இந்தியக் குழந்தைகளை நல்ல அறிவுலகிற்கான படைப்பாளிகளாக மாற்றுவதே கல்வியின் இலக்காக மாற வேண்டும்.

school boys 450கல்வி உரிமைச் சட்டம் 2010 ஏப்ரல் முதல் நாளில் அமலானது. சட்டத்தை நிறைவேற்றிய போதே பல குறைகள் இருந்தன. பள்ளி முன்பருவக் கல்வி முதல் பள்ளிக் கல்வியை முடிக்கும் வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி, கட்டாயத் தாய்மொழி வழிக் கல்வி, பள்ளிக் கல்வியில் முழுமையாக கட்டணக் கல்வியை ஒழித்தல், ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் மற்றும் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்தல், தனியார் பள்ளிகளில் பெற்றோர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தல் ஆகியவற்றிற்கான வழிமுறைகள் கல்வி உரிமைச் சட்டத்தில் இடம்பெறாமல் இருந்தன. கல்வியாளர்கள் மற்றும் குழந்தை உரிமைகள் அமைப்பினர் பலர் வலியுறுத்தியும் குறைகளை சரி செய்வதற்கான முயற்சிகள் எதுவும் பத்தாண்டுகளாக நடக்கவில்லை.

ஏற்கனவே பல குறைகளோடு இருந்த சட்டத்தையும் நீர்த்துப் போக வைப்பது தான் நடந்துள்ளது. சட்டத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனம் செய்வது, முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டும் நியமனம் செய்வது ஆகியவற்றிற்கான கால எல்லையை நீட்டித்து இரண்டு சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யும் சட்டத் திருத்தமும் செய்யப்பட்டது. கல்வி உரிமை காணல் நீராகும் நிலை தான் உள்ளது.

பல சட்டங்கள் ஏட்டுச் சுரைக்காய்களாக இருப்பது போலவே கல்வி உரிமைச் சட்ட நடைமுறையாக்கமும் உள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை தடுக்கப்படவில்லை; சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி பள்ளிகளின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை; குழந்தைகளுக்கு உடல் மற்றும் உள ரீதியான தண்டனைகள் முழுமையாக நிறுத்தப்படவில்லை; ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளி முன்பருவக் கல்விக்கான மழலையர் வகுப்புகள் தேவைக்கேற்ப தொடங்கப்படவில்லை; குழந்தைகள் ஆர்வத்தோடு புரிந்து கற்பதற்கு ஏற்ற வகையில் அவரவர் தாய்மொழி வழியில் கல்வி வழங்கவில்லை; சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆசிரியர் நியமன விதிகள் பின்பற்றப்படவில்லை; எல்லாப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை முறையாக செயல்படுத்தவில்லை. மொத்தத்தில் கல்வி உரிமைச் சட்டத்தினால் இந்தியக் குழந்தைகள் முழுமையாகப் பயனடையவில்லை. ஆதி திராவிடர், பழங்குடியினர் குழந்தைகள் கல்வி பெறுவதிலும் அவலங்கள் மாறாமல் நீடிக்கின்றன.

தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலின் தீவிர, விரைவான விரிவாக்கத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இந்தியக் குழந்தைகளின் கல்வியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே தனியார் கட்டணப் பள்ளிகளை முழுமையாக ஒழிப்பதற்கான வழிமுறைகள் எதுவும் கல்வி உரிமைச் சட்டத்தில் இடம்பெறவில்லை. மாறாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவுற்ற பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% சேர்க்கை வழங்கவும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கும் அரசே கட்டணம் செலுத்தவும் கல்வி உரிமைச் சட்டம் மூலம் வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. ஏழைக் குழந்தைகளுக்காக நேரடியாக அரசே பள்ளிகளைத் தொடங்கி நடத்துவதை குறைப்பது தான் இதன் நோக்கம்.

கல்வி நிறுவனங்கள் சமத்துவ நெறி, சகோதர உணர்வு, மனித மாண்பு, உயிர்ம நேயம், மானுட நீதி, சமூக நீதி, இயற்கை நீதி, அறிவியல் மனப்பாங்கு போன்ற விழுமியங்களை வளர்க்கும் ஜனநாயக விளை நிலங்களாக இருக்கவேண்டும். கல்வியைத் படிப்படியாக முழுமையாக தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் வேலை வாய்ப்புச் சந்தைக்கான திறன் பெற்ற மற்றும் தொழில்நுட்பம் கற்ற ஆட்களை உற்பத்தி செய்வதற்கான கருவியாக கல்வி மாறிவிடும். உலகிலேயே அதிகமான குழந்தை வயதினர் இந்தியாவில் தான் உள்ளனர். இந்தியவின் இளம் தலைமுறையினரை பன்னாட்டுப் பெருநிறுவன வேலை ஆட்களாக மாற்றுவது மட்டும் நமது இலக்கல்ல. இயற்கை வளம் மற்றும் மனித வளச் சுரணடல், வறுமை, ஏற்றத்தாழ்வு, சகிப்பின்மை, ஆயுதக் குவிப்பு, அமைதியின்மை, நோய் ஆகியவை அறவே இல்லாத புதிய உலகைப் படைக்க இந்தியாவின் அறிவு பயன்படவேண்டும். இந்தியக் குழந்தைகளை நல்ல அறிவுலகிற்கான படைப்பாளார்களாக மாற்றுவதே கல்வியின் முதன்மை இலக்காக மாறவேண்டும்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.

Pin It