பேரறிவாளனின் விடுதலைக்கான போராட்டம் 31 நீண்ட ஆண்டுகளாக நடந்து, கடந்த மே 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாளின் மன உறுதியும், துணிவும், விடா முயற்சியும் எவராலும் எண்ணிப் பார்க்க இயலாதது. ஆனால் இப்போராட்டம் அவர்கள் இருவரின் போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. அதற்கு துணை நின்றவர்கள், பங்காற்றியவர்கள் ஏராளம். அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. பலர் பொது வாழ்வில் இல்லை. பலர் பாதை மாறி சென்றுவிட்டனர். அதற்காக அவர்கள் நெருக்கடியான ஒரு காலக்கட்டத்தில் அளித்த பங்களிப்பு என்பது இல்லையென்று ஆகி விடாது. தொடக்கம் முதல் துணை நின்று இறுதி வரை தொடர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்ட அடுத்தடுத்த தலைமுறையினர் இப்போராட்டத்தை உயிர்ப்புடன் நகர்த்தினர்.

perarivalan at senkodi memorial2011-க்கு பின் இப்போராட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாக தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் பெற்ற போராட்டமாக மாறியது. ஆனால் தொடக்கத்தில் அப்படியான நிலை இல்லை. ‘நாட்டின் தலைவர்’ கொல்லப்பட்ட ‘பயங்கரவாத’ வழக்கு என்ற பார்வை மாறி, மக்கள் போராட்டமாக இது மாறியதற்குப் பின் முகமறியா பலரின் கடும் உழைப்பும், அர்ப்பணிப்பும் உள்ளது. இக்காலக்கட்டம் முழுவதிலும் சாட்சியாய் நின்று நான் நேரடியாகப் பார்த்த, பொதுவெளியில் அதிகம் அறியப்படாதவற்றின் பதிவே இது.

1989-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்று ஒரு கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதில் 80-க்கும் மேற்பட்ட அமைப்புகள் அங்கம் வகித்தன. இவற்றில் எதுவும் தேர்தல் அரசியல் அமைப்புகள் இல்லை. மாறாக பல்வேறு கருத்தியல் தளங்களில் இயங்கிய தமிழ்த் தேசிய, பெரியாரிய, மார்க்சிய, தலித்திய, மனித உரிமை அமைப்புகள், ஈழ ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் இக்கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்டன. 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை இக்குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெறும்.

1991-ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இராசீவ் காந்தி மரணத்திற்குப் பின் தமிழகமெங்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அச்சமயத்தில் அக்குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. குழுவின் தலைவர் பழ. நெடுமாறனின் வீட்டில் நடந்த அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மூவர் மட்டுமே. பேராசிரியர் சாலை இளந்திரையன், பேராசிரியர் சாலினி இளந்திரையன், பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

அதன் பிறகு 1993ஆம் சனவரியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதி கிட்டு வந்த கப்பல் சர்வ தேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டது. பேச்சு வார்த்தைகள் பலனளிக்காத நிலையில் கப்பலின் மாலுமிகள் மற்றும் ஊழியர்களை இறக்கி விட்டு, அவர்களை இந்திய கடற்படையிடம் சரணடையச் சொல்லிவிட்டு விடுதலைப் புலிகளால் கப்பல் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. இது நடந்து சில நாட்களில் ‘இந்த நிகழ்விற்கு பழி வாங்குவதற்காக தமிழ்நாடெங்கும் குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக’ குற்றம் சாட்டப்பட்டு எனது தந்தை பழ. நெடுமாறன் தடாவில் கைது செய்யப்பட்டார். தடா வழக்கு அன்றைய தடா நீதிபதி நீதியரசர் சித்திக் முன் வந்த போது பழ. நெடுமாறன் தானே தனக்காக வாதாடினார். சதித் திட்டம் தீட்டியதாக சொல்லப்பட்ட நாளில் இதே கிட்டு கப்பல் நிகழ்விற்காக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தி அதற்காக கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் தான் வைக்கப்பட்டிருந்ததை ஆதாரத்துடன் அவர் நிரூபித்தார். அதனடிப்படையில் போடப்பட்டது பொய் வழக்கு என்று உறுதி செய்யப்பட்டு தடா வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அப்படி ஒரு தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சித்திக் உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டார். அந்த புதிய நீதிபதி தான் 1998-இல் 26 பேருக்கும் மரண தண்டனை வழங்கினார்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், அக்காலக்கட்டத்தில் தமிழகமெங்கும் இப்படி பலர் மீது பொய்யான தடா வழக்கு போடப்பட்டது. ராசீவ் கொலை வழக்கைத் தவிரவும் பல தடா வழக்குகள் தமிழ் நாடெங்கும் பலர் மீதும் போடப்பட்டன. அக்காலக்கட்டத்தில் தடா வழக்கைச் சந்தித்தவர்களில் பெரும்பாலோர் ஈழ ஆதரவாளர்களாகவே இருந்தனர். அப்படி பொய்யான தடா வழக்கில் சிக்க வைக்கப்பட்ட பலரில் ஒருவர்தான் பேரறிவாளன். அவ்வழக்குகளில் சிக்கியவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் விடுதலையாக, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் மட்டும் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர்.

1998-ஆம் ஆண்டு சனவரி 28 அன்று தடா நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவர்களில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். 13 பேர் ஈழத் தமிழர்கள். இது தற்செயலானது அல்ல. மேலும் இவர்கள் எவரும் பெரும் செல்வந்தர்கள் இல்லை. பலர் குடும்பத்துடன் சிறைபட்டிருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்குப் போதுமான வசதியோ, வாய்ப்போ அவர்களில் பலருக்கு இருக்கவில்லை.

இத்தீர்ப்பு வெளிவந்த அன்று - எனக்கு நன்றாக நினைவுள்ளது - இரவு நானும் சரி அப்பாவும் சரி உறங்கவே இல்லை. நான் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தேன். அப்பா எதுவும் பேசவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே முதல் ஆளாக அங்கு வந்து நின்றவர் அன்றைய பெரியார் தி.க. வின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் மு. பாலகுரு. அவரும் ஆத்திரத்துடன்தான் பேசினார். அவரைத் தொடர்ந்து வரிசையாக பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள் என அந்த வீடும் தெருவும் ஆட்களாலும் வாகனங்களாலும் நிறைந்தது.

அன்று மாலையே தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. 1991-இல் தலைவர் மற்றும் மூன்றே உறுப்பினர்களுடன் நடந்த அந்தக் கூட்டம் 1998-இல் நிற்கக் கூட இடமில்லாத கூட்டத்துடன் நடந்தது. இக்கூட்டத்தில்தான் 26 தமிழர் உயிர்காப்புக் குழு உருவானது. பழ. நெடுமாறன் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவிலும் அந்த 80 அமைப்புகளும் இணைந்தன. இக்குழு உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் நிதி திரட்டி உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கை நடத்தியது. இக்குழுவில் அங்கம் வகித்த அமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் வீதி வீதியாகச் சென்று நிதி திரட்டினர். இக்குழுவில் பெரிய அரசியல் கட்சிகள் எதுவும் நேரடியாக இணையவில்லை என்ற போதும், பல அரசியல் கட்சிகளின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களும், தோழர்களும் தாங்களாக முன்வந்து நிதி திரட்டி அளித்தனர். அதில் காங்கிரசு தோழர்கள்கூட இருந்தனர் என்பது முக்கியமானது.

சிபிஐ-யின் வழக்கறிஞராக பல வழக்குகளில் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் நடராசன், அப்பணியை உதறிவிட்டு இவ்வழக்கை நடத்த ஒப்புக் கொண்டார். அதற்கான முயற்சியை எடுத்தவர் வழக்கறிஞர் சந்திரசேகரன்.

மூத்த வழக்கறிஞர் நடராசன் இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று வாதிட்டு வெற்றியும் கண்டார். 1999-ஆம் ஆண்டு மே 11 அன்று உச்ச நீதிமன்றம் தடா சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது என்று கூறியதோடு 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது. எஞ்சிய எழுவரில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையை உறுதி செய்தும், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து மரண தண்டனையைக் குறைக்க கோரி 1999 அக்டோபர் 17 அன்று மாநில ஆளுநருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. பத்தே நாட்களில் 1999 அக்டோபர் 27 அன்று அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி கருணை மனுக்களை நிராகரித்தார். இச்செய்தி வந்த அன்று நீதியரசர் கிருஷ்ணய்யர் பழ. நெடுமாறன் அவர்களை தொலைபேசியில் அழைத்து ஆளுநருக்கு அப்படி நிராகரிக்க சட்டப்படியான அதிகாரம் இல்லை என்று தெரிவித்ததோடு, அதற்கான ஆதாரமாக தான் அளித்த தீர்ப்பையே சுட்டிக்காட்டினார். இதனடிப்படையில் ஆளுநரின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றும், மாநில அமைச்சரவைக்கே அதிகாரம் என்றும் தீர்ப்பு பெறப்பட்டது. இத்தீர்ப்பைப் பெற்றுத் தந்தவர் அன்று வழக்கறிஞராக இருந்து பின்னர் நீதிபதியாகவும் ஆன திரு. சந்துரு அவர்கள். கருணை மனு ஆளுநரிடமிருந்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

இக்காலக்கட்டத்தில் தமிழகமெங்கும் மரண தண்டனை எதிர்ப்புப் பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்றது. விடுதலையானவர்களுடன் தமிழகமெங்கும் ஒரு சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மேடையேறி தாங்கள் இவ்வழக்கில் எவ்வாறு பொய்யாக சிக்க வைக்கப்பட்டோம் என்பதை சொல்லச் சொல்ல மக்களின் ஆதரவு பெருகியது. வழக்கிற்கு நிதியாக தன்னுடைய அன்றைய கூலியைக் கொடுத்தவர்கள், பொன் தாலியையும் பொன் வளையலையும் கழற்றிக் கொடுத்தவர்கள் என மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். புது தில்லியிலும் மரண தண்டனை எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அம்மாநாட்டிற்கு வந்த அகில இந்திய அளவில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் “நாங்கள் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக செயற்பட்டு வருகிறோம். ஆனால் இப்போதுதான் அதற்கு ஆதரவாக இத்தனை பெரிய எழுச்சியைக் காண்கிறோம். அதற்கு உங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நன்றி” என்று நெகிழ்ந்தனர்.

மரண தண்டனை எதிர்ப்பு என்பது பெயரளவில் இவ்வழக்கிற்காக மட்டும் இருக்வில்லை. அச்சமயத்தில் கோவை சிறையில் இருந்த கோவிந்தசாமி என்ற மரண தண்டனை சிறைவாசிக்கு மரண தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்ட செய்தி வந்தது. இச்செய்தியைச் சொன்னவர் மனித உரிமைப் போராளியும் எழுத்தாளருமான திரு. எஸ்.வி.ஆர் அவர்கள். அச்சமயம் பழ. நெடுமாறன் சென்னையில் இல்லை. அதனால் எஸ்.வி.ஆர் அவர்கள் உடனடியாக செயற்பட்டு கோவிந்தசாமியின் மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான மனுவை தயாரித்துக் கொடுத்தார். அதை தட்டச்சு செய்து யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டும் என்று வழிகாட்டி அன்று அந்த மரண தண்டனையைத் தடுத்து நிறுத்த பெரும் காரணமாக இருந்தார்.

இதற்கிடையே தலைவர்கள் பலரும் மரண தண்டனைக்கு எதிராகப் பரவலாகக் கருத்துக் கூறத் தொடங்கினர். அகாலிதளத்தின் தலைவர் சிம்ரஞ்சித்சிங் மான் போன்ற சில தலைவர்கள், இவர்கள் நால்வருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று குறிப்பாகவே பேசினார்கள்.

பல அமைப்புகளும் மரண தண்டனை எதிர்ப்புக் கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தின. எழுத்தாளர்கள் மாநாடு, வழக்கறிஞர்கள் மாநாடு, மாணவர்கள் மாநாடு எனப் பலதரப்பட்டவர்களும் மரண தண்டனைக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

நடந்த அந்த ஒவ்வொரு மாநாட்டிற்குப் பின்னாலும் தமிழர் உயிர்காப்புக் குழுவின் முயற்சியே முழுமையாக இருந்தது. அக்குழுவில் இருந்த அமைப்புகள் எவையும் பெரும் பொருளாதாரப் பின்னணியோ இலட்சக்கணக்கில் உறுப்பினர்களையோ கொண்டவை அல்ல. ஆனாலும் அந்த அமைப்புகள் அனைத்தும் தங்கள் முழு ஆற்றலையும் இதற்கு செலவிட்டன. எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், அரசியல்வாதிகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதியும், குழு உறுப்பினர்களே நேரில் சென்று சந்தித்தும், உண்மைகளை எடுத்துக் கூறி, அவர்கள் ஆதரவைப் பெற்று, ஒரே அணியாகத் திரட்டி அவர்கள் பெயராலேயே மாநாடுகள் நடத்தியது குழு.

அதோடு தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளுக்கு நேரிடையாகச் சென்று செய்த பிரச்சாரங்களின் மூலம் மரண தண்டனைக்கு எதிராக மாணவர்களை மாநாடு, பேரணி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைக்கூட நடத்த வழிகாட்டியது குழு.

பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடெங்கும் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் எனப் பிரமுகர்கள் பலரும் மரண தண்டனை ஒழிப்புப் படிவத்தில் கையெழுத்திட்டனர்.

சில நாட்களில் மரண தண்டனை ஒழிப்பு இயக்கம் ஒருநாடு தழுவிய இயக்கமாக மாறியது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மரண தண்டனை எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

அதோடு உலகெங்கும் மரண தண்டனை ஒழிப்புக்காகவும், குறிப்பாக இவர்கள் நால்வரின் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரியும் கையெழுத்து இயக்கம் நடத்துவதென முடிவெடுத்து அதற்கான வேலைகளும் முடுக்கி விடப்பட்டன.

ஒட்டுமொத்தமாக மக்களிடம் கையெழுத்து வாங்குவதற்கான படிவங்களும், சமூகத்தில் உயர்நிலையிலிருக்கும் அதிகாரிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் போன்றோர் கையெழுத்திட்டு அனுப்பக்கூடிய தனிப்பட்ட கடிதங்களும் அச்சிடப்பட்டு, குழுவின் மாவட்ட நிருவாகிகளுக்கு அனுப்பப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டன. அதோடு இணையத்தளங்களின் மூலம் உலகத் தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடப்பட்டது. உலகெங்குமிருந்து குடியரசு தலைவருக்கும், தமிழக ஆளுநருக்கும் கடிதங்கள் குவிந்தன.

இதற்கிடையே கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அப்பெண்ணின் கணவர் துபாயில் கொல்லப்பட்டு, அவரைக் கொன்றவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அந்நாட்டுச் சட்டப்படி இறந்தவரின் உறவினர்கள் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகச் சொன்னால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும். அதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் மனைவி இறந்துபோனவரின் மனைவிக்கு, தன் கணவரை மன்னிக்கும்படி வேண்டிக் கடிதம் எழுதினார். இந்தப் பெண்ணும் “இறந்த என் கணவர் மீண்டும் வரப்போவதில்லை. அவர் பொருட்டு ஏன் மீண்டும் இன்னொருவர் இறக்க வேண்டும். அப்படி நேர்ந்தால் என்னைப் போலத்தானே அவரது குடும்பத்தினரும் துன்பப்படுவர்– எனவே அவரது மரண தண்டனை இரத்து செய்யுங்கள்” என அந்நாட்டு நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டார். மரண தண்டனையும் இரத்தானது.

இதைச் சோனியா காந்திக்குக் குறிப்பிட்டு எழுதிய அப்பெண் அவ்வாறே சோனியாவும், தன் கணவரைக் கொன்றதாகத் தண்டிக்கப் பட்டவர்களை மன்னிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தேசியப் பெண்கள் ஆணையத் தலைவி மோகினி கிரி வேலூர் வந்து நால்வரையும் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார்.

இரண்டொரு நாட்களில் சோனியாவின் அறிக்கை வந்தது. “நால்வருக்கும் மரண தண்டனை விதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக ஒரு சிறு பெண்குழந்தையின் தாயான நளினி அக் குழந்தைக்காகவாவது வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” – என்றார்.

1999 நவம்பர் 30 அன்று தமிழகமெங்கும் மக்களிடம் திரட்டிய ஒரு கோடி கையெழுத்துகளுடன் உயிர் காப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் குடும்பத்துடன் திரண்டு – ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று பெரும் பேரணியாகச் சென்று அன்றைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மக்களின் கோரிக்கையாக இந்நால்வரின் மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கோரினர். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து, 2000 ஏப்ரல் 19 அன்று நளினியின் மரண தண்டனையை மட்டும் இரத்து செய்து மாநில அரசு பரிந்துரைத்தது.

அதன் பின்னர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அனுப்பப்பட்டது. இதற்கிடையே இரு முறை இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாளும் குறிக்கப்பட்டது. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அச்செய்தியை சிறை அலுவலர்களே பழ. நெடுமாறனுக்கு அழைத்து சரியான நேரத்தில் தெரிவித்ததால் உடனடி சட்ட நடவடிக்கைகள் மூலம் அவை தடுக்கப்பட்டன.

2004-ஆம் ஆண்டு சூன் மாதம் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தனது மகனின் விடுதலைக்காக நடத்தி வரும் போராட்டத்தின் பதிவாக எழுதப்பட்ட ‘தொடரும் தவிப்பு’ நூல் வெளியானது. அந்நூல் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்தான் இவ்வழக்கின் விசாரணை அதிகாரி கார்த்திகேயன் இவ்வழக்கு விசாரணைப் பற்றி எழுதிய நூல் வெளியாகியிருந்தது. அதில் சொல்லப்பட்டிருந்த செய்திகளுக்கு நேர் முரணான செய்திகளைக் கொண்ட ‘தொடரும் தவிப்பு’ நூல் தமிழகமெங்கும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. முதன் முதலாக இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்த அந்த நூலை பற்றியும், அற்புதம் அம்மாவைப் பற்றியும் அனைத்து ஊடகங்களும் எழுதின.

நூலின் பிரதி ஒன்று அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்தே நாட்களில் குடியரசுத் தலைவரிடமிருந்து நூலை பாராட்டிக் கடிதம் வந்தது. மூவரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரிடம் தங்கியுள்ள நிலையில் அப்பாராட்டுக் கடிதம் குடியரசுத் தலைவர் மரண தண்டனைக்கு ஆதரவான முடிவை எடுத்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையை அளித்தது. அதே போல 2007- இல் அவரது பதவிக் காலம் முடியும் வரை அவர் கருணை மனுக்கள் மீது எம்முடிவையும் எடுக்காமல் அப்படியே விட்டுச் சென்றார். இந்தக் கால தாமதமே பின்னர் 2014-இல் மரண தண்டனையை இரத்து செய்வதற்கான காரணமாக நீதிமன்றத்தால் சொல்லப்பட்டது.

இதற்கிடையே 2009-இல் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்நாட்டுத் தமிழர்களோ போரை நிறுத்த இயலா கையறு நிலையில் நின்றனர். இந்த தவிப்பு மக்கள் மனதில் எவ்வாறு தகித்துக் கொண்டிருந்தது என்பது 2011-இல் தெரிந்தது.

2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று – மூவரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்ததைத் தொடர்ந்து மூவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற மீண்டும் நாள் குறிக்கப்பட்டது. இச்செய்தி வெளிவந்த போது தமிழகமெங்கும் பெரும் கொந்தளிப்பு எழுந்தது. ஈழப் போரின் முடிவால் ரண வேதனையில் இருந்த மக்களை இந்தச் செய்தி கொதிக்க வைத்து விட்டது. ‘பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்து விட்டோம். மூவரையாவது காப்பாற்றியே ஆக வேண்டும்’ என்று வீதிக்கு வந்தனர். “தொடர்ந்து நம்மை இப்படி அழிக்கப் பார்க்கிறார்களே.. இதை விடவே கூடாது” என்று என்னிடமே ஆத்திரப்பட்டவர்கள் அழுதவர்கள் பலர். 2011 ஆகஸ்டு 28 அன்று மக்களின் தவிப்பிற்கு சாட்சியாய் தீப்பிழம்பாய் தன்னை ஈந்தார் தோழர் செங்கொடி. மக்களின் கொதிப்பு பன்மடங்காகியது. மரண தண்டனை நிறைவேற்றலை நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் விசாரணை நடந்த 2011 ஆகஸ்ட 30 அன்று அறைக்குள் அசையக் கூட முடியாத அளவிற்கு வழக்கறிஞர்கள் கூட்டம். வெளியே நீதிமன்ற வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம். இவ்வழக்கிற்காக மூத்த வழக்கறிஞர் இராம் ஜெத்மலானியை வரவழைத்திருந்தார் ம.தி.மு.க பொதுச் செயலளர் திரு. வைகோ அவர்கள்.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக மரண தண்டனையையே முற்றிலும் நீக்கக் கோரி போடப்பட்ட வழக்கில் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று தீர்ப்பு வந்தது. 16 ஆண்டு காலமாக மூவரின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த தூக்குக் கயிறு அறுத்தெறியப்பட்டது.

அத்தீர்ப்பு வந்த மறுநாளே அன்றைய முதல்வர் ஜெயலலிதா எழுவரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றியதோடு, ஒன்றிய அரசுக்கு 3 நாட்கள் கெடு வைப்பதாகவும், இல்லையேல் தானே விடுவிக்கப் போவதாகவும் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஒன்றிய அரசு.

அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை எழுவரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் 3 ஆண்டுகளை ஆளுநர் கடத்தியதற்கு எதிரான வழக்கில்தான் தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். இவ்வழக்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு விடுதலைக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வாதிட்டது வழக்கின் வெற்றிக்கு உதவியுள்ளது.

1999-ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் நடராசன் வாதாடி இவ்வழக்கில் தடா செல்லாது என்று பெற்று தந்த தீர்ப்பு, அதே ஆண்டில் ‘ஆளுநருக்கு அதிகாரமில்லை, அமைச்சரவைக்கே அதிகாரம்’ என்று நீதியரசர் கிருஷ்ணய்யரின் வழிகாட்டுதலில் வழக்கறிஞர் சந்துரு பெற்றுத் தந்த தீர்ப்பு ஆகியவை இந்தத் தீர்ப்புக்கு அடிப்படையாக இருந்துள்ளன.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில் இவ்வழக்கின் நீதிபதியான நாகேசுவர ராவ் ஓய்வு பெற இருக்கிறார். இதுவே அவரது இறுதி வழக்கு, இறுதித் தீர்ப்பு. தான் போவதற்குள் பேரறிவாளனை விடுதலை செய்து விட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்திருக்கிறார். அப்படி இருந்தும் ஒரு மாத்திற்கு முன் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி இடைக்காலத் தீர்ப்பு ஒன்றினையும் அளித்திருந்தார். கட்டாயம் விடுதலை செய்ய வேண்டும் என்ற மனநிலையை வெளிப்படுத்தியுள்ள நீதிபதி ஏற்கெனவே பரோலில் இருப்பவருக்கு, ஏன் பிணை வழங்க வேண்டும் என்ற கேள்வி அப்போதே எழுந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

பரோலில் இருந்தபடியே விடுதலை செய்யப்பட்டிருந்தால் அவர் அந்தத் தீர்ப்பின் நகலைப் பெற்று மீண்டும் சிறைக்குச் சென்று முறைப்படியான நடவடிக்கைகளை முடித்த பிறகுதான் வெளிவர முடியும். அதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அதற்குள் ஏதேனும் இடையூறு வரலாம். இந்த நிலையில்தான் அவர் பேரறிவாளனுக்கு பிணை வழங்கியுள்ளார். பிணை வழங்கப்பட்ட உடனேயே அவர் சிறைக்குச் சென்று அத்தனை முறைப்படியான நடவடிக்கைகளையும் முடித்து விட்டார். தற்போது வந்த விடுதலைத் தீர்ப்பு அவரை அந்த நொடியே விடுவித்திருக்கிறது. இதில்தான் நீதியரசர் நாகேசுவர ராவின் மனிதநேயமும் அறிவுக் கூர்மையும் புலப்படுகிறது.

இப்படி இன்று பேரறிவாளன் விடுதலை என்பது, பேரறிவாளன் மற்றும் அற்புதம் அம்மாவின் 31 ஆண்டு காலப் போராட்டம் மட்டுமல்ல, அது பலரின் போராட்டம். பலரின் கனவு.. பலரின் ஆதங்கம்.. ஈழக் கனவின் மீது விழுந்த அடிக்குப் பின் அதே மே 18 அன்று தமிழருக்கு கிடைத்த ஆறுதல்… துளிர்த்த நம்பிக்கை…

1998-ஆம் ஆண்டு 26 பேருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட போது 26 உயிரையும் காப்பாற்றுவோம் என்று தொடங்கப்பட்ட இந்த வேள்வியில் ஒற்றை உயிரைக் கூட பலியிட விடாமல் காப்பாற்றி இருக்கிறது தமிழ்ச் சமூகம். இதை எழுதும் போதும், எழுதி முடிக்கும் போதும் எனக்குள் பல முகங்கள், பல நினைவுகள், பல பெயர்கள், பல நிகழ்வுகள் அலை மோதுகின்றன. மிகச் சிலவற்றை மட்டுமே இங்கு எழுத முடிந்தது. இந்தப் பதிவில் மட்டுமல்ல, பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து பலரும் போட்ட பல பதிவுகளிலும் விடுபட்டவர்கள் ஏராளமானோர். அவர்கள் எவரும் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து இதனைச் செய்யவில்லை. இது உணர்த்துவது எல்லாம் ஒன்றைத்தான். இது ஊர் கூடி இழுத்த தேர். தமிழக கட்சிகள், அமைப்புகள், மக்கள் என்று அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் நிச்சயம் வெற்றி உண்டு என்று நமக்கு உணர்த்தியுள்ள பாடம்.

- பூங்குழலி

Pin It