இந்த நாட்டின் அரசு அமைப்புகள் அனைத்தும் பார்ப்பனிய மயப்படுத்தப்பட்டு விட்டது என்பதற்கு மற்றொரு சாட்சியாக மாறியிருக்கின்றார் சஞ்சீவ் பட். காவி பயங்கரவாதிகளை எதிர்ப்பவர்கள், அம்பலப்படுத்துபவர்கள் என்ன நிலைமைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதை இந்த நாடு அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருகின்றது. முற்போக்குவாதிகள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள செயல்பாட்டாளர்கள் தவிர வேறு யாருமே காவி பயங்கரவாதிகளால் தினம் தினம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் கைதுகளையும், கொலைகளையும், தாக்குதல்களையும் பெயரளவிற்குக் கூட கண்டிப்பது கிடையாது. அந்த அளவிற்கு இந்திய மக்களின் மனங்களில் பாசிசம் திணிக்கப்பட்டு நச்சாக்கப்பட்டிருக்கின்றது.

Sanjiv Bhattஒரு பக்கம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்க சதித்திட்டம் தீட்டிய கொலைகாரர்கள் எல்லாவகையான ஆதாரங்கள் இருந்தாலும் விடுவிக்கப்படுவதும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கூட தேர்ந்தெடுக்கப்படுவதும், இன்னொரு பக்கம் காவி பயங்கரவாதிகளை துணிவுடன் அம்பலப்படுத்திய நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுவதும் வெட்கமற்ற முறையில் நடந்தேறிக் கொண்டு இருக்கின்றது.

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மோடி அரங்கேற்றிய வரலாறு காணாத இன அழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திற்காகவும், கடைசிவரை மோடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் சட்ட ரீதியாக மோடியை சிறைக்கு அனுப்ப போராடியதற்காகவும் சஞ்சீவ் பட் தற்போது பழிவாங்கப்பட்டிருக்கின்றார்.

1900 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை முன்வைத்து அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றபோது, குஜராத்தில் ஆட்சியில் இருந்த ஜனதா தளம் அரசு அவரைக் கைது செய்தது. இதைக் கண்டித்து விசுவ இந்து பரிஷத், பிஜேபி போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டன. குஜராத்தின் ஜாம்நகர் துணை எஸ்.பி.பியாக இருந்த சஞ்சீவ்பட் தலைமையிலான போலீஸார் இது தொடர்பாக 1990 அக்டோபர் 30 ஆம் தேதி 150 பேரைக் கைது செய்தனர். அதில் ஒருவர்தான் பிரபுதாஸ் வைஷ்னானி. ஒன்பது நாட்கள் போலீஸ் காவலுக்குப் பிறகு ஜாமீனில் வீட்டிற்குத் திரும்பிய இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்து விடுகின்றார்.

போலீசார் தாக்கியதாலேயே பிரபுதாஸ் வைஷ்னானி இறந்ததாக அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருந்திருந்தனர். இந்த வழக்கில்தான் 29 ஆண்டுகள் கழித்து தற்போது ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கின்றது. மேலும் ஐந்து பேருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.

அத்வானி நடத்திய ரத யாத்திரையால் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் நடைபெற்றது என்பதும், அதன் தொடர்ச்சியாக பாபர்மசூதி இடிக்கப்பட்டது என்பதும் இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புப் பக்கங்கள். குஜராத்தில் மட்டும் 26 கலவரங்கள் நடைபெற்றது. அதில் 99 பேர் கொல்லப்பட்டார்கள். அதே போல உ.பியில் 28 கலவரங்கள் நடைபெற்றது. அதில் 224 பேர் கொல்லப்பட்டார்கள். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சாமானிய மக்களுக்கு மதவெறி ஊட்டி அவர்களை பார்ப்பனியத்தின் கூலிப்படையாக மாற்றி சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஏவிவிடும் கேடுகெட்ட கும்பல்களைத்தான் சஞ்சீவ்பட் அன்றும் கைது செய்திருக்கின்றார். மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த சஞ்சீவ் பட் நினைத்திருந்தால் நல்ல வருமானம் தரும் ஏதாவது ஒரு வேலைக்குப் போயிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகத்தான் இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தார்.

ஆனால் எவ்வளவுதான் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று போராடினாலும் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனங்களை தட்டிக் கேட்டால், அம்பலப்படுத்தினால் என்ன நேருமோ அதுதான் சஞ்சீவ் பட்டுக்கும் தற்போது நேர்ந்திருக்கின்றது.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி தலைமையில் கூட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் “இந்துக்கள் தங்கள் கோபத்தை முஸ்லிம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டட்டும்” என்று நரேந்திர மோடி காவல்துறை உயரதிகரிகளுக்கு உத்திரவிட்டதை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சஞ்சீவ்பட் அம்பலப்படுத்தினார். அம்பலப்படுத்தியதோடு தனது உயரதிகரிகளை தொடர்புகொண்டு திட்டமிட்டு நடக்கவிருக்கும் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார். ஆனால் முழுவதும் காவிமயப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கொலைகார அரசு இயந்திரம் எதுவும் அவர் சொல்வதைக் கேட்கவில்லை. பிப்ரவரி 28 ஆம் தேதி காவி பயங்கரவாதிகளுக்குப் பயந்து குல்பர்க சமூகக் கூடத்தில் தஞ்சம் அடைந்த காங்கிரசின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி உட்பட 69 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

சஞ்சீவ் பட் இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தார். அதில் மோடி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தான் கலந்து கொண்டதையும், மோடி கலவரம் நடப்பதற்கு ஆதரவாக செயல்பட்டதையும், இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு சரியாக விசாரிக்கவில்லை என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ்பட் கலந்து கொள்ளவே இல்லை என்று அன்றைக்கு டி.ஜி.பியாக இருந்த சக்ரவர்த்தி மறுத்தார். ஆனால் சஞ்சீவ் பட்டின் ஓட்டுநராக இருந்த பந்த் அன்றைய கூட்டத்தில் சஞ்சீவ்பட் கலந்து கொண்டதாகவும் அவருக்காக தான் வெளியே வண்டியுடன் காத்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இந்த சாட்சி எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதுதான் உண்மை. எப்படியெல்லாம் தாங்கள் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றோம், எப்படி வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்து சூலாயிதத்தால் குத்திக் கொன்றோம் என்று ரத்தவெறி பிடித்த மிருகங்கள் பேசியதை வீடியோ பதிவாக வெளியிட்ட தெகல்கா ஆவணங்களை வைத்துக் கொண்டே மோடியையும், கலவரத்தில் ஈடுபட்டவர்களையும் தண்டிக்க இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குத் துப்பில்லாதபோது ஒரு டிரைவரின் வாக்குமூலமா ஏற்றுக் கொள்ளப்பட போகின்றது?

ஆனால் மோடி அந்த ஓட்டுனரையும் மிரட்டினார். சஞ்சீவ்பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராக பொய் வாக்குமூலம் வாங்கி விட்டதாக அந்த ஓட்டுநரிடமே புகார் ஒன்றை எழுதி வாங்கி, அதன் அடிப்படையில் சஞ்சீவ் பட்டை சிறையில் வைத்தார். மேலும் அவர் சிறையில் இருந்த போது அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் திருடப்பட்டன. சஞ்சீவ்பட்டைப் போலவே 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவரும், பின்னர் அப்ரூவராக மாறியவருமான பாஜக முன்னாள் அமைச்சர் ஹிரோன் பாண்டியா படுகொலை செய்யப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுத் துறையிடம் மோடி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தான் கலந்துகொண்டதையும் அதில் மோடி “இந்துக்கள் தங்கள் கோபத்தை முஸ்லிம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டட்டும்" என்று சொன்னதையும் வாக்குமூலமாக மீண்டும் பதிவு செய்தார் சஞ்சீவ்பட். இதனால் ஆத்திரம் அடைந்த மோடி இனி மேலும் இவரை விட்டுவைத்தால் தன்னுடைய பிரதமர் கனவுக்கே வேட்டு வைத்துவிடுவார் என்று எண்ணி அவரை சிறைக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன் விளைவாக சஞ்சீவ் பட் அனுமதி பெறாமல் பணிக்கு வராது இருந்தது, அரசு வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டில் அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு 2015ல் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

போதை மருந்துகள் வைத்ததாக எழுந்த புகார்களின் பேரில் 2018 செப்டம்பரில் இருந்து சஞ்சீவ் பட் சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனையானது செஷன்ஸ் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது என்பதால் இன்னும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் காவி பயங்கரவாதம் தலைவிரித்து ஆடும் காலத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் நம்மிடம் வறட்சியாக இருக்கின்றது.

- செ.கார்கி

Pin It