ஹதியாவின் வழக்கை நாடே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. இந்துமத வெறியர்களும், இஸ்லாமிய மத வெறியர்களும் இந்த வழக்கை தங்களுடைய வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் வழக்காக எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறையும் வழக்கம் போல இந்துமத வெறியர்களின் கைதான் ஓங்கி இருக்கின்றது. இந்து மத வெறியர்களின் அளவிற்குத் திட்டமிட்டுப் பொய் பிரச்சாரம் செய்வதிலும், பிறகு அதையே சமூகத்தின் பொதுக் கருத்தாக உருவாக்குவதிலும், இஸ்லாமிய மத வெறியர்கள் பின்தங்கியே இருக்கின்றார்கள்.

பாபர் மசூதியை இடித்தால்தான் அரசியலில் காலூன்ற முடியும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால், அங்கே தான் ராமன் அவதரித்தார் என்ற பிரச்சாரத்தை தங்களுடைய காவி படைகளைக் கொண்டு நாடு முழுவதும் செய்வார்கள். அதுவரை யார் இந்த ராமன் என்று கூட தெரியாத அம்மாஞ்சி கூட ‘எப்படி ராமன் பிறந்த கோயிலை இடித்துவிட்டு, பாபர் மசூதியைக் கட்டலாம், நியாயப்படி அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தமானது’ எனப் பேச ஆரம்பிப்பான். இறுதியில் கையில் கடப்பாறையுடன் மசூதியை இடிப்பதற்கு முதல் ஆளாக போய் நிற்பான். காலம் தோறும் பார்ப்பனியம் தன்னை இப்படித்தான் நிலைநிறுத்திக் கொண்டு வருகின்றது.

hadiya at court

அப்படித்தான் கோத்ராவில் சமர்மதி விரைவு ரயிலை இஸ்லாமியர்கள்தான் திட்டமிட்டு தீவைத்துக் கொளுத்தினார்கள் என்ற கருத்தை உருவாக்கி, அதையே உண்மை என்று மாற்றி, மோடி அரசால் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களைக் கொல்ல முடிந்தது. கருத்துருவாக்கம் என்ற கலையில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பலுக்கு இணையான ஒரு குற்றக்கும்பல் உலகிலேயே கிடையாது என்று சொல்லிவிடலாம். இப்போது ஹதியாவை அவரது கணவரிடம் இருந்து வம்படியாக பிரித்து வைப்பதிலும், ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஏற்கெனவே சமூகத்தில் உருவாக்கி வைத்திருக்கும் பொதுக்கருத்துதான் வேலை செய்திருக்கின்றது. அது தான் ‘லவ் ஜிகாத்’ என்ற கருத்து. இது போன்ற வார்த்தை கண்டுபிடிப்புகள் நன்கு திட்டமிட்ட முறையில் செய்யப்படுகின்றது. ஓர் இஸ்லாமிய ஆண் ஓர் இந்துப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தால் அதற்குப் பெயர் லவ் ஜிகாத் என்றால், ஓர் இந்து ஆண் இஸ்லாமியப் பெண்ணை மணந்தால் அதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. ஒருவேளை ‘லவ் கர்வாப்ஸி’ என்று வைக்கலாமா என்று நினைக்கின்றேன்.

பொது சமூகத்தில் ஆயிரம் கருத்துகள் நிலவும், அதற்கு எதிர் கருத்துகளும் நிலவும். அது பிரச்சினை அல்ல. ஆனால் பொதுசமூகத்தில் நிலவும் கருத்துக்கு ஏற்ப நீதிமன்றங்கள் தங்களுடைய நீதியை வழங்கும் என்றால், அதற்கு நீதி மன்றம் என்ற ஒரு அமைப்பே தேவையில்லை. மக்கள் அதை ஊர்ப் பஞ்சாயத்துகளிலேயே பேசி தீர்த்துக் கொள்வார்கள். ஆதிக்க சாதியோ, ஆதிக்க மதமோ நீதியை முடிவு செய்ய விட்டுவிடலாம். 24 வயது நிரம்பிய ஒரு பெண்ணிற்கு தனது வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் அறிவு கூட இல்லை என்று நீதிபதிகள் நினைப்பார்களென்றால் இதைவிட ஒரு மோசமான சிந்தனையை நாம் மோகன் பகவத்திடம் இருந்துகூட எதிர்பார்க்க முடியாது. எதை வைத்து நீதிபதிகள் இந்தத் திருமணத்தை நாடகம் என்று முடிவுகட்டி, ஹதியாவை அவரது கணவர் ஷபின் ஜகானிடமிருந்து பிரித்து, அவருக்கு எதிராக செயல்படும் அவரது பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தார்கள் என்றால், அது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் பரப்பி வைத்திருக்கும் லவ் ஜிகாத் என்ற கருத்தின் மூலம்தான்.

திவ்யா இளவரசன் காதல் ஜோடியைப் பிரித்து வைத்து, திவ்யாவையும், அவரது அம்மாவையும் எப்படி மூலையில் உட்கார வைக்க ராமதாஸ் அவர்கள் உருவாக்கி வைத்த ‘நாடகக் காதல்’ என்ற சொல் காரணமாக இருந்ததோ, அதே போலத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் உருவாக்கிவைத்திருக்கும் ‘லவ் ஜிகாத்’ என்ற வார்த்தையும். இரண்டுமே அரசியலில் பொறுக்கித் தின்ன சாதிவெறியர்களும், மத வெறியர்களும் திட்டமிட்டு பரப்பும் அயோக்கியத்தனமான பரப்புரைகள். பொதுச்சமூகத்தில் சில அயோக்கியர்களால் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக திட்டமிட்டு பரப்பப்படும் ஆதாரமற்ற அவதூறுகளை எல்லாம் நீதிபதிகள் எந்தவித ஆய்வுக் கண்ணோட்டமும் இன்றி ஏற்றுக்கொண்டு தீர்ப்பு கொடுப்பார்கள் எனில், நாம் நிச்சயமாக அது போன்ற நீதிபதிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்யலாம்.

கேரள உயர்நீதி மன்றம் ஹதியாவுக்கும், ஷபின் ஜகானுக்கும் இடையே நடந்த திருமணத்தை சட்டத்திற்குப் புறம்பாக அடாவடித்தனமாக ரத்துசெய்து, தனது பார்ப்பனிய பயங்கரவாதத்தைக் காட்டியது என்றால் உச்சநீதிமன்றமோ இன்னும் ஒருபடி மேலே சென்று, இந்த வழக்கை என்.ஐ. ஏ விசாரணை செய்யுமாறு பணித்தது. இன்றைய தேதியில் நாட்டில் உள்ள அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் யின் நெம்பர் ஒன் கூலிப்படை அமைப்பு என்றால் அது என்.ஐ.ஏ தான். சிறையில் இருந்த காவி பயங்கரவாதிகள் அனைவரையும் எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி, ஏறக்குறைய அனைவரையுமே சட்டபடியே தப்ப வைப்பதில் அது வெற்றி பெற்றிருக்கும் சூழ்நிலையில், உச்சநீதி மன்றம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் கொடுத்தது சரியான ஒன்றுதான். ஏனென்றால் அதனால் மட்டும்தான் ஷபின் ஜகானை ஐ.எஸ் தீவிரவாதி என நிரூபிக்க முடியும். ஏன் அஜ்மல் கசாப்புக்கு ஆயுதம் வாங்கிக் கொடுத்து, அவரைப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குக் கூட்டிவந்ததே ஷபின் ஜகான் தான் என்று கூட நிரூபிக்கலாம். இல்லை காஷ்மீர் இளைஞர்கள் இந்திய ராணுவத்தின் மீது கல்லெறிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை கொடுக்கப்படும் பணத்தை ஷபின் ஜகான்தான் மாட்டு வியாபாரம் மூலம் கொடுத்துவந்தார் என்று கூட ஆதாரங்களை என்.ஐ.ஏ கண்டுபிடிக்கலாம்.

ஆதாரங்கள் ஒரு பிரச்சினையே இல்லை அது டன்கணக்கில் ஏற்கெனவே என்.ஐ.ஏ வும் ,சிபிஐயும், இந்திய ராணுவமும், காவல்துறையும் வைத்திருக்கின்றன. ஆனால் அவை யார்மீது திணிக்கப்படுகின்றது என்பதுதான் தற்போது உள்ள பிரச்சினை. பெரும்பாலும் இது போன்ற ஆதாரங்கள் தாடியும், குல்லாவும் வைத்திருக்கும் ஒருவருக்கு இந்தியாவில் மிகச் சரியாக பொருந்திப் போகின்றன. கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தால்கூட இந்து பொதுச்சமூகம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை தாடியும், குல்லாவும் உலக தீவிரவாதத்தின் குறியீடு.

ஒருவேளை ஹதியா அகிலாவாகவே இருந்திருந்து, ஷபின் ஜகானை கரம் பிடித்திருந்தால் நீதிமன்றம் இந்தத் திருமணத்தை எப்படி அணுகி இருக்கும், தற்போது ஹதியாவின் அப்பாவாகவும், இதற்கு முன்னால் அகிலாவின் அப்பாவாகவும் இருந்த அசோகன் என்ன செய்திருப்பார் என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றும் பெரியதாக சம்பவங்கள் மாறி நடந்திருக்காது என்றுதான் தோன்றுகின்றது. அகிலா ஹதியாவாக மாறியதும், அவர் இந்திமதக் கடவுள்களுக்குப் பதில் அல்லாவைத் தொழுவதும் ஒரு பிரச்சினையே அல்ல, பிரச்சினை என்பது அவர் ஷபின் ஜகானைத் திருமணம் செய்துகொண்டதுதான். இந்தப் பிரச்சினையில் கூட அகிலா திருமணத்திற்கு முன்பே ஹதியாவாக மாறிவிட்டார், மாறிய பிறகுதான் அவர் ஷபின் ஜகானை தன் விருப்பத்தின் பேரில் மணமுடித்திருக்கின்றார். இது ஒரு காதல் திருமணம் கூட இல்லை. இஸ்லாத்தின் மீதான காதலால் மதம் மாறிய அகிலா, பின்பு தன்னுடைய மதத்தைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்து கொள்கின்றார். ஷபின் ஜகான், ஹதியாவை காதலிக்கவும் இல்லை, அவரை மதம் மாற்றவும் இல்லை. மதம் மாறியது அகிலாதான், திருமணம் செய்துகொள்ள ஷபின் ஜகானை அணுகியதிலும் அகிலாவின் பங்கு பரஸ்பரம் இருக்கின்றது அப்படி இருக்கும் போது ஷபின் ஜகானை முழுக் குற்றவாளியாக, அதுவும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் தீவிரவாதி என்ற அளவிற்கு நீதிமன்றங்கள் அவரைக் காட்சிப்படுத்துவது இந்திய நீதிமன்றங்கள் இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாகவும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் சொல்லும் முஸ்லிம்கள் வந்தேறிகள் என்ற அழுகிப்போன வாதத்திற்கும் ஒத்து ஊதும், அதையே சட்டப்படி நிரூபிக்கும் அமைப்புகள் என்பதைத்தான் நிரூபிக்கின்றன.

ஹதியா தன்னுடைய பேட்டியில் குறிப்பிடுகின்றார், அவரது தந்தை அசோகன் ஒரு நாத்திகர் என்று. அது நீதிமன்றப் பாசிசத்தைவிடக் கொடுமையானதாக இருக்கின்றது. நாத்திகர் என்ற வார்த்தையின் முழுமையான பொருளில் பார்த்தால், அவரது தந்தை பழமைவாதத்தை, சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளை அது சாதி, மதம், கடவுள், பொருளாதார சுரண்டல் என அனைத்தையும் பகுத்தறிவின் துணைகொண்டு ஆராய்ந்துபார்க்கும் நபர் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அசோகன் அப்படியே கூட இருக்கலாம். ஊருக்கு சாதி, மத, கடவுள் எதிர்ப்பை உபதேசம் செய்யும் நாத்திகர்கள் அது தன்னுடைய வீட்டில் முளைவிட்டால் அவர்கள் எப்படி மாறுவர்கள் என்பதற்கு ஓர் உதாரணமாக அசோகன் மாறி இருக்கின்றார்கள். சாதியோ, மதமோ, கடவுளோ மனிதர்களால் கற்பிக்கப்பட்ட ஒன்று. அது மனிதர்களைப் பிரித்தாளும் பொருளாதார சுரண்டல்வாதிகளின் ஆயுதம் என்பதைக்கூட இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத நாத்திக மனம் சாதிய பாசித்தை விட, மதப் பாசிசத்தைவிட, பொருளாதார பயங்கரவாதத்தைவிட மோசமானது. ஒவ்வொரு மனிதனின் பிழைப்புவாதத்தின் எல்லையை அவனது உச்சபட்ச செயல்பாடுகளில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். அசோகன் என்ற நாத்திகர் கடைபிடித்த நாத்திகத்தின் எல்லை அவரது மகள். அவரது நாத்திகம் ஊரை ஏமாற்றி பிழைப்பதற்காக போடப்பட்ட வேசம் என்பதை அவரது மகள் நிரூபித்துவிட்டார்.

கேரள உயர்நீதிமன்றத்தால் திருமணம் ரத்துசெய்யப்பட்டதை எந்த வகையிலும் கண்டுகொள்ளாத உச்சநீதிமன்றம், ஹதியாவை அவர் இன்றுவரை கணவராக முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கும் ஷபின் ஜகானுடனுடன் அனுப்பாமல், அவர் படித்த சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவமனையின் முதல்வரின் கட்டுப்பாட்டில் அனுப்பிவிட்டது. 24 வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கு தான் யாருடன் வாழவேண்டும் என்று முடிவெடிக்கும் அதிகாரத்தைப் பறித்து உச்சநீதி மன்றமும் ஒரு சங்கரமடம்தான் என்று காட்டியிருக்கின்றது. இனியும் இந்த நீதிமன்றங்களும் நீதிபதிகளும் யோக்கியமானவர்கள் என்று யாராவது நினைப்பார்களே ஆனால், அதைவிட அபத்தம் வேறு ஒன்றும் இருக்காது.

இனி இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன செய்யும் என்று தெரியவில்லை. ஒருவேளை ஹதியா முஸ்லிமாக மதம் மாறியது செல்லாது என அறிவித்து நீதிமன்றத்திலேயே சங்கராச்சாரியார் முன்நிலையில் அவர் மீண்டும் இந்துவாக மதம் மாற்றப்படலாம். ஹதியா அகிலாவாக கர்வாப்ஸி செய்யப்பட்டதை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவிக்கலாம். நீதிபதிகள் தங்களது கமண்டலத்தில் இருந்து புனித கங்கையின் நீரைத் தெளித்து ஆசி வழங்கலாம். நீதிமன்றமே மதம் மாற்றப்பட்ட அகிலாவை ஒரு நல்ல வீரமுடைய இந்து ஆண்மகனுக்கு மணமுடித்து வைத்து நான்கு குழந்தைகளைப் பெற்று இந்து சமூகத்தை காப்பாற்றுமாறு அறிவுரை வழங்கலாம். அப்படி என்றால் ஷபின் ஜகானின் நிலை! அப்சல் குருவுக்கும், யாக்கூப் மேமனுக்கும் என்ன நடந்தோ அதே போல ஏதாவது நடக்கலாம். அது நடக்க வேண்டும் என்பதுதான் இந்து பொதுச்சமூகத்தின் பொது விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் பார்ப்பன இந்துமத வெறியின் தலைமை பீடங்களான நீதிமன்றத்தின் வேலை.

- செ.கார்கி

Pin It