ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, திருமணமாகி இருந்தாலும் அல்லது திருமணமாகாவிட்டாலும் தத்து எடுக்கமுடியும். தத்து எடுப்பதற்குச் சட்டபூர்வ சம்பிரதாயங்களோ அல்லது விழாவோ தேவை இல்லை என்றாலும் தத்து எடுக்கப்பட்டதை பதிவு செய்து கொள்வது நல்லது.

Madona and her adopted child தத்து எடுத்தவர், தத்து எடுக்கும் நேரத்தில் 18 வயதிற்குக் குறைந்தவராகவோ அல்லது மனநோயாளியாகவே இருக்கக்கூடாது. ஒரு பையனைத் தத்து எடுக்கும் பெற்றோருக்கு, அவர்கள் தத்து எடுக்கும் நேரத்தில் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஆண் குழந்தை எதுவும் இருக்கக்கூடாது. இந்து சட்டப்படி மகன்/ பேரன் / கொள்ளுப்பேரன் பரம்பரையாகவோ, அல்லது தத்து எடுத்தோ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது.

அதே போன்று ஒரு பெண்ணைத் தத்து எடுக்கும் இந்துப் பெற்றோருக்கு, மகளோ, மகள் வயிற்றுப் பேத்தியோ, அல்லது தத்து எடுத்த பெண்ணோ இருக்கக்கூடாது. ஒரு பெண்ணையோ, ஆணையோ தத்து எடுக்கும்போது, தந்து எடுப்பவருக்கும், தத்து எடுக்கப்படும் ஆண் அல்லது பெண்ணிற்கும் இடையில், குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். ஆண் குழந்தையைத் தத்து எடுக்கும்போது, அந்தப் பையனின் தாய், தத்து எடுப்பவருக்கு திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்ட உறவின் முறைப்பெண்ணாக இருக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, தனது மகள் அல்லது சகோதரியின் புதல்வனைத் தத்து எடுத்துக் கொள்ள முடியாது. இதர உறவினர்கள் மற்றும் அந்நியர்கள் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம்.

தத்து எடுக்கும் ஆணுக்கு மனைவி இருந்தால் அவரது சம்மதத்தைப் பெற்றே தத்து எடுக்க வேண்டும். அந்த மனைவி மனநோயாளியாகவோ, உலகைத் துறந்தவராகவோ (துறவறம்) இந்து மதத்தைச் சாராதவராகவோ இருந்தால், சம்மதம் தேவை இல்லை.

கணவனை இழந்தவர் தத்து எடுத்துக் கோள்ள முடியும். திருமணமான பெண்ணிற்குக் கணவன் இருந்து, அந்தத் திருமணம் ரத்துச் செய்யப்பட்டிருந்தால், அல்லது கணவன் மனநோயாளி என்று நீதிமன்றம் அறிவித்திருந்தால், சன்யாசியாக அல்லது கணவன் வேறு மதத்தவராக, இந்து அல்லாதவராக இருந்தால், அந்தப் பெண் தத்து எடுக்க முடியும்.

தத்து எடுக்க யார் குழந்தையைத் தருவது?

ஒரு இந்து மட்டுமே, தத்து எடுக்கவோ அல்லது தனது குழந்தையைத் தத்து எடுப்பதற்கோ தர முடியும். கீழ்கண்ட மூன்று தரப்பினருக்கு, தத்து எடுப்பதற்காக குழந்தையைத் தர முடியும்.

1. குழந்தையின் தந்தை, தாயின் சம்மதத்தோடு குழந்தையைத் தத்து எடுக்கத் தரலாம்.
2. குழந்தையின் தந்தை இறந்து விட்டால்/ மனநோயாளியாகி விட்டால் / துறவறம் பூண்டு விட்டால் குழந்தையின் தாய். குழந்தையைத் தத்து எடுப்பவருக்குத் தரலாம்.
3. குழந்தையின் பெற்றோர்கள் இறந்து விட்டாலோ அல்லது தத்து கொடுப்பதற்கான தகுதி இல்லாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தின் அனுமதியோடு அந்தக் குழந்தையின் புரவலர் / காப்பாளர் குழந்தையைத் தத்து எடுப்பவருக்குத் தரலாம்.

அங்கீகரிக்கப்பட்ட (அரசு அங்கீகாரம் உள்ள) ஓர் ஆனாதை விடுதியிலிருந்து, குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தத்து எடுப்பதற்கு பதிவு செய்வதைத் தவிர வேறு எந்தச் சம்பிரதாயச் சடங்குகளும் இல்லை. தத்து எடுக்கும் குடும்பத்தின் தகுதியை ஆராய்ந்துதான் அனாதை விடுதிகள், தங்கள் பொறுப்பில் உள்ள குழந்தைகளைத் தத்து எடுப்பதற்காகத் தருகின்றன. சில அமைப்புகள், நாடுவிட்டு நாடு குழந்தைகளைத் தத்து எடுப்பதில் உதவுகின்றன.

தத்து எடுக்கப்பட்ட தேதியிலிருந்து, தத்து எடுத்த குடும்பத்தில் அந்தக் குழந்தைக்கு உரிமை கிடைக்கிறது.

பிற மதத்தவர்

இந்து அல்லாதவர் ஒரு குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. ஆனால், ஒரு குழந்தையின் காப்பாளராக / புரவலராக இருக்கலாம். குழந்தை, தனது இயற்பெயரையே வைத்துக் கொள்ளலாம் (தாய், தந்தை சூட்டிய பெயர்). 21 வயதானதும் ஆண் அல்லது பெண் சுதந்திரமாகச் செயல்பட முடியும். காப்பாளர்/ புரவலரின் பராமரிப்பு மன நிறைவளிப்பதாக இல்லாவிட்டால் அல்லது காப்பாளர்/ புரவலரே விரும்பி ரத்து செய்யச் சொன்னால், நீதிமன்றம் அந்தப் புரவலர்/ காப்பாளர் பொறுப்பை ரத்து செய்யமுடியும்.

Pin It