மாண்புமிகு?? சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அவர்களின் 26.05.2016 தேதியிட்ட (Judicial Notification No. SRO C-12/2016) பரிந்துரையின் படி தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட விதிகள் இப்படித்தான் சொல்கின்றன. வழக்கறிஞர்கள் பிரிவு 34 (1)-ன் படி உயர்நீதிமன்றங்கள் சட்ட விதிகளை வகுத்துக் கொள்ள வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில்,
வழக்குரைஞர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைக் குறித்த விதிகளில் கீழ்க்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட திருத்தங்களின் அடிப்படையில் இனிமேற்கொண்டு உடனடியாக வழக்குரைஞர்கள் மீதான விசாரணைகள், நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நேரடியாக உச்ச. உயர்நிதிமன்ற, மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கபட்டுள்ளது…
பிரிவு 14ஏ - தடை செய்யும் அதிகாரம்:
நீதிபதியின் பெயரைக் கூறி பணம் பெறுவது, நீதிமன்ற உத்தரவுகள், ஆவணங்களை திரிப்பது, நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரிக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, நீதிபதிகள் மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளிப்பது, நீதிமன்ற வளாகம், நீதிமன்ற அறைக்குள் போராட்டம் நடத்துவது, மது அருந்திவிட்டு நீதிமன்ற அறைக்குள் நுழைவது ஆகியவற்றில் ஈடுபட்டால் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதி மன்றங்களில் ஆஜராக நிரந்த ரமாக அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் காலம் வரை தடை விதிக்கப்படும்.
14பி - நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்:
விதி 14-ஏ-யில் கூறப்பட் டுள்ள ஒழுங்கீன நடவடிக்கை யில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவும், அவர்களை உயர் நீதிமன்றம், அனைத்து கீழமை நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு தடை விதிக்கவும் உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.
அதேபோல, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.
கீழமை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், கீழமை நீதிமன்றம் இதுகுறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வும், தடை விதிக்கவும் அதிகாரம் உள்ளது.
14சி - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:
நடவடிக்கை எடுக்கும் முன்பு, முதலில் நேரில் ஆஜராகச் சொல்லி வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம், மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்ற நீதிபதிகள் சம்மன் அனுப்ப வேண்டும்.
இடைக்கால உத்தரவு
14டி - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்:
விசாரணை நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கருதும் வழக்குக ளில், இடைக்கால தடை விதிக்க இந்த சட்டப்பிரிவு வழிவகை செய் கிறது.
(ஆதாரம் இந்து தமிழ் நாளிதழ் 28.05.2016)
ஊழல்-பாசிசத்தின் மறுபெயர் நீதிமன்றம்
நாறிப்புழுத்துக் கொண்டிருக்கும் நீதித்துறை தனக்குத் தானே அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்பதன் வெளிப்பாடே மேற்படி சட்டத்திருத்தம். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்டாத, மக்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாத, மக்களின் உழைப்பில் கொழுத்துத் திரியும் நீதி எஜமானர்கள் மக்களின் வாழ்வியலுக்கு ஆப்பு வைக்கிற அத்தனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த உலகின் ஆகப்பெரும் சனநாயகத்தை நடைமுறையில் வைத்திருப்பதாக பீற்றுகிற இந்திய அரசும், அதன் எடுபிடி மாநில அரசுகளும் தங்களுடைய மக்கள் விரோத திட்டங்களுக்கும், செயல்களுக்கும் மக்களின் எதிர்ப்பும், போராட்டங்களும் கிளம்புகிற போது தங்களுடைய ஆகாவாலித்தனமான அத்தனை திட்டங்களுக்கும், நீதித்துறையின் மூலமாக எளிதில் ஒப்புதல் வாங்கிவிடுவதையும், அதற்கு மேல் ஒன்றுமில்லை என்று மக்களை நம்ப வைத்துவிடுவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
சாமான்ய மக்களின் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மிக எளிதாக ஆளும்வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் நீதியின் பெயரில் நடைபெறும் அரசியல். நீதிமன்றங்களின் இத்தகைய செயல்பாடுகள் அரசின் திட்டங்களின்-செயல்களின் பிண்ணனியல் இருக்கிற கார்ப்பரேட்களை உச்சிக் குளிரச் செய்கிறது. பிரதிபலனாக நீதிமன்றத்தின் அதிகார பீடத்தில் இருப்பவர்கள் தங்களுடைய அபிலாசைகள் அனைத்தையும் அரசின் பிரதிநிதிகள், அதிகார வர்க்கம், கார்ப்பரேட்டுகள், அரசியல்வாதிகள், முதலாளிகள் ஆகியாரின் வழியாக தீர்த்துக் கொள்கிறார்கள்.
இதற்கான எடுத்துக்காட்டுகள்தான் இந்த நாட்டின் சாதாரண குடிமகனுக்கு கிட்டவே முடியாத நீதி? சல்மானுக்கும், ஜெ-க்கும், வைகுண்டராஜனுக்கும், கிராணைட் பி.ஆர்.பிக்கும் வேதாந்தா - ஸ்டெர்லைட், அம்பானி, டாடா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், இந்திய கிரிக்கெட் போர்டுக்கும்(ஐ.பி.எல் ஊழல்) கிடைத்த நீதிகள். இப்படியாக நீதிபரிபாலனத்தின் அதிகார வரம்பைத் தாண்டி அத்தனைத் துறைகளிலும், நடவடிக்கைகளிலும் நீதி எஜமானர்கள் தலையிட்டு மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்துகின்றார்கள். ஏனெனில் நாட்டின் எல்லாத் துறைகளையும் விட கேள்விக்குட்படுத்த முடியாத பாசிச அதிகாரம் பெற்றதாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மறுக்கப்படும் தமிழ் தேசிய உரிமை
இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பல்தேசிய இனங்களின் அரசுரிமையை மறுத்து கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய தரகு பார்ப்பனிய ஏகாதிபத்தியம் தன்னுடைய நலனைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து அடிமைப்பட்டுள்ள தேசிய இனங்களின் மொழி, பண்பாட்டு, பொருளியல் தனித்தன்மைகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு மாற்றாக ஒற்றை மொழி,பண்பாட்டு, பொருளியல் அம்சத்தைக் கட்டமைப்பதற்கான நூற்றாண்டுத் திட்டத்தோடு இந்திய ஆளும் வர்க்கமான தரகு முதலாளிய பார்ப்பனிய சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்கள் தங்களுடைய மொழி, பணபாட்டு, பொருளியல் உரிமைகளுக்காக போராடும் போது அவை இந்திய ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதால் அதன் மீதான இந்திய அரசினதும், அதன் எடுபிடிகளான மாநில அரசுகளினதும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இத்தகைய அடக்குமுறைகள் அனைத்தும் இராணுவம், காவல்துறை, அதிகாரவர்க்கம், நிதித்துறையின் வாயிலாகவே நடைமுறைப்படுத்துகின்றன. இதற்கு தமிழகம் மிகச்சிறந்த உதாரணமாகும்.
தேசிய உரிமைக்கான வழக்குரைஞர் போராட்டமும் - அடக்குமுறையும்
ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் தொடங்கி இன்றைய சமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கான போராட்டங்கள் வரை வழக்குரைஞர் சமூகம் காத்திரமான வினையாற்றி வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே இந்திய துணைக் கண்டத்தில் சிறைப்பட்டுள்ள தமிழ்தேசிய இனத்தின் தமிழ் தேசிய உரிமைகளுக்காக வழக்குரைஞர்கள் எப்போதும் தங்களுடைய முதன்மையான பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். தன்னுடைய சொந்த தேசத்தில் தன்னுடைய தாய்மொழியில் வழக்காட முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் அவதிப்பட்ட நிலையில் அதற்கான உரிமைக் குரலை வழக்குரைஞர்கள் நீண்ட நெடுநாளாக எழுப்பி வந்தனர்.
தன்மானமுள்ள வழக்குரைஞர்கள் தங்கள் சொந்த தாய் மொழியில் நீதிமன்ற நடைமுறையை மறுக்கும் இந்திய நீதித்துறைக்கு எதிராக காத்திரமான போராட்டங்களை கட்டமைத்து நடத்தினார்கள். சட்டவழியாக கோரிக்கைகள் வைப்பதற்கான எல்லாவிதமான வழிமுறைகளையும் பின்பற்றி அதன்பிறகே “ உயர் நீதிமன்றத்தில் தமிழ்” உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்தது வழக்குரைஞர்கள் சமூகம். விளைவு தன்னுடைய இருத்தலைக் கேள்விக்குட்படுத்துவதைப் பொறுக்காத தரகுபார்ப்பனிய ஏகாதிபத்திய இந்தியா தன்னுடைய அடக்குமுறை நடவடிக்கையை நீதியின் பெயரால், நீதிமன்ற ஒழுங்கின் பெயரால், நீதிமன்ற அவமதிப்பின் பெயரால் பாசிசமாக வெளிப்படுத்தியது. அடுத்தடுத்து நீதிமன்றங்கள் வழக்குரைஞர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள் வழக்குரைஞர்களின் போராட்டங்களுக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்தியது. இன்னும் சொல்லப்போனால் நீதித்துறையின் பாசிச நடவடிக்கை வழக்குரைஞர்களின் தொடைகளை நடுங்கச் செய்துவிட்டது என்பதே உண்மை.
நீதித்துறையின் பாசிச நடத்தைக்கு ஒத்தூதிய வழக்குரைஞர் பேராயம் நீதிமன்ற அதிகாரப்பீடங்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாகி வழக்குரைஞர்களைக் காவு கொடுத்தது. உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரையுள்ள அத்தனை வழக்குரைஞர் சங்கங்களும், வழக்குரைஞர்களும் இந்திய அரசின் தேசிய ஒடுக்குமுறை அரசியல் புரியாமல், இந்த ஒடுக்குமுறையை வழக்குரைஞர் - நீதிமன்ற உறவு குறித்த விடயமாகக் கருதி பெயரளவில் ஒரிரு நாட்கள் “நீதிமன்றங்களைத் தவிர்த்து” தங்கள் எதிர்ப்புக் கடமையை நிறைவேற்றிய திருப்தியோடு வழமையான நடைமுறைக்கு திரும்பினர். காலப்போக்கில் போராடிய வழக்குரைஞர்களையும், உரிமைக்கான போராட்டத்தின் தேவையையும் மறந்தனர்.
தமிழ் மக்களின் விருப்பமான தங்கள் தாய் மொழியில் வழக்காடுவதற்காக போராடிய வழக்குரைஞர்களும், ஊழலுக்கு எதிராக போராடிய வழக்குரைஞர்களும் பலமாதங்களாக இடைநீக்கத்தில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் மேற்படி சட்ட விதிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக அக்கறையுள்ள மேற்படி வழக்குரைஞர்கள்தான் இதற்கெதிரான போராட்டங்களுக்கு தலைமைத் தாங்குவார்கள் என்பதை நன்கு அறிந்து கொண்ட நீதித்துறை அவர்கள் வெளியில் இருக்கும் போது இந்தக் கொடுநெறி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தத் திருட்டுத்தனம் உள்ள நீதித்துறைதான் மக்களுக்கு நீதி வழங்கப் போகிறது.
பாசிச சட்டமும் - வழக்குரைஞர்களின் நிலையும்
வழக்குரைஞர்கள் மத்தியில் படிப்படியாக அச்சத்தினை விதைத்து, செயலூக்கமுள்ளவர்களைக் களைந்து, மிகுந்த நயவஞ்சகத்தோடு இந்தச் சட்டத்திருத்தம் காலம் கனியக் காத்திருந்து நீதிமான்களால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வழக்குரைஞர் சட்டத்தின் வழியாக உருவாக்கபட்டுள்ள புதிய விதிமுறைகள் ஒழுங்கீனங்கள் என்ற பெயரில் வழக்குரைஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமான்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இது திருடன் கையில் கொடுக்கப்பட்ட வீட்டு சாவி போன்றது என்பதை இந்த உலகம் நன்கறியும். யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாத மிதமிஞ்சிய அதிகாரத் திமிரில் இருக்கின்ற நீதிமான்கள் இந்தச் சட்டத்தை தவறாக மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
சனநாயக சமூக அமைப்பில் சனநாயகப் படுத்தப்பட்டுள்ள எல்லா வகையான ஊழல் நடவடிக்கைகளும் நீதிமான்களால் பின்பற்றப்படுகின்றன. தன்னுடைய எல்லையற்ற அதிகாரத்தின் வழியாக ஒரு நீதிமான் ஒரு வழக்கினை எந்த நிலையிலும் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்க முடியும். இதனைக் கேள்விக்குட்படுத்தக் கூடிய யாரும் பாசிசச் சட்டத்தால் பாதிக்கப்படும் எல்லா வாய்ப்பும் தற்போது எழுந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், தன்னுடைய எதேச்சதிகார மடத்தனத்தால் ஒரு நீதிபதி நீதிமன்ற, வழக்கு நடைமுறைகளில் தவறிழைக்கிற போது அதை உணர்த்துவதற்காக ஏற்படும் காரசாரமான வாதங்கள் கூட வழக்குரைஞர் மீது நடவடிக்கை எடுக்கின்ற சூழலை உருவாக்கும்.
நேர்மையற்ற, நியாயத்திற்கு எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாத பொய்களின் உலகமான நீதித்துறையில் உண்மைக்கு சிறிதும் இடமில்லாத போது நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரம் பாசிசத் தன்மையுடையதே தவிர வேறொன்றுமில்லை.. கொடுநெறி என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர மேற்படி சட்டத்திருத்தத்தினை விலாவரியாக விவரித்து விமர்சிக்க ஒன்றுமில்லை..
சமரசமற்ற போராட்டங்கள் தீர்வைத் தரும்
வழக்குரைஞர்களுக்கு எதிராக நடுமுறைக்கு வந்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கொடுநெறிச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீரமிக்க போராட்டத்தை நடத்த வேண்டிய கடமை வழக்குரைஞர் சமூகத்தின் முன்பு தற்போது வந்துள்ளது. வழமையான போராட்ட வடிவங்கள், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது போன்றவைகள் இதற்கு தீர்வைத் தராது என்பதையும் வழக்குரைஞர்கள் உணர்ந்துள்ளார்கள்.
எனவே வழக்குரைஞர்கள் கொடுநெறிச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். வழமையான புறக்கணிப்புகள் ஒருபுறம் நடந்தாலும், மக்களுக்கு இந்தச் சட்டத்திருத்தத்தின் கொடியத் தன்மையை உணர்த்தும் விதமாக நீதிமன்றங்களுக்கு வெளியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சமூக சனநாயக சக்திகளோடு கூட்டாக நின்று மக்களையும் போராட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும். அது இந்த போலி வழக்காடு மன்றங்களின் முகத்திரையைக் கிழித்தெறியும். மேலும், நீதிபரிபாலனத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருப்பவர்களுக்கும், அவர்களுக்கு தங்களது வரக்க நலனின்பால் நின்று கொண்டு ஒத்தூதும் அரசியல் வாதிகளுக்கும் பாடம் புகட்டும் விதமாக போராட்டங்கள் வீரியமிக்கதாக மாற்ற வேண்டும். அத்தகைய போராட்டங்களைக் கட்டமைப்போம்! நீதிமன்ற பாசிசத்திற்கு முடிவு கட்டுவோம்!!
- மலரவன்