மாநிலங்களவையில் பார்ப்பன எதிர்ப்புக் குரல்

பண்டைக்கால இந்தியா சமூகத்தை மேம்படுத்தாது; வேதகாலத்துக்கு திரும்பக் கூடாது என்று பெரியார், அம்பேத்கர் கருத்தை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பேசினர்.

மாநிலங்களவையில் மார்ச் 25, 2022 அன்று பார்ப்பன எதிர்ப்புக் குரல் ஒலித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா தனிநபர் மசோதா ஒன்றை கொண்டு வந்தார்; மீண்டும் வேத காலத்து சிந்தனை மரபுக்கு திரும்ப வேண்டும் என்று இந்த மசோதா வலியுறுத்துகிறது.

“நமது பழைய அறிவு சிந்தனை மரபுகளை மீட்டெடுப்பதற்கு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் ஆய்வு மய்யங்களை உருவாக்கி, அந்த அறிவு மரபை, பழம் பெருமையை மீட்டு எடுக்க வேண்டும் என்று மசோதா கூறியது. அது மட்டுமின்றி மேற்கத்திய கல்வியும்,மெக்காலே கல்வியும் நம்முடைய பண்டைக்கால அறிவு மரபை சிதைத்து நமது சிறப்புகளைக் குலைத்து நம்மை தனிமைப்படுத்தி விட்டது” என்றும் அந்த மசோதா கூறுகிறது.

திருணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஜவகர் சர்க்கார் இதற்கு கடுமையான பதிலடியை கொடுத்தார். “நீங்கள் பேசுகிற பழைய மரபு என்பது எது ? வரலாறுகளில் கூட அதை ஒரு சார்பாகத் தான் நீங்கள் எழுதி வைத்திருக்கிறீர்கள். சாம்ராட் அசோகன், புத்தர் மரபில் வந்தார் என்பதற்காக வரலாறு முழுதும் அவரை இருட்டடித்தீர்கள். 1837 இல் கொல்கத்தாவின் ஆசியாடிக் சொசைட்டி தான் அசோகர் என்ற ஒரு மன்னர் புத்தர் மரபில் வந்து நல்லாட்சி செய்தார் என்ற உண்மையை வரலாற்றில் முதல் முதலாக வெளிக் கொண்டு வந்தது. நீங்கள் பேசுகிற அறிவு மரபு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சாதியை வளர்ப் பதற்கும், பார்ப்பனிய கலாச்சார ஆதிக்கத்தை உருவாக்குவதற்கும் தான் பயன்பட்டது” என்று அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா பேசுகையில் “இன்றைய சூழ்நிலையில் கற்பனைகளை வரலாறாகவும், வரலாறுகளை கற்பனைகளாகவும் எழுதிக் கொண்டிருக்கிற போது, பழைய மரபுகளை மீண்டும் கொண்டு வருவது என்பது எந்த பயனையும் விளைவிக்கப் போவது இல்லை. பழைமை என்பதற்காக எதையும் நாம் கொண்டாட முடியாது. டாக்டர் அம்பேத்கர் மேற்கத்திய கல்வி முறையைத் தான் ஆதரித்தார். காரணம் அந்தக் கல்வி முறை தான் அனைவருக்குமான கல்வியாக இருந்தது”.

நான் பெரியாரை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அவர் பெயர் மட்டுமே இங்கு பலருக்குத் தெரியும்; அவரது நூல்கள், சிந்தனைகள் பற்றி பலருக்கும் தெரியாது. அவர் ‘உண்மை இராமாயணம்’ என்று தமிழில் எழுதிய நூலை இந்தியில் ‘சச்சி இராமாயணம்’ என்று மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. உ.பி. அரசு தடை போட்டது; மக்கள் போராடினார்கள். வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பை படித்துக் காட்டுகிறேன்.

“இந்து மதத்தைப் புண்படுத்தும் நூல் அல்ல; அப்படி இருந்தால் அயர்லாந்து நாட்டில்கூட ‘அய்ரீஷ்’ மதக்காரர்கள் போராடியிருப்பார்களே; இது ஒரு சமூகத்தின் நியாயத்தைப் பேசும் நூல். சமூகத்தின் நீதியைக் கேட்பதே நூலாசிரியரின் (பெரியாரின்) நோக்கம். நிச்சயமாக இந்த நூல் சட்டத்துக்கு எதிரானது அல்ல” என்று உயர்நீதி மன்றம் கூறியது.

பண்டைக்கால இந்தியா எதைப் பேசியது? உ.பி., இராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்கள் இப்போது ‘பசுமாட்டுப் பிரதேசங்கள்’ (Cow belt) என்று கூறப்படுகின்றன. பண்டைக்கால இந்தியா வுக்கு இவை சான்றுகள். தமிழக உறுப்பினர்களும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சிவதாசனும் இதையே இங்கே சுட்டிக் காட்டினார்கள். இப்படி ‘பசு மாட்டு’ப் பெருமைகளைக் கூறிக் கொண்டு இந்தியாவை ‘ஏக் பாரத்’ சிறந்த இந்தியா என்று எப்படிக் கூற முடியும்? காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரே இந்தியா என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? இது ஒரே ஒரு இனத்துக்கான உரிமை கொண்ட நாடு என்ற கருத்தை நீங்கள் மாற்றிக் கொண்டு பல்வேறு மொழி, இனங்களைக் கொண்ட நாடு என்பதை அங்கீகரிக்க வேண்டும்? நாம் கடந்து வந்த பண்டைக்கால இந்தியா என்பது இழிவானது (Journey of the past is an ugly way), கல்வி என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. ஆனால் அதன் நோக்கம் சமூக வளர்ச்சிக்கு அது கருவி யாக்கப்பட வேண்டும். அடிமைச் சங்கிலிகளால் கட்டப்பட்ட மக்களை விடுவிப்பதாக இருக்க வேண்டும். அது தத்துவம் சார்ந்த அடிமையானாலும் மதம் சார்ந்த அடிமையானாலும் எந்த வகையான அடிமைத்தனமாக இருந்தாலும் சரி, மக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அத்தகைய கற்பித்தலும் சிந்தனையுமே தேவை; பண்டைக்கால சிந்தனைகள் இதற்கு பயன்படாது” என்றார் அவர்.

Pin It