சேரர் பெருமாள் ஆட்சிக் காலத்தில் அகமண முறையைக் கொண்ட சாதிகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கவில்லை எனக் கூறுகிறது ‘கேரள வரலாறு’ என்ற நூல்(1). சாதிகள் உருவானது குறித்து இந்நூல் கூறும் சுருக்கமான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது(2):

சில சாதிகள் 13ஆம் நூற்றாண்டில்தான் உருவாகின. கோயில்களில் பார்ப்பனர் அல்லாதவர்களில் முக்கியமானவர்கள் பொத்துவால், வாரியர் ஆகிய இரு குழுக்கள். இதில் கோயிலைப் பாதுகாக்கிறவரும், பக்தர்களோடு கோயில் சார்பாக நேரடியாகத் தொடர்பு கொள்கிறவருமான பொத்துவால் தான் கோயிலின் செயலாளராக இருந்தார். அவர்தான் பார்ப்பனர்களோடு நெருக்கமாக இருந்தவர். அவருடைய பணியைப் பரம்பரைப் பணியாக ஆக்கி அவருடைய பதவிக்காலம் வரை நிலம் ஊதியமாக வழங்கப்பட்டது என்பதால் அவருடைய தொழில்குழு கி.பி. 12ஆம் நூற்றாண்டில் அகமணமுறையைக் கொண்ட சாதியாக மாறியது(3).

அதுபோன்றே மேளம் அடிப்பவர்கள், நடனமாடும் பெண்கள், இசைக்கலைஞர்கள் போன்றவர்களுக்கும் பரம்பரையாக பதவிக்காலம் முடியும் வரை நிலம் ஊதியமாக வழங்கப்பட்டதால் அவர்களும் தனித்தனி சாதிகளாக மாறினார்கள். மேளம் அடிப்பவர் கொட்டிகள் என கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டனர். ஆனால் கொட்டிகள் என்பது சாதியாக இருக்கவில்லை. கோயிலில் நடனமாடும் ஆண்கள் சாக்கியமார் எனவும், பெண்கள் நன்னயமார் எனவும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சாக்கியர் என்ற சாதியாக மாறினார்கள்.  இவர்கள் அனைவரும் அம்பலவாசிகள் எனப்படும் கோயில் சாதிகளாக ஆனார்கள். இவர்களுக்கு பரம்பரையாகப் பணிபுரியும் வரை ஊதியமாக நிலங்கள் வழங்கப்பட்டதால் இவர்கள் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் அகமண முறையைக் கொண்ட சாதிகளாக மாறினார்கள்(4).

kalanthorum bramaniam part 1இவர்களைப் போலவே வணிகர்கள், கம்மாளர்கள் போன்றவர்களுடைய வணிகமும் பணிகளும் பொருளாதார நலன்களும் பரம்பரையாக இருந்து வந்ததால் அவர்களும் தனித்தனிச் சாதிகளாக ஆனார்கள்.  ஊர்களில் குடியேற்றப்பட்ட வாணியர், தச்சர், கொல்லர், குயவர், வண்ணார் போன்றவர்களுக்கும் குடியாய்மை முறையில் நிலங்கள் ஊதியமாக வழங்கப்பட்டிருந்தன. அதன் காரணமாக அவர்களும் நாளடைவில் சாதிகளாக ஆனார்கள். இவர்களுக்குக்கீழ் அடிமை நிலையில் நிலத்தை உழுது பணியாற்றி வந்த ஈழவர், புலையர், செருமர் போன்றவர்கள் தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டு தனித்தனிச் சாதிகளாக ஆனார்கள். அவர்கள் ஆடு மாடுகளைப் போல் நிலத்தோடு இணைக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய நிலைமை மிகமிக மோசமானதாக இருந்தது(5).

சாதிகள் முதலில் பார்ப்பன ஊர்களிலும் அதனைத் தொடர்ந்து பார்ப்பனர் இல்லாத ஊர்களிலும், அதன்பின் நகரங்களிலும் உருவாகின. சேர அரசனும் உள்ளூர் ஆட்சியாளர்களும் பாரம்பரியமாக பணிகளை வழங்கி அதற்கு ஊதியமாக நிலங்களை வழங்கியதன் காரணமாக சாதிகளும் துணைச்சாதிகளும் நிறையத் தோன்றக் காரணமாகின. 12ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை உருவான கல்வெட்டுகளில், கோயில் பணிகளிலும், அரசர்களுடைய முதன்மை அலுவலர் முதல் கீழ்நிலை அலுவலர் வரையான பணிகளிலும் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூக அரசியல் பொருளாதார நிலை குறிக்கப்படுவதைக் காணமுடிகிறது(6).

அரச பதவிகளில் இருந்தவர்களில் படைத்தலைவர்களாக இருந்த நாயர்கள், பணிக்கர்கள், கண்காணிப்புக் கணக்கர்களாக (Supervisory accountant) இருந்த மேனன்கள் போன்ற சாதிகள் மேல்நிலைச் சாதிகளாக இருந்தன. இதில் நாயர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் பொருளாதாரத்திலும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். கோயில் நிலங்களும் தனிப்பட்ட பார்ப்பனர் நிலங்களும், அரசு நிலங்களும் பெரும்பாலும் அவர்களுக்கே குத்தகைக்கு விடப்பட்டிருந்தன. தாய்வழி உரிமையைக் கொண்ட நாயர் குடும்பங்கள் பெண்களை சம்பந்தம் முறையில் நம்பூதிரி பார்ப்பனர்களுக்கு வழங்கி வந்தது என்பது அவர்கள் அதிக அளவில் நிலங்களைக் குத்தகைக்குப் பெறுவதற்குக் காரணமாக ஆகியது. ஆனாலும் நாயர்கள் சூத்ரவர்ணத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்பட்டனர்(7). 

சுவரூபத்தில்(குறுநில அரசு) பணியாற்றிய படைத்தலைவர்கள் சிலர் உள்ளூர் ஆட்சியாளர்களாக ஆகி நாயர்களிலிருந்து வேறுபட்டு தங்களை வர்மா எனப்படும் சத்ரிய சாதிகளாக ஆக்கிக் கொண்டார்கள். அதுபோன்றே படைத்தலைவர்களாக இருந்த பணிக்கர்கள் நாயர்களில் இருந்து வேறுபட்டு தங்களைத் தனிச்சாதியாக மாற்றிக் கொண்டார்கள். 13ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில் கலந்து உணவு உண்பதிலும், திருமண உறவுகளிலும் சாதியமுறை மிக முக்கியமானதாக இருந்தது(8).

கி.பி. 13ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில் இந்தியா முழுவதும் பார்ப்பனர்களுக்குள் நிறைய சாதிகள் உருவாகின. நம்பூதிரி பார்ப்பனர்களுக்குள்ளும் துணைச் சாதிகள் உருவாகின. இந்நிலை கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. அதிக நிலங்களைக் கொண்டவர்களாகவும் வேதமுறையைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்த நம்பூதிரி பார்ப்பனர் பட்டாத்திரி (Bhattatiri) சாதியாக உருவானார்கள். இவர்கள் ஆதயா(Adhya) என்ற உயர் சாதிகளாகவும், மற்றவர்கள் ஆசயா (Asya) என்ற கீழ்நிலைப் பார்ப்பனச் சாதியாகவும் ஆனார்கள். சாதிகளிடையே இருந்த அகமணமுறையும், படிநிலை அமைப்பும் தான் சாதிகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது(9).

சாதிகளுக்கு அடிப்படையாக இருந்ததாகக் கூறும் பரம்பரையாகப் பணிகளை நியமிக்கும் முறை 9ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடங்கிவிட்டது என்று அதே நூல் கூறுகிறது(10). கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்தே சாதிகள் உருவாவதற்கான அடிப்படைகள் உருவாகின எனினும் முழுமையான முறையில் 11ஆம் நூற்றாண்டில்தான் கோயில்கள் சாதிகளைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டன என அந்நூல் கூறுகிறது(11).

வட இந்தியாவில் சாதி:

‘கேரள வரலாறு’ என்ற நூல் சாதிகள் குறித்துக் கூறும் மேலே சொல்லப்பட்ட கருத்துகள் பொருத்தமாகப்படவில்லை. மனுசுமிருதி குறித்தோ, வைதீக மதத்தின் நால் வருண சாதிகள் குறித்தோ இந்நூல் எதுவும் கூறவில்லை. பொருளாதார, அரசியல் காரணங்களால் சாதி இயற்கையாக உருவாகியது போன்ற தோற்றத்தை இந்நூல் தர விரும்புகிறது. கோயில் பணிகளிலும் வேளாண்பணிகளிலும், ஊர்களின் பல்வேறுபட்ட பணிகளுக்காகவும் பணியாளர்களை பாரம்பரியமாக நியமித்ததும் அவர்களுக்கு நிலங்கள் ஊதியமாக வழங்கப்பட்டதும்தான் சாதி தோன்றுவதற்கான காரணம் என இந்நூல் கூறுகிறது. அதனால் தனிதனித் தொழில் குழுக்கள் உருவாகுமே தவிர அகமணமுறையும் படிநிலையும் கொண்ட சாதிகள் உருவாக முடியாது. மேலும் தீண்டப்படாத சாதிகள் என்பதும் உருவாக முடியாது. கேரளாவில் உருவான சம்பந்தம் முறை, மறுமக்கள்தாயமுறை போன்றனவும் உருவாக முடியாது. இவை அனைத்துமே பார்ப்பனர்களின் வளமான வாழ்க்கைக்காவும், அவர்களின் சுயநல நலன்களுக்காகவும் உருவாக்கப்பட்டவை. ஆகவே சாதி இயற்கையாக உருவானதல்ல. செயற்கையாக பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது என்பதைத்தான் வட இந்திய வரலாற்றுத் தரவுகள் உறுதி செய்கின்றன. ‘பார்ப்பனர்கள்தான் நால்வகை சாதியமைப்பைக் கொண்டு வந்தனர் எனவும், அதனை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வரலாற்றை திட்டமிட்டு புதைத்து மறைத்துக் குழப்பி வந்தனர்’ எனவும் ந.சுப்ரமணியன் கூறுகிறார்(12). வட இந்தியாவில் சாதியமைப்பு உருவாகியது குறித்தும் பார்ப்பனர்களின் சாதியப்பற்று குறித்தும் தெரிந்துகொள்வதின் மூலமே இதைத் தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்ள முடியும்.

மகதப் பேரரசில் பார்ப்பன வம்சங்கள்:

கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை சாதியமோ, வைதீக பார்ப்பனியமோ வட இந்தியாவில் உருவாகவில்லை. கி.மு. 187ல் புசுயமித்திரன் மௌரிய ஆட்சியைக் கைப்பற்றிய பிறகுதான் சாதியத்துக்கான, வைதீக பார்ப்பனியத்துக்கான அடிப்படைகள் உருவாக்கப்பட்டன. கி.மு. 187 முதல் கி.மு. 30 வரை சுங்க, கன்வ பார்ப்பன வம்சங்கள் 150 ஆண்டுகளுக்கு மேல் மகதப்பேரரசை ஆண்டன(13). பார்ப்பன சுங்க வம்சம் மகதப்பேரரசைக் கைப்பற்றியதற்கு பிந்தைய இரு நூற்றாண்டுகளில் இந்திய சமூகத்தில் மாபெரும் அரசியல் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. வைதீக பார்ப்பனியத்தை கட்டமைப்பதற்கான அனைத்து அடித்தளங்களும் உருவாக்கப்பட்டு, வகுப்பு எனப்படும் வருணம், படிநிலைகொண்ட சாதியாக மாற்றப்பட்டதோடு, பார்ப்பனன் கடவுளுக்கும் மேலானவனாக ஆக்கப்பட்டான். நாட்டை ஆளும் அரசனும் கூட பார்ப்பனனுக்குத் தலைவணங்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டதோடு, நால்வருணச் சாதியமைப்பைப் பாதுகாக்காத அரசன், அரசை ஆளும் தகுதியற்றவன் எனவும் அவன் நீக்கப்பட வேண்டியவன் எனவும் வைதீக பார்ப்பனியம் இந்தியச் சமூகத்தை நம்ப வைத்தது. இந்திய ஆட்சியாளர்களின் சட்டப் படியான ஆட்சிக்கு வைதீகப் பார்ப்பனியத்தின் ஏற்பிசைவு தேவை என்ற நிலைமை உருவாக்கப்பட்டது.

வைதீக பார்ப்பனிய இலக்கியங்கள்:

வைதீக பார்ப்பனியம், சாதியம் ஆகியவற்றுக்கு அடிப்படையாகவுள்ள மனு சுமிருதி, மீமாம்ச சூத்திரம், பிரம்ம சூத்திரம், மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள், கீதை, புராணங்கள் ஆகிய அனைத்துமே கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குப்பின் தான் உருவாக்கப்பட்டன. ஆகவே இரு பார்ப்பன அரச வம்சங்களின் காலத்தில் தான் வைதீக பார்ப்பனியத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இரிக் யசூர், சாம, அதர்வண வேதங்களும் ம் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப்பின்தான் எழுத்து வடிவம் பெற்றன. எழுத்து வடிவம் உருவான போது வைதீக பார்ப்பனியம் இரிக் யசூர், சாம வேதங்களில் தனது சிந்தனைக்கு ஏற்றவாறு பல மாற்றங்களைச் செய்தது(14). நான்கு சாதிகளைப் பற்றி முதல் முதலாகப் பேசுகிற புருட சூக்தம் போன்றவை அப்பொழுதுதான் இரிக் வேதத்தில் 10 ஆம் மண்டலத்தில் சேர்க்கப்பட்டன(15). பிராமணங்கள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டன. இவை அனைத்தும் குறித்து முன்பே விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

சுங்க, கன்வ வம்ச பார்ப்பன ஆட்சிக்காலங்களில் பலவகையிலும் வலிமை பெற்ற பார்ப்பனியம் அதன் பின்னர் தனது நோக்கத்தைச் செயல்படுத்தத், தெளிவாக திட்டமிட்டு இடைவிடாது பாடுபட்டு வந்து, இறுதியாக குப்தர்காலத்தில் அது தன்னையும் தனது சமற்கிருதமயமாக்கலையும், சாதியத்தையும் வட இந்தியாவில் உறுதியாக நிலை நிறுத்திக்கொண்டது. அதன் பின் இந்தியா முழுவதும் தனது வைதீக பார்ப்பனியத்தையும், தனது சமற்கிருத மயமாக்கலையும், சாதியத்தையும் கொண்டு சென்று நிலைநிறுத்துவதிலும் அது மாபெரும் வெற்றிபெற்றது. பார்ப்பனியம் இந்த வெற்றிகளைப் பெறுவதற்கு, இந்த பார்ப்பனிய இலக்கியங்கள் மிகப்பெரிய அளவில் அடித்தளம் அமைத்துக்கொடுத்தன. அவற்றில் அதர்வண வேதமும் பிராமணங்களும் பார்ப்பனர்களின் நலன்களைப் பாதுகாப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த அதர்வண வேதத்துக்கும், பிராமணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது மனு சுமிருதி. மனு சுமிருதி பார்ப்பனர்களுக்கு வரம்பு மீறிய உரிமைகளை வழங்கியது குறித்தும், சாதியைப்பாதுகாப்பதே மனுசுமிருதியின் அடிப்படை நோக்கமாக இருந்தது என்பது குறித்தும், சூத்திரர், பெண்கள் ஆகியவர்கள் குறித்த மனுவின் சட்டங்கள் மனிதத் தன்மையற்ற கொடுமையான சட்டங்களாக இருந்தன என்பது குறித்தும் முன்பே விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

கேரளாவில் நம்பூதிரி பார்ப்பனர்கள்:

குப்தப் பேரரசு காலத்தில் (கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை) அரசாலும் சமூகத்தாலும் சாதி ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இருந்து வந்தது. அக்காலகட்டத்தில் மனுசுமிருதியின் விதிகள் முழுமையாக நடைமுறையில் இருந்தன(16). ஆகவே வட இந்திய பார்ப்பனர்கள் அனைவரும் வைதீக பார்ப்பனியத்திலும், மனுசுமிருதின் விதிகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். அந்த வட இந்திய பார்ப்பனர்கள்தான் கி.பி. 5ஆம் நூற்றாண்டு முதல் வட இந்தியாவிலிருந்து வந்து தென்னிந்தியாவிலும், கேரளாவிலும் குடியேறத் தொடங்கினார்கள். குப்தர் காலத்தில் உதிரிப் பார்ப்பனப் போர் வீரர்கள் குழுக்களாக இருந்த ஆயுதம் ஏந்திய கட்டாக்கள், பட்டாக்கள், போன்றவர்களும் அவர்களது துணையோடு பிற பார்ப்பனர்களும் களப்பிரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு அதிகளவில் கேரளாவில் குடியேறினார்கள் என முன்பே பார்த்தோம். இவர்களில் பெரும்பாலோர் வட இந்தியாவிலிருந்து வந்து கர்நாடகம், துளுநாடு, தமிழகம் போன்ற இடங்களில் சிறிது காலம் தங்கிய பின் கேரளம் வந்தவர்கள். 

இந்தக் கட்டாக்கள் பட்டாக்கள் போன்றவர்கள் ஒழுங்குமுறை இல்லாத உதிரிப் பார்ப்பனப் போர் வீரர்கள் குழுக்களாக இருந்து குப்தப்பேரரசில் பலவகையிலும் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவும், பார்ப்பனர்களிலேயே கீழ்நிலைச் சமூகமாகவும் கருதப்பட்டவர்கள். இவர்கள் பார்ப்பனர் குடியிருப்புகளிலோ, அல்லது பார்ப்பன நிலப்பிரபுக்களின் இடங்களிலோ நுழையக் கூடாது போன்ற சட்டங்கள் குப்தப் பேரரசில் இருந்தன. பல வகையிலும் பொறுப்பற்றவர்களாகவும், ஒழுங்குமுறை இல்லாதவர்களாகவும், நம்பகத்தன்மை இல்லாதவர்களாகவும், மற்றவர்களுக்கும் சமூகத்திற்கும் தீங்கு தருபவர்களாகவுமே குப்தர்காலச் சமூகத்தில் இவர்கள் கருதப்பட்டார்கள்(17).

ஆனால் ஆயுதம் ஏந்தியவர்களாகவும், பயிற்சி பெற்ற போர் வீரர்களாகவும் இருந்தவர்கள் என்பதால் பார்ப்பனக் குடியேற்றங்களின் பயணத்தின் போது துணை இருப்பவர்களாகவும், அதன்பின் பார்ப்பனக்குடியிருப்புகளுக்கு பாதுகாவலர்களாகவும் ஆனார்கள். அவ்வகையில்தான் இவர்கள் கேரளாவில் மற்ற பார்ப்பனர்களோடு இணைந்து அதிக அளவில் குடியேறி, நாளடைவில் பிற பார்ப்பனர்களோடு ஐக்கியமானார்கள். களப்பிரர் காலத்திற்குப் பிந்தைய கேரளாவின் நிலைமை இவர்களுடைய தேவையை அதிகரித்தது. இவர்கள் தங்களை பரசுராமன் வழி வந்தவர்களாகவும், பரசுராமன் தங்களுக்கு வழங்கிய பூமிதான் கேரளா எனவும் கேரளாவை ஆளுவதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு எனவும் போன்ற புனைவுகளை உருவாக்கி அவற்றைக் கேரள மக்கள் நம்புமாறு செய்தார்கள். கேரளாவின் பண்டைய வரலாற்றை மறைத்து புனைவுகளைக் கொண்ட புதிய வரலாறுகளை உருவாக்கினார்கள். ஆகவே கேரளாவில் குடியேறிய பார்ப்பனர்கள் அனைவரும் வைதீக பார்ப்பனியத்திலும், சாதியக் கட்டமைப்பிலும், மனுசுமிருதியின் விதிகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாளடைவில் கேரளாவில் குடியேறிய பார்ப்பனர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நம்பூதிரி பார்ப்பனர்கள் ஆனார்கள். இவர்கள் அனைவரும் தீவிர வைதீக பார்ப்பனியச் சிந்தனையும், சாதியச்சிந்தனையும் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆகவே கேரளாவில் மனுசுமிருதியின் பல்வேறு விதிகளையும், வைதீக பார்ப்பனியத்தையும், சாதியக் கட்டமைப்பையும் நடைமுறைக்குக் கொண்டு வருவது அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது. வைதீக பார்ப்பனியமும், சாதியக் கட்டமைப்பும்தான் தங்களுக்கு சுகபோக வாழ்க்கையையும், நிறைய நலன்களையும் வழங்கும் என்பதை அவர்கள் அறிவார்கள். மனுசுமிருதியும், பிராமணங்களும், அதர்வண வேதமும் இன்னபிற வைதீக இலக்கியங்களும் தங்களுக்கு வழங்கியுள்ள வரம்பு மீறிய உரிமைகளை நடைமுறைப் படுத்துவதே தங்களது வாழ்நாள் கடமை என அவர்கள் கருதினார்கள். அவற்றை எந்த வகையிலாவது கேரள சமூகத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே தங்களுடைய வாழ்க்கைக்கான அடையாளமும், நோக்கமும், தங்களது எதிர்காலக் கனவுகளும் நிறைவு பெறும் என அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.

ஆகவே கேரளாவில் வைதீக பார்ப்பனியக் கருத்தியலைப் புகுத்துவதும், நால்வருணச்சாதி அமைப்பைக் கட்டமைப்பதுமே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் அது குறித்துக் கேரள வரலாற்று நூல்கள் எதுவும் கூறுவதில்லை. வட இந்தியாவில் முதல்முறையாக நால்வருணச் சாதி அமைப்பைக் கட்டமைப்பதற்கு பார்ப்பனர்களுக்கு ஐந்து நூற்றாண்டுகள் (கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3 ஆம் நூற்றாண்டு வரை) தேவைப்பட்டது. கேரளாவிலும் கி.பி. 6 முதல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டுவரை தேவைப்பட்டிருக்கிறது எனலாம். கி.பி. 800 வாக்கில் அரசாளத் தொடங்கிய சேரர் பெருமாள் அரச வம்சம் தாய்வழி உரிமையைப் பின்பற்றியது(18). அன்றே பார்ப்பனக் குடும்பங்களில் மூத்தவன் மட்டுமே குடும்பத்தின் அனைத்துச் சொத்துக்களுக்கும், கோயில் உரிமைகள், அரசியல் அதிகாரம் போன்றவற்றிற்கும் உரிமையுடைய நிலப்பிரபுவாகவும், பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யும் உரிமை கொண்டவனாகவும் இருந்தான். அவனது தம்பிகளுக்கு இவற்றில் எந்த உரிமையும் இருக்கவில்லை(19). இவை அனைத்தும் கேரள சமூகத்தில் கி.பி. 800வாக்கில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆகவே கி.பி. 800க்குள் நாயர், அம்பலவாசி போன்ற சாதிகளோடு நம்பூதிரி பார்ப்பனர்கள் கொண்டிருந்த சம்பந்தம் முறை, அந்த சாதிகளில் இருந்த மறுமக்கள் தாயமுறை முதலியனவற்றை நம்பூதிரி பார்ப்பனர்கள் கேரளாவில் நடைமுறைக்குக் கொண்டு வந்திருந்தார்கள் என உறுதி செய்யலாம்.

இவைபோக பார்ப்பன ஊர்களில் இருந்த சபா போன்ற பார்ப்பன உள்ளூர் ஆட்சியமைப்புகளும், கோயில் நிர்வாகக் கமிட்டிகளும், நாடு அளவில் இருந்த அரசியல் அதிகாரமிக்க நாலுதாலி(Nalutali) போன்ற பார்ப்பன அமைப்புகளும் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்து வந்துள்ளன. இவை பார்ப்பனக் குடியிருப்புகளின் அரசியல் அதிகாரத்தையும், சமூக உயர்நிலையையும் உறுதிப்படுத்தின(20). இந்த அரசியல் அதிகாரமும் சமூக உயர்நிலையும் நம்பூதிரி பார்ப்பனர்கள் வைதீக பார்ப்பனிய கருத்தியலையும், சாதியக்கட்டமைப்பையும் நிலைநிறுத்தி இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை உறுதி செய்தன. அடுத்ததாக கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து கோயிலை மையமாகக்கொண்ட சமூகமாகக் கேரள சமூகம் உருவாக்கப் பட்டிருந்தது. கோயில்களும் அதன் அனைத்துச் சொத்துக்களும் அவற்றின் நிர்வாகமும் பார்ப்பனக் குழுக்களின் கைவசம் இருந்து வந்தது(21). சமற்கிருதம் கோயில்களில் வழிபாட்டு மொழியாகவும், அரசவைகளில் ஆட்சி மொழியாகவும், கேரள சமூகத்தில் செல்வாக்குமிக்க மொழியாகவும் ஆகியிருந்ததது என்பதை பெரும்பாலான கோயில் கல்வெட்டுகள் சமற்கிருதத்தில் பொறிக்கப்பட்டிருப்பது உறுதிப் படுத்துகிறது(22). பார்ப்பனர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் கோயில்கள் இருப்பதும், கோயில்களை மையமாகக்கொண்ட சமூகம் இருப்பதும், சமற்கிருத மொழி வழிபாட்டு மொழியாக, ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக ஆகியிருப்பது என்பதும் வைதீக பார்ப்பனியமும், சாதியக் கட்டமைப்பும் உருவாகி விட்டது என்பதை உறுதி செய்கின்றன.  கி.பி. 849ஆம் ஆண்டு தாரிசப்பள்ளி செப்புப்பட்டயம் (Tarisappalli copper plates) தீண்டத்தாகாத சாதியைச் சேர்ந்த உழவர்களான புலையர்கள் நிலங்களோடு இணைக்கப் பட்டிருந்ததைக் குறிப்பிட்டுள்ளது என ‘கேரள வரலாறு’ என்ற நூல் கூறுகிறது(23). ஆகவே கி.பி.9ஆம் நூற்றாண்டிலேயே புலையர்கள் தீண்டத்தகாத சாதிகளாக ஆக்கப்பட்டிருந்தார்கள் என்பதை இச்செய்தி உறுதிப் படுத்துகிறது.

ஆகவே மேற்கண்ட தரவுகள் கி.பி. 800க்குள் கேரளாவில் நால்வருண சாதி அமைப்புக்கான அனைத்து அடிப்படைகளும் உருவாக்கப்பட்டிருந்தன என உறுதி செய்யலாம். நம்பூதிரி பார்ப்பனர்கள் தங்களை உயர் சாதியினராக நிலை நிறுத்திக்கொண்டதோடு, இவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த நாயர் போன்றவர்களையும், அம்பலவாசி சாதிகளையும் உருவாக்கி இருந்தார்கள். நாயர்களையும் மற்றவர்களையும் அவர்கள் சூத்திரர்களாகவே நடத்தி வந்தார்கள். பார்ப்பனர்களைப் பொருத்தவரை சத்திரியர்கள் யாரும் இல்லை என்பதால் தங்களைத் தவிர கேரள சமூகத்தில் இருந்த மக்கள் அனைவரும் சூத்திரர்கள்தான். நாயர் பெண்களையும் அம்பலவாசி பெண்களையும் வைப்பாட்டிகளாகவே நம்பூதிரிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். இரவு நேரத்தில் மட்டுமே அவர்கள் அப்பெண்களோடு உறவு வைத்துக்கொண்டார்கள். பகலில் அவர்கள் தீட்டுக்குரிய கீழ்சாதிகளாகவே நடத்தப்பட்டார்கள். பார்ப்பனர்கள் கீழ் வருணப் பெண்களுடன் சட்டப்படியாக விபச்சாரம் செய்வதற்கு அளிக்கப்படும் உரிமையாகத்தான் இந்த சம்பந்தம் முறையைப் பார்க்க வேண்டும். அனுலோமத் திருமண முறையில் பார்ப்பனர்களுக்குக் கிடைக்கும் சலுகையும் உரிமையும்தான் இந்த சம்பந்தம் முறையில் நம்பூதிரி பார்ப்பனர்களுக்குக் கிடைத்து வந்துள்ளது. இந்த சம்பந்தம் முறையை கி.பி. 800க்குள் அவர்கள் செயல்படுத்தி இருந்தார்கள் என்பதால் அன்றே கேரளாவில் நால்வருண சாதிமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது எனலாம்.

ஆகவே நம்பூதிரி பார்ப்பனர்கள், நாயர்கள், நாயர்களோடு சேர்ந்த  பணிக்கர்கள், சர்மாக்கள் போன்றவர்களும், கோயில்களைச் சேர்ந்த அம்பலவாசிச் சாதிகளும் கி.பி. 800க்குள் சாதிய முறைக்குள் கொண்டு வரப்பட்டிருந்தினர். கேரள சமூகத்தின் படிநிலையில் மேல் அடுக்கிலுள்ள இவர்கள் அனைவரும் சாதிய முறைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தார்கள் என்பதால் அதற்குக்கீழ் உள்ளவர்கள் அனைவரும் நாளடைவில் சாதிய முறைக்கு மிக எளிதாகக் கொண்டுவரப்பட்டார்கள். இதன்பின் புலையர் போன்றவர்கள் தீண்டத்தாகதவர்களாக ஆக்கப்பட்டார்கள். இவை அனைத்தும் கி.பி. 9ஆம் 10 ஆம் நூற்றாண்டுக்குள் நடந்து முடிந்துவிட்டது என்பதோடு, அக்கால கட்டத்திற்குப் பின்னர் கிளைச்சாதிகளும் உருவாகத்தொடங்கிவிட்டன.

தமிழகமும் கேரளமும்:

கி.பி. 500 வரை கேரளச்சமூகம் தமிழ்ச்சமூகமாகத்தான் இருந்து வந்தது. களப்பிரர் படையெடுப்பால் ஏற்பட்ட பேரழிவும், அதன் காரணமாக இரு சமூகங்களும் பின்தங்கிய பிற்போக்கான, கிராமச்சமூகமாக மாறிப் போயிருந்தன. அதன் பின் வந்த களப்பிரர் ஆட்சியில் இரு சமூகங்களும் சமயம் சார்ந்த சமூகங்களாக மாறிப்போயிருந்தன. முதலில் பாலி பிராகிருத மொழிகளும், இறுதியாக சமற்கிருத மொழியும் செல்வாக்கு பெற்ற மொழிகளாக ஆகியிருந்தன. தமிழ் கீழ் மக்களின் மொழியாக ஆகிப் போயிருந்தது. கி.பி. 500 வாக்கில் இரு சமூகங்களிலும் இதுதான் நிலைமை. அதுவரை இரண்டும் ஒரே தமிழ்ச் சமூகமாகவே இருந்தது.

ஆனால் அடுத்த 300 வருடங்களுக்குள் அதாவது கி.பி. 800 க்குள் இரு சமூகங்களும் வேறுபட்ட சமூகங்களாக மாறிப்போயிருந்தன. கேரளச்சமூகம் மறுமக்கள் தாயமுறை, சம்பந்தம் முறை போன்றனவற்றைக் கொண்டனவாகவும் படிநிலைகளைக் கொண்ட சாதியச் சமூகத்திற்கான அடிப்படைகளைக் கொண்ட சமூகமாகவும் மாறியிருந்தது. ஆனால் தமிழகம் அதன்பின் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அந்நியப் படையெடுப்பால் கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் படிநிலைகளைக் கொண்ட சாதியச் சமூகமாக ஆகியது என்பதோடு தமிழகத்தில் மறுமக்கள் தாயமுறை, சம்பந்தம் முறை போன்ற சமூகத் தீமைகள் உருவாகவே இல்லை. கேரளச் சமூகத்தின் இந்த வேறுபட்ட நிலைமைக்கு, கி.பி. 500க்குப்பிறகு மெதுவாகவும், கி.பி. 550க்குப் பிறகு மிக வேகமாகவும் கேரளாவில் நடைபெற்ற பார்ப்பனக் குடியேற்றங்களே காரணம். கி.பி. 800க்குள் கேரள பார்ப்பனர்கள் கேரளாவின் பெரும்பகுதிகளில் நிலபுலன்களும் செல்வவளமும் உடைய, அரசியல் அதிகாரமும், சமூகச் செல்வாக்கும் கொண்ட ஒரு ஆதிக்கமிக்க சமூகமாக உருவாகி, கேரளச் சமூகத்தை தங்களின் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருந்தார்கள். கி.பி. 500வரை தமிழ்ச் சமூகம் போன்றே சாதி போன்ற சமூகத் தீமைகள் இல்லாதிருந்த கேரளச் சமூகத்தை மறுமக்கள் தாயமுறை, சம்பந்தம் முறை, படிநிலைச்சாதியமைப்பு போன்ற சமூகத் தீமைகளைக் கொண்ட சமூகமாக கி.பி. 800க்குள் மாற்றி அமைத்திருந்தார்கள். ஆகவே வைதீகப் பார்ப்பனர்களால் சாதியக் கட்டமைப்பு செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது உண்மை. அதனைக் கேரளச் சமூகத்தின் வரலாறு உறுதி செய்கிறது எனலாம்.

பார்வை:

1.History of KERALA, Rajan Kurukkal/ Raghava Varier, Orient Black Swan, 2020, பக்: 141.
2. “ “ “ பக்: 141-146.
3, 4, 5. “ “ “ பக்: 141-142.
6, 7, 8, 9. “ “ “ பக்: 143-144.
10, 11. “ “ “ பக்: 142, 143.
12. தமிழகத்தில் பார்ப்பனர்கள், தமிழாக்கம்: பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், 2018, பக்: 75-77.
13. பழந்தமிழக வரலாறு, கணியன் பாலன், தமிழினி, 2018, பக்: 87.
14. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 120-135.
15. இரிக் வேதம், தமிழ்-ஆங்கிலம், தொகுதி-3, செவ்விதாக்கம் – வீ.அரசு, அலைகள் வெளியீடு, டிசம்பர்-2004, பக்: 485-487.
16. காலந்தோறும் பிராமணியம், பாகம் ஒன்று, வேதகாலம் முதல் சோழர் காலம் வரை, அருணன், வசந்தம் வெளியீட்டகம், 2011, பக்: 238-241.
17. Brahmana settliments in kerala, Kesavan veluthat, Sandhya Puplications, Calicut University, Kerala, Page: 102-115.
18..History of KERALA, Rajan Kurukkal/Raghava Varier, Orient Black Swan, 2020, பக்: 110-111.
19. “ “ “ பக்: 85, 93, 94.
20.History of KERALA, Rajan Kurukkal/Raghava Varier, Orient Black Swan, 2020, பக்: 120-122,
21. “ “ “ பக்: 88-93.
22 . “ “ “ பக்: 91, 92, 106, 176-180, 336-346.
23.. “ “ “ பக்: 83. 84.

- கணியன் பாலன்

Pin It