குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரத்தில் 2002 பிப்ரவரி 28 ம் நாள் தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் சுமார் 3000 சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

teesta setalvadபல மாவட்டங்களில் முஸ்லீம் மக்களின் வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் மற்றும் கடைகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. குடியிருப்பும், வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் முஸ்லீம் பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தார்கள்.

படுகொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு குற்றங்களில் திட்டமிட்டு ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்., விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் நபர்கள் மீது காவல் நிலையங்களில் அரசியல் தலையீட்டால் சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட சில வழக்குகளிலும் கண் துடைப்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசு வழக்கறிஞர்கள் உதவியோடு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

நரேந்திர மோடி முதல்வராக இருந்த இந்த படுமோசமான கால கட்டத்தில் சட்டத்தின் ஆட்சி அங்கே முற்றிலுமாக சீரழிக்கப்பட்டது. 1.3.2002ம் நாள் நள்ளிரவு வதோரா நகரில் (பரோடா) பெஸ்ட் பேக்கரி என்ற பெயரில் இயங்கி வந்த ரோட்டி கடை உணவகம் சங்பரிவார் நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 14 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். கொலையாளிகளிடமிருந்து இளம்பெண் ஜஹிரா மற்றும் அவரது தாயார் மட்டும் தப்பிப் பிழைத்தார்கள்.

குஜராத் போலீசார் 21 குற்றவாளிகள் மீது கொலை குற்றம்சாட்டி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையில் சம்பவத்தை நேரில் கண்ட அனைத்து சாட்சிகளும் நீதிமன்ற வாளகத்திலேயே பகிரங்கமாக மிரட்டப்பட்டார்கள். படுகொலையை நேரில் பார்த்த ஜஹிராவும் அவரது தாயாரும் மிரட்டப்பட்டார்கள். மிரட்டலின் காரணமாக உண்மையில் நடந்த சம்பவங்களை மாற்றி மறைத்து சாட்சி சொன்னதின் காரணமாக குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

மும்பை மனித உரிமைப் போராளி திருமதி. டீஸ்த்தா ஷெகல்வாத் அவர்களின் துணிச்சலான முயற்சியால் மனித உரிமை கமிசன் மற்றும் உச்ச நீதிமன்றக் கதவுகள் தட்டப்பட்டன. உச்ச நீதிமன்ற தலையீட்டால் வழக்கின் புலன் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை அகமதாபாத் நீதிமன்றத்திலிருந்து மும்பை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நடைபெற்ற விசாரணையில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்தது. சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அகமதாபாத் நீதிமன்றத்திலிருந்து மும்பை சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கின் விசாரணை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட பொழுது மாநிலத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. உதாரணமாக “அன்றைய முதல்வர் நரேந்திர மோடியை ஒரு நீரோ மன்னர் என்றும், அவரது ஆட்சியின் கீழ் போலீஸ் அதிகாரிகள் வேலியே பயிரை மேய்ந்தது போல் நடந்து கொண்டார்கள்" என்றும், நீதிமன்ற விசாரணையில் அரசு வழக்கறிஞர்கள் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் காட்ட வேண்டிய அக்கறையைவிட வழக்கிலிருந்து அவர்களை விடுதலை பெற்று தப்பிச் செல்வதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்ச்சித்தது. ( ஆதாரம் - (2004) 4 Supreme Court Cases பக்கம் 158- நீதிபதிகள் துரைசாமி ராஜூ மற்றும் அரிஜூத்பயாசத் - மேல்முறையீடு எண். 146 முதல் 452 ,2004. தீர்ப்பு நாள் 12.04.2004 )

அடுத்து பில்கீஸ்பானு வழக்கு என்று பெயர் பெற்ற வழக்காகும். குஜராத் மாநிலம் ரந்திக்பூர் கிராமத்தில் பில்கீஸ்பானு என்ற 21 வயது முஸ்லீம் இளம்பெண் குடும்பம் பால் வியாபாரம் செய்து பிழைத்து வந்தது. 2002 பிப்ரவரி 28 ம் தேதி ரந்திப்பூர் கிராமத்தில் சுமார் 500 சங்பரிவார் நபர்கள் சூழ்ந்துகொண்டு முஸ்லீம் குடுமங்கள் மீது தாக்குதல் தொடுத்தார்கள். பில்கீஸ்பானு 5 மாத கர்பிணி. அவரை 5 பேர் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து, சித்ரவதை செய்தது. மூன்று வயது குழந்தை சலேகாவைப் பிடுங்கி தரையில் அடித்துக் கொன்றார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் 4 பேரை வெட்டிக் கொன்றார்கள். கொலை செய்யப்பட்ட 14 பேரில் 8 சடலங்கள் தான் பின்னால் தோண்டி எடுக்கப்பட்டன. 6 சடலங்கள் இன்றுவரை கிடைக்கவில்லை.

இந்த வழக்கையும் குஜராத் காவல்துறை சட்டப்படி முறையாக பதிவு செய்து புலன் விசாரணை செய்யவில்லை. சுமார் 6 ஆண்டு காலம் பில்கிஸ் பானு, மனித உரிமை போராளி திருமதி.டீஸ்த்தா ஷெகல்வாத்தும் போராடி மனித உரிமை கமிஷன் மற்றும் உச்ச நீதிமன்ற தலையீட்டின் பேரில் மும்பை சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி.யு.டி.சால்வி 21.1.2008 ம் நாள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். ஒரு சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள். மேல் முறையீடு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

மேற்சொன்ன இரண்டு வழக்குகள் குஜராத் நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலத்தில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் உண்மையான குற்றவாளிகள் நீதியின் பிடியிலிருந்து தப்பித்துச் செல்ல உதவிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில், ஒரு மாநில அரசின் மீது நம்பிக்கையில்லாமல், வேறொரு மாநிலத்திற்கு மதக்கலவர வழக்குகள் விசாரணைக்காக மாற்றப்பட்ட வரலாறு நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது தான் ஏற்பட்டது *.

- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்

Pin It