பெண்களின் உடலை உடைமையாகப் பார்க்கும் நிலப்பிரபுத்துவப் பண்பாடும், அதை போகப் பொருளாக பார்க்கும் முதலாளித்துவ பண்பாடும், அடிப்படையில் பெண்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை ஆகும். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் புரட்சியின் மூலம் நிலப்பிரபுத்துவத்தை தூக்கி எறிந்தது போல இந்திய சமூகத்தில் நடக்கவில்லை என்பதால் இங்கே நிலப்புரபுத்துவ சிந்தனையின் தாக்கம் இன்று வரையிலும் மூர்க்கத்தனமாக தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. நிலப்பிரபுத்துவ சிந்தனையை மாற்றும் எந்தவித பெரும் புரட்சிகளும் இன்றி உலகமயமாக்கலுக்குள் நுழைந்த இந்தியா இன்று பழைய தேங்கிய கலாச்சார வாழ்க்கை முறையையும், வலுக்கட்டாயமாக உட்செல்லப்பட்ட முதலாளித்துவ சிந்தனையையும் ஒருங்கே பெற்ற மனிதர்களை உருவாக்கி இருக்கின்றது. இதனால் இந்திய ஆண்களிடம் பெண்களின் உடலை உடைமையாகப் பார்க்கும் வெறித்தனமான பிற்போக்கு சிந்தனையும், பெண்ணின் உடலை போகப்பொருளாக பார்க்கும் சிந்தனையும் இணைந்து தொழிற்பட்டு இந்தியப் பெண்களை வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றது. ‘நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள், நீ என்னை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்பதும், பார்க்கும் பெண்களை எல்லாம் தன்னுடைய உடைமையாகக் கருதி உறவு கொள்ள முயல்வதும் கேடுகெட்ட நிலப்பிரபுத்துவ, முதலாளிய சிந்தனையின் வெளிப்பாடுகள் தான்.

Gowsalya Sakthiஇன்று இந்திய சமூகம் சந்தித்துக் கொண்டு இருக்கும் பெரும் பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது. ஆணாதிக்க வக்கிரம் பிடித்த இந்திய ஆண்களிடம் இருந்து வேட்டையாடப்படும் பெண்களின் எண்ணிக்கை, உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நாடு இந்தியா என்ற நிலை ஏற்பட வழியேற்படுத்தி இருக்கின்றது. இது போன்ற குற்றச் செயல்கள் நடக்கும்போது கடுமையான சட்டங்கள் இயற்றுவதும், தண்டனை பெற்றுக் கொடுப்பது மட்டுமே அரசு என்ற அமைப்பால் செய்ய முடிந்த காரியங்கள். ஆனால் நடக்காமல் தடுப்பது, ஆணாதிக்க சிந்தனைக்கு எதிரான மனநிலையை உருவாக்குவது என்பதெல்லாம் சமூக மாற்றத்தை எதிர்நோக்கி அதற்காக களப்பணியாற்றும் அமைப்புகளின் செயலாகும். அதுவும் பெண்களுக்கான முழு ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் கோரி நிற்கும் அமைப்புகளுக்கு கூடுதல் பொறுப்புள்ளது.

அது போன்ற அமைப்புகளில் பணியாற்றும் ஆண்கள் இயல்பாகவே பெண்களை மதிப்பவர்களாகவும், அவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பவர்களாகவும், அவர்களின் சமத்துவத்திற்கு உழைப்பவர்களாகவும் இருப்பார்கள். பெண்களிடம் எண்ணத்தாலும், சொற்களாலும், நடத்தையாலும் கண்ணியத்தை வெளிப்படுத்துபவர்களாய் இருப்பார்கள். அது அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட சித்தாந்தத்தின் உடன்விளைவு ஆகும். ஆனால் பெண்களை உடைமையாக, போகப்பொருளாக கருதும் பிற்போக்கு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் நாம் இந்த அணுகுமுறையை எதிர்பார்க்க முடியாது. ஒரு நேர்மையான முற்போக்குவாதி பிற்போக்கு அமைப்புகள், கட்சிகள் போன்றவற்றில் எப்படி இருந்து பணியாற்ற முடியாதோ, அதே போல ஒரு பிற்போக்குவாதியும் முற்போக்கு அமைப்புகளில் இருந்தும் பணியாற்ற முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் உளவாளிகளாவோ, பொறுக்கித் தின்பதற்காகவோதான் இருப்பார்கள். இது போன்ற நபர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்தாவிட்டால் அது ஒட்டுமொத்த அமைப்பையே ஆட்டம் காணச் செய்துவிடும். ஓரடி முன்னால், ஈரடி பின்னால் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும்.

கவுசல்யா- சக்தி இணை சம்மந்தமாக சென்னையில் உள்ள திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் 27/12/2018 அன்று தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சக்திக்கு 3 லட்சம் ரூபாய் அபராதமும், 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, நிமிர்வு கலையகத்தில் இருந்து அவர் வெளியேற வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கவுசல்யா-சக்தி திருமணம் நடந்த போதே சக்தியைப் பற்றிய தகவல்கள் வெளியே வர ஆரம்பித்துவிட்டன. ஆனால் அதன் உண்மைத்தன்மையில் சந்தேகம் இருந்ததால் அது பற்றி பொதுவெளியில் விவாதிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது சக்தியின் மீது சுமத்தப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் அனைத்தும் உண்மை என்பது அம்பலமாகி இருப்பதாலும், அதுபற்றி தகவல்கள் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாலும் இந்தப் பிரச்சினையின் மீது விமர்சனம் வைக்க வேண்டியதாகின்றது.

பொதுவாழ்க்கையில் அதுவும் முற்போக்கு சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளின் மீது சக்தியின் செயல் நீங்காத கறையை ஏற்படுத்தி இருக்கின்றது. இது போன்ற நபர்களை நாம் அமைப்புக்குள் ஊடுறுவியுள்ள கழிசடைகள் என்று தான் வகைப்படுத்த வேண்டுமே ஒழிய, அவர்கள் மீது மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது நீண்ட காலப் போக்கில் அமைப்பின் மீதான நற்பெயருக்கு கள‌ங்கம் தான் விளைவிக்கும். சக்திக்கு தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை என்பது நமக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது ஏதோ தவறுதலாக நடந்த குற்றமல்ல, சக்தி பெண்களுக்கு மட்டுமல்லாமல் திருநங்கை போன்றவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதில் இருந்து, அவர் அப்பட்டமான பாலியல் வக்கிரம் பிடித்த நபர் என்பது தெரிய வருகின்றது. இவர் தன்னுடைய பாலியல் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ள முற்போக்கு அமைப்புகளை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி இருக்கின்றார். அவரை எந்த வகையிலும் மன்னிப்பது என்பது முற்போக்கு அமைப்புகள் இத்தனை நாட்களாக பெண்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும் உழைத்த ஒட்டுமொத்த உழைப்பையும் கேலிக்கூத்தாகிவிடும்.

நமக்கு ஏற்படும் நெருடல் எல்லாம் இது போன்ற பாலியல் வக்கிரம் பிடித்த நபரால் பல பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தும், எப்படி தோழர்கள் இவரின் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் விட்டார்கள் என்பதுதான். இப்போதும் இந்தப் பிரச்சினை சாதாரணமாக பேசித் தீர்க்கப்பட்டிருப்பது பெரும் வருத்தத்தையும், ஆத்திரத்தையுமே தருகின்றது. நிச்சயம் இது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாகவோ, இழப்பீடாகவோ இருக்காது. எல்லாவற்றுக்கும் விலை வைப்பது என்பது முதலாளித்துவப் பண்பாடாகும். குடிப்பது, புகை பிடிப்பது போன்று இதை தனிநபர் ஒழுக்கக் கேடான ஒன்றாக நாம் பார்க்க முடியாது. இன்று இந்தியப் பெண்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆணாதிக்க வக்கிரபுத்தியின் பிரதிநிதியாகவே சக்தி இருக்கின்றார். அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்க முன்வராத போது நாம் எதுவும் செய்வதற்கில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நின்று அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்து புகார் கொடுக்க வலியுறுத்தினோமா என்பதும் மிக முக்கியம்.

சக்தி 6 மாதங்கள் அல்ல, இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் எந்த முற்போக்கு அமைப்புகளின் மேடைகளிலும் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, பெண்களின் உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் குரல் கொடுக்கும் நேர்மையான தோழர்களின் கடமையாகும். அவர் அப்படி மேடை ஏற விரும்பினால், அதற்காகவே பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவர்களின் மேடை இருக்கின்றது. சக்தி போன்றவர்கள் இனி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் தனி மனிதனைவிட அமைப்பு முக்கியம் என்பதுதான். பல பேரின் கூட்டு உழைப்பு அது. அதைத் தன்னுடைய பாலியல் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ள பயன்படுத்தினால், திரும்பவும் சொல்கின்றோம் ‘தனி மனிதர்கள் முக்கியமல்ல’.

- செ.கார்கி

Pin It