அடிப்படை அரசியல் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக நாடு தழுவிய இயக்கத்திற்கு சென்னையில் துவக்கம்
“ஊழல்வாதக் கட்சி அரசியலை வேரறுத்து, மக்களே ஆட்சி செய்ய வழி வகுப்போம்!” என்ற தலைப்பில் அரசியல் மற்றும் தேர்தல் வழிமுறைகளில் தேவைப்படும் அடிப்படை மாற்றங்களைப் பற்றி விவாதிப்பதற்காக 15-க்கும் மேற்பட்ட மக்கள் அமைப்புக்களைச் சேர்ந்த செயல்வீரர்கள் சென்னையில் மார்ச் 19 அன்று ஒன்று கூடினர்.
மக்களாட்சி இயக்கம், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், காந்தியன் இனிஷியேட்டிவ் பார் சோசியல் டிரான்பர்மேஷன், சுயராஜ் அபியான், ஊழலுக்கு எதிரான கூட்டணி, வளமான தமிழகம் கட்சி, சிறுபான்மை மக்கள் இயக்கம், தொழிலாளர் போராட்ட இயக்கம், தி-நகர் குடிமக்கள் குழு, சபரி கிரீன் பவுண்டேஷன், பேக்ட் இந்தியா, பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, இந்திய சோசியல் டெமாகிரடிக் கட்சி, சோசியல் டெமாகிரடிக் தொழிற் சங்கம், இளைஞர்கள் மீட்புக் களம், காந்திய சம தர்ம இயக்கம், 5-வது தூண் ஆகிய அமைப்புக்களும், பல தனிப்பட்டவர்களும் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
பேச்சாளர்கள், இன்றைய அரசியல் சூழ்நிலையையும், அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். வாக்களிப்பது தவிர இன்றுள்ள அரசியலில் மக்களுக்கு எந்த உரிமைகளும் இல்லையென்று அவர்கள் கூறினர். பணபலம், குண்டர் பலம், ஊடகங்களுடைய பலத்தைப் பயன்படுத்தி தற்போதுள்ள நிறுவனத்தின் அரசியல் கட்சிகள், மக்கள் தங்களுடைய தினசரி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையும், நாட்டை நடத்துவதில் ஒரு மையப் பங்கு வகிப்பதையும் தடுத்து வருகின்றனர். அவர்கள் விரும்பியவாறு தேர்தல் முடிவுகளைப் பெறுவதற்காக, தேர்தல் வாக்களிக்கும் கருவிகள் சூழ்ச்சியாகக் கையாளப்பட்டு வருவதாகப் பங்கேற்ற பலரும் குறிப்பிட்டனர்.
அரசியலிலும், தேர்தல் சீர்திருத்தங்களிலும் ஒரு மேலோட்டமான மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லையென பங்கேற்றவர்கள் சுட்டிக் காட்டினர். அரசியல் வழிமுறையில் ஒரு அடிப்படையான மாற்றத்திற்காக நாம் வேலை செய்ய வேண்டும். வேட்பாளர்களை முடிவு செய்யவும், அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை, தேர்ந்தெடுத்தப் பிரதிநிதியைத் திருப்பியழைக்கின்ற உரிமை, சட்ட வரைவுகளை முன்வைக்கும் உரிமை ஆகியவற்றை நாம் கோர வேண்டும். அரசாங்கத்தின் எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது செயல்பாடு குறித்து மக்களுடைய கருத்துக்களை அறிவதற்காக கருத்துக் கணிப்புக்களை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இளைஞர்கள், பெண்கள், உழவர்கள் மற்றும் தொழிலாளிகள் என மக்களின் பல்வேறு பிரிவினர் சந்தித்து வரும் கடுமையான நெருக்கடி குறித்தும் பங்கேற்றவர்கள் பேசினர்.
இந்தப் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுமெனவும், அரசியலில் மக்கள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவர்களைக் குழுக்களாக அணி திரட்ட வேண்டுமெனவும் பங்கேற்றோர் தீர்மானித்தனர். சாதி, மத, வகுப்புவாத, மொழி மற்றும் பிற அடிப்படைகளைக் கடந்த அளவில் மக்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென அவர்கள் முடிவெடுத்தனர்.
இந்தக் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்காக, நடை பயணங்கள், வாகனப் பயணங்கள், பொதுக் கூட்டங்கள், மின்னணு, சமூக ஊடகங்கிலும், செய்தித் தாட்களில் எழுதுவது, என்பன போன்ற திட்டங்களை நாம் மேற் கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் தீர்மானித்தனர்.
மக்களுடைய விழிப்புணர்வை உயர்த்தும் வகையில் ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டுமென்ற உறுதியான முடிவோடு விவாதம் நிறைவு பெற்றது.