பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான கருணை மனு பதினோறு ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில் தனிப்பட்ட ஒவ்வொருவரது கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டு, மரண தண்டனை குறித்து, இந்திய சட்டங்களும், நீதிமன்ற முன்தீர்ப்புகளும், கடந்த கால வரலாறுகளும் என்ன சொல்லுகின்றன என்று பார்க்கலாம்.
இந்திய அரசியலமைப்பு சாசனம்,1950
சரத்து 72. (1) (அ) ஒரு படை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனைகளை;
(ஆ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் அடங்கக்கூடிய ஒரு விவகாரத்தை எதிர்த்துச் செய்யப்பட்டுள்ள குற்றத்துக்காக விதிக்கப்பட்ட தண்டனைகளை,
(இ) மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறைப்பதற்க்கும், நீக்கறவு செய்வதற்க்கும், தண்டனையினின்று மீட்பதற்கும் அல்லது மன்னிப்பு வழங்குவதற்கும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது.
(3) (1)ஆவது கூறின் (இ) கிளைக் கூறில் உள்ளவை எதுவும், அமலில் உள்ள ஒரு சட்டப்படி, மரண தண்டனையை நீக்கறவு செய்வதற்கு அல்லது நிறுத்தி வைப்பதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு, ஒரு மாநில ஆளுநருக்குள்ள அதிகாரம் எதையும் பாதிக்காது.
சரத்து 161. குற்றத் தண்டனை பெற்றவருக்கு, மன்னிப்பை வழங்குவற்கும், அந்த தண்டனையைக் குறைப்பதற்கும், நீக்கறவு செய்வதற்கும், விடுபடுவதற்கும் அல்லது நிறுத்திவைப்பதற்கும் ஒருவகைத் தண்டனையை மற்றொரு வகையாக மாற்றுவதற்கும், ஒரு மாநில ஆளுனருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அத்தகைய அதிகாரம், ஒரு மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் வரக்கூடிய சட்ட விவகாரங்கள் பற்றியதாகும்.
குற்றவியல் நடைமுறை சட்டம்,1973
பிரிவு 432: தண்டனைகளை நிறுத்தி வைக்கவோ, குறைப்பு செய்யவோ உள்ள அதிகாரம்:
(1). ஒரு குற்றத்திற்காக எவரேனும் தண்டிக்கப்பட்டிருக்கும்போது, தண்டிக்கப்பட்டவர் ஒத்துக்கொள்ளுகிற எவற்றின் நிபந்தனைகளின் பேரிலோ அல்லது நிபந்தனைகள் இல்லாமலோ, உரிய அரசு எந்தச் சமயத்திலும் அவருடைய தண்டனை நிறைவேற்றப்படுதலை நிறுத்தி வைக்கலாம். அல்லது, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை முழுவதையுமோ அல்லது அதன் பகுதி எதையுமோ தள்ளுபடி செய்யலாம்.
பிரிவு 433: தண்டனையை மாற்றும் அதிகாரம்:
உரிய (மத்திய அல்லது மாநில) அரசு தண்டிக்கப்பட்டவரின் இசைவு இல்லாமலேயே, (அ) ஒரு மரண தண்டனையை இந்திய தண்டனை சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கும் வேறு எந்த தண்டனையாகவும்............மாற்றலாம்.
பிரிவு 433அ: தண்டனையை மாற்றுதல் மற்றும் குறைத்தல் தொடர்பான அதிகாரங்களின் மீதான தடை:
பிரிவு 432ல் அடங்கியுள்ளது எதுவாயினும், இச்சட்ட தொகுப்பில் வகை செய்யப்பட்டுள்ளபடி, மரண தண்டனைக்குரிய குற்றத்திற்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்படும்போது அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு பிரிவு 433ன் படி ஆயுள் தண்டனை என மாற்றப்படும்போது, அவ்வாறான நபர் குறைந்தது 14 ஆண்டுகள் சிறையில் கழித்தாலன்றி, சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டார்.
இந்திய தண்டனை சட்டம்,1860
பிரிவு 54: மரண தண்டனையை மாற்றுதல்:
மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வழக்கிலும், உரிய (மத்திய அல்லது மாநில) அரசு, குற்றவாளியின் இசைவு இல்லாமலேயே, அத்தண்டனையை இந்தச் சட்டத்தால் வகை செய்யப்பட்ட வேறெந்த தண்டனையாவும் மாற்றலாம்.
கடந்தகால வரலாறு:
1942 ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த குலசேகர பட்டிணம் சதி வழக்கில் முதல் எதிரி காசிராஜனுக்கும், இரண்டாம் எதிரி ராஜகோபாலனுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையும், 100 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1946ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் நீக்கறவு செய்யப்பட்டது.
பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த சி.ஏ. பாலன் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கடந்த 1952ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வரால் நீக்கறவு செய்யப்பட்டது.
மேலும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் பிரதாப் சிங் கைரோன் என்பவரை கொலை செய்ததாக தயா சிங் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக்கு எதிராக, அவர் தாக்கல் செய்த கருணை மனுவை இரண்டு ஆண்டுகள் கழித்து தள்ளுபடி செய்தது சரியானதல்ல என்று பல்வேறு முன் தீர்ப்பு நெறிகளைச் சுட்டிக்காட்டி, கடந்த 1991ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.
எனவே, இந்திய சட்டங்களின்படியும், நீதிமன்ற முன்தீர்ப்புகளின்படியும், கடந்த கால வரலாறுகளின் அடிப்படையிலும் மூவருக்குமான மரண தண்டனை நீக்கறவு செய்யப்பட வேண்டியதே இயற்கை நீதித் தத்துவமாகும்.
- இ.இ.இராபர்ட் சந்திரகுமார், வழக்கறிஞர் (