை எடுடா" என்று கத்தும் போது அதுவரை தொண்டையை அடைத்துக் கொண்டிருந்த இசை பீறிட்டெழ.......குரு சோமசுந்தரம்.. பொருளை எடுத்து தராமல் பின் வாங்க... கதை நாயகன்.. வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டம் அதகளம்.

விரட்டி விரட்டி அடிக்கும்......அடிபடும்... இடங்கள் எல்லாம்... மிரட்சியின் சிலிர்ப்பு. பாம்பு தன் சட்டையை உரிக்கும் இடம். அது நல்ல பாம்பா கெட்ட பாம்பா என்று இக்காட்சியில் திரைக்கதையை திருப்பி திருப்பத்தை RV உதயகுமாரின் பாத்திரப் படைப்பின் மூலமாக மீட்டெடுக்கும் ஆடம் தாசன்... இன்னொரு "உறியடி" விஜய் குமாராக இன்னொரு "மூடர் கூடம்" நவீனாக.......ஏன் அவர்களையும் மிஞ்சும் சிறந்த படைப்பாளியாகவே தெரிகிறார். 

பாம்பு சட்டை....செத்தாலும் தீயதை தோலுரிக்கிறது....

- கவிஜி

Pin It