மக்களை கட்டிப்போட்டார்போல் மணிக்கணக்கில் தன்முன் இருக்கவைக்கும் சக்தி காட்சி ஊடகமான தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு என்று துணிந்து சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விசயம் அதில் உண்டு. கார்ட்டூன் படங்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், காமெடிகள், நெடுந்தொடர்கள், செய்திகள், மத நிகழ்ச்சிகள், என்று நம் விருப்பம் போல் ஒவ்வொன்றிற்கும் தனி சேனலே உள்ளது. சேனல்களை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே செல்லலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் கொட்டிக்கிடக்கும் இந்த தொலைக்காட்சியில் தான் இன்று பெரும் வணிகம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த பெரும் வணிகத்தை மையமாகக் கொண்டே அதன் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் சமுதாயத்தில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அதன் வடிவமைப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களுடைய டி.ஆர்.பி ரேட்டிங் உயரவேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சமுதாயம் தான்.

junior super star

            தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினுடைய தாக்கம் யாரையெல்லாம் பாதிக்கின்றது என்று பார்த்தால், வயது வித்தியாசமே இல்லாமல் அனைவரையுமே என்று கூறலாம். பார்வையாளர்களைச் சிந்திக்கவிடாமல் அதற்கு அடிமையாக்கி உட்காரவைக்கின்றது இந்த தொலைக்காட்சி. குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை மணிக்கணக்கில் பார்ப்பதையும், இளம் வயதினர் விளையாட்டு, திரைப்படம், பாடல்கள், காமெடிகள் பார்ப்பதையும், இல்லத்தரசிகள் நெடுந்தொடர்களைப் பார்ப்பதையும், முதியவர்கள் செய்திகளைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதை நம் சுற்றத்தினர் மூலம் தினமும் கண்கூடாகப் பார்க்கலாம். வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்போன் இருப்பதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு தொலைக்காட்சி பெட்டி இருந்தால் கூட நல்லது என்று எண்ணுகின்ற அளவிற்கு வந்துவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் என்றால் அதில் பங்கேற்பவர்களின் நிலைமையும் பிரச்சனைகள் நிறைந்ததுதான்.

            இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. இவற்றில் குழந்தைகள் போட்டியாளர்களாக பங்குபெறும் நிகழ்ச்சிகளே அதிகம். குறிப்பாக குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் போட்டியாளர்களான குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகள் உடல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் மற்றும் சமூகம் சார்ந்தும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு தன்னுடைய வயதுக்கு மீறிய ஆபாச சிந்தனையைத் தொலைக்காட்சிகள் நடத்தும் குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் தூண்டுகின்றது. நடனம் சம்பந்தமான போட்டிகளில், பாடல்களில் வரும் ஆபாச வரிகளின் உள் அர்த்தம் தெரியாமல் குழந்தைகள் அதற்கு ஏற்றார்போல் வாய் அசைத்து ஆபாசமக உடலை வளைத்து ஆடுகின்றனர். தாங்கள் எதற்காக அப்படி உடல் அசைவை வெளிப்படுத்துகின்றோம், அந்த வரிகளில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம் என்ன, போன்ற எதுவுமே தெரியாமல் குழந்தைகள் இவற்றைச் செய்கின்றன. இச்செயல்கள் பார்ப்போரை குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல் பெரியவர்கள் போல் பார்க்கச்செய்துவிடுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் ஆபாசமாக பார்ப்பது என்று கூறலாம்.

            நடிப்பு சம்பந்தமான போட்டி நிகழ்ச்சிகளில், குழந்தைகள் வயதுவந்த ஆண்களைப் போலவும் பெண்களைப் போலவும் வேடங்கள் அணிந்துகொண்டு அந்த வேடத்திற்கு ஏற்றர்போல் நடிக்கின்றனர். உண்மையிலேயே பெரிய மனிதர்கள் போன்று பாவனை செய்து நடிக்கின்றனர். பின்னர் நடிப்பு குறித்து நடுவர்கள் சொல்லும் கருத்துக்களுக்குப் பெரியவர்கள் போல பதில் அளிக்கின்றனர். இதில் குழந்தைகள் குழந்தைத்தனம் இல்லாமல் மாறிவிடுகின்றனர். இது அவர்களின் இயல்பு அல்லாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட நடத்தையாக உள்ளது. குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற நடத்தையுடனும், மனோபாவத்துடனும் வளரவேண்டும். அதுவே சீறான வளர்ச்சி, படிப்படியான மனநிலை முன்னேற்றமே சாலச்சிறந்தது.

            இவற்றில் மிகவும் வருந்தத் தக்க விசயம் என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியில் நான்கைந்து குழந்தைகளைத் தேர்வுசெய்து நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்கின்றார்கள். மேலும் பார்வையாளர்களின் வரிசையில் அவர்களின் பெற்றோர்களை அமரச்செய்கின்றார்கள். அக்குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றிய கேள்வியை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கின்றார். அதற்கு அந்த குழந்தைகள் அனைவரின் மத்தியிலும் வீட்டில் நடைபெறுவதைஎல்லாம் பொதுவெளி என்று பாராமல் அனைத்தையும் தங்களின் மழழைக் குரலில் கூறுகின்றனர். தங்களின் அப்பா, அம்மா, எவ்வாறு வீட்டில் சண்டை போட்டுக்கொள்கின்றனர், என்ன மதிரியான வார்த்தைகளில் திட்டிக்கொள்கின்றனர், எவ்வாறு சந்தோசமான நேரங்களில் கொஞ்சிக்கொள்கின்றனர் என்று அவர்களின் அந்தரங்க விசயங்களையெல்லாம் தெரிவிக்கின்றனர். இவற்றை எல்லாம் ஆமோதிப்பதைப்போல் அனைத்துப்பெற்றோர்களும் சந்தோசத்தில் திளைத்து தங்களின் குழந்தைகளின் அறிவுக்கூர்மையைப் பார்த்து மெய்சிலிர்த்து வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பதாக எண்ணி பெருமைப்படுகின்றனர்.

            பெரும்பாலும் எல்லாத் தொலைக்காட்சிச் சேனல்களும் தங்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் எல்லாவற்றையும் செயற்கைத்தனமாக செய்கின்றனர். ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும், சோகங்களும், அழுகைகளும், கோபங்களும், சூழ்ச்சிகளும், சுயநலன்களும் இப்படி எதிர்மறை எண்ணங்களையே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் காண்பித்து மக்களின் அனுதாபங்களைப் பெறுகின்றனர். தங்களின் விளம்பர வருமானத்திற்காக குழந்தைகள் இயற்கையாக அவர்கள் கொண்டுள்ள இயல்பான குணநலங்கள் காவுகொடுக்கப்படுகின்றன.

            ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று குழந்தைகள் நெருக்கடி கொடுக்கப்படுகின்றனர். தாங்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்ற எண்ணமே அவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கின்றது.பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற்று பிரபலமடைய வேண்டுமென்று அவர்களை உற்சாகமூட்டுகிறேன் என்ற பெயரில் மறைமுக மனஅழுத்தம் கொடுக்கின்றனர். வெற்றி பெற்றால் பிரபலமாகலாம், நிறைய பணப்பரிசு கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களில் திணிக்கின்றனர். இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளர் முறையே. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். அவர்கள் தங்களின் குழந்தைகளின் உடல் மற்றும் மன வல்லமை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஏமாற்றம் நிகழாது. குழந்தைகளும் இதை விளையாட்டுப் போட்டியாக எண்ணாமல் வாழ்வா சாவா என்ற போட்டிபோல் எண்ணி, தோல்வியுற்றால் அதைத் தாங்கிக்கொள்கின்ற மனநிலை இல்லாதவர்கள் ஆகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விசயமல்ல இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கடுமையான தீர்ப்புகளைக் குழந்தைகளின் மனம் சமாளிப்பது எளிதானதல்ல. பெரியவர்களுக்கு அறிவுமுதிர்ச்சி இருக்கும் அதனால் விமர்சனங்களையும், தோல்விகளையும் கையாளத்தெரியும். ஆனால் குழந்தைகள் அப்படி அல்ல அவர்கள் அந்த அளவிற்கு அறிவுமுதிர்ச்சியை எட்டவில்லை. அவர்கள் விமர்சனங்களை மிகக்கடுமையாக எடுத்துக்கொள்கின்றனர். தங்களின் நடிப்புக்கு எதிரான கருத்துக்களை நடுவர்கள் கூறினால், அதனால் தாங்கள் மதிப்பிழந்துவிட்டதாக நினைக்கின்றனர். நிகழ்ச்சியில் நடுவர் சொல்லும் முடிவால் குழந்தைகள் அழுவதன் மூலம் இதைத் தெரிந்துகொள்ளலாம். தோல்வி எண்ணங்கள் அவர்களைத் தாங்களாகவே கஷ்டப்படுத்திக்கொள்ளச் செய்கின்றது. இது போன்ற போட்டி சூழ்நிலையால் இக்குழந்தைகள் வளரும்போதே எதிரி மனப்பாண்மையுடன் மற்ற குழந்தைகளைப் பார்க்கின்றனர். இது  குழந்தைகளிடையேயான நட்புறமைப் பாதிக்கின்றது. உலகமே நம்மைப் பார்க்கும் என்ற பயத்திலேயே குழந்தைகள் இவ்வாறு நடக்கின்றனர்.

            பெயர்கள் தான் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆனால், அவற்றில் எல்லாமே மிகைப்படுத்தப்படும் நடிப்புகள். குழந்தைகளுக்கு கேமரா முன் எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. நடுவர் சொல்லும் தீர்ப்புக்கும், தொகுப்பாளர்களிடம் எவ்வாறு பேசுவது, என்று இவை எல்லாமே சொல்லிக்கொடுக்கப்படும் வசனங்கள்தான்.

            உளவியல் ரீதியாக ஒரு குழந்தையின் வயதுக்கு ஏற்ப அதன் சிந்தனையும் செயலும் இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சிகளின் மூலம் போட்டி உலகத்தில் தள்ளும்போது பிற்காலத்தில் அவர்கள் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகநேரிடுகின்றது. மேலும், இக்குழந்தைகளின் சீரான கல்வியில் தடையேற்படுகின்றது. தொடர்ந்த வெற்றிக்கு அவர்கள் தங்களை உடல் ரீதியாக வருத்தி, பெரிதும் மெனக்கெடவேண்டியுள்ளது. இம்மெனக்கெடல் அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனையையும் செயலையும் வளர்க்கின்றது அல்லது பெற்றோர்களினால் வலுக்கட்டாயமாகத் தினிக்கப்படுகின்றது. ரியாலிட்டி ஷோக்களுக்கு ஒரு முடிவில்லாத பயிற்சி தேவைப்படுகின்றது. உடல் ரீதியான பயிற்சியும் நீண்ட நேரம் ஒத்திகையும் இன்றியமையாத ஒன்று. இதனால் படிப்பிலும் மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரும் போகும் ஆனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.

            இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகள் தன் சகவயதுள்ள குழந்தைகளுடன் பழக வாய்ப்பில்லாமலும், இவர்களின் வயதுக்கு மீறிய செயல்களினால் சககுழந்தைகளுடன் இயல்பாகப் பழகமுடியாததாலும் தனிமைப்படுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் இக்குழந்தைகளைத் தனித்துவிடப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்வதுபோன்று மாற்றிவிடுகின்றது. பெரும்பாலும் வெளிஉலகத் தொடர்புகளையே துண்டித்துவிடும் அளவுக்குச் இட்டுச்செல்கின்றது.

            இறுதியாக, ரியாலிட்டி ஷோக்கள் குழந்தைகளின் மீது கெடுதலான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. நன்றாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் குழந்தைகளுக்கு ஏமாற்றதைக் கொடுக்கின்றது. இந்த அழுத்தங்கள், ஏமாற்றங்கள் போட்டியாளர்களாகப் பங்குபெறும் குழந்தைகளிடம் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்களையும், புற அழுத்தங்களையும்  எதிர்கொள்ளும் அளவுக்கு குழந்தைகளின் வயது இருப்பதில்லை. குழந்தைகள் இந்த வயதில் விளையாட, ஒரு விசயத்தைக் கற்றுகொள்ள, சந்தோசத்தை அனுபவிக்க மற்றும் சமுதாயத்தில் சிறந்தவர்களாக வளர பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். 

- சி.வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட ஆய்வாளர், சமூகப்பணித்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-630003

Pin It