‘என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?’ உறக்கம் கலைந்து எழுந்தவன் கேட்டான். அவனைக் கைது செய்த காவலர்கள் சொன்னார்கள், ‘அடேய் கனவு காண்கிறாயடா?’ ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் புஷ்கின் தன் கதையில் ஓரிடத்தில் இப்படியாக எழுதிச் செல்கிறார்.
கனவுக்குத் தடையா? ஆம், இப்படியான தடை இந்தியாவில் நடந்தேறியது! மகாகவி பாரதி எழுதிய ‘கனவு’ என்கிற நூலுக்கு ஆங்கிலேயர்கள் தடை விதித்தார்கள். இந்நூலுடன் சேர்த்து தடை விதிக்கப்பட்ட மற்றொரு நூல், ‘ஆறில் ஒரு பங்கு’. தடை விதிக்கப்பட்ட நாள், 1911 அக்டோபர் 11.
பாரதிக்கும் பிந்தைய ஆண்டில், ‘பாரதி’ பெயரைத் தாங்கி வந்த வங்காளப் புதினம் ஆங்கிலேய அரசினால் தடைக்கு உள்ளானது. அப்புதினத்தை எழுதியவர் சரத்சந்திர சட்டர்ஜி என அழைக்கப்பட்ட சரத்சந்திர சட்டோபாத்யாயா. இவர் எழுதி தடைக்கு உள்ளான மற்றொரு நூல், ‘பதேர் தாபி’. ‘நம் வீழ்ச்சிக்குக் காரணங்கள் நம்மிடையேயுள்ள சாதிப் பிரிவுகள், சமூகக் கொடுமைகள், அன்பில்லாத மதம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம்’ இத்தனையும் ஒருங்கே பேசும் புதினம் இது. 1926 ஆம் ஆண்டு இப்புதினம் வெளியாகி முதல் நாளிலேயே ஆயிரம் பிரதிகள் விற்று, அடுத்தடுத்த பதிப்புகள் கண்டன. மக்கள் புரட்சிக்கான நாவல் எனப் பெயரெடுத்த இந்நாவலைப் பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது.
அவர் எழுதிய ‘பிந்தூர் சேலே’ என்கிற புதினத்தைக் கல்கத்தா பல்கலைக்கழகம் பாடமாக அங்கீகரித்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே இந்நூல் அரசுக்கு எதிரான புரட்சிச் சிந்தனையைத் தூண்டுகிறது, எனக் காரணம் காட்டிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. சந்திர சட்டர்ஜியின் நூல்கள் தடைக்கு உள்ளாகையில், வங்காள மக்கள் அவரின் பக்கமாக நின்றார்கள். ஆனால், மகாகவி பாரதிக்குப் பின்னால் யார் நின்றார்கள்?
பாரதியின் நூல்கள் ஆங்கிலேயர்களின் தடைக்கு உள்ளாகையில், அத்தடைக்கு எதிராகவோ அல்லது பாரதியின் கனவு சிந்தனைக்கு ஆதரவாகவோ, பிரிட்டிஷ் இந்தியாவிலும் சரி, அந்நூல் எழுதப்பட்டு வெளியான பிரெஞ்சுக் காலனியப் பகுதியான புதுச்சேரியிலும் சரி, உரத்த குரல் எழவில்லை என்பது அன்றைய காலச் சீழ்ப்பிடிப்பு, என்றே சொல்ல வேண்டும். சரத்சந்திர சட்டர்ஜிக்கு ரவீந்திரநாத் தாகூரின் ஆதரவு இருந்ததைப் போல பாரதிக்கு நிகரான ஒரு புலவன் அன்றைக்குத் தமிழ் மண்ணில் இல்லை என்பதைக் காலச்சல்லடையைக் கொண்டு சலித்தே தெரிந்துகொள்ள வேண்டும்.
சரத்சந்திரரின் 57 ஆவது பிறந்தநாளை வங்கப் பெண்கள் ஒன்றுதிரண்டு கொண்டாடினார்கள். அவருக்கு வழங்கிய பாராட்டுப் பத்திரத்தில் தாகூரின் கவிதைகள் இடம்பெற்றன. ‘ உன் காலில் விழுகிறேன் சரத்பாபு! ஒரு கதை நீ எழுத வேண்டும். ஒரு சாதாரண பெண்ணின் கதை. குறைந்தது ஆறேழு சாதாரண பெண்களுடன் போட்டிபோடும் நிர்ப்பந்தம் அந்தப் பெண்ணுக்கு. எப்படியும் எனக்காக அவளை வெற்றிபெறச் செய்துவிடு! உன் கதையைப் படிக்கப் படிக்க விம்மிப் பூரிக்கட்டும் என் நெஞ்சு’ இக்கவிதை சரத்சந்திரரின் நூலான பாரதி பிரிட்டிஷாரின் தடைக்கு உள்ளாகையில் ‘சாதாரணப் பெண்’ என்கிற தலைப்பில், எழுதப்பட்ட கடிதக் கவிதையாகும். இதுபோன்ற ஆதரவு பாரதி வாழ்ந்த காலத்தில் கிடைக்கவில்லை, அதற்காக பாரதி சோர்ந்துவிடவில்லை. தடைக்கு எதிராக நீதி கேட்டதை விடவும், தடைக்கான காரணம் கேட்டு, உரத்த குரலில் கேள்விகள் எழுப்பினார்.
ஆறில் ஒரு பங்கு, நாற்பது பக்கங்களே கொண்ட ஒரு நெடுங்கதை. சரத்சந்திரர் எழுதிய ‘பாரதி’ நாவல் பஞ்சாலைத் தொழிலாளர் புரட்சியை ஆளும் பிரிட்டிஷாருக்கு எதிராகப் பேசினாலும், அக்கதையின் களம் பர்மா. ஆனாலும் மகாகவி பாரதியின் ஆறில் ஒரு பங்கு கதை உண்மையும் புனைவும் கலந்த படைப்பு. சரத்சந்திரர் நூல்களைத் தடை செய்ததைப்போல, பாரதியின் நூல்களை பிரிட்டிஷாரால் அவ்வளவு எளிதில் தடை விதித்திட முடியவில்லை. காரணம் அவரது கதையாக்கம்.
வங்காளத்தில் அஸ்வினி குமார தத்தர் என்றொரு தேசபக்தர் இருந்தார். இவர் பிரிட்டிஷாரால் 1908 டிசம்பர் 16 அன்று, ஒன்பது வங்க தேசப் பக்தருடன் நாடு கடத்தப்பட்டவர். தண்டனைக் காலம் முடிந்து, 1910 பிப்ரவரி 10 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு, வங்கம் திரும்பிய அவர், தாழ்த்தப்பட்ட மக்களைக் கல்வி, சமூக, பொருளாதார அளவில் முன்னேற்றும் பொருட்டு, அவரது வாழ்நாட்களை அதற்காகக் கழிக்கச் செய்தார். வங்கத்திற்கே சென்று, அவரை நேரில் சந்தித்துத் திரும்பியிருந்த பாரதி, அவர் எழுதிய நெடுங்கதையில், அஸ்வினி குமார தத்தரை உண்மை கதாபாத்திரமாகப் படைத்தார். ஆறில் ஒரு பங்கு என்பது அன்றைக்கு இந்தியா முழுவதும் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மக்கட்தொகை.
கோவிந்தராஜன் - மீனாம்பாள் இருவருக்கு மிடையேயான காதல் கதைதான், ஆறில் ஒரு பங்கு. ‘தேசச் சேவை செய்ய வேண்டுமெனில், ஒருவன் பிரமச்சாரியாக இருந்தாக வேண்டிய அவசியமில்லை. காதலித்துக் கருத்தொருமித்த இருவர் தமக்குள் திருமணம் செய்துகொண்டு, இருவருமே தேசச் சேவையில் ஈடுபடலாம். அதனால் தேசத்திற்கு ஒரு தொண்டனுக்குப் பதிலாக, இரு தொண்டர்கள் கிடைப்பார்கள்’ என்பது அக்கதையின் வாயிலாக அவர் விடுக்கும் அறைகூவல். காதல் கதையாக எழுதப்பட்ட கற்பனைக் கதையாயினும், இக்கதைக்குள் உண்மைப் பாத்திரமான அஸ்வினி குமார தத்தரை வைத்ததன் மூலம் கதையின் கனமும் அதன் வீரியமும் அதிகமானது. பிரிட்டிஷார் அந்நூலை அத்தனை வேகமாய் தடை விதிக்க, உண்மைப் பாத்திரம் திருமணத் தம்பதிகளைத் தேசச் சேவைக்கு அழைப்புவிடுக்கும் கூவல் என்பதைத் தாண்டி வேறொரு காரணம் இருந்தது.
இந்நூல் தடைக்கு எதிராக பாரதி குரல் கொடுத்தார். ‘ என்னை ஏன் கொலை செய்கிறீர்கள்?’ எனக் கேட்கும் கேள்வியையொத்த அவரது கேள்வி இருந்தது. ‘ இந்நூலில் என்ன அபாயகரமான கருத்து இருக்கிறது?’ எனப் பத்திரிகை வழியிலும் மடல்களின் வழியேயும் கேட்கச் செய்தார். அவரது கேள்விக்கான பதில் தடை செய்தவர்களிடமிருந்து அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. அந்நூலைத் தடை செய்தவர்களின் அறிவுப்பரப்பைக் கேலி செய்தார். எனது புத்தகங்கள் அரசாங்கத்தின் சட்டத்தால் அனுமதிக்கப்பட முடியாத கருத்துகளைக் கொண்டுள்ளன என்று அரசாங்கத்திற்கு எடுத்துச் சொன்னவர்கள், ஏதும் தெரியாதவர்கள் எனக் கருதுகிறேன் என்றார். மேலும், இந்தத் தடையைத் தகுதி வாய்ந்த நபர்களின் மூலம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரினார். இதுகுறித்து சென்னை அரசாங்கத்தை அணுகினார். அவரது முயற்சிகள் பலனளிக்காததால் இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் பாரதி நிறுத்திக் கொள்ளவில்லை. அன்றைக்குப் பிரிட்டனை ஆண்டு கொண்டிருந்த தொழிலாளர் கட்சித் தலைவர் ராம்சே மாக்டொனால்டுக்குக் கடிதம் எழுதினார். அவருக்குப் பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்ட அரசுத் தரப்பு கடிதத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை படுகொலை செய்யத் திட்டம் தீட்டியவர்களின் கையில் இவ்விரு நூல்கள் இருந்ததாகவும் இந்நூல் ஆஷ் துரை படுகொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்றும் பதிலளித்தார்கள்.
நாள் 1911 செப்டம்பர் 8. அன்றைக்கு சென்னை மாகாணத்தின் துணைச் செயலராக இருந்தவர் எஸ்.எச்.சிலேட்டர். இவர், கனவு மற்றும் ஆறில் ஒரு பங்கு இவ்விரு நூல்களின் சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அட்வகேட் ஜெனரலாக இருந்த பி.எஸ். சிவசாமி அய்யருக்கு அனுப்பிவைத்தார். இந்திய பத்திரிகைச் சட்டம் - 1910, பிரிவு 12 இன் கீழ் இவ்விரு நூல்களையும் தடை செய்ய இயலுமா, ஒரு கடிதத்தின் வாயிலாகக் கோரினார். மொழிபெயர்ப்பு பகுதியை வாசித்த அட்வகேட் ஜெனரல், 1911, அக்டோபர் 11 அன்று இவ்விரு நூல்களையும் தடை செய்யலாம், என அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். அன்றைய தினமே, அவ்விரு நூல்களும் தடைக்கு உள்ளாகி, பிரதிகள் மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
உண்மையில், ‘ஆறில் ஒரு பங்கு’ நூல் தடைக்குக் காரணம் அதுதானா? இரு தரப்பினருக்கும் தெரிந்து, ஆனால் வெளியில் சொல்ல முடியாத காரணம் இருந்தது. அது அக்கதையின் தலைப்பு.
மேற்கே யூரல்ஸ் மலைத் தொடரில் தொடங்கி, கிழக்கே விளாதிவாஸ்தாக் வரையிலும் பரந்து விரிந்த நாடாக இருந்தது, ஐரோப்பிய நாடான ரஷ்யா. இந்நாட்டின் நிலப்பரப்பு அன்றைய புவிப்பரப்பில் ஆறில் ஒரு பங்கு. அத்தகைய பெரிய நாடான ரஷ்யாவுக்கும் ஆசியக் கண்ட ஜப்பானுக்குமிடையில் போர் மூண்டது. 1904 ஆம் ஆண்டு தொடங்கிய இப்போரை உலக நாடுகள் கூர்ந்து கவனிக்கச் செய்தன. ஜப்பான் புறமுதுகு காட்டி ஓடும்; ரஷ்யா அந்நாட்டை வென்று, மேலும் தன் எல்லைப் பரப்பை விரிவுப்படுத்தும் என்றே எதிர்பார்த்திருந்தன. ஆனால், போரில் ஜார் மன்னன் ஆட்சியின் கீழிருந்த ஆறில் ஒரு பங்கு நாடு தோல்வியுற்றது. ஜப்பானிய அரசு வெற்றி பெற்றது. அவ்வெற்றிக்குக் காரணமாக பேசப்பட்டது, அந்நாடு தன் போர்ப்படை சிப்பாயாக திருமணமான ஆடவர்களையும் சேர்த்துக் கொண்டு போரிட்டதுதான். நீலத்திமிங்கிலத்தை நெத்திலிப்பொடி வீழ்த்தி விட்டது, என உலக நாடுகள் கொண்டாடின. ரஷ்யப் புரட்சி இயக்கத் தலைவரான லெனின், ‘முன்னேறி வரும் முற்போக்கான ஆசியா பிற்போக்கான பின்தங்கிய ஐரோப்பாவுக்குப் பலத்த அடியைக் கொடுத்துவிட்டது’ என்றார்.
ஜப்பானியர்களின் வெற்றி, இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே ஒரு பெருஞ்செய்தியைச் சொன்னது. ‘போரில், பெரியது சிறியது என்பதாக ஒன்றுமில்லை. எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் சிறிய சாம்ராஜ்ஜியத்தால் வென்றுவிட முடியும்..’ இப்போரின் தொடர்ச்சியாக ரஷ்யாவிலும் சீனம், பாரசீகம், துருக்கியிலும்,.. ஆளும் அரசுக்கு எதிராக புரட்சிக்கனல்கள் வெடித்தன.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் தன்னை சூரியன் மறையாத நாடு, என்கிற மமதையில் இருந்தது. ரஷ்யாவிற்கு அடுத்து பரந்த ஆட்சிப் பகுதியைக் கொண்ட தேசமாகத் தன்னை அது காட்டிக் கொண்டது. ஆறில் ஒரு பங்கு, ஆட்சிப் பகுதியைக் கொண்ட ரஷ்யாவுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவே பிரிட்டிஷார்களாகிய உங்களுக்கும் நிகழப் போகிறது, என்பதைச் சொல்லவே, பாரதி ஆறில் ஒரு பங்கு என்பதைத் தலைப்பாகச் சூட்டினார். ஜப்பானியர்களின் போர்த்தந்திரமான திருமண ஆடவர்களைச் சிப்பாயாகச் சேர்த்ததைப் போல தேசச் சேவைக்குத் திருமணம் செய்து கொண்ட ஆடவர்கள் வர வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
இதையெல்லாம் நுகர்ந்து அறியத் தெரியாதவர்களா ஆங்கிலேயர்கள்? அதற்காக அவர் மற்றுமொரு செய்கையைச் செய்தார். அதுநாள் வரை, அவரது நூல்களை அரசியல் குருவான ‘மாதரசி’ நிவேதிதை அம்மையாருக்குச் சமர்ப்பணம் செய்துவந்தவர். இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து, நமக்கெல்லாம் உணவு கொடுத்து, ரக்ஷித்தவர்களுக்கான இரு ஒடுக்கப்பட்ட சாதியினர்களுக்கும், வைசிய சகோதரர்களுக்கும் அர்ப்பணம் செய்தார். இவ்வளவையும் நுகர்ந்த ஆங்கிலேய அரசு, இந்நூல் தன் பேராளுமைக்கு எதிரான நூல் எனக் கண்டு அவ்விரு நூல்களையும் அத்தனை வேகமாகத் தடை செய்தது. இந்நூல்கள் தடைக்கு உள்ளானாலும், அதன் நோக்கம் நிறைவேறவே செய்தது. ரஷ்ய புரட்சியாளர் லெனின் சொன்னதுதான், ‘புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் - புத்தகங்கள்!’
- அண்டனூர் சுரா