ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அறிவுசுடர் ஏந்தி போராடிய ஒரு விடிவெள்ளியின் சரித்திர நாள்தான் ஏப்ரல் 14.

ambedkar_237_copyவேர்களை அறுத்தெறிந்து வெடித்து கிளம்பிய ஒரு வித்தாக சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மகர் இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

அவர் வெறும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்காக மட்டுமே பாடுபட்டவர் எனும் தவறான கருத்து நிலவி வருவது மிகவும் வேதனைக்குரியது.

தாய்நாட்டின் விடுதலைக்காகத் துப்பாக்கி ஏந்துகிறவனை நீ சுயநலக்காரன்... உன் சொந்த நாடு என்பதற்காகத்தான் நீ துப்பாக்கி ஏந்துகிறாய் என யாராவது கூறினால் அது எத்தனை அபத்தமானதோ அதேபோலதான் அம்பேத்கர் மீதான மேற்சொன்ன தப்பான அபிப்பிராயங்களும்.

அதிகாலைப் பனி விலகாத வயல் வெளிக்கிடையே பாம்பு போல வளைந்து செல்லும் 1 ½ அடி பாதையில் ஒரு ஜோடி பிஞ்சுக் கால்கள் தாவி குதித்து ஓடுகின்றன. பின்னாலேயே அவனது தந்தை. அன்றுதான் அந்தச் சிறுவனுக்குப் பள்ளியின் முதல் நாள், அதனாலேயே தந்தை மகன் இருவருக்கும் கரை காணாத உற்சாகம். ஆனால், பள்ளியில் சேர்ந்த அடுத்த நொடியிலேயே அந்தச் சிறுவனின் உற்சாகம் வடிந்து வகுப்பறையை விட்டு வெளியேறியது.

காரணம், சக மாணவர்களுடன் சரிசமமாக உட்கார அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவன் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்பதுதான் காரணம். மீறி அந்த சிறுவன் தொடர்ந்து படிக்க விரும்பினால் வகுப்புக்கு வரும்போது புத்தக பையுடன் ஒரு கோணிசாக்கையும் கொண்டுவரும்படி உத்தரவிட்டார் ஆசிரியர்.

அன்று அந்தச் சிறுவனின் மனதில் ஆயிரம் கேள்விகள்

1.            நாம் தீண்டத்தகாதவர்கள்

2.            நாம் சார்ந்திருக்கும் இந்த மதம் நம்மை அப்படிதான் மற்றவர்களிடம் இருந்து பிரித்து ஒதுக்கியிருக்கிறது.

பள்ளியில் நடந்த சம்பவத்தை எண்ணி அன்று இரவு அந்த சிறுவன் கண்களில் நீர் வழிந்தது.

மறுநாள் ஆசிரியர் மற்றும் இதர மாணவர்களின் பார்வை வாசலை நோக்கி திரும்பியது, அங்கே அந்த சிறுவன் கோணிசாக்குடன் நின்றிருந்தான்.

1947 ஐம்பது ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியுடன் இப்போது அந்தச் சிறுவன் கோட் சூட் அணிந்த மனிதனாக வந்து நின்றான். ஒட்டு மொத்த இந்தியாவே அவனது வருகைக்காக நாடாளுமன்றத்தில் திரும்பி பார்த்தது. இப்போது அவன் கையில் கோணிசாக்கு இல்லை... மாறாக கோப்புகள் இருந்தன. இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மாணித்த இந்திய அரசியல் சட்டம் அந்த கோப்பில் இருந்தது.

உலகில் எந்த நாட்டிலும் ஒருவன் எத்தனை கீழான குடியில் பிறந்தாலும் வளர்ந்த பிறகு அவன் தன் நிலையை மேம்படுத்திக் கொள்வது அவனது அறிவையும் நடத்தையையும் பொறுத்தே அமைகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் கருவில் பிறக்கும் போதே அது தீர்மானிக்கப்பட்டு வாழ்வில் எத்தனைதான் உயர்ந்தாலும் தாழ்ந்தவனாக கருதப்படும் இந்நிலை கட்டமைக்கப்பட்டது. இதனால், அவர்கள் உரிமைகள் பிடுங்கப்பட்டன, அறிவு பிடுங்கப்பட்டது, அவர்களுக்கான வாழ்நிலங்கள் பிடுங்கப்பட்டன. ஆடைகள் பிடுங்கப்பட்டன. சுதந்திரம் பிடுங்கப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

இந்த இழிநிலையில் இருந்து தன்னையும் தன் சமூகத்தையும் விடுவிக்க தோன்றிய விடிவெள்ளியாக பிறந்தார் டாக்டர் அம்பேத்கர்.

ஏப்ரல் 14 – 1891 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் மாஹூ எனும் சிற்றூரில் பிறந்தார். அவரது தந்தையார் ராம்ஜி சக்பால், அவருடைய தாயார் பீமா. இவர்களுக்குப் பிறந்த பதினான்காவது குழந்தைதான் அம்பேத்கர் – இயற்பெயர் பீம்.

தன் பிள்ளைகள் தினம் தினம் கோணி சுமந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவமானத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அதனால் அவர் தன் பிள்ளைகளுடன் சதாரா நகரத்திற்கு மாற்றிக்கொண்டார்.

தனது குழந்தைகளை எந்த பேய் நெருங்கிவிடக் கூடாது என கிராமத்தில் இருந் ராம்ஜி சக்பால் நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவேறு விதமான ரூபங்களில் தன் குழந்தைகளை பயமுறுத்தி வருவதை கண்டு மிகுந்த மன வேதனை கொண்டார்.

பீம் வளர்ந்து பெரியவனானான், ஆரம்ப கல்வியை முடித்துவிட்டு உயர்நிலை கல்வியில் சேரும் நேரம் வந்தது. அப்போது பீம் எனும் அவன் பெயருக்கு பின்னால் பட்ட பெயரான சக்பாலை எடுத்துவிட்டு, பீமின் மீது பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்த பெயர்தான் அம்பேத்கர் அதுவரை பீம்ராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்த சிறுவன் அன்று முதல் பீமராவ் அம்பேத்கராக மாறினான்.

மாலை நேரத்தில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் துவங்குவார்.

இப்படி சிறு வயதிலேயே ஆழ்ந்த சிந்தனையும் தனிமையுமாகக் காணப்பட்ட அந்த சிறுவனை அந்த பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள் தோறும் கவனிக்க துவங்கினார். அவர்தான் வில்சன் ஹை ஸ்கூலின் தலைமை ஆசிரியரான கிருஷ்ண அர்ச்சன ராவ். அவர் அப்போதே அம்பேத்கரிடம் அசாத்தியமானதொரு சக்தி இருக்கிறது என உணர்ந்து கொண்டார்.

அந்த வருட மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வெளியானபோது தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ஒருவன் முதல் முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றது மிக முக்கியமாக செதியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது.

நமது சமூகத்தில் முதல் முதலாக ஒருவன் செய்திருக்கும் சாதனையை நாம் கொண்டாட வேண்டும் என அந்த மக்கள் முடிவு செய்து அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர் பூங்காவில் எந்த மாணவனை பார்த்து நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தாரோ அதே மாணவனுக்குத்தான் நாம் பரிசளிக்க போகிறோம் என்பதை அவர்கள் இருவருமே அப்போது அறிந்திருக்க இயலாது.

பரோடாவை ஆண்டு கொண்டு இருந்த சிற்றரசர் ஒருவர் யாராவது ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுக்குரிய கல்விக்கான முழுத்தொகையையும் செலவு செய்ய சித்தமாக இருந்தார். அந்த நேரத்தில் தான் அம்பேத்காருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. பிறகு பம்பாய் என்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார், அவரது கடுமையான உழைப்பின் பலனாக 1912 இல் பி.ஏ பட்டம் பெற்றார்.

படிப்பு முடிந்தபின் மன்னருக்குக் கொடுத்த வாக்கின்படி அம்பேத்கர் அரண்மனையில் வேலை செய்தாக வேண்டும். ஆனால், அவர் தந்தைக்கு உயர் படிப்பு படித்து விட்டு அனைவரும் வியக்கத்தக்க உன்னத நிலைக்கு வர வேண்டும் என்பது பிடிவாதமான ஆவல். ஆனால், அம்பேத்கரோ கற்ற கல்விக்கு அந்த மன்னருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மன்னரின் படைப்பிரிவில் லெப்டினெண்ட் பதவியில் சேர்ந்து பணிபுரிந்தார்.

வேலைக்கு சேர்ந்த 15 ஆவது நாளில் அவருடைய தந்தை இறந்துபோனார்.  ஒரு மகனாக தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை முடித்துவிட்டு – வீடு திரும்பினார். பின்பு அவர் எடுத்த முடிவு – அவரின் தந்தையின் கனவாகிய அதிகம் படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான். அதனால் இனி அம்பேத்கர் அரண்மனைக்கு செல்ல போவதில்லை என முடிவு செய்தார்.

இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என குழம்பிய நிலையில் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க விரும்பி மாணவர்களை தன் சொந்த செலவில் படிக்க வைக்க போவதாக பரோடா மன்னர் விடுத்திருந்தார்.

எந்த அரண்மனைக்குள் செல்ல வேண்டாம் என முடிவெடுத்திருந்தாரோ அதே அரண்மனைக்கு தன் கல்வியின் நிமித்தமாகவும், தன் தந்தையின் லட்சியத்திற்காகவும் மீண்டும் உதவி கேட்டு விண்ணப்பித்தார்.

கல்வி முடிந்ததும் பத்தாண்டு காலம் அரண்மனைச் சேவகம் எனும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கையெழுத்திட்டார்.

அம்பேத்கருக்குள் புது கிளர்ச்சியை உண்டாக்கியது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். காரணம் இங்கே அவர் தாழ்த்தப்பட்டவர் இல்லை, சாலையில் செல்லும் மனிதர்கள் இவன் எந்த சாதி என்று நினைக்க மாட்டார்கள். விலகி நடந்து சக மனிதன் அற்ப பிரானி போன்று நடத்தும் அசிங்கங்கள் இல்லை. இதனாலேயே அவருக்கு மனதிலும் நடையிலும் உற்சாகம் பிறந்தது என்றாலும் தனது தாய்நாட்டில் அதாவது இந்திய மண்ணில் தன்னால் பூரணமாக அனுபவிக்க முடியவில்லையே எனும் ஏக்கம் ஒரு புண்ணாக அவரது நினைவில் வலி ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.

இந்த குறைகளில் இருந்து தன் தேசத்தையும், மக்களையும் விடுவிப்பதுதான் எதிர்காலத்தில் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்பதை அச்சமயத்தில் முழுமையாக உணர்ந்தார் அம்பேத்கர்.

22 ஆவது வயதில் விரும்பி தன் முதுகில் ஏற்றிக் கொண்ட இந்த சுமையுடன் அம்பேத்கர் கொலம்பிய பல்கலைக் கழகத்தினுள் அடியெடுத்து வைத்தார்.

1915 இல் கொலம்பிய பல்கலைக் கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றார். தான் காண விரும்பும் லட்சிய உலகுக்கான போராட்டத்திற்கு இந்த படிப்பெல்லாம் போதாது என உணர்ந்தார். ஆனால், அவர் மன்னருக்கு கொடுத்த வாக்கின்படி அவர் அரன்மனையில் சேவகம் செய்ய இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பியதும் அம்பேத்கரின் புகழ் பம்பாய் மாகானத்தில் சரசரவென பரவியது.

அமெரிக்கா சென்று படிப்பது இந்தியாவில் அன்று சாதாரன காரியமில்லை வசதிமிக்க உயர்சாதினருக்குக் கூட இது சாதாரண காரியமில்லை. இச்சூழலில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மாணவர் அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பியது பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

படிப்பை முடித்தவுடன் மன்னரிடம் தான் கொடுத்த வாக்கின்படி வேலைக்கு சேர்ந்தார். படிப்பு எப்படியும் தன் கொளரவத்தையும் அந்தஸ்தையும் உயர்த்திவிடும் என நினைத்திருந்த அம்பேத்கரின் எண்ணத்தில் மண் அள்ளி போடுவதற்கென்றே பரோடா அரண்மனையில் காத்திருந்தனர் சாதி வெறியர்கள் சிலர்.

ஒரு நாள் தனக்குச் சேவகம் செய்ய நியமிக்கப்பட்ட ஒரு கடைநிலை ஊழியரிடம் அம்பேத்கர் தண்ணீர் கொண்டுவருமாறு சொன்னார், வெகுநேரம் தயங்கியபடியே, பின்பு அவரையே எடுத்து குடிக்க சொன்னார்.

படிப்பறிவு இல்லாத அந்த பாமரனிடம் இருந்த சாதி வெறியை நினைத்து வருந்தியபடியே அம்பேத்கர் அருகில் இருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுக்க போக, சட்டென அங்கு வந்த இன்னொரு பணிப்பென் பதற்றத்துடன் இன்னோரு பானை வைத்திருப்பதாகவும், அதிலிருந்து தண்ணீர் எடுத்து பருகுமாறும் கூறினாள்.

சாதி வெறி எந்த அளவுக்கு ஒரு நோயாக அவர்களுக்கு ஊறிப்போயிருக்கிறது என்பதை அறிந்து அம்பேத்கர் அடைந்த துயரத்துக்கு அளவேயில்லை.

அம்பேத்கருக்கு பரோடா அரண்மனையில் வேலை கிடைத்ததே தவிர தங்குவதற்கு இடமின்றி தெருத்தெருவாக அலைந்தார். தாழ்த்தப்பட்டவர் எனும் ஒரே காரணத்துக்காக விடுதிகள் அனைத்தும் அவரை உள்ளே விடாமல் விரட்டியடித்த நெருக்கமான சூழலில்தான்...

விடுதி பணியாளார் ஒருவர் அம்பேத்கரின் நிலையை அறிந்து மனமிறங்கி ஒரு சமரசத்துக்கு வந்தார். யாராவது கேட்டால் தான் பார்சி இனம் என்று சொல்லி கொள்ளும்படி கேட்டுக் கொண்டார், வேறு வழியே இல்லாமல் தானே ஒரு முகமூடி அணிந்து கொண்டு அந்த விடுதியில் குடியேறினார்.

அமெரிக்கா சென்று எவ்வளவோ உயர் படிப்பு படித்தும் இந்தியா தன்னை இப்படி விலங்கினும் கீழாக மதித்து அவமானப்படுத்துகிறதே எனும் வேதனை ஒவ்வொரு நாளும் அவரை அரித்துத் தின்றது.

விடுதியில் சேர்ந்த பதினோராவது நாள், தான் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவன் என்ற விஷயம் தெரிந்த நிலையில் அவர் விடுதியிலிருந்த சாதி வெறியர்களால் துரத்தப்பட்டார். இனி, பரோடாவில் வேலை செய்ய முடியாது காலையில் ரயிலில் பேசாமல் ஊருக்கு வண்டி ஏறிவிட வேண்டியதுதான் என முடிவெடுத்தார்.

அவமானத்துடன் பம்பாய் வந்து இறங்கிய அம்பேத்கர் அங்கிருந்த சைடன்ஹாம் கல்லூரியில் பேராசியராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1921 இல் மான்கோன் இடத்தில் நடைபெற்ற தீண்டப்படாதோர் மாநாட்டுக்கு அம்பேத்கர் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நாகபுரியில் நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கரின் அறிவாற்றலையும் அணுகுமுறையையும் கண்டு வியந்த சாகு மகாராஜா அம்பேத்கரின் அறிவுக்கூர்மைதான் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு அரணாக எதிர்காலத்தில் விளங்கப்போகிறது என்பதை உணர்ந்தார்.

பாதியில் நின்ற பொருளாதார படிப்பு பூர்த்தியானால் அது அம்பேத்கருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கும் மட்டுமல்ல எதிர்கால இந்தியாவுக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கும் என சாகு மகாராஜா அன்று எடுத்த முடிவுதான் மீண்டும் அம்பேத்கரை லண்டன் கிரேஸ்இன் சட்டகல்லூரிக்குள் படிப்பை தொடர அனுமதித்தது.

நீ அறிவைத் தேடி ஓடினால் வரலாறு உன் நிழலைத் தேடி ஓடிவரும்.

இதுதான் உலக நியதி

இந்நீதியின் மிகச்சிறந்த இலக்கணம் தான் டாக்டர் அம்பேத்கர்.

லண்டன் சென்ற அம்பேத்கர் மூன்றே வருடங்களில் மூன்று பட்டங்களை பெற்றார்.

1921 இல் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டத்தையும் அடுத்தடுத்த வருடங்களில் பொருளாதாரத்தில் எம்.எஸ்.சி மற்றும் டி.எஸ்.சி போன்ற ஆய்வுப் பட்டங்களையும் தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டபோது லண்டன் கிரேஸ் இன் பேராசியர்களே அம்பேத்கரின் ஆற்றலைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கினர். அதற்காக, அவர் அடைந்த வலிகளும், அவமானங்களும் வார்த்தைகளற்றது.

அப்போதுதான் லண்டன் நாளிதழ்களில் இந்தியாவை பற்றி வரும் செய்திகளில் சமீப காலமாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெயர் அடிக்கடி இடம்பெறுவதை அம்பேத்கர் கவனித்தார்.

யார் இந்த காந்தி ?

தீண்டாமை குறித்து ஆவேசமாக பேசும் இவரால் தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்வில் உண்மையிலேயே வெளிச்சத்தை கொண்டுவர முடியுமா ? என்ற கேள்விகள் அம்பேத்கரின் மனதில் வட்டமிட்டன.

1923 ஏப்ரலில் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு காந்தியைப் பற்றியும், இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகளையும் மேலும் கூர்ந்து கவனிக்கத் துவங்கினார் அம்பேத்கர். பிறகு அவர் தன் எண்ணத்துக்கு துணையாக இருக்கும் (வழக்கறிஞர்) தொழிலை தேர்ந்தெடுத்தார்.

தானே தேடிச் சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்க்க உதவிக்கரம் நீட்டினார். பிறகு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கென்று தனி பள்ளி தங்கும் விடுதி போன்றவற்றை கட்டித்தர புதிய இயக்கம் ஒன்றை 1924 ஜூலையில் துவக்கினார்.

அக்காலத்தில் காந்தி உட்பட பலர் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் மேடைகளில் முழங்கினாலும், அம்பேத்கரின் வீர உரைகளே அனைவரையும் அதிகம் உசுப்பியது.

காரணம் தாழ்த்தப்பட்டவரின் வலியை பற்றி இதர சாதியினரால் அறிவுரீதியாக மட்டுமே பேசமுடியும், ஆனால் அந்த வலியை ரத்தமும் சதையுமாக அனுபவித்த இன்னொரு தாழ்த்தப்பட்டவரால் மட்டுமே உண்மையாக, உணர்வு பூர்வமாக அவர்களுக்காக போராட முடியும்.

பிறந்தது முதலே சமூகத்தால் தீண்டப்படாதவனாகவே ஒதுக்கப்பட்டு அதன் அத்தனை கொடுமைகளையும் நேரடியாக அனுபவித்த காரணத்தால் அம்பேத்கரின் விடுதலை பேச்சுக்கள் ஒவ்வொன்றும் சாட்டையடிகளாக விழுந்து அம்மக்களை துடித்து எழச் செய்தது.

விளைவு 1927 மார்ச்சில் வெடித்தது மகத்தான மகத்குளம் போராட்டம்.

அம்பேத்கரை மகத்தான தலைவராகவும், வரலாற்று நாயகராகவும் மாற்றிய அந்த முதல் நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் பெரியார். ஆம், மகர் இன மக்களான தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் அந்த குளத்தில் குளிக்கவோ தண்ணீர் குடிக்கவோ தடை செய்யப்பட்டிருந்தது.

ஆகாயத்தையோ, காற்றையோ அளக்க தெரியாத மூடர்களிடம் தண்ணீர் மட்டும் வசமாக மாட்டிக்கொண்டது.

பம்பாய் மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்க, தாழ்த்தப்பட்ட மக்களும் அந்த குளத்தில் தண்ணீர் எடுக்க உரிமை உண்டு என உத்தரவு வந்தது. ஆனாலும், பிராமணர்களும் இதர உயர்சாதியினரும் சேர்ந்து தாழ்த்தப்பட்டவர்களை அந்த குளத்தில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த நிலையில் இது அம்பேத்கர் கவனத்துக்கு வந்தது.

கேரளத்தின் வைக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் வீதியில் நடந்து செல்லும் அனுமதி மறுக்கப்பட்டபோது, பெரியார் நேரடியாக சென்று போராட்டத்தில் குதித்து வெற்றிவாகை சூடிய கதை அம்பேத்கரின் நினைவுக்கு வந்தது.

அதிரடியாக களத்தில் இறங்கினார் அம்பேத்கர், எந்தக் குளத்தில் நமக்கு நீர் மறிக்கப்பட்டதோ, அந்தக் குளத்தை நோக்கி நடப்போம் என உத்தரவிட்டார். பிறகு, குளத்தின் நான்கு புறங்களையும் சுற்றி வளைத்து நின்றனர். முதல் ஆளாக அம்பேத்கர் ஒரு கையளவு நீர் அள்ளிப் பருகினார். பின் அனைவரும் இறங்க குளம் கொண்டாட்டக் களம் ஆகியது.

பிறகு அனைவரும் திரும்பி கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த உயர் சாதியினர் கையில் தடிகளுடன் கூட்டத்தின் ஒரு பகுதியினரை கடுமையாக தாக்கினர். எங்கே அவர்கள் கோயில்களுக்குள்ளும் நுழைந்துவிட போகிறார்களோ என்பதுதான் அவர்களின் கோபத்துக்கு காரணம்

பிரச்சனை இதோடு முடியவில்லை, போராட்டத்தால் குளத்தில் ஏற்பட்டதாக நினைத்த தீட்டை கழிக்க உயர் சாதியினர் 108 குடங்களுடன் மாட்டு சானம், கோமியம் ஆகியவற்றைக் குளத்தில் கொட்டி தண்ணீரை மீண்டும் ஒருமுறை தங்களது அறிவீனத்தால் களங்கப்படுத்தினர்.

மனுசாஸ்திரத்தால்தான் மனிதர்களை மனிதர்கள் வெறுக்கும் இந்த அவலம் காலங்காலமாக இந்தியாவில் தொடர்கிறது. மனுதான் நம் மூல எதிரி எனும் முடிவுக்கு வந்தார்.

விளைவு 1927 டிசம்பர் 23 ஆம் நாளில் மீண்டும் மாநாடு கூடியது. அந்த மேடையில் பிராமணர் உட்பட பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். முன்னிலையில் அம்பேத்கர் மனுதர்ம சாஸ்திரத்தை தீ வைத்து கொளுத்தி தீண்டாமைக்கு எதிரான யுத்தத்தை துவக்கினார். அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் சட்டமாக உத்தரவு பிறப்பித்த பிறகும் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க நிர்வாகத்தினர் மறுத்து வந்தனர்.

மார்ச் 3 இல் கிட்டதட்ட 8 ஆயிரம் பேர் நாசிக்கில் அம்பேத்கர் தலைமையில் கூடினர். மிகவும் அமைதியான முறையில் நகரின் மையத்தில் இருந்த கலாராம் கோயிலை நோக்கி ஊர்வலமாக நடந்து வந்தனர். ஊர்வலம் கோயிலை நெருங்க நெருங்க நிர்வாகிகளுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் குலை நடுக்கம் எங்கே பெரும் கலவரம் வெடிக்க போகிறதோ என பதற்றம். ஆனால், அம்பேத்கரின் கட்டளைக்கு இணங்கிய 8 ஆயிரம் மக்களும் அமைதியான முறையில் போராடினர்.

இரவு கடந்தும் கதவுகள் திறக்கவே இல்லை. மறுநாள் மறுநாள் என போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கையில் ஏப்ரல் 8 ராமர் தேரில் ஊர்வலம் வந்தே ஆக வேண்டும், கோயில்களின் கதவுகள் திறக்கப்பட்டால்தான் ராமர் வெளியில் வந்து தேரில் அமர முடியும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கோயில் நிர்வாகத்தினர் வேறுவழி தெரியாத்தால் அம்பேத்கருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மறுநாள் தாழ்த்தபட்டவர்களும் எங்களுடன் சேர்ந்து தேர் இழுக்கட்டும் என கூறிவிட்டு அறிவித்த பின்னரே தேரை அவசரமாக கோயில் நிர்வாகத்தினரும் பிராமணர்களும் இதர இந்து சாதிகளும் கூட்டு சேர்ந்து இழுத்து சென்றனர்.

கடவுளின் பேரால் மீண்டும் ஒருமுறை முதுகில் குத்தப்பட்டனர். தொடர்ந்து நடந்த கலவரங்களால் 1935 வரை நாசிக்கின் புகழ் மிக்க அந்தக் கோயில் மூடியே இருந்தது.

தன் சொந்த நாட்டில் ஒரு மதம் திணிக்கப்பட்டு, அதே சமயம் அதற்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு வந்தது.

ambedkar_259காங்கிரசின் கொள்கைகளான தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு போராட்டம், சமபந்தி உணவு என இவற்றால் மட்டும் தன் சமூகத்துக்கு விடிவு ஏற்படாது, முறையான அரசியல் வாழ்வுரிமையின் மூலமாகத்தான் எதிர்காலச் சந்ததியினருக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் அதுவும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே பெற்றால்தான் உண்டு. அவர்கள் போன பின்பு உயர் சாதியினர் ஆட்சிக்கு வந்தால் ஒருகாலும் நீதி கிடைக்காது என்ற தெளிவில் இருந்தார். அவரது இந்த எதிர்பார்ப்பை ஈடு செய்வது போல் வந்தது 1930 நவம்பர் 12

இந்திய வரலாற்றுக்கே திருப்புமுனை நாளாகவும் அமைந்த பொன்நாளாக லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. இந்தியர்களின் வாழ்வுரிமைக்காக அரசியல் அமைப்புச் சட்டங்களில் ஓரளவு சீர்திருத்தத்தை மேற்கொள்வது மாநாட்டை நடத்திய பிரிட்டிஷ் ஆட்சியரின் நோக்கம். அப்போது ஒத்துழையாமை இயக்கத்தை கடைபிடித்து வந்ததால் இந்த மாநாட்டுக்கான அழைப்பைப் புறக்கணித்தார் காந்தி. ஆனால் அம்பேத்கர் தனது மக்களுக்கான நியாயமான வாழ்வுரிமைகளும் அரசியல் சமத்துவங்களையும் பெற இது சரியான சந்தர்ப்பம் என அழைப்பை ஏற்று லண்டனுக்கு விரைந்தார்.

மதத்தின் பேரால் அடிமைகளாக்கப்பட்டு அவமான இருட்டில் வாழும் ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் குரல்கள் அவர் மனசுக்குள் ஒருசேர ஒரு சொல்லைக் கூவின. அது – விடுதலை

முதலாம் வட்ட மேசை மாநாடு முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மண்ணிலேயே அவர்களது ஆட்சி முறையின் கோளாறுகளை கடுமையாக சாடினார். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக இங்கு பேசுகிறேன்.

காலம் காலமாக எம்மக்கள் மதத்தின் பெயரால் அனுபவித்து வரும் துயரங்களில் இருந்து மீட்காமல் உங்கள் அரசு மேலும் அவர்களை இழிவுபடுத்தி வருவதை இனியும் எங்களால் பொருத்து கொள்ள முடியாது.

ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு அந்த நாட்டின் ராணுவ படையில் சேர உரிமை மறிக்கப்படுமானால் அப்படிப்பட்ட ஆட்சியே எங்களுக்கு தேவையில்லை

இனி இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக மக்களே ஆள்கிற புதிய ஆட்சிமுறை வேண்டும் அந்த ஜனநாயக ஆட்சியில் எம் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது வாழ்கிற அடிமை நிலையிலிருந்து விடுபட்டு அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் ஏனைய உயர் சாதியினரைப் போல பூரண விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும் என உரத்துக் கூறினார்.

அவருடைய துணிச்சலான பேச்சினை கேட்ட உடன் வந்த சிற்றரசர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்த, ஓர் அரசர் பூரிப்பில் அழுதே விட்டார் – அவர்தான் அமெரிக்கா சென்று படிக்க அம்பேத்கருக்கு பண உதவி செய்த பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட்.

வட்ட மேசை மநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை குறித்து லண்டனில் வெளியான ஆங்கில நாளேடுகள் புகழ்ந்தன. வயது வந்தோர்க்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற அம்பேத்கரின் அதி முக்கியமான கோரிக்கைகள் குறித்து வியந்து எழுதின.

முதலாம் வட்ட மேசை மாநாட்டை அடுத்த வருடமே ஆங்கில அரசு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்கான அழைப்பை வெளியிட்டது. கடந்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்த காங்கிரஸ் கட்சி இந்த முறை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றது.

காரணம் காந்தி – இர்வின் ஒப்பந்தம் என்றாலும் (மூலக்காரணம்) வேறொன்றாக இருந்தது. இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பைத் தீர்மானிக்கும் வட்ட மேசை மாநாட்டில் எங்கே தங்களது பங்களிப்பு இல்லாது போய்விடுமோ எனும் காங்கிரஸ் கட்சியின் அச்சமும் முதல் மாநாட்டுக்கு பிறகு ஏற்பட்ட அம்பேத்கரின் பிரமாண்டமான அரசியல் வளர்ச்சியும்தான் காரணம்.

காங்கிரஸ் கட்சியின் நோக்கம் தேச விடுதலை மட்டும்தான். ஆனால், அம்பேத்காரின் நோக்கம் கனவு தேச விடுதலையோடு சேர்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டபூர்வமான அரசியல் விடுதலையும் முக்கிய கடமையாக இருந்தது. இதனால் காங்கிரஸோடு கூட்டு சேராமல் தன்னிச்சையாகவே செயல்பட்டார். பின்பு அது இரு தரப்புக்கும் இடையே தவிர்க்க முடியாத ஒரு விரிசலை ஏற்படுத்தியது. பின்பு அவர் எங்கே சென்றாலும் காங்கிரஸ்காரர்கள் கருப்பு கொடியை காட்டி கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையில் அம்பேதகரும் காந்தியும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. காந்தியின் அழைப்பு கடிதத்தின் மூலம். அந்த கடிதத்தில் காந்தியே வருவதாக எழுதியிருந்தது. மரியாதை நிமித்தமாக அம்பேத்கரே காந்தியின் இருப்பிடத்துகு (மணிபவன்) சென்றார்.

முஸ்லிம்களின், சீக்கியர்களின் அரசியல் அங்கீகாரத்தை ஏற்றுகொண்ட காந்தி அரசியலில் தாழ்த்தப்படவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை மறுத்தார். காரணம், இந்து மதத்தை பலவீனப்படுத்தும் செயலாம். ஆனால், பூனைகளைவிட நாய்களைவிட கேவலமாக நடத்தும் ஒரு மதத்தை நாங்களும் அங்கீகரித்தால் அது எங்களை நாங்களே அவமதித்து கொள்ளும் செயலாகும். குடிக்க தண்ணீர்கூட அனுமதி மறுக்கப்படும் நிலையில் இந்து மதத்தையும் இந்த நாட்டையும் முறையே எப்படி தன் சொந்த மதமாகவும், நாடாகவும் கருத முடியும் எனக் கேள்வியை தொடுத்தார்.

இதற்கு முன் காந்தியிடம் இப்படி யாரும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசியதில்லை. அம்பேத்கர் பேசிய பேச்சு ஆணி அடித்தாற்போல் உறுதிபட பேசுவது காந்திக்கு ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த கணமே அறுந்த பாலமாக இருவரும் உரையாடலை பாதியில் நிறுத்திக் கொண்டனர்.

காந்தியிடமே எதிர்த்துத் துணிச்சலாக கேள்வி தொடுத்த சம்பவம் காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை உண்டுபன்னியது. விளைவு அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்பு அந்த சதி வேலை தோல்வியில்தான் முடிந்தது.

1931 – செப்டம்பர் 7 இல் தொடங்கி 1932 ஆகஸ்ட் 20 ஆம் நாள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தீர்ப்பு வெளியானது.

அம்பேத்கர் வாதமோ காலம் காலமாக வாழ்வுரிமை மறுக்கப்பட்டு பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்காலத்திலாவது மீண்டு வர வேண்டும் என்ற நோக்கம். ஆனால், இதை காந்தி தீவிரமாக எதிர்த்தார். தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினராக கருத முடியாது, அப்படி செய்தால் இந்து மதம் பலவீனம் அடைந்து விடும் என்றார். இரண்டாவது வட்ட மேசை மாநாடும் முடிவுக்கு வந்தது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பு அம்பேத்கரின் வாத திறமைக்கும் கடும் உழைப்புக்கும் கிடைத்த பரிசாக அமைந்தது.

ஒரு வழியாக இரண்டாம் வட்ட மேசை மாநாடு முடிந்தது. அனைத்து தலைவர்களும் தாயகம் திரும்பினர்.

இனி அரசியல் அமைப்பில் யார் யாருக்கு எத்தனை பிரதிநிதித்துவம் என்பதை பிரிட்டிஷ் மன்னர் தனது தீர்ப்பின் மூலம் தெரிவிப்பார் என அறிவிக்கப்பட்டது.

அந்த நிமிடங்களுக்காக இந்தியாவே காத்திருக்க துவங்கியது. இதனிடையே காந்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் இருந்தார்.

தேசமே ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாள் 1932 ஆகஸ்ட் 20 “கம்யூனல் அவார்ட்” எனப்படும் இந்தியாவின் இனவாரியான வகுப்புகளுக்கான பிரிட்டிஷ் மன்னரின் இறுதி தீர்ப்பு வெளியானது.

இந்த தீர்ப்பு அம்பேத்கரின் வாதத்திறமைக்கும் கடும் உழைப்பிற்கும் தான் சிறுவயது முதல் பட்ட அவமானங்களுக்கும் பரிசாக அவரின் கோரிக்கைப்படி

1.            தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாகாண சட்ட சபைகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

2.            மேலும் அவர்களுக்கு தங்களது பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்குரிமையும், பொதுத்தொகுதியில் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க இன்னொரு வாக்குரிமையுமாக இரட்டை வாக்குரிமைக்கு தீர்ப்பு அனுமதி அளித்திருந்தது.

இந்த தீர்ப்பு காந்திக்கு மேலும் பின்னடைவை செய்தது. தனது உத்திகளின் மூலம் இதுவரை உலகத்தில் எத்தனையோ வெற்றிகளை பெற்றிருந்த காந்திக்கு இது முதல் தோல்வி. அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி பிரதிநிதித்துவம் என்பது இந்துக்களைப் பிளவுபடுத்தும் செயல் என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். தனது கருத்தை காக்க உயிரையும் விடுவேன் என பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி அனுப்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தீர்ப்பை மாற்ற கோரி அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்தார்.

எண்ணற்ற உயிர் பலிகளைக் கோரும் போரை ஆதரிக்கும் பகவத் கீதையை கையில் வைத்துக் கொண்டு அஹிம்சையை போதித்த அவரது கருத்தியல் முரன்பாட்டையும், பிரம்மாவின் காலிலிருந்து பிறந்தவன் எனக்கூறி தாழ்த்தப்பட்டவர்களை நமது சகோதரர்களை தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைக்கும் வருணாசிரம தர்மத்தை முழுமனதுடன் அங்கீகரித்தபடியே தீண்டாமைக்கு எதிராக இயக்கம் நடத்திய அவரது கொள்கை முரன்பாட்டை பற்றி மக்கள் யோசிக்க தவறிவிட்டனர்.

காரணம் காந்தியின் மீதான பக்தி.

யார் யாரோ வந்து சமாதானம் செய்த போதிலும் தன் நிலையில் இருந்து பின்வாங்க அவர் தயாராக இல்லை. அன்றைய நிலையில் மிகவும் பரிதாபத்துக்குரியது அம்பேத்கரின் நிலைதான்.

ஆண்டாண்டு காலமாக கல்வி பொருளாதாரம் சமூக நிலை என எல்லா வகையிலும் மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் இருளில் தள்ளப்பட்ட ஒரு சமூகம் இனியும் முன்னேறவே வாய்ப்பு இல்லாத நிலையில் அச்சமூகத்தில் ஒரே ஒருவனுக்கு மட்டும் கல்வியறிவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவனோ எவரையும் விஞ்சும் தன்னிகரற்ற அறிவுடன் மேலெழுந்து வருகிறான்.

இன்னும் இருளில் கிடக்கும் கோடிக்கணக்கான தன் மக்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர துடிக்கிறான் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அதனை முற்றாக நிராகரிக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கிறார் காந்தி. தேசமே அவரது உயிருக்காக கண்ணீர்விட்டு கதறுகிறது.

இச்சூழலில் அம்பேத்கரின் கொள்கை காந்தியின் உண்ணாவிரத சூழ்ச்சியால் உளவியல் ரீதியான அரசியல் அணுகுமுறையால் கொஞ்சம் தளரத் துவங்கியது. இதனால் அம்பேத்கருக்கு துரோகி, கல்நெஞ்சன் என பல பட்டங்கள் கிடைத்தன.

இறுதியாக அன்றைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த பல தலைவர்களின் நெருக்கடியால் அம்பேத்கர் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தார். பிறகு ஏர்வாடா சிறைக்கு காந்தியை சந்திக்க அம்பேத்கர் சென்றிருந்தார் உடன் குழுவினருடன். தனது நிலையிலிருந்து சற்றும் பின்வாங்காத நிலையில் இருந்தார்.

சில நிமிட உரையாடலுக்குப் பின் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் காந்தி – சில நிபந்தனைகளுடன். அம்பேத்கருக்கோ தன் மக்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். ஆனால், காந்தியின் உடல் நிலை குறித்தும் சிந்திக்க வேண்டிய சூழ்நிலை. எனவே, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான பிரத்தியேகமான பிரதிநிதியைத் தேரிந்தெடுக்கும் இரண்டாவது வாக்குரிமையை அவர் கைவிட வேண்டி வந்தது.

மற்றபடி குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் அனைத்துச் சாதியினரும் சேர்ந்து வாக்களித்து தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடந்து பின்பு இறுதியாக செப்டம்பர் 24 ஆம் தேதி சனிக்கிழமை ஏகமனதாக முடிவுக்கு வந்தது. இதுவே வரலாற்றில் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தம்

தாழ்த்தப்பட்டவர்கள் சார்பாக அம்பேத்கரும் காந்தி மற்றும் இந்துக்களின் சார்பாக மதன்மோகன் மாளவியாவும் கையெழுத்து இட்டனர். சாட்சியாளர்களாக ராஜாஜி, தேவதாஸ் காந்தி, ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராகா, டாக்டர். ராஜேந்திர பிரசாத் ஆகியோரும் கையெழுத்திட்டனர். காந்தி மட்டும் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலம் அறியாமையிலிருந்து முழுவதும் விடுபட ஏதுவாக இருந்திருக்கும். ஆனால், இப்போது கிடைத்திருப்பது காலம்காலமாக பசியோடு காத்திருப்பவனின் முன் வீசப்பட்டு இருக்கும் ரொட்டித்துண்டு. இதனால் அதிகாரத்தில் சொற்ப பிரதிநிதித்துவம் கிடைக்குமே தவிர உண்மையான வெளிச்சத்தை ஒரு போதும் அடைய முடியாது என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

அதன் பிறகு இந்தியாவில் சாதிகள் எப்படி தோன்றின அவற்றின் வரலாறு என்ன என்பதை பற்றி தீவிர ஆராய்ச்சியின் மூலம் கட்டுரை எழுத தொடங்கினார். இக்காலத்தில் புத்தமதம் அவரை மெல்ல கவரத் தொடங்கியது. இதர மதங்கள் கடவுள் வழிபாட்டை முன்னிறுத்துகின்றன. ஆனால், புத்த மதம் ஒன்றுதான் கடவுள் வழிபாட்டை துறந்து அறத்தையும் மனிதனது நல்லெண்ணங்களையும் முன்னிறுத்துகிறது. அங்கே ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பதை முழுமையாக உணர்ந்தார்.

இதன் பின்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் மாகாணங்களில் தேர்தல் நடத்த ஆயத்தமானது. அப்போது சார்பற்ற தொழிலாளர் கட்சி எனும் பேரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி 15 உறுப்பிணர்களைக் கொண்ட ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக பம்பாய் சட்டசபையில் பொறுப்பேற்றார் அம்பேத்கர்.

1946 ஜூன் 20 ஆம் நாளன்று அவரது வாழ்க்கையின் முக்கியமான கனவொன்று பலித்தது. அன்றுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சித்தார்த்தா சட்டக் கல்லூரியைத் தோற்றுவித்தார். இன்றும் அக்கலூரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை பட்டதாரிகளாக உருவாக்குகிறது.

1947 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அணுகுமுறையில் பல மாறுதல்கள். இறுதியாக இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதென அது முடிவெடுத்தது. பிறகு இந்தியாவை கட்டியமைக்கும் சில முக்கியமான பொறுப்புகளை தீர்மானிக்க பாபு ராஜேந்திர பிரசாத்தை அழைத்தது.

அரசியல் நிர்ணய சபை எனும் ஓர் அமைப்பை அவரது தலைமையில் உருவாக்கும்படி கோரியது. அந்தக் குழுவில் ஒருவராக தவிர்க்கவே முடியாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார் டாக்டர். அம்பேத்கர். அப்படி அம்பேத்கரை தேர்ந்தெடுத்ததின் முலமாக இந்தியா கண்ட பேறு என்ன தெரியுமா?

இன்று பாரெங்கும் பட்டொளி வீசி பறக்கும் நம் தேசியக் கொடியின் நடுவில் காங்கிரஸின் சின்னமான ராட்டை வேண்டும் என காந்தியும் ஓம் வேண்டும் என சாவர்க்கரும் போட்டியிட அசோகரின் தர்மச் சக்கரம்தான் நாம் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் சரியான சின்னமாக இருக்கும் என்று உறுதியாக நின்று அதை அனைவரும் ஏற்கும் வகையில் தீர்மானத்துக்கும் கொண்டு வந்தவர் டாக்டர். அம்பேத்கர். அதற்கான வாதத்தின் போதுதான் அம்பேத்கரின் அளப்பரிய அறிவின் வீச்சையும் தேசப்பற்றையும் கண்டு காந்தியும், நேருவும் வியந்தனர்.

சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய வல்லமைக் கொண்ட ஒரே அறிஞர் இவர்தான் என்பதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட சுதந்திர இந்தியாவின் புதிய அமைச்சர்களின் பட்டியலில் இந்தியாவில் இருளையெல்லாம் விலக்கிய ஒரு மகத்தான அறிவு விளக்காக அம்பேத்கரின் பெயர் அந்தப் பட்டியலில் சட்ட அமைச்சராக எழுதப்பட்டு இருந்தது.

உலகிலேயே மிகவும் கடினமான பணி எது என்றால் அது ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை வரையறுப்பதுதான். பல்வேறு மதம், இனம், மொழி, சாதிகளுடைய இந்தியாவில் அனைவரது உரிமைகளையும் காப்பாற்றி தரும் வகையில் சட்டங்களை வடிவமைக்க வேண்டும். அப்படிப்பட்ட மகத்தான பணி அம்பேத்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அல்லாடி கிருஷ்ணசாமி, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, உட்பட ஏழுபேர் கொண்ட உறுப்பிணர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், பணியின் சிரமம் காரணமாக ஒவ்வொருவராக கழன்று கொள்ள இறுதியில் அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற காரியத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

தொடர்ந்து இரவு பகலாக உறக்கமே இல்லாமல் அவர் இந்த காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் அவரது நரம்பு மண்டலம் அழுத்தமான பாதிப்புக்கு உள்ளானது. அம்பேத்கரின் சட்டம் இயற்றும் மகத்தான பனி பல்வேறு இன்னல்களைக் கடந்து இறுதி வடிவத்தை எட்டியது.

1949 நவம்பர் 26 ஆம் நாள் 395 விதிகளையும் 8 அட்டவனைகளையும் கொண்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அம்பேத்கரால் முழுமையாக சட்ட அவையில் அர்ப்பணிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. இதனை முன் வைத்து 1950 ஜனவரி 26 இல் இந்தியா முழுமையான குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது.

இப்படியாக நம் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்த அந்த மகத்தான தலைவர் 1951 இல் இந்து சட்ட மசோதாவில் தனக்கு இருந்த சில மாறுபாடான கருத்துக்களை முன்வைத்து தன் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சாதியத்தை வேரோடு அழிக்கும் பனியிலும் இந்தியாவின் ஆன்மாவாக விளங்கும் அரசியல் பனியிலும் தன்னை முழுமையாக அர்ப்பனித்த அம்பேத்கர்.. 1956 இல் உடல்நலக் குறைவு காரணமாக இறுதி நாட்களில் இருந்தார்.

இன்றும் மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு தவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஏக்கம் மட்டுமே அவரது உயிர் வலியைவிட அதிகமாக அவரை துன்புறுத்திக் கொண்டிருந்தது.

காந்தி மட்டும் இரட்டை வாக்குரிமையை எதிர்க்காமல் இருந்திருந்தால், அந்த விடியலை தரிசித்து இருந்திருக்க முடியும். அதற்கு வழியற்று போய்விட்டதே எனும் வேதனைதான் இறுதிக் காலத்தில் பெரிதும் அலைக்கழித்தது. ஏற்கனவே, தான் அறிவித்திருந்தது போல இறக்கும்போது ஒருக்காலும் இந்துவாக இறக்கமாட்டேன் என்ற கொள்கையுடன் நாகபுரியில் பிரமாண்ட மாநாடு ஒன்றைக் கூட்டினார்.

10 லட்சம் பேர் கூடியிருந்த அந்த மாநாட்டில் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்வதற்கான அனைத்து வழக்கங்களையும் நிகழ்த்தினார். மாநாட்டுக்கு வந்திருந்த அத்தனை பேரும் புத்த மதத்துக்கு மாறினர்.

இது நிகழ்ந்து ஏறக்குறைய 50 நாட்கள் இருக்கும் டிசம்பர் 6 டெல்லியில் அலிப்பூர் சாலையில் இருந்த வீட்டில் இந்தியாவின் அந்த மகத்தான மேதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியுமான அம்பேத்கருக்கு இயற்கை முடிவுரை எழுதியது.

அன்று இரவே பம்பாய்க்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு மறுநாள் மாலையில் தொண்டர்களின் மத்தியில் இறுதிப் பயணத்தை மேற்கொண்டார் அம்பேத்கர்.

சாதாரண ஒரு படை வீரனின் மகனாக வரலாற்று வார்த்தைகளால் வஞ்சிக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்து இந்தியாவின் ஈடு இணையற்ற அறிஞராக தாய் நாட்டின் தலைவிதியை மாற்றி எழுதிய சரித்திர / சாதி வெறியின் தலை மேல் சம்மட்டி அடிகொடுத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புது வெளிச்சம் தந்த புரட்சி வீரனாக மறைந்த அம்பேத்கரின் வாழ்வில் எதிர்கொண்ட சோதனைகளின் சரித்திரம் இனி வேறு எவராலும் நினைத்து பார்க்க முடியாது.

சிறுவயதில் பள்ளியிலும் மழைக்கு வீட்டிலும் பட்ட அவமானங்களினால் அன்று மட்டும் முடங்கியிருந்திருந்தால் இன்றைய இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலையெழுத்து எப்படியாக இருக்கும் என ஒருமுறை சிந்தித்து பாருங்கள்.

அப்போது அவருக்கு முன் இருந்த ஒரே தூரத்து வெளிச்சம் கல்வி

1.            ஆம் கல்வியின்மையால் அறிவை இழந்தோம், அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம், வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம், சொத்து இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்!

2.            சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல. சம வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வது.

3.            அறிவற்றவர்களை அதிகாரத்துக்கு உள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடு அல்ல, மாறாக மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்.

4.            பறிபோன உரிமைகளை பிச்சையாக பெற முடியாது, தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோவில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல!

5.            மகாத்மாக்கள் வந்தார்கள் மறைந்தார்கள், ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். 

- தமிழ்க்குமரன், ஒருங்கிணைப்பாளர், மக்கள் பறை குழு (9952081071, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It