சாதி ஒழிப்புக்கு - கடவுள் மறுப்புக் கொள்கை மிகவும் அவசியமானது என்று தஞ்சை மாநாட்டில் ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் வலியுறுத்தினார். மே 19 அன்று - தஞ்சையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டு கரத்தரங்கில் புனித பாண்டியன் ஆற்றிய உரை:
பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு, அதுவும் சென்னையில் பேசியிருக்கின்றேன். தஞ்சையில் முதல் முறையாக அதுவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதியை ஒழிப்பதற்காக போராடிய தந்தை பெரியாரையும், அதற்காக களம் கண்ட போராளிகளையும், இங்கே வரவழைத்து அவர்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துகின்ற வகையிலே அவர்களுடைய தொண்டை அங்கீகரிக்கின்ற வகையிலே நடந்து கொண்டிருக்கின்ற இந்த மாநாட்டிலே பங்கேற்பதிலே மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சாதி ஒழிப்பிலே புத்தருடைய பங்கு, பெரியாருடைய பங்கு அம்பேத்கருடைய பங்கு, மகாத்மா புலேயுடைய பங்கு என்று பல்வேறு தலைப்புகளை சொல்லிக் கேட்டபோது அம்பேத்கர் என்ற தலைப்பை சென்னேன். பெரியார் என்ற தலைப்பில் பேச வேண்டும் என்று சொன்னபோது எனக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சி. அம்பேத்கரைப் பற்றி பேசுவதும், பெரியாரைப் பற்றி பேசுவதும் இரண்டும் ஒன்று தான்.
உடனே நான் ஏற்றுக் கொண்டேன். இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒரு அம்பேத்கரிஸ்டாக இருந்து பெரியாரைப் பார்ப்பது என்பது மிகவும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி தொடர்ந்து நான் ஒரு அம்பேத்கரிஸ்டாக இருந்து பெரியாரை அம்பேத்கரோடு ஒப்பிட்டு பல்வேறு செய்திகளை பதிவு செய்திருக்கின்றேன். அது மிகவும் முக்கியமானது இந்தக் கால கட்டத்திலே என்பதால்தான் அதை நாங்கள் எங்கள் பத்திரிகை வாயிலாகக் கூட தொடர்ந்து செய்து வருகின்றோம்.
அந்த வகையிலே எனக்கு கூடுதலான மகிழ்ச்சி என்னவென்றால் பெரியாரைப் பற்றி இங்கு தெரிந்தவர்களிடையே விரிவாக பேச வேண்டிய தேவையும் இல்லை. சுருக்கமாக என்னுடைய உரையை முடித்துக் கொள்ளலாம் என்பதும்கூட எனக்கு பெரியார் தலைப்பு கொடுத்தப் போது மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு சில கருத்துகளை மட்டும் குறிப்பாக, மூன்று கருத்துகளை மட்டும் பெரியாரைப் பற்றி பதிவு செய்யலாம் என நான் நினைக்கின்றேன். ஏன் என்று சொன்னால், தந்தை பெரியாரைப் பற்றி விமர்சனம், விமர்சனம் என்ற பெயராலே அவர் மீது அவதூறுகள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
தந்தை பெரியார் இருந்த காலத்திலேயே அவர் மீதான விமர்சனங்கள் எல்லாம் வந்தன. ஆனால் அதற்கும் தற்போது நடைபெறக் கூடிய அவதூறுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அப்பொழுது நடந்த விமர்சனம் எல்லாம், அல்லது அவதூறுகள் எல்லாம் எதிரிகளிடம் இருந்துவந்த அவதூறுகள் விமர்சனங்கள்.
ஆனால், இன்றைக்கு கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிற விமர்சனங்கள் எல்லாம் தந்தை பெரியாருடைய தொண்டின் பயனை அனுபவித்த தமிழர்களிலேயே அதுவும் தாழ்த்தப்பட்ட தமிழர்களாக இருக்கக் கூடிய, மக்கள் மத்தியிலேயே இருந்து கிளம்பக் கூடிய விமர்சனம். அதை அந்த மக்கள் எல்லோருமே ஏற்றுக் கொண்டார்கள் என்பது கிடையாது. ஆனால், மக்களை குழப்பக்கூடிய வகையிலே சில அறிவு சீவிகள் என்பவர்கள் அந்த விமர்சனத்தை தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள். அதிலே குறிப்பிடத் தகுந்தவர் 10, 15 ஆண்டுகளுக்கு முன்னாலே அந்த விமர்சனத்தை அல்லது அவதூறை தொடங்கி வைத்தவர்.
பெங்களூரிலே இருக்கக் கூடிய குணா என்றுச் சொல்லக் கூடிய தோழர். அதற்காக பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் அப்பொழுதே விடுதலையிலே விரிவான பதில் அளித்திருக்கின்றார்கள். எதற்காக இதைக் குறிப்பிடுகின்றேன் என்று சொன்னால், இன்றைக்கு அறிஞர் குணாவின் முகவரி யாருக்கும் தெரியாது.
15 ஆண்டுகளுக்கு முன்னாலே பல அவதூறுகளை அவர்கள் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு குணா எங்கிருக்கின்றார், என்ன செய்து கொண்டிருக்கின்றார். தொடர்ச்சியாக அந்த விமர்சனங்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறாரா என்றால் கிடையாது. அல்லது அவரது இயக்கம் சார்ந்தோ, அவர்களுடைய தோழர்கள் யாராவது அதை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றார்களா என்றால் அங்கொன்றும், இங்கொன்றுமாக செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அதற்கு எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தினாலே அது மக்கள் மத்தியிலே எடுபடவில்லை. அதற்குப் பிறகு தோழர் கேசவன் போன்றவர்கள். அந்த விமர்சனத்தை செய்தார்கள். அவர் இன்றைக்கு இல்லாவிட்டாலும்கூட அவரை அவருடைய விமர்சனத்தை அவதூறுகளை எல்லாம் தொடர்ந்து செய்வதற்கு இங்கு யாரும் கிடையாது.
இடதுசாரிகள், சி.பி.அய்., சி.பி.எம். போன்றவர்கள் எல்லாம் பெரியாரை ஒரு புரட்சியாளராக பார்க்க மறுத்தார்கள். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. இன்றைக்கு அவர்களே பெரியாரை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம். அவர்களே அம்பேத்கரை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்திருக்கின்றது.
அதேபோல மிக அண்மையிலே கடந்த அய்ந்தாண்டுகளுக்கு மேலே பெரியாரை யார் விமர்சிக்கின்றார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரேகூட தற்போது சட்டமன்ற உறுப்பினரானப் பிறகு பெரியாரை விமர்சனம் செய்வதைக் குறைத்துவிட்டார்.
அல்லது பெரியார் மீதான அவதூறுகளை நிறுத்திவிட்டார் என்றுகூடச் சொல்லலாம். காரணம் என்ன? பெரியாரை இனிமேல் விமர்சனம் செய்ய முடியாது. பொறுப்பான பதவிக்கு வந்துவிட்ட உடனே அந்த விமர்சனத்தை அவர் செய்தால் பாராட்டக் கூட செய்யலாம் நாம். அதிலே ஒரு நேர்மை இருக்கிறது என்று சொல்லி, பெரியாரை சிந்தனையாளரே இல்லை என்று சொன்னவரெல்லாம் இன்றைக்கு நான் அப்படி சொல்லவில்லை, அவரை நான் மறு ஆய்வுதான் செய்தேன் என்று அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள்.
கடைசியாக தோழர் தொல் திருமாவளவன் கூட இரவிக்குமாருக்கு தன்னுடைய பத்திரிகையிலேகூட பெரியாரை விமர்சிக்க அனுமதி கொடுத்தார். 10, 15 இதழ்களுக்கு மேலே இந்த கட்டுரைகள் எல்லாம் வந்தன. தொல் திருமாவளவனேக்கூட ‘அவுட் லுக்’ இதழிலே பேட்டி அளிக்கும்போது, பெரியார் எல்லாவற்றிலும் தோற்றுவிட்டார். மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்று எல்லாவற்றிலும் பெரியார் தோற்றுப் போய் விட்டார் என்றுதான் அவர்கள் ‘அவுட்லுக்’ இதழிலே பதிவு செய்தார்கள்.
ஆனால், இன்றைக்கு என்ன நடக்கின்றது. அவருடைய பத்திரிகையிலே பெரியாருடைய அட்டைப் படம் வந்தது. அதற்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குப் பிறகு, இன்றைக்கு அவர்களுடைய துண்டறிக்கைகளிலே பதாகைகளிலே பெரியார் படம் இல்லாமலே இல்லை என்ற சூழல் வந்திருக்கின்றது. எதற்காக இதைச் சொல்கின்றேன் என்று சொன்னால், பெரியாரை விமர்சிக்க தொடங்கியவர்கள் நம்முடைய காலகட்டத்திலேயே 10, 20 ஆண்டுகளிலேயே ஒன்று அவர்கள் காணாமல் போய் இருக்கின்றார்கள் அல்லது அவர்கள் தங்களுடைய அவதூறுகளை எல்லாம் நிறுத்திக் கொண்டு பெரியாரை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
காரணம், என்னவென்று சொன்னால் பெரியாரை இந்த சாதீய சமூகம் இருக்கின்றவரை தந்தை பெரியாரை இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே இந்த சாதியை ஒழிப்பதற்கு பெரியார் தேவைப்படுவாரே ஒழிய, மீண்டும் மீண்டும் நீங்கள் அவதூறுகளை, விமர்சனங்களை செய்தாலும் அவர் வளர்ந்து கொண்டு இருப்பாரே ஒழிய அவரை ஒரு போதும் நீங்கள் மறுதலித்துவிட முடியாது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகத் தான் இந்த 15 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகளை நான் சுட்டிக் காட்டினேன்.
அடுத்ததாக பெரியாருடைய அடிப்படைக் கொள்கை என்று சொன்னால் கடவுள் மறுப்பு வாசகங்கள். ஆனால் பொதுவாக ஒரு சமூக மாற்றத்துக்காக போராட வருகின்றவர்கள் அல்லது என்னைப் போன்று அம்பேத்கரிஸ்டுகளாக இருக்கக் கூடியவர்கள். எழுப்பக்கூடிய கேள்விகள் ஒரு சில மட்டும் உங்கள் முன்னால் பதிவு செய்ய நினைக்கின்றேன்.
கடவுள் மறுப்பு எப்படி சாதியை ஒழிக்கும் என்பதுதான் அவர்கள் கேட்கக் கூடிய முதல் கேள்வி. இளைஞர்களாக இருக்கட்டும், சமூக மாற்றத்திற்காக வருபவர்களாக இருக்கட்டும், இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கட்டும். அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களாக இருக்கட்டும், அவர்கள் கேட்கின்ற கேள்வி கடவுள் மறுப்பு சாதியை ஒழித்து விடுமா? என்பது தான்.
நிச்சயமாக கடவுள் மறுப்பு மட்டுமே சாதியை ஒழிக்கும். அந்த அளவுக்கு அது ஆற்றல் வாய்ந்தது. அதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எப்படி பார்த்திருக்கின்றார்கள். அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட சமூகம் எல்லாமே சாதி ஒழிப்பு போராளியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த அம்பேத்கர் என்ன செய்தார். அவர் தன்னுடைய இறுதி நாட்களிலே 56-லே ஒரு மிகப் பெரிய முடிவை மேற் கொண்டார். அது வென்னவென்று சொன்னால் சாதியை ஒரு போதும் நாம் இந்து மதத்திலே இருந்து கொண்டு ஒழிக்க முடியாது. சாதி என்பது ஒரு பவுதீக பொருள் அல்ல. அது ஒரு முள் வேலியோ, செங்கல் சுவரோ அல்ல. அதை நீங்கள் மோதி தகர்ப்பதற்கு அது ஒரு கருத்து நிலை. அது ஒரு கருத்தியல். அது ஒரு சிந்தனை. அது இந்த மக்களை ஆட்கொண்டிருக்கின்றது.
சாதீய சிந்தனை மக்களை எப்படி ஆட்கொண்டிருக்கிறது என்று சொன்னால் இந்து மதத்தின் மூலமாக சாதிய சிந்தனை இந்த மக்களுடைய மனதிலே ஆழமாக பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆகவே, இந்த சிந்தனையை நீங்கள் போக்க வேண்டும் என்று சொன்னால், நாம் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அப்படி முடிவு செய்தபோதுதான் 56-லே செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அவர்கள் பவுத்தத்தை ஏற்றுக் கொள்ள முன் வந்தார்.
பவுத்தத்தை ஒரு வாழ்வியல் நெறியாக, ஒரு மதமாக அல்ல, இன்றைக்கு உலகம் முழுவதும் புத்தர் கடவுளாகத்தான் போற்றப்படுகின்றார். ஆனால், புத்தரை மனிதராக்குவதற்குதான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கடைசி வரை போராடினார்கள். அவர் எழுத்துக்களிலே எங்குமே அவர் புத்தரை கடவுளாக போற்றப்படுவதை மறுத்திருக்கிறார். அது ஒரு பார்ப்பனியச் சூழ்ச்சி அது ஒரு திரிபுவாதம் என்பதை அவர் தொடர்ச்சியாக பதிவு செய்கிறார்.
மனிதனுக்கும் மனிதனுக்கும் பிறந்த மாமனிதர் தான் புத்தர் என்பதுதான் அம்பேத்கருடைய முடிந்த முடிவு. ஆகவே சாதியை ஒழிக்க வேண்டும். அதுதான் மிகச் சரியான வழி. அதற்காக பவுத்தத்தை, பவுத்த நெறியை தழுவ வேண்டும் என்று அம்பேத்கர் முடிவெடுத்தபோது அவர் அந்த மாநாட்டிலே 10 லட்சம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் சூழ்ந்திருந்த அந்த மாநாட்டிலே அவர் என்ன பேசுகின்றார் என்று சொன்னால், அவர் ஒரு 25 உறுதிமொழிகளை எடுத்துக் கொள்கின்றார். அவர் சொன்ன முதல் வாக்கியமே நான் சாதியை ஒழிக்கிறேன் என்று அவர் சொல்லவில்லை.
சாதியை ஒழிப்பதற்காகத்தான் அவர் பவுத்தத்தை தழுவுகின்றார். ஆனால் அவர் சொன்ன முதல் வாக்கியம், நான் பிரம்மன், விஷ்ணு, மகேசுவரன் ஆகியவர்களை கடவுளாக ஏற்க மாட்டேன். நான், இராமனையும், கிருஷ்ணனையும் கடவுளாக ஏற்க மாட்டேன். அவர்களை வழிபட மாட்டேன். நான் கவுரியையோ, கணபதியையோ மற்ற இந்துக் கடவுளையோ, பெண் கடவுள்களையோ ஏற்க மாட்டேன். இப்படி சொல்லக்கூடிய முதல் எட்டு உறுதிமொழிகள் அவ்வளவுமே கடவுள் மறுப்பு வாசகங்கள். (தொடரும்)