jayalalitha and sasikala 390போரில் வீரத்துடன் சண்டையிட்டு இறந்தவர்களையும், களவை தடுக்க தன் உயிரை விட்டவர்களையும், சாதியை எதிர்த்து போராடி மாய்ந்தவர்களையும் நடுகல்லாக வழிபட்ட தமிழன் இன்று ஊழல்வாதிகளையும் பாசிஸ்ட்களையும் தெய்வங்களாக்கி அவர்களுக்கு கோயில் எடுத்து கூலைக்கும்பிடு போடும் இழிவான நிலைக்கு மாறியிருக்கின்றான்.

பாம்புகளையும் பன்றிகளையும், மாடுகளையும், நாய்களையும் பெருச்சாலிகளையும் கடவுள் என வணங்கும் கூட்டத்திற்கு பத்தோடு பதினொன்றாக மனித கழிசடைகளையும் வணங்குவதற்கு எந்தக் கூச்சமோ குற்றவுணர்வோ இல்லை.

ஊழல் என்பது சமூகத்தின் கடைகோடி மனிதனையும் சுரண்டி அவனை சமூக அமைப்பில் கையேந்தி பிழைக்க வைக்கும் அவல நிலைக்கு தள்ளுகின்றது என்பதை பற்றியோ, ஜனநாயகத்தின் ஆட்சியையும், சட்டத்தின் ஆட்சியையும் கேலிக்கூத்தாக மாற்றுகின்றது என்பதைப் பற்றியோ, சமூக ஏற்றத்தாழ்வை மிக மோசமாக்கி வளங்களின் பகிர்வின் அசமத்துவத்தை அதன் கடைகோடி நிலைக்கே இட்டுச் செல்கின்றது என்பதைப் பற்றியோ எந்த உணர்வும் அற்ற சமூகமாக நாம் மாறியிருக்கின்றோம்.

நம்மால் ஊழல்வாதிகளுடன் மிக இயல்பாக உறவாட முடிகின்றது. அவர்களின் கடைக்கண் பார்வை படாதா, நமக்கும் ஊழலில் பங்கு கிடைக்காத என நாக்கில் எச்சில் ஒழுக ஒரு அடிமையைப் போல குனிந்து கும்பிடு போட முடிகின்றது.

அற்பவாதத்திலும், பிழைப்புவாதத்திலும் ஊறிபோன மனம் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழந்து அசிங்கத்தை அரிதாரமாக பூசிக்கொண்டாவது ஆதாயமடைய துடிக்கின்றது. அப்படிப்பட்ட உழுத்துபோன இழி பிறவிகள்தான் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ஊழல்வாதிகளுக்கு ‘தியாகத்தலைவி’ பட்டத்தை கொடுக்கவும் இன்னும் ஒருபடி முன்னேறி கோயில்கட்டி குதுகலிக்கவும் செய்கின்றன.

மக்களுக்குச் சேவை செய்ய அந்த மக்களின் பணத்தை கொள்ளையடித்து கொட்டமடித்த கூட்டத்தை தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என்று மக்கள் நம்புவதால்தான் ஊழல்வாதிகளால் பொதுவெளியில் கூச்சமின்றி நடமாடவும் உத்தமனாக உத்தமியாக வேசம்கட்டவும் முடிகின்றது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 2014, செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்ததையும் யாரும் மறக்க முடியாது.

மேல் முறையிட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருக்கும் போதே ஜெயலலிதா இறந்துவிட்டாலும் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ததோடு ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்ட சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் உறுதி செய்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் ஊழல் குற்றவாளி என தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாவின் மீது ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் புனித பிம்பத்தை சிதையவிடமால் அவரது அடிமைக் கூட்டம் கட்டிக் காப்பாற்றி வருகின்றது. அதற்கு ஏற்றார் போல பல திட்டங்கள் ‘அம்மா திட்டங்கள்’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டும் உள்ளன.

அடிமைக் கூட்டத்தின் உதவி இன்றி ஜெயலலிதாவால் நிச்சயம் இவ்வளவு பிரமாண்டமான ஊழல் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி இருக்க முடியாது என்பதால் ஜெயலலிதாவின் ஊழல் சாம்ராஜியத்துக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அடிமைகளும் தமிழகத்தின் குட்டி அம்பானி அதானிகளாக இன்று வலம் வந்துக்கொண்டு இருக்கின்றார்கள். ‘ஊழல் ஊழலைத்தவிர வேறு எதுவுமே இல்லை’ என்றளவில் இன்று இந்த அரசு நடந்து கொண்டிருக்கின்றது.

அதனால்தான் தங்களுக்கு தொழில் கற்றுக்கொடுத்த ஏ1 ஊழல் ராணிக்கும் அத்தோடு ஏ1 அரசியலுக்கு வர காரணமாக இருந்த எம்ஜியாருக்கும் சேர்த்தே கோயில் கட்டியிருக்கின்றார்கள்.

மதுரை மாவட்டம் டி. குண்ணத்தூர் அருகே வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு 7 அடி உயர வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஊழல் ராணியின் கோயிலுக்கு யாக சாலை அமைக்கப்பட்டு 11 ஹோம குண்டங்களில் 21 சிவாச்சாரியார்கள் பூஜை செய்து ஊழல் ராணியை கடவுளாக்கி இருக்கின்றார்கள். காசு கொடுத்தால் கேடிகளையும், கிரிமினல்களையும் கூட கடவுளாக்க ஒரு உண்டக்கட்டி கூட்டம் தமிழகத்தில் எப்போதுமே இருக்கின்றது.

ஒரு பக்கம் சட்டப்படி மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஊழல் ராணிக்கு ரூ 80 கோடி செலவில் நினைவிடமும் மக்களிடம் ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தில் கோயிலும் கட்டப்பெற்றுள்ளது.

இது போன்ற அற்ப கூத்துக்கள் போதாது என்று நான்கு ஆண்டுகள் சிறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வெளியே வந்திருக்கும் ஏ2 குற்றவாளி சசிகலாவை மீண்டும் அரசியல் களத்தில் இறக்கிவிட சில அற்பவாத பிழைப்புவாத கும்பல் வேலை செய்து கொண்டிருக்கின்றது.

சில நாய்கள் கிடைத்த எலும்புத் துண்டுக்காகவும், சில நாய்கள் கிடைக்கப்போகும் எலும்புத் துண்டுக்காகவும் வாலோடு சேர்த்து உடலையும் ஆட்டிக் கொண்டிருக்கின்றன.

ஊழல்வாதிகளை எல்லாம் கடவுள் காப்பாற்றிய காலம் போய் இப்போது ஊழல்வாதிகளே புது கடவுள்களாக அவதாரம் எடுத்திருக்கின்றார்கள். மோடிக்கும் லேடிக்கும் கோயில்கள் கட்டும் கேடிகளின் காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்ற போது மொட்டை அடித்து, மீசை மழித்து, மண் சோறு தின்று, காவடி தூக்கி, பால்குடம் எடுத்து இன்னும் என்ன என்ன வழிகளில் எல்லாம் மானமற்ற கூட்டம் ஆட்டம் போட்டதோ அதை எல்லாம் இனி தற்போது கடவுளாக மாற்றப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு நேரடியாகவே செய்யலாம்.

அடுத்த ஆண்டு முதல் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களை போல ஜெயலலிதாவின் கோயிலுக்கு மாநிலம் முழுவதும் இருந்தும் பாதயாத்திரை குழுக்கள் செல்லலாம்.

அப்படி அம்மாவை மனமுருக துதித்து கால்வலிக்க நடக்கும் பக்தகோடிகளுக்கு வழி நெடுக மிடாசில் இருந்து தருவிக்கப்பட்ட ஸ்பெசல் ‘தீர்த்தமும்’ வழங்கப்படலாம். இவை எல்லாம் ஏதோ நகைச்சுவைக்காக சொல்லவில்லை. ஊழல்வாதிகளுக்கு நினைவிடமும், கோயிலும் கட்டுவதோடு தியாகத்தலைவி பட்டமும் கொடுக்கும் தமிழ்நாட்டில் இது எல்லாமே நடக்கக்கூடிய சாத்தியம் வாய்ந்தவைதான்.

தமிழ்நாட்டில் இப்படியான கேலிக்கூத்துக்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கும் இதே காலத்தில்தான் சீனாவில் முதலீடு செய்தல் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, அதன் மூலம் 26 கோடி டாலர், இந்திய மதிப்பில் 1900 கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்ட சீன அரசுக்கு சொந்தமான ஹுவாராங் நிதி மேலாண்மை நிறுவனத்தின் முன்னால் தலைவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் இந்த மாதம் மரண தண்டனை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- செ.கார்கி

 

Pin It