50 தூக்குத்தண்டனை கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கலாம் என்று குடியரசுத் தலைவர் கலாம் உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவர் கலாம்  மனித நேயத்தோடு மனித உரிமைக்குக் குரல் கொடுத்திருக்கிறார். மரண தண்டனைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச மனித உரிமைக் குரலில் - தன்னையும் இணைத்துக் கொண்டு, தான் வகிக்கும் உயர் பதவிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் வீரப்பனோடு தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட 50 பேர் - இப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சின்ன சாந்தன் ஆகியோர், 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். வீரப்பனுக்கு உதவியவர்கள் என்று சைமன், ஞானப்பிரகாசம், மீசேகர் மாத்தையா, பில்வேந்திரன் ஆகியோர் சுமார் 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இது தவிர வேறு பல வழக்குகளில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 50 பேர், கருணை மனு கோரி, குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்தனர். கடந்த 8 ஆண்டு காலமாக - குடியரசுத் தலைவர் மாளிகையில், தேங்கிப் போய் கிடந்த இந்த கருணை மனுக்களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் மனித நேயக் கண்ணோட்டத்தோடு, செயல்படத் துவங்கினார் அப்துல் கலாம்.

“இந்தத் தூக்குத் தண்டனை கைதிகளை மன்னித்து வாழ விடலாம்” என்று, உள்துறை அமைச்சகத்துக்கு, கலாம் பரிந்துரைத்தார். உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு அளித்த பதிலில் - இந்தப் பட்டியலில் - 20 பேருக்கு, ‘கருணை’ காட்ட முடியாது என்று தெரிவித்திருந்தது. இதில் ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், வீரப்பனோடு தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அடக்கம். உள்துறை அமைச்சகத்தின் இந்தப் பதிலைப் பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், ‘நமது கடமை முடிந்து விட்டது’ என்று ஓய்ந்து விடவில்லை. இங்கேதான் மனித உரிமைக் கோட்பாட்டில் அவர் கொண்டுள்ள உறுதி பளிச்சிடுகிறது.

மீண்டும், உள்துறை அமைச்சகத்துக்கு, குறிப்புரை ஒன்றை எழுதி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். இதற்கு முன், எந்தக் குடியரசுத் தலைவர் காலத்திலும், நடந்திடாத, ஒரு நிகழ்வு இது. மீண்டும், ஒட்டு மொத்தமாக, அனைவரது பட்டியலையும், உள்துறை அமைச்சருக்கு குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்து, தமது குறிப்புரையில் இவ்வாறு எழுதியுள்ளார்.

“இந்த மரண தண்டனைக் கைதிகளை கருணையோடு பரிசீலித்து, அவர்களை வாழ விடுங்கள். அவர்கள் திருந்தி வாழ வழிகாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு தூக்குத் தண்டனையின் கைதிக்கு 75 வயது. அவரை விடுதலை செய்வதால், இனி அவர் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபட முடியாது. இவர்களைப் போன்றவர்களை, சுமையாகக் கருதாமல், சமூகத்தின் மனித சொத்துகளாகக் கருத வேண்டும். இவர்கள் திருந்தி வாழக் கூடிய ஆலோசனைகளை வழங்கலாம். இந்தக் கைதிகள், தங்களின் எஞ்சிய வாழ்நாளை குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் தனது மனித உரிமைக் கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

கலாம் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற போது - அவரது பரிசீலனைக்கு 12 கருணை மனுக்கள் வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளில், இதன் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி  சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தனஞ்செய் சட்டர்ஜி என்பவர் மேற்கு வங்கத்தில் தூக்கிலிடப்பட்டார். இவரது கருணை மனுவை, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்.

இந்தியா “சுதந்திரம்” பெற்ற பிறகு, 55வது நபராக, சட்டர்ஜி தூக்கிலிடப்பட்டார். மேற்கு வங்க மாநில அரசும், இந்தத் தூக்குத் தண்டனையை வலியுறுத்தியது. கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர்களிடம் வந்த கருணை மனுக்கள், உடனுக்குடன், உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு வந்தன.

குடியரசுத்தலைவர்கள் - இந்த மனுக்களை, தங்களது கருத்து தெரிவிக்காமல் கிடப்பில் போடுவதற்கு காலவரையறை எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் கே.ஆர்.நாராயணன் அவர்களின் பரிசீலனைக்கு வந்தது. தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாமல், மனுக்களை கே.ஆர். நாராயணன் தனது அலுவலகத்திலேயே கிடப்பில் போட்டார். இப்போது கலாம் இந்த மனுக்களைக் கருணை அடிப்படையில் பரிசீலிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Pin It