முன்பெல்லாம் கொள்கையில் நம்பிக்கை கொண்ட தலைவர்கள் விமர்சனங்களைத் தாண்டி மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும் கொண்டு இருந்தனர். அவர்கள் கொள்கைக்கு எதிரான வாழ்வியலை இழிவாகக் கருதினார்கள். கொள்கை மாறுபாடு கொண்டவர்கள் கூட தனிமனித விமர்சனத்தை வைக்க முடியாத வாழ்வியல் அந்த தலைவர்களிடம் இருந்தது.

மாநில சுயாட்சி,
இரு மொழிக் கொள்கை,
மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரை,
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்,
ஊழலுக்கு எதிரான கொள்கை முழக்கம்,
பொது சொத்துக்களை உருவாக்குவதற்கான செயல் திட்டம்,
சமயச் சார்பின்மை போன்ற தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க கொள்கைகளில் உறுதி மிக்கவர்களாக அன்றைய தலைவர்கள் திகழ்ந்தார்கள்.

அதனால் மாநில தன்னாட்சி கொள்கை தமிழ்நாட்டில் தீவிரமாக மக்களிடம் சென்றடைந்தது.

ஆனால் நிகழ்காலத்தில் கொள்கையும் வாழ்வியலும் வேறு வேறாகக் கொண்ட தலைவர்களைத்தான் காண முடிகிறது. அதனால் இவர்கள் மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கிறார்கள். இந்தத் தலைவர்களை நோக்கிய தனிமனித விமர்சனம் ஒவ்வொரு நாளும் எழுந்து கொண்டே இருக்கிறது.

இவர்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக முழங்குகிறார்கள். தன் வீட்டுப் பிள்ளைகளை மும்மொழி கற்பிக்கும் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.

மாநில சுயாட்சி இவர்கள் கட்சியின் கொள்கையாக இருக்கிறது. இவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஒன்றிய பாடத்திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.

இவர்கள் மீதான விமர்சனம் ஒட்டுமொத்த கொள்கைக்கும் குந்தகமாய் மாறி நிற்கிறது. இவர்கள் மீதான மக்களின் கோபம் நாட்டுக்கு வளம் சேர்த்த கொள்கைகள் மீது பாய்கிறது.

மாநில அதிகாரங்களை பறிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் ஓங்கத் தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தெளிவாக முடிவெடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

1) தமிழ்நாட்டில் முழுமையான தமிழ் வழி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2) மாநில பாடத்திட்டத்தில், தமிழ் வழியில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும்.

3) அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.

4) உயர்கல்வி வழங்கும் அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே என்று சட்டம் போட வேண்டும்.

5) தமிழ்நாட்டின் அரசு கோப்புகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.

6) தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் தமிழ் தான் இருக்க வேண்டும். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

7) ஆயுள் காப்பீட்டு கழகம், வங்கிகள், இந்திய அஞ்சல் துறை, தொடர்வண்டி துறை போன்ற ஒன்றிய அரசு அலுவலகங்களில் படிவங்கள், விளக்க குறிப்புகள், திட்டங்களின் பெயர்கள், தொடர் வண்டிகளின் பெயர்கள் அத்தனையும் தமிழில் இருப்பதை மாநில தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் உறுதிப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்.

8) தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் என தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களிலும் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9) தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் சலுகைகள் வழங்க வேண்டும் அல்லது அந்நிய மொழியில் பெயர் இருந்தால் சிறிய அளவில் வரி விதிக்க வேண்டும் (தற்பொழுது தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது)

10) இந்து அறநிலையத் துறை சட்டம் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே அறநிலையத் துறை அலுவலர்களாக நியமிக்க முடியும் என்கிறது.

அதுபோல தமிழ்நாட்டுப் பள்ளிகளில், மாநில கல்விக் கொள்கையில், மாநில பாடத் திட்டத்தில் நம்பிக்கை கொண்டு தங்கள் பிள்ளைகளை வழிநடத்துபவர்கள் தான் ஆசிரியர்களாக, அதிகாரிகளாக, அமைச்சர்களாக இருக்க வேண்டும்.

தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில், ஒன்றிய அரசு பாடத்திட்டத்தில் மும்மொழிக் கொள்கையில் படிக்க வைக்கும் ஒருவர் ஆசிரியராகவோ அமைச்சராகவோ இருக்க அனுமதிக்கக் கூடாது.

இந்தக் கோரிக்கைகளுக்கான குரல் வலிமையாக வேண்டும். தமிழ்நாட்டு நலன் வலிமையாக ஒலிக்க வேண்டும். ஈகம் செய்து மாநில நலனுக்காக உருவாக்கப்பட்ட கொள்கைகள் கொள்கையற்ற தலைவர்களால் கேலிக்கூத்தாக மாறி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

"படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா?" என்ற பழமொழிக்கு ஒப்பான ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கொள்கையற்ற இவர்களுக்காக ஈகம் செய்த தலைவர்களின் கொள்கைகளை குப்பையில் எறிய முடியாது.

இருமொழி கொள்கையின் நன்மைகளை இன்னும் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்