தலைப்பு: காலனியாதிக்கத்தின் மூன்று மோதல்கள்

ஆசிரியர்: பிரபிர் புர்கயஸ்தா

டொர்டெசிலாஸ் ஒப்பந்தம்:

15 ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்ட டொர்டெசிலாஸ் ஒப்பந்தத்தில், பூமியின் குறுக்கே ஒரு கோட்டைப் போட்டு இந்தக் கோட்டிற்கு கிழக்கில் உள்ள பூமியின் எல்லா நிலங்களும் போர்த்துக்கீசியரைச் சேரும்; கோட்டிற்கு மேற்கே உள்ள எல்லா நிலங்களும் ஸ்பானியர்களைச் சேரும் என போப் கூறியுள்ளார். மற்ற மக்களுக்கு சொந்தமான நிலங்களை எப்படி பிறருடையதாக மாற்ற முடியும்? ஏனெனில் அவை சரி நிகரான அரச ராஜ்ஜியங்களாக இருந்தது. அதை எப்படி போர்த்துக்கீசியருக்கும், ஸ்பானியர்களுக்கும் ஒதுக்க முடியும்? எப்படி அதைச் செய்ய முடியும்? அதற்கு தேவாலயம் ஒரு எளிதான விளக்கம் தந்தது. அவர்கள் கிறித்தவர்கள் இல்லையெனில் தேவாலயத்தின் பெயராலும், அரசர்களது பெயராலும் நிலத்தை எடுத்துக் கொள்ள முடியும். அதாவது கிறித்தவத்தைத் தவிர வேறு எந்த மதக் குழுக்களுக்கும் நிலத்தில் உரிமை இல்லை, அரசராகும் உரிமை இல்லை என்பதையே இது குறிக்கிறது. உண்மையில் அவை திறந்தவெளி பொது நிலங்களாக இருந்தன. யார் வேண்டுமானாலும் சென்று நிலத்தைப் பெறலாம் என்றவாறே அமைந்திருந்தன.

treaty of tordesillasகொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்ற பெரிய கடல் பயணிகள் இரண்டு விதத்தில் அவற்றை ஆக்கிரமிப்பு செய்யத் திட்டமிட்டனர். எங்கு சென்றாலும் ஒன்று தேவாலயத்தின் பெயராலோ, சிலுவையின் பெயரிலோ, மற்றொன்று அரசன் அல்லது அரசியின் பெயரிலோ அவற்றை அபகரிப்பது, இந்த நிலங்கள் அனைத்தையும் ராணுவப் படைபலம் இருந்தால் தேவாலயத்தின் பெயராலோ, அரசன் அரசியின் பெயரிலோ இவற்றை அபகரிக்க முடியும் என்றே கருதினார்கள். பிரச்சினை என்னவென்றால் சில நேரங்களில் அதை செயல்படுத்த முடியவில்லை. வட, தென் அமெரிக்கா, யுரேசியாவின் பெரிய பரப்பான ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா இந்த மூன்று கண்டங்களுடனான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மோதலைப் பார்த்தோமானால், இந்த மூன்று கண்டங்களும் வேறு வேறு காலனியாதிக்க வரலாற்றைக் கொண்டிருந்தன. அந்தக் காலனியாதிக்க வரலாற்றை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

இந்தக் கண்டங்களுக்கு ஏற்பட்ட காலனியாதிக்க மோதல்கள் ஒரே மாதிரியானவை அல்ல, வேறுபட்டவையாக இருந்தன. ஆப்பிரிக்காவில் நேர்ந்ததோ, லத்தீன் அமெரிக்காவுக்கு நேர்ந்ததோ ஆசியாவுக்கு நேரவில்லை. ஆசியாவில் அவர்கள் கருணை காட்டினார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆசியா ஏற்கெனவே அதிகம மக்கள் அடர்த்தியும், பொருளாதாரத்தையும் கொண்டிருந்தது. அங்கே ஐரோப்பாவிற்கு மதிப்பு மிக்கதாகக் கருதப்படும் அரியப் பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டதால் அவர்கள் ஆசியாவுடன் அதிகம் வணிகம் செய்வதையும் அதைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதையுமே விரும்பினர். ஆனால் ஆப்பிரிக்காவிலோ, லத்தின் அமெரிக்காவிலோ அவர்களது அணுகுமுறைகள் மிகவும் வேறாக இருந்தது. போர்த்துக்கீசியர், ஸ்பானியரின் கப்பல் வலிமை அதிகமாக இருந்த 16, 17ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் உண்மையில் திருட்டு, கொள்ளை அடிப்பதையே விரும்பியதால் போர்க் கப்பலில் படையுடன் தங்கம், வெள்ளியைக் கொள்ளையடிக்க அமெரிக்காவிற்குச் சென்றனர். மெக்சிகோவிலிருந்து, மத்திய அமெரிக்கா வரை சென்று இன்கா இனத்தவரின் நிலத்திற்கும், மெக்சிகோவின் அஸ்டெக்குகளின் நிலத்தையும் கோரினர். உண்மையிலே சித்திரவதையாளர்களாக இருந்தனர். கிறிஸ்டோபர் கொலம்பஸின் கப்பலில் சென்ற பாதிரியார், கொலம்பஸ் என்ன செய்தார் என்று தந்த குறிப்பைப் படித்தால் வயிற்றைக் கலங்கச் செய்யும்.

கொலம்பஸும், ஸ்பானியர்களும் அங்குள்ள குழந்தைகளையும், இளம்பெண்களையும் சிறைப்படுத்தி தாய்லாந்துவாசிகளிடம், "தங்கத்தையும், வெள்ளியையும் கொண்டு வாருங்கள் இல்லையேல் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு ஒருபோதும் கிடைக்க மாட்டார்கள்" என்றனர். குழந்தை வன்புணர்வாளர்களாக அவர்களை நாசம் செய்தனர். அவர்களை ஸ்பெயினுக்கு அடிமைகளாக அழைத்துச் சென்றனர். இது போன்ற பயங்கரமான கொடுமைகளையே கொலம்பஸ் செய்துள்ளார். இவை அனைத்தையும் அரசியின் பெயரிலே செய்தார். அவர்கள் கண்டுபிடிக்கும் புதிய பகுதிகளில் அதற்கான அதிகாரத்தையும் அரசி அளித்திருந்தார். 200 ஆண்டுகளாக ஸ்பானியர்களும், போர்த்துக்கீசியரும் செய்த அட்டூழியங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. அதனால் தான் கொலம்பஸ் தினம் கடைபிடிக்கப்படுவதற்கு எதிராக பல குழுக்கள் போராடின. கொலம்பஸ் இவை அனைத்தையும் அரசியின் அங்கீகாரம் பெற்று மேற்குடியினராக உயருவதற்கே செய்தார். இன்கா பேரரசில் பெருமளவு தங்கம் இருந்தது. ஸ்பானியர்கள் இன்கா மக்களை கொடும் அடக்குமுறைக்கு உட்படுத்தினர். ஆக திருட்டும், கொள்ளை அடிப்பதுமே ஸ்பானிய வரலாறாக இருந்தது.

போர்த்துக்கீசியருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவர்களால் அஸ்டெக், இன்கா பேரரசுகள் உள்ள மத்திய அமெரிக்காவை அடைய முடியவில்லை. . போர்த்துக்கீசியர்கள் இப்போதுள்ள பிரேசில் பகுதிக்குச் சென்றனர். அதனால் தான் பிரேசில் போர்த்துக்கிசிய நாடானது. அங்கிருந்து ஆக்கிரமிப்பை விரிவாக்கம் செய்தனர். இருந்தபோதும் ஸ்பானியர்களுக்கு ஈடாக அவர்களால் கொள்ளை அடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆப்பிரிக்காவின் மேற்குக் கரைக்குச் சென்றார்கள். அடிமை வணிகமே அவர்களது முக்கிய வணிகமானது. அவர்கள் ஆப்பிரிக்கர்களைப் பிடித்து அடிமையாக்கி பிரேசிலுக்கும், சர்க்கரைக்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் மற்ற பகுதிகளுக்கும் விற்றனர். ஆப்பிரிக்க அடிமைகளைக் கொண்டு அடிமை வணிகத்தை உருவாக்கியவர்கள் போர்த்துக்கீசியர்கள் என்பதே போர்த்துக்கீசியர்களின் முக்கியமான வரலாறு. ஆப்பிரிக்காவில் பேரரசுகள் இருந்தன. அங்கிருந்த நிலங்களை ஆக்கிரமித்தார்கள். பெருமளவில் கடலோர நகரங்கள் பின்னர் பிரெஞ்சுக்காரர்களால் போர்த்துக்கீசியரிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்டது. அனைத்தும் முக்கியமாக அடிமை வணிகத்துடன் ஆரம்பித்தது. அதனால் ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா அல்லது அமெரிக்கா இரண்டு கண்டங்களிலும் கொள்ளை நடந்தது. அதனுடன் அடிமை வணிகமும் நடந்தது; இன அழிப்பும் செய்யப்பட்டது.

பெருமளவில் அமெரிக்காவில் இன அழிப்பு ஸ்பானியர்களாலும், சில பகுதிகளில் போர்த்துக்கீசியர்களாலும், ஆப்பிரிக்காவிலும் பெரிய அளவில் கொலைகளும் அடிமையாக்கமும் செய்யப்பட்டது. இன அழிப்பு, கொள்ளை, அடிமை முறையின் மூலமே ஐரோப்பா அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் போர்த்துக்கீஸ் ஆப்பிரிக்காவிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்கின் வளர்ச்சியின் வரலாறு என்று அழைக்கப்படுவது மேற்கிந்தியத் தீவுகளில் கரும்பு பயிர் செய்யவும், பிறகு பிரேசிலிலும், அதன் பின் தென் ஐக்கிய அமெரிக்காவில் பருத்தி பயிர் செய்ய மேற்கொண்ட அடிமை முறைகளின் வரலாறே. இவை தொழிற் புரட்சிக்கு முன்னரே நடந்தது என்பது நினைவிலிருக்கட்டும். இதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.

மறுமலர்ச்சிக்குப் பின் தொழிற்புரட்சி ஏற்பட்டது. கொள்ளை, அடிமை முறை, இன அழிப்புடன் மேற்கில் மறுமலர்ச்சி உதித்துள்ளது. மறுமலர்ச்சி ஒரு மோசடி என்று இங்கே கூற வரவில்லை. அது மதிப்புக்குரியவைகளை முன் கொண்டு வந்தது உண்மை தான். ஆனால் இங்கு கூற வருவது இரண்டு முற்றிலும் முரண்பாடான விசயங்களை தனித் தனியாகப் பார்க்கும் மனித மூளையின் சிந்தனைக் கோளங்களை. உதாரணமாக நீங்கள் சிறந்த அறுவை சிகிச்சையாளராக இருக்கலாம். ஆனால் நெற்றியைத் தொட்டு சுழி போட்டுத் தான் கத்தியால் கீறல் ஏற்படுத்துவீர்கள் என்றால், அது நீங்கள் நல்ல சிகிச்சையாளராய் இருப்பதைத் தடுப்பதில்லை தான். இருப்பினும் நீங்கள் சிகிச்சையையும் மேற்கொண்டு கடவுளையும் கூப்பிடுகிறீர்கள். உங்களுக்கு இயற்பியல் தெரியும், எதனால் கிரகணம் வருகிறது என்பதும் தெரியும். இருப்பினும் கிரகணத்தன்று சாப்பிட மாட்டீர்கள். எல்லோருமல்ல என்றாலும் நம்மில் பலரும் இது போன்ற முரண்பாடுகளை, சிந்தனா முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு நாகரிகமே முரண்பாடுகளைக் கொண்டிருப்பது என்பது முற்றிலும் வேறான ஒன்று.

இந்தியாவில் வலதுசாரிகள் இந்து மதமே அனைத்திலும் சிறந்த மதம், இந்துக்கள் மிகவும் கருணையான மக்கள் என்றும் கூறுகிறார்கள். அதோடு மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கும்பல் கொலை செய்வதும் ஏற்புடையதே என்பது போல் வாடிகன் என்ற கருத்தாக்கம் இல்லாமலே பல புனைவுகளை ஏற்படுத்துகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு இந்த முரண்பாடுகளின் இரண்டு பக்கமும் தெரிந்திருந்தும் அதைப் பிரச்சினையாகக் கருதுவதில்லை. இங்கு நான் கூறுவது கோட்பாட்டுத் தத்துவங்களில் வளர்ச்சியடைந்த அதே நாடுகள் தங்கள் காலனிகளில் பல பயங்கரமான கொடுமைகளை நிகழ்த்தியுள்ளன. அடிமை வர்த்தகத்தால் ஆப்பிரிக்கா அழிக்கப்பட்டதைக் காண்கிறோம். 10 மில்லியன் ஆப்பிரிக்க அடிமைகள் அமெரிக்காவுக்கு அடிமைக் கப்பல்களில் கொண்டு வரப்பட்டார்கள். அதில் 20 சதவீதத்தினர் வழியிலே இறந்து விட்டனர். அது ஆப்பிரிக்காவின் நாகரிகக் கட்டமைப்பின் அடிப்படையை அழித்தது. அது அவர்களது நகரங்களை அழித்தது. அதனால் எண்ணிலடங்காதோர் இறந்தனர். அந்த இனக்குழுக்களுக்குள்ளே பகையை ஏற்படுத்தியது. அடிமைகளைப் பிடிக்கும் முறை அங்கே கடலோரப் பகுதிகளில் விவசாயத்தை அழித்தது. ஆப்பிரிக்காவின் பொருளாதாரமே அழிந்தது. இதனால் ஏற்பட்ட அழிமானம் எந்த அளவிற்கு இருந்தது எனப் பார்த்தோமானால் 16 ஆம் நூற்றாண்டில் 600 மில்லியனாக இருந்த அவர்களது மக்கள் தொகை 1930ல் வெறும் 200 மில்லியன் அளவிற்குக் குறைந்தது. 400 ஆண்டுகளில் நம்ப முடியாத அளவில் அதன் மக்கள் தொகையே குலைந்து போனது. இது அடிமை முறையால் வந்த அழிமானத்தைக் காட்டிலும் அதீதமாய் தெரிகிறது. ஆசியாவிலோ, ஐரோப்பாவிலோ இந்த அளவிற்கு மக்கள் தொகை குறையவில்லை.

காங்கோவைப் பற்றி. கிங்க் நியோபோல்ட் பேய் என்ற புத்தகத்தில் பெல்ஜியர்கள் அந்தக் காலகட்டத்தில் நியோபோல்ட் ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதைக் விவரிக்கிறது. பெல்ஜிய அரசாட்சியில் லியோபோல்ட் II காங்கோவில் ஒரு கொள்ளை ஆட்சி நடத்தினார். 10 மில்லியன் மக்கள் இறந்தனர். அவர்கள் காட்டு மரங்களிலிருந்து ரப்பர் எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ரப்பர் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட து. அந்த அளவுக்கு ரப்பர் கொண்டு வந்தால் சரி, இல்லையேல் உங்கள் இடக்கையை வெட்டி விடுவோம் என அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்தினர். 10 மில்லியன் அளவுக்கு பெருந்தொகையான மக்கள் வெறும் 40 ஆண்டுகளில் காங்கோவில் இறந்தனர். காங்கோ உலகின் மிக அதிகமான தாதுவளம் கொண்ட நாடு பூமியில். எல்லா அரிய உலோகங்கள், மின்னணுத் தொழிற்சாலைகள், மேக்புக், திறன்பேசி, ஐபோன் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் அரிய தாதுக்கள் காங்கோவிலிருந்தே பெருமளவு பெறப்படுகின்றன. அதனால் பேரழிவுக்குட்பட்டது. ஏனென்றால் இன்று வரை அவைக் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. அதன் முழு விவரங்களுக்கு நான் போகவில்லை. அடிமைகளின் எண்ணிக்கை மட்டும் ஆப்பிரிக்காவுக்கு என்ன நேர்ந்தது என்பதனைத்தையும் கூறிவிடாது. இவை அனைத்தும் ஆப்பிரிக்காவின் துணை சகாரா பகுதிகளில் நடந்தவை. வட ஆப்பிரிக்காவில் இதே போன்று நடக்கவில்லை. சோமாலியா, எத்தியோப்பியாவை எடுத்துக் கொண்டாலும் அவை பெருமளவில் வெவ்வேறு வகைகளில் அழிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவைப் புரிந்து கொள்ளும் போது மிகவும் முக்கியமானது என்னவென்றால் ஆப்பிரிக்கா ஒரு ஏழை நாடு, ஏழை மக்களைக் கொண்ட நாடுகள் எனக் கூறும்போது அவர்களது வறுமைக்கு மிகப் பெரும் காரணம் இன்று வரை தொடரும் காலனியாதிக்கமே தவிர ஆப்பிரிக்க மக்கள் காரணமல்ல. அவர்கள் உலகத்தின் தாதுவளமிக்க பகுதியில் இருக்கிறார்கள்.

நான் இப்பொழுது விரிந்த கண்ணோட்டத்தைத் தரும் சிறிய சிறிய விசயங்களைக் கூறவுள்ளேன். பல வருடங்களைத் தாண்டி 1789ல் நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சிக்கு வருவோம். அந்தக் காலகட்டத்திலே தேசியம் பல்வேறு வடிவங்களில் முன்வந்தது. ஏனெனில் பிரெஞ்சுப் புரட்சி முதலாளிகளுக்கும் மேற்குடிகளுக்கும் அதிகாரம் அளித்தது. தேசம் என்பதன் நவீனப் பொருள் கொண்ட வெஸ்ட்பாலியன் தேசமும் உருவானது. ஃபிரெஞ்சு புரட்சியின் போதே ஃபிரான்ஸ் குடியரசாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அங்கே முதன்முதலாக, பிரெஞ்சு நாட்டின் எல்லைக்குள் வாழும் அனைவருமே ஃபிரெஞ்சு நாட்டின் குடிமக்களாக அழைக்கப் பட்டனர். அங்கே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பிரகடனம் செய்யப்பட்டது. இப்பொழுது அந்த காலகட்டத்தில் ஃபிரெஞ்சு காலனியாக இருந்த ஹைட்டியில் நடந்ததை காண்பது சுவாரசியமாயிருக்கும். ஃபிரெஞ்சு காலனியின் மிக செல்வமிக்க பகுதி ஹைட்டி. ஏனேன்றால் அங்கு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. வாசனை பொருட்களுக்கு அடுத்து அதிக முக்கியமானதாக சர்க்கரை கருதப்பட்டது. அதைக் கருப்புத் தங்கமாக அழைத்தார்கள். ஏனெனில் ஐரோப்பாவில் அதை விளைவிக்க முடியாது வேறு பகுதிகளிலிருந்து வாங்குவதும் விலை உயர்ந்ததாய் இருந்தது. அதனால் மேற்கிந்தியத் தீவுகளில் கவனம் செலுத்தி அவர்களுடன் சர்க்கரைக்காக சண்டையிட்டு பல இனப் படுகொலைகள் செய்தனர். அதில் பலர் இறந்தனர். நோயாலும் இறப்புகள் நேர்ந்தன. ஆனால் அங்கே வேலை செய்ய ஆட்கள் இல்லை. அதனால் ஆப்பிரிக்க அடிமைகளைக் கொண்டு வந்து கரும்பு உற்பத்தி செய்தனர்.

ஹைட்டியில் அடிமைகள் கிளர்ச்சி செய்தனர். சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவத்திற்காக பிரெஞ்சு புரட்சி உருவானது. எங்களுக்கும் சமத்துவம் வேண்டும், எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

தொசன்ட் லொவர்சர் தலைமையில் அவர்கள் பிரெஞ்சு படைகளையும் பிரிட்டிஷ் படைகளையும் தோற்கடித்தனர். தொசண்ட் லொவர்சரை பிரெஞ்சு அரசு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது. அவர் சிறையிலே இறந்துவிட்டார். தொசண்டின் படையைச் சேர்ந்த இருவரால் கிளர்ச்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. நெப்போலியன் 30000 - 40000 படைகளை கிளிர்ச்சியாளர்களுக்கு எதிராக அனுப்பினார். நெப்போலியனது படைகள் தோற்கடிக்கப்பட்டன. இதில் முக்கியமானது என்னவென்றால் ஃபிரெஞ்சு புரட்சி பிரெஞ்சு குடியரசை உருவாக்கியது. ஆனால் அது சுதந்திரத்தையும், சகோதரத்துவத்தையும் ஃபிரான்சு நாட்டின் எல்லைக்குள் இருக்கும் குடிமக்களுக்கு மட்டுமே தந்ததே ஒழிய ஃபிரெஞ்சு காலனிகளுக்கு அல்ல. அடிமை முறை இருக்கலாம் அது பிரச்சினை அல்ல. அடிமை முறை என்பது ஒரு பொருளாதார பிரச்சினை, அரசியல் பிரச்சினையில்லை. அடிமைகள் விடுதலை பெறமுடியாது என்று கருதினர்.

லொவர்சருடன் உடன்படிக்கை மேற்கொண்ட ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே அடிமை முறையை நிறுத்தினர் நெப்போலியனது படைகள் ஹைட்டிக்கு அனுப்பப்பட்ட போது ஹைட்டியில் அடிமைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. . அங்கு குடியாட்சியின் வீழ்ச்சிக்கு பின் நெப்போலியன் மன்னராக அறிவிக்கப்பட்ட பின்னரே நெப்போலியனால் ஹைட்டிக்கு புரட்சியை ஒடுக்கப் படைகள் அனுப்பப்பட்டது. அதற்காக வட அமெரிக்காவில் அவர்களுக்கிருந்த லூசியானாவிலிருந்தும் படைகளைத் திரட்டினர். பிரிட்டிஷுடன் முறித்துக் கொண்டு தங்களது சுதந்திரத்தை பிரகடனம் செய்த 30 காலனிகளின் அளவிற்கு இருந்தது (அமெரிக்கப் புரட்சி) லூசியானா. அங்கிருந்து பெறப்பட்டப் படைகளும் ஹைட்டியால் தோற்கடிக்கப்பட்டது. இதற்கு பின் நடந்தவை முக்கியமானவை. ஒன்று ஃபிரான்ஸ் லூசியானாவை, 30 பிரிட்டிஷ் காலனிகளிடம் விற்றது. லூசியானாவுடன் இணைந்ததால் ஐக்கிய அமெரிக்காவின் பரப்பளவு இருமடங்கானது. இந்த பொருளாதார விளைவால் ஐக்கிய அமெரிக்கா மேலும் வலிமை பெற்றது. எல்லா காலனிய சக்திகளும் இணைந்து ஹைட்டியை அச்சுறுத்தின. ஹைட்டியின் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் விடுவித்த அடிமைகளுக்காக நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என அச்சுறுத்தப்பட்டது. அதையடுத்து ஹைட்டி விடுதலை பெற்ற அடிமைகளுக்காக 122 ஆண்டுகளாக நஷ்ட ஈடு கட்டி வந்துள்ளது. அதைக் கணக்கிட்டால் தற்போதைய மதிப்பில் தோராயமாக 21 பில்லியன் டாலர். ஹைட்டி தற்போதுள்ள ஐக்கிய அமெரிக்காவைவிட 354 மடங்கு சிறியது.

ஹைட்டி உலகின் மிக வறுமையான நாடாக உள்ளது எப்படி என்றால் அவர்கள் மிகப் பணக்கார நாடான ஃபிரான்ஸுக்கு அடிமைகளை விடுவித்ததற்காக நஷ்ட ஈடு கட்டியே வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றை மறக்க வேண்டாம். இதன் இன்னொரு பகுதி முக்கியமானது. அதனால் தான் வெனிசுலா ஹைட்டிக்கு ஆதரவு அளித்தது, ஹைட்டிக்கு இலவசமாக எண்ணெய் வழங்கியது. எதனால் அவ்வாறு செய்கிறது என்றால் அதற்கு ஓர் வரலாறு உள்ளது. அமெரிக்காவின் விடுதலையாளராக அறியப்பட்ட சிமன் பொலிவர் போரிடும் போது அவரிடம் போராயுதங்கள் இல்லை. ஹைட்டியர்கள் போர்க் கருவிகளையும் ஆயுதப் பயிற்சியும் அளித்து, ஸ்பானிய மற்றும் பிரெஞ்சு படைகளுடன் போரிட்டு அமெரிக்கா விடுதலை பெற உதவினார்கள். அதனால் தான் வெனிசூலாவின் சாவேஸ், இதை நாங்கள் ஹைட்டிக்கு இலவசமாக அளிப்பதாகக் கருத வேண்டாம் பொலிவருக்கு ஹைட்டி தென் அமெரிக்கப் புரட்சியின் போது செய்ததை நாங்கள் திரும்ப செலுத்துகிறோம் என்று கூறினார். இந்த வரலாறுகள் அறியப்படாமல் இருந்தது. உலகின் பெரும்பகுதியின் இடதுசாரிகளுக்கும் இவை கிடைக்கப் பெறாமல் இருந்தது. நாம் மேற்குலகம் கற்பிக்கும் வரலாற்றையே உண்மையெனக் கருதுகிறோம். ஆனால் அவை கறை படிந்துள்ளன. இது போன்ற வரலாறுகளையே மீண்டும் காட்ட விரும்புகிறேன்.

தொழில்நுட்பமும் தொழிற் புரட்சியும்:

உலகின் தொடர்ச்சியான வரலாற்றை நான் அளிக்கவில்லை. இதைப் பற்றி மேலும் படிக்கவும், அறியவும் சில உதாரணங்களையே தருகிறேன். இதன் இன்னொரு பகுதியாக நான் கூறப் போவது தொழிற் புரட்சியோடு இணைந்த காலப் பகுதியில் தென் ஐக்கிய அமெரிக்காவில் செய்யப்பட்ட பருத்தி பயிரிடுதல் குறித்தது. தென் ஐக்கிய அமெரிக்கா தொழிற்புரட்சிக்குப் பிறகு பெருமளவு பருத்தி வழங்கும் பகுதியாய் மாறியது. எதனால் பருத்திக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்தது எனப் பார்த்தோமானால், லங்காசியர், மேன்செஸ்டரில் உள்ள ஆலைகளில் உள்ள நூற்பு இயந்திரங்கள் முன்னைக் காட்டிலும் அதி வேகமாக செயல்பட்டதால், அந்தளவு பருத்தியை எங்கிருந்து பெறுவது என்பது இடர்பாடாக இருந்தது. அதனால் ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் பருத்தி பயிரிடப்பட்டது. அங்கே வேளாண்மை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் அடுத்த 30-50 வருடங்களுக்கு பருத்திப் பயிரிடும் அடிமைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதில் முக்கியமானது என்னவென்றால் அந்தக் காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவிடம் பெரும் மூலதனமாக அடிமைகளே இருந்தனர். அவர்களை வங்கி பரிவர்த்தனை செய்யமுடியும். அடிமைகளை பிணையாக வைத்து கடன் பெறுவதில் அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. ஐக்கிய அமெரிக்காவின் மொத்த வங்கித் தொழில்துறை அடிமை முறையிலிருந்து வளர்ந்தவை. 19 ஆம் நூற்றாண்டில் அடிமைகளே ஐக்கிய அமெரிக்காவின் பெரும் மூலதனமாக இருந்துள்ளனர். எட்வர்ட் பேப்டிஸ்டு எழுதிய ஒரு நூலில் இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்கான ஆற்றலை இயந்திரங்களும், உழைப்பும் வழங்கியதாகவும், எது தொழிற்சாலைகளுக்கு பருத்தி வழங்கியது எனப் பார்த்தோமானால் அடிமைகளை சாட்டையால் அடிப்பதே பருத்தி வேளாண்மையில் ஏற்பட்ட ஒரே 'தொழில்நுட்ப முன்னேற்றம்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எட்வர்ட் பேப்டிஸ்ட் எழுத்தின் படி கசையடி இயந்திரமே தொழிற் புரட்சிக்கு ஆற்றல் அளித்திருக்கிறது. ஒரே தொழில்நுட்ப முன்னேற்றம் நன்றாக கசையால் அடி, மேலும் நன்றாக கசையால் அடி என்பது தான். ஒவ்வொரு அடிமையின் விளைபொருளும் தொழிற் புரட்சியின் வேகத்திற்கு இணையாக்கப்பட்டது. தொழிற் புரட்சியால் தொழிலாளரின் உற்பத்தித் திறன் 10 - 30 மடங்கு அதிகரித்தது. அதற்கு இணையாக அடிமைகளின் உற்பத்தித் திறன் அதிக கசையடி மூலம் பெறப்பட்டது. ஒரு அடிமையின் வாழ்நாள் மதிப்பு என்ன எனக் கணக்கிடப்பட்டது. அடிமை 20-28 வயதில் இருக்கும் போது எவ்வளவு சாப்பிடுகிறார், எவ்வளவு உற்பத்தி செய்கிறார், அவரை 28 வயதுக்கு மேல் வைத்திருக்கும் போது முதலாளிக்கு வரவு குறைகிறது. அவரது உற்பத்தி குறைகிறது ஆனால் அடிமைக்கு உணவு தர வேண்டியுள்ளது. அடிமைக்காக செய்த முதலீட்டை அடிமைக்கு 20-24 வயதுள்ள போது பெற முடிந்தால், அதற்கு பின் அடிமை இறந்தால் அது ஒரு பெரிய விசயம் இல்லை. மீட்ட முதலிலிருந்து வேறு அடிமையை வாங்கி மீண்டும் ஒரு சுழற்சியை மேற்கொள்ளலாம். இது முதலாளித்துவக் கணக்கீடு, இந்த அடிமை முறை ரோமில் இருப்பது போன்ற அடிமை முறை இல்லை. இந்த அடிமை முறையில் அடிமைகள் உண்மையில் இயந்திரத்தைப் போலவே நடத்தப் படுகின்றனர். உயிருள்ள மனிதரைப் போல் நடத்தாமல் இந்த இயந்திரத்தை பதிலீடு செய்வதற்கு முன் எவ்வளவு நாள் வைத்திருக்க வேண்டும் என்று முதலாளித்துவக் கணக்கீடு செய்யும் கொடூரமான அமைப்பு முறை இருந்துள்ளது.

ஆனால் அடிமை முறை தான் தொழில் புரட்சிக்கு ஆற்றல் வழங்கியது என்பதை மறக்க வேண்டாம். அது இரண்டு வகையில் ஆற்றலூட்டியது, ஒன்று கண்டங்கள் தாண்டிய நிதி தொழிற் புரட்சியுடன் இணைந்தது பிரிட்டனும், பிரான்ஸும் பங்கேற்ற அடிமை வாணிகத்தின் மூலமே நடைபெற்றது. ஸ்பானியர்கள் அமெரிக்காவில் அடித்தத் தங்கக்கொள்ளை, முதன்மை அடிமையாளராக போர்த்துகீசியர் செய்த அடிமை வணிகம், இவை அனைத்தும் இணைந்தே தொழிற்புரட்சியை உருவாக்கியது. அதனால் தான் மார்க்ஸ் மூலதனத்தைப் பற்றிக் கூறும் போது அதன் ஒவ்வொரு துளையிலிருந்தும் வியர்வையும், ரத்தமும் சிந்தி வந்ததாகக் கூறுகிறார். மூலதனத்திற்கு அடிப்படையாய் அமைந்த திருட்டு, கொள்ளையையும், அடிமை முறையையுமே இதில் குறிப்பிடுகிறார். ஒரு தொழிற் புரட்சிக்கு ஆற்றல் தரப் போதுமான மூலதனம் இவைகளிலிருந்தே பெறப்பட்டது.

(தொடரும்)

Pin It