கடந்த பெப்ருவரி மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய 2 தீர்ப்புக்கள் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருப்பதோடு, சிறுபான்மை மக்களை பேரதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 06.02.2015 அன்று தலித் கிறித்தவர் மற்றும் தலித் இசுலாமியர்களுக்கு மற்ற சமயத்தைச் சார்ந்த தலித்துகளுக்கு வழங்கப்படுவது போல இடஒதுக்கீட்டு உரிமைகளையும் ஏனைய உரிமைகளையும் வழங்கக் கோரி 2004 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை (Civil Writ Petition 180/2004) அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இவ்வழக்கில் உச்சநீதிமன்றமும் முந்தைய காங்கிரசு அரசும் எந்தவொரு அக்கறையும் காட்டாமல் மெத்தனமாக இருந்து வந்த நிலையில், இதை இப்போது அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது? வேண்டுமென்றே இந்த வழக்கை இழுத்தடிக்கும் செயலாகவே பல மூத்த வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

supreme court

அதேபோல், 26.02.2015 அன்று கே.பி. மனு எதிர் சேர்மன் (Civil Appeal No. 7065/2008) என்ற வழக்கில் ஒரு இந்து தலித், கிறித்தவராக மதமாறியிருந்து பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மதமாறினால் அவர் பட்டியல் சாதியினருக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் கிடைக்கப் பெறுபவராகிறார் என்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் உள்ளீடு என்னவென்றால், எந்தவொரு தலித்தும் இந்து மதத்தைத் தழுவினால் அவர் இடஒதுக்கீடு உள்ளிட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான எல்லா உரிமைகளையும் பெறத் தகுதியுடையவர் என்பதாகும். இந்தத் தீர்ப்பு கிறித்தவ மற்றும் இசுலாமிய சமயங்களைச் சார்ந்தத் தாழ்த்தப்பட்டோரைத் தண்டிப்பதாக அமைந்துள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் இயற்கை நீதிக்கும் முரணானது. மேலும், இந்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ன் கீழ் செயல்படும் அமைப்புக்கள் நிகழ்த்தி வரும் (Ghar Vapsi) எனும் பிறமதத்தவரைக் கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி மீண்டும் இந்துமதத்திற்குக் கொண்டுவரும் செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், அவற்றை அப்படியே ஆதரிப்பதாகவும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியாவும், சில மத்திய அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், “2021 ல் இந்நாட்டில் வாழும் அனைவரையும் இந்துக்களாக மாற்றிவிடுவோம், இது இந்துக்களின் நாடு, இதை இந்துராஷ்டிராவாக மாற்றியே தீருவோம்” என்று வெறித்தனத்துடன் அலைகிறார்களே! அதற்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றமும் ஆர்.எஸ்.எஸ். ன் கொள்கையை அப்படியே பின்பற்றுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் சமய உரிமையை முற்றிலும் பறிப்பதாகும். தாழ்த்தப்பட்டோர் இந்து மதத்தைவிட்டுப் போய்விடாமல்; இருக்கவும், சாதிய படிநிலையை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீயச் சமூக கட்டமைப்பு குலையாமல் தடுக்கவும் விதிக்கப்பட்டுள்ள மாபெரும் தடையாகவே இது கருதப்படுகிறது.

நாடெங்கிலும் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று சங்கப்பரிவாரங்கள் கூக்குரலிடுகின்றன. அதற்கான தேவையே இல்லாமல் செய்துவிட்டது உச்சநீதிமன்றம். இந்தத்தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றமே நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய ஒரு மதமாற்றத் தடைச் சட்டத்தை மறைமுகமாக கொண்டு வந்துள்ளது.

இந்தத் தீர்ப்பை சங்பரிவார அமைப்புக்கள் பெரிதும் வரவேற்றுள்ளன. விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய இணைச் செயலாளர் சுரேந்திர ஜெயின், “நீதிமன்றத்தின் மீது நம்பிக்கைக் கொள்பவர்கள் எங்கள் “தாய்மதம் திரும்புதல்” நிகழ்வுகளை இனிமேல் எதிர்க்க முடியாது. உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. கிறித்தவ மதத்திற்கு சென்ற தலித்துக்கள் கடுமையான பாகுபாடுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தலித் கிறித்தவர்களுக்கு ஆலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. பல இடங்களில் தாழ்த்ப்பட்ட கிறித்தவர்களுக்கு தனிக்கல்லறைகளும், தனி ஆலயங்களும் கட்டித்தரப்பட்டு அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களே மனம்நொந்து தாய்மதம் திரும்புகிறார்கள். அவர்களை நாங்கள் வரவேற்பதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் முதுகில் குத்திய காங்கிரசு

1950 ஆம் ஆண்டைய குடியரசுத் தலைவரின் ஆணையின் அடிப்படையில் இந்நாட்டில் இந்து சமயத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர பிற சமயத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டியலினத்தவர்களாகக் கருதப்படமாட்டார்கள். எனவே அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடையாது என்று அறிவித்தது. அடிப்படையில் சமயத்தின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்களை பாகுபடுத்திப்பார்க்கும் இந்த ஆணையை இரத்து செய்யக்கோரி பிற சமயத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்டோரும், சமூக ஆர்வலர்களும், சமூக ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக 2014 வரை ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசை தொடர்ந்;து நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், காங்கிரசு கட்சி அதற்கான எந்த சிறு முயற்சியையும் எடுக்காமல் சிறுபான்மையினரின் முதுகில் குத்தியுள்ளதை மக்கள் எளிதில் மறக்கமாட்டார்கள்.

1953 ல் இந்திய அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் கல்வி நிலையை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி முதல் விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக்குழு 03.03.1955 ல் சமர்ப்பித்த அறிக்கையில், “கிறித்தவ மதத்தில் தாழ்த்தப்பட்டோர் பிற சமயங்களில் உள்ளது போலவே எல்லாவிதமான பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். கிறித்தவ மதம் எந்தவிதத்திலும் அவர்கள் மீது சமூகம் சுமத்தியுள்ள சாதியக் கொடுமைகளைக் களையவில்லை.” என்று தெளிவுபடுத்தியது.

1979 ல் இந்திய அரசு மீண்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 2 ஆம் விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக்குழு மண்டல் குழு என்றழைக்கப்பட்டது. அந்தக்குழு 31.12.1980 ல் அரசுக்குக் கொடுத்த அறிக்கையில், “மதமாறியதன் காரணமாக தாழ்த்தப்பட்டோரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் அவர்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லையென்றும், தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கெதிரான சாதிய கொடுமைகள் தொடர்கின்றன என்றும், சாதி என்பது இந்து மத்திற்குரியதென்றாலும், அது எல்லா மதங்களிலும் பரவி விரவி நிற்கிறது” என்றும் விளக்கியது.

1980 ல் தேசிய சிறுபான்மையினருக்காக ஆணையம் தனது 3 ஆவது ஆண்டறிக்கையில், “கிறித்தவத்தையும், இசுலாத்தையும் தழுவிய தாழ்த்தப்பட்ட மக்கள் அவரவர்களின் மதத்திற்குள்ளேயே தொடர்ந்து எல்லாவிதமான சாதிய கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்” என்று தெளிவாக அறிவித்தது.

1984 ல் எஸ். அன்பழகன் எதிர் தெய்வராஜன் (AIR 1984, SC 411) என்ற வழக்கில் “இந்திய நாட்டில் சாதிக்கொடுமை என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடத்திலும் எல்லாத் தளங்களிலும் புரையோடிப்போயிருக்கிறது. அதன் தன்மை மதம் மாறியதால் யாருக்கும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடவில்லை.” என்று தனது தீர்ப்பில் விவரித்தது.

1995 ல் 100 க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் ஒரு கூட்டொருமித்த மனுவைக் கொடுத்து அனைத்து கிறித்தவ தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மற்றபிற சமயத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு இணையான உரிமைகளை உடனடியாக அரசு வழங்க ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொண்டது.

103 இந்திய ஆயர்கள் கையொப்பமிட்ட மனுவை 20.02.1996 அன்று ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் பிரதமர் நரசிம்ம ராவிடம் அதே கோரிக்கையை வலியுறுத்தி சமர்ப்பித்தனர்.

இறுதியாக, 22.03.2004 ல் கிறித்தவ தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், இசுலாமிய தலித்துகளுக்கும் ஏனைய சமயத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு இணையான பட்டியலினத்தாருக்கான உரிமைகளை வழங்கிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் 12 க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

2005 ல் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கிறித்தவ மற்றும் இசுலாமிய மதங்களைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலையை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. தேசிய அளவிலான மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான ஆணையத்தின் தலைவராக செயல்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அந்தக் குழு 22.05.2007 ல் தனது விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் விவரமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைகளை வழங்குவதில் சமயரீதியான பாகுபாட்டை உடனே களைய வேண்டும் என்றும், மதம் மாறியதால் அவர்களுக்கெதிராக இழைக்கப்படும் சாதிய கொடுமைகள் மாறிவிடவில்லை என்றும் விளக்கியது. மேலும், சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமைகள் ஒரு தாழ்த்தப்பட்டவர் எந்த மதத்திற்குச் சென்றாலும் அங்கும் அது அவரைத் தொடர்கிறது. சாதி எல்லா மதங்களையும் ஊடுறுவி நிற்கிறது. எனவே இந்து, கிறித்தவம், இசுலாம், பௌத்தம், சீக்கியம் என எல்லா மதங்களிலும் அப்படியே கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

அரசால் அமைக்கப்பட்ட இத்தனைக் குழுக்களும், ஆய்வுகளும் மிகத்தெளிவாக “மதமாறியதால் யாருக்கும் சாதியக் கொடுமைகள் மாறிவிடவில்லை என்றும், சமூக பொருளாதார கல்வி நிலைகளில் எவ்வித மாற்றமும் வந்துவிடவில்லை” என்றும் தெளிவுபடுத்தியுள்ளன. அதன் பிறகும் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு சிறுபான்மை தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதற்கு துளியும் முயற்சி எடுக்காதது தங்களை நம்பியிருந்த மக்களின் முதுகில் குத்தியதாகவே மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.

1956 ல் சீக்கியர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் சீக்கிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல் 1990 ல் புத்த மதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான தடையும் நீக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை கிறித்தவ மற்றும் இசுலாமிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான தடை நீக்கப்படாமல் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றமும் இந்த பிரச்னையில் பாகுபாட்டுடனும் மதத்துவேசத்துடனும் தீர்ப்புக்களை வழங்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. இது இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் நீதித்துறையின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைப்பதாக உள்ளது. உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகவும், சிறுபான்மையினரின் சமய உரிமைகளுக்கு எதிராகவும் பொழிந்துவரும் தீர்ப்புக்கள் இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கின்ற செயலே அன்றி வேறில்லை. இது நாட்டில் ஒருவித அசாதாரணச் சூழலை உருவாக்கியுள்ளது. பாசிசம் நீதித்துறையையும் கைப்பற்றிவிட்டதோ என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அரசு அமைப்புக்கள், நீதிமன்றம், அரசியல் கட்சிகள் இவற்றின் போக்குகளை மக்கள் நன்றாக புரிந்துகொண்டு தங்கள் விடுதலையை வென்றெடுப்பதற்கான சரியான உத்திகளை வகுப்பதற்கான தருணம் இது.

Pin It