சேதி சொல்லும் இவர்கள் இறக்கை கட்டிய தூதுவர்கள். மக்கள், காவல் துறையினரின் துணையுடன் பாதுகாப்பாக வாழ உதவும் இந்த மகத்தான பறவைகள் பற்றிய கதை இது. ஒடிசா மாநிலம் முழுவதும் சுற்றி வந்து வெள்ளப்பெருக்கு, புயல்கள் போன்ற பேரிடர் சமயங்களில் மனிதன் எளிதில் சென்றடைய முடியாத தொலைதூரப் பகுதிகளுக்கு மிக முக்கிய செய்திகளை கொண்டு செல்கின்றன. ஆனால் இவற்றின் சிறகுகளை மடக்கி வைக்க அதிகாரிகள் இப்போது முயற்சி செய்கின்றனர்.
சமூக ஊடகங்களும் ஸ்மார்ட் போன்களும் தகவல்களை உடனுக்குடன் பரிமாற உதவும் இந்தக் காலத்தில் அஞ்சல் அட்டைகளும் தந்தியும் காலத்திற்கு பொருத்தமற்றவையாக மாறி விட்டன. ஆனால் இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் காவல் துறையினர் இவற்றையெல்லாம் விட பழமையான ஒரு நடைமுறையைத் தொடர பாடுபட்டு வருகின்றனர். செய்திகளை எடுத்துச் செல்லும் புறாக்கள் (carrier pigeons) தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் நிலையங்களுக்கு இடையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவுகின்றன. இடம்விட்டு இடம் நகரும் இவை காவலர்களுக்கு அவ்வப்போதைய செய்திகளை உடனுக்குடன் வழங்குகின்றன.1982 மற்றும் 1999ல் சூப்பர் புயல்கள் வீசி இந்த கடலோர மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது இந்த உயிரினங்கள் மட்டுமே நம்பகத்தன்மை உடைய தகவல் தொடர்பு முறையாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை இவை காப்பாற்றின என்று இந்தப் பறவைகளை கையாள்பவர்கள் கூறுகின்றனர். “1946ல் இந்த சேவைகள் தொடங்கப்பட்டபோது இப்பகுதியில் கம்பியில்லா தகவல் தொடர்புகளும் தொலைபேசி தொடர்புகளும் இல்லை. அப்போது இந்திய ராணுவத்தால் இந்த மாநிலத்திற்கு 200 பெல்ஜியம் கேரியர் அல்லது தூதுவர் புறாக்கள் (messenger pigeons) வழங்கப்பட்டன”.
இந்த சேவைகள் நடக்க காவல் துறையினருக்கு உதவி வரும் இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையை (Indian National Trust of Art and Cultural Heritage (Intach)) சேர்ந்த அனில் டிஹர் (Anil Dhir) கூறுகிறார். இவை ஹோமிங் புறாக்கள் (homing pigeons) என்றும் அழைக்கப்படுகின்றன.
நீண்ட தொலைவுக்குப் பயணித்து துல்லியமாக வீடு திரும்பும் திறன் உடைய இவை காடுகளில் வாழ்ந்த பாறை வாத்து என்ற இனத்தை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டவை. இந்த புறாக்களுக்கான தனிப் பாசறை ஒடிசாவில் செயல்படுகிறது. இன்று புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் முறை உலகில் ஒடிசாவில் மட்டுமே உள்ளது. இன்றைய நவநாகரிக காலத்திலும் பழமையான இந்த முறை தனித்துவம் மிகுந்த ஒன்றாக செயல்படுகிறது.
1948 ஏப்ரல் 13 அன்று இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒடிசா மாநில அதிகாரிகளுக்கு கட்டாக்கில் இருந்து தெற்கு சாம்பல்பூருக்கு இந்த சேவையைப் பயன்படுத்தி செய்தி அனுப்பினார். “கட்டாக்கில் ஏற்பாடு செய்யப்படும் அவர் பங்கு பெற இருந்த பொதுக்கூட்டத்தில் பேச்சாளரையும் பொதுமக்களையும் பிரிக்கும் வகையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படக்கூடாது” என்று சுருக்கமான செய்தியை அனுப்பினார். இந்தப் புறாக்கள் பதினைந்து முதல் இருபத்தைந்து நிமிடங்களில் 24 கிலோமீட்டர் தூரம் பறக்கக் கூடியவை. இவற்றின் ஆயுட்காலம் இருபது ஆண்டுகள்.
புத்திசாலி தூதுவர் புறாக்கள்
தற்போது காவல் துறையினரின் கவனிப்பில் சுமார் 155 புறாக்கள் உள்ளன. இவற்றிற்கான தங்குமிடங்கள் கட்டாக் மற்றும் மத்திய ஒடிசாவில் உள்ள ஆங்கல் (Angul) காவல் பயிற்சி நிலையத்தில் செயல்படுகின்றன. மூன்று அலுவலர்கள் இவற்றைப் பராமரிக்கின்றனர். ஒருவழிப் பாதை பயணம் (static), இருவழிப் பாதை பயணம் மற்றும் இடம்விட்டு இடம் நகரும் காவலர்கள் பயன்படுத்தும் புறாக்கள் (mobile) என்று மூன்று வகைப் பயிற்சிகள் இவற்றுக்கு வழங்கப்படுகின்றன.
காவலர்கள் காவல் துறை தலைமையகத்துடன் இப்பறவைகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். செய்திகள், வெங்காயக் காகிதம் (Onion paper) எனப்படும் ஒரு வகை காகிதத்தில் எழுதப்படுகிறது. ஒரு பிளாஸ்டிக் குழாய்க்குள் (capsule) செய்தி எழுதப்பட்ட காகிதம் வைக்கப்படுகிறது. புறாவின் காலில் கட்டப்பட்டு அது அனுப்பப்படுகிறது.
வெங்காயக் காகிதம் என்பது வெளுக்கப்பட்ட, நீரேற்றம் செய்யப்பட்ட, வேதிப்பொருள் கலக்கப்பட்ட கூழ் அல்லது பருத்தி இழைகளால் தயாரிக்கப்படுகிறது. இது வான் அஞ்சல் போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஸ்டார்ச் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. இதில் எழுதுவதும் அழிப்பதும் சுலபம்.
புறாக்களைப் பயன்படுத்தி செய்தி அனுப்பும் முறை கி மு 3000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் 16ம் நூற்றாண்டில் மொகலாயர் காலத்தில் இது தொடங்கியது. போர்க்காலங்களில் இவை பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பா, இந்தியா, மியான்மார் ஆகிய நாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது புறாக்கள் ராணுவ அமைப்புகளுக்கு இடையில் இரகசிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.
“இந்த வகை புறாக்கள் புத்திசாலித்தனம் மிகுந்தவை. காவலர்களின் குரலை வைத்து இவை ஆளை அடையாளம் கண்டுகொள்கின்றன. இதனால் இவற்றைக் கையாள்வதும் மேலாண்மை செய்வதும் சுலபம்” என்று இவற்றைப் பராமரிக்கும் காவலர்கள் கூறுகின்றனர். “பெல்ஜியன் புறாக்கள் அனுப்பப்பட்ட இடத்திற்கே திரும்பும் உணர்வைப் பெற்றவை. இதனால் இவை பல நூற்றாண்டுகளாக செய்திகளை எடுத்துச் செல்லும் தூதர்களாகப் பயன்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் சூரியனின் திசை மற்றும் புவி காந்தப்புலத்தை அடிப்படையாகக் கொண்டு இவற்றின் உள்ளுணர்வு தூண்டல் அமைகிறது. இவை, இப்போது அழிந்துவிட்ட ஆனால் முன்பு போர் சமயத்தில் அமெரிக்காவில் செய்திகளைப் பெருமளவில் எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட பயணியர் புறாக்களைப் (Passenger pigeons) போல அறிவாற்றல் உடையவை” என்று அகமதாபாத்தில் 120 பறவையினங்களின் இறகுகளைக் கொண்ட அருங்காட்சியகத்தைத் தோற்றுவித்து நடத்தி வரும் பறவையியலாளர் யஷா முன்ஷி (Esha Munshi) கூறுகிறார்.
குறைவான நேரத்தில் பெல்ஜியன் புறாக்கள் அதிக தூரம் பறக்கக் கூடியவை. இவற்றைப் பராமரிக்கவும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் மாநில அரசு ஆண்டிற்கு 4900 பவுண்டு செலவிடுகிறது. புறாக் குஞ்சுகள் ஐந்து அல்லது ஆறு வார வயதாக இருக்கும்போது இவற்றின் பயிற்சிக் காலம் தொடங்குகிறது. பயணம் தொடங்கும்போது நிலவும் வானிலையைப் பொறுத்து இவை ஐநூறு கிலோமீட்டர் தூரம் வரை மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் பறக்கின்றன.
ஆரம்பத்தில் குறைந்த தூரத்திற்கு அதாவது மூன்று முதல் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை பறக்க பயிற்சி கொடுக்கப்படுகிறது. இடங்களை அடையாளம் கண்டு கொள்ளவும் பலதரப்பட்ட சேவைகளை வழங்கவும் இவை பயிற்றுவிக்கப்படுகின்றன. ஒரு முறை பயிற்சி பெற்ற புறாக்கள் துல்லியமாக அதை நினைவில் வைத்துக் கொள்கின்றன. இப்பறவைகள் வழித் தடத்தை பல பத்தாண்டுகளுக்குப் பிறகும் மறப்பதில்லை. ஆனால் இன்று இந்த புறா சேவைகள் காலத்திற்குப் பொருந்தாதவை, அதிக செலவு பிடிக்கக்கூடியது என்று உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.
அதனால் இந்த சேவைகள் இன்று ஆபத்தான நிலையில் உள்ளது. புறாக்கள் இப்போதெல்லாம் சுதந்திரதின அணிவகுப்புகளின் போது மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. “பல அரசு அதிகாரிகள் இந்த சேவைகளை வீண் செலவு என்று நினைக்கின்றனர். இந்த சேவையை நிறுத்துவது பற்றி இப்போது அதிகமான பேச்சு அடிபடுகிறது” என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு காவலர் கூறுகிறார். “ஆனால் எப்போதெல்லாம் சேவை நிறுத்தம் பற்றிய பேச்சு எழுகிறதோ அப்போதெல்லாம் பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
"இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சமீபத்தில் 60 புறாக்களைக் கொண்ட ஒரு பறத்தல் அணிவகுப்பு புவனேஸ்வரில் இருந்து கட்டாக் வரை நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பார்வையிட்டனர். சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் இது உற்சாகம் தருவதாக இருந்தது. எங்களால் முடிந்தவரை இந்த சேவைகளை தொடர்ந்து நடத்தவே நாங்கள் பாடுபடுகிறோம். இவை வெறும் சேவைகள் மட்டும் இல்லை. மக்கள் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது” என்று அனில் டிஹர் கூறுகிறார்.
இயற்கை படைத்துள்ள ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்விற்கும் ஒரு மகத்தான பொருள் உள்ளது. இந்தப் பறவைகளின் சேவைகள் தொடருமா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்