செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் போனார் முந்தைய ஆளுநர் (பொறுப்பு). செய்ய வேண்டாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் தமிழகத்தின் இன்றைய ஆளுநர். இவர்களை முன்னுணர்ந்தே வள்ளுவர்,

“செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க

செய்யாமை யானும் கெடும்“

என்று கூறியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

governor 600அதிகாரிகளை அழைத்து ஆளுநர் பேசுவது, அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள ஊர் - இவைகளையெல்லாம் பார்க்கும்போது, இது திட்டமிட்ட நிகழ்வாகவே தோன்றுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான முன்னோட்டமோ  என்றும் ஐயம் வருகின்றது.

ஆளுநர் பதவி என்பதே ஆங்கிலேயர்கள் விட்டுச்  சென்றுள்ள ஆதிக்கத்தின் மிச்சம்.  ஆனால், 1935 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த சட்டத்தில் இருந்ததை விட, 1950 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் அவருக்குக் கூடுதலான அதிகாரத்தை வழங்கியுள்ளது.

ஆளுநருக்கு, நிர்வாகம், நிதி, நீதி, சட்டமன்றம் ஆகிய நான்கு துறைகளில் வழங்கியுள்ள அதிகாரம் போதாது என்று, 163 ஆவது பிரிவு விருப்ப அதிகாரம் ((discretion power) என்ற ஒன்றையும் கூடுதலாக வழங்கியுள்ளது. இந்த அதிகாரம், குடியரசுத் தலைவருக்கான 74 ஆம் பிரிவில் கூட இல்லை.

குடியரசுத் தலைவர் பதவி அலங்காரப் பதவி என்றால், ஆளுநர் பதவி மட்டும் எப்படி அதிகாரப் பதவி ஆக முடியும்? இன்று தமிழ்நாட்டில் ஆளுநர் தெருவில் இறங்கி மக்களைச் சந்திப்பதும், அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் போடுவதும் சரி என்றால், குடியரசுத் தலைவரும் இப்படிச் செயல்படுவதை மத்திய அரசு ஏற்குமா? அங்கொரு நீதி, இங்கொரு நீதியா?

மாநில சுயாட்சி உளுத்துப் போன ஒன்றாக ஆகிவிட்டது என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் சொல்கிறார்.  அப்படி ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம். மாநிலங்கள் வலுப்பெறுவதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஜனநாயகத்திற்கும் நல்லது. மத்தியில் அதிகாரம் குவிந்தால், அது சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சி, மக்கள் செல்வாக்கற்ற, மக்களுக்குப் பணி செய்ய  விரும்பாத  ஆட்சியாக இருக்கின்ற போதும், மக்கள் ஆட்சிக்கு மாறாக, ஆளுநர் ஆட்சி நடத்த முயல்வது எப்படிச் சரியாகும்?

ஆளுநர் எல்லா மாவட்டங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்ய இருக்கின்றார் என்ற அறிவிப்பும், அதனை “டேக் இட் ஈஸி” என்று சொல்லும் சுரனையற்ற அமைச்சர்களும் அறிஞர் அண்ணா முன்மொழிந்த மாநில சுயாட்சிக்கு நேர்ந்துள்ள அவமானம்!

ஆதிக்கம் செலுத்த மத்திய அரசும், அவமானப்பட மாநில அரசும் அணியமாக  இருக்கலாம். ஆனால் தன்மானமுள்ள தமிழகம் அதற்கு அடிபணியாது!

Pin It