இங்கிலாந்தில் தேவாலயங்கள் வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் இடங்களாக மாறியுள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. வௌவால் காலனிகளால் ஏற்படும் சேதங்களை சரி செய்ய இங்கிலாந்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற தேவாலயங்களுக்கு ஐந்து மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நுழைவாயில்

வடக்கு நார்ஃபெ (Norfolk) பகுதியில் உள்ள தோர்னம் (Thornham) உட்பட பெரும்பாலான தேவாலயங்களில் திருப்பலி நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் சாயும் வசதியுடைய நீண்ட பெஞ்சுகளை இப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பிபிஸ்ட்ரல் (pipistrelle) வகை வௌவால்கள் தங்கள் வீடாக்கிக் கொண்டுள்ளன. தேவாலயங்களில் சுவர்கள் சேரும் பகுதியில் இருக்கும் மூலை முடுக்குகள், சிறிய விரிசல்கள் இந்த சிறகுள்ள பாலூட்டிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளன.

பிபிஸ்ட்ரெலஸ் பிபிஸ்ட்ரெலஸ் (Pipistrellus pipistrellus) என்ற அறிவியல் பெயருடைய இவற்றின் உடல் பெருவிரல் அளவே உள்ளது. நாள்தோறும் வெதுவெதுப்பான மாலையில் இருள் படரும்போது இவை உத்திரங்களில் இருந்து வெளிவருகின்றன. “இந்த உயிரினங்கள் தேவாலயங்களை விரும்புகின்றன” என்று ஒரு தேவாலயத்தின் வார்டன் ஜானெட் நீடம் (Janet Needham) கூறுகிறார்.bat 601“தேவாலயம் வௌவால்களுக்கு பாதுகாப்பான இடமாக உள்ளது. அங்கு இவை முக்கிய உணவான பூச்சிகளை உணவாகப் பெறுகின்றன. எதிரிகளின் பயமின்றி இங்கு வாழ்கின்றன. மழையால் பாதிப்பு இல்லை. தேவாலயங்கள் இருள் நிறைந்தது. இதனால் இவை இங்கு விருப்பத்துடன் வாழ்கின்றன” என்று கிழக்கு ஆங்கிலியா (East Anglia) பகுதிக்கான தேவாலயங்களில் வாழும் வௌவால்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அலுவலர் டயானா ஸ்பென்சர் (Diana Spencer) கூறுகிறார்.

பாலிதீன் உறைகள்

தோர்னம் (Thornham) உட்பட இங்கிலாந்தில் உள்ள எல்லா செயிண்ட் தேவாலயங்களில் நீண்ட பெஞ்சுகளில் விழும் வௌவால்களின் கழிவுகள் பாலிதீன் உறைகளைப் பயன்படுத்தி சேகரித்து அகற்றப்படுகிறது. பழம் பெருமை மிக்க சில தேவாலயங்களில் இவற்றின் கழிவு மற்றும் சிறுநீரால் ஏற்பட்ட குழப்பம் தேவாலயங்களை மூடும் அச்சுறுத்தலை உருவாக்கியது.

கழிவுகள் பெருகின. தேவாலயங்களில் இருந்த இங்கிலாந்து நாட்டின் மறு உருவாக்கம் பற்றிய எட்டாவது ரோமன் காலத்தைச் சேர்ந்த பழமை மிகுந்த ஆவணங்கள் சேதமாகத் தொடங்கின. இந்நிலையில் தேவாலயங்களில் வௌவால்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் (Bats in the Churches scheme) தோற்றுவிக்கப்பட்ட ஐந்து மில்லியன் பவுண்ட் நிதியுதவியிலிருந்து நிதி வழங்கப்பட்டது.

இத்திட்டம் 2019ல் தொடங்கப்பட்டது. நார்ஃபெல்க் பேனின்ஹம் (Banningham) பகுதியில் செயிண்ட் பாடல்ஃப்ஸ் (St Botolph) உள்ளிட்ட தேவாலயங்களில் வௌவால்களால் ஏற்பட்ட குழப்பம் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட மனித விலங்கு மோதலால் உண்டான சேதத்தை சரிசெய்ய இத்திட்டம் உதவியது. “மக்கள் தேவாலயங்களில் வாழும் இந்த சிறிய உயிரினங்களை வெறுக்கவில்லை. அவற்றால் உருவாகும் குழப்பத்தையே விரும்பவில்லை” என்று ஸ்பென்சர் கூறுகிறார். கோடைகாலம் உச்சத்தில் இருக்கும்போதே இவை இனப்பெருக்கம் செய்கின்றன. அப்போது தேவாலயத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சேவைகளை நடத்துவது கடினமாக இருந்தது.

ஆனால் இப்போது வௌவால் பெட்டிகள், உயரத்தில் வெதுவெதுப்பாக சூடு தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உட்புறக் கூரைகள் போன்றவற்றால் இந்த இறகுள்ள பாலூட்டிகள் தேவாலயத்தின் முதன்மைப் பகுதிக்கு வருவது குறைக்கப்பட்டுள்ளது. வௌவால் பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் சுத்தப்படுத்தப்பட்டன.

வௌவால் பாதுகாப்பு அறக்கட்டளை, இங்கிலாந்தின் தேவாலயங்கள் அமைப்பு (The Church of England), இயற்கை இங்கிலாந்து (Natural England), வரலாற்று இங்கிலாது (Historic England) மற்றும் தேவாலய பாதுகாப்பு அறக்கட்டளை (The Churches Conservation Trust) ஆகிய ஐந்து அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் இரண்டு தேவாலயங்கள் மூடாமல் பாதுகாக்கப்பட்டன.

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பழமையான மேற்கூரைகள் இது வரை இத்திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன. தேவாலயங்களில் மகத்தான அரியவகை நீண்ட சாம்பல் நிற காதுகளைக் கொண்ட வௌவால் இனம் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றது. ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படும் இவை இப்போது சம்மர்செட் (Somerset) தேவாலயத்தில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விதானங்கள் மற்றும் பாதுகாப்பு உறைகள் சேதப்படாமல் இருக்க வெற்றிட சுத்திகரிப்பு கருவிகள், தூரிகைகள் போன்றவை இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 743 தேவாலயங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் இங்கிலாந்தில் இருக்கும் 18 இன வௌவால்களில் 12 இனங்கள் இந்த இடங்களில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணிக்கை குறைந்ததால் இவை சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றன. இதனால் இப்போது தேவாலயங்கள் தேசிய அளவில் வௌவால்களின் எண்ணிக்கை, வாழிடம் பற்றிய முக்கிய விவரங்களை தரும் இடங்களாக மாறியுள்ளன.

இதன் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் இந்த உயிரினங்களைப் பற்றி மிக அதிக அளவில் அறிய முடிந்தது என்று ஸ்பென்சர் கூறுகிறார். மத்திய நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தேவாலயங்கள் அதிகம் உள்ள நார்ஃபெல்க்யில் குறிப்பாக தோர்னம் என்ற இடத்தில் சூழலியலாளர், வௌவால் தன்னார்வலர் மற்றும் தேவாலயங்களில் வௌவால்களின் நடவடிக்கைகளை ஆராயும் ஃபில் பார்க்கர் (Phil Parker) வௌவால்களின் எண்ணிக்கையை அறிய வௌவால் பெட்டிகளில் கேமராக்களைப் பொருத்தி ஆராய்ந்தார்.

பல நாட்கள் இவர் தேவாலயங்களில் இரவு முழுவதும் தங்கி ஆய்வுகளை நடத்துவதுண்டு. இங்கு உள்ள தேவாலயங்களில் சப்ரானோ பிபிஸ்ட்ரெல் (soprano pipistrel), long-eareds, பொது பிபிஸ்ட்ரெல் (common pipistrelles) மற்றும் செரட்டின்கள் (serotines) என்னும் நான்கு வகை வௌவால்கள் காணப்படுகின்றன. வளர்ச்சியடைந்தவை மேற்கூரைக்கு அருகில் உயரமாகப் பறக்கும்போது இளம் வௌவால்கள் பெஞ்சுகளின் மீது தாழ்வாகப் பறக்கும்.

புரிந்து கொண்டால் இந்த அற்புத உயிரினங்கள் நம் அருகில் வந்து அமர்ந்து நம்மைப் பார்க்கும். அருகாமையில் இவற்றைப் பார்ப்பதே இயற்கை நமக்கு அளிக்கும் மிகப் பெரிய மரியாதை. ஒரு காலத்தில் பாழடைந்த இடங்களில் மட்டுமே வாழ்ந்து வந்த இவை இன்று வாழிட அழிவு, வெப்ப உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் மனித நடமாட்டம் அதிகமுடைய ஆலயங்கள் போன்ற இடங்களில் குடியேறி வாழத் தொடங்கி விட்டன.

சூழல் சமநிலையில் முக்கியப்பங்கு வகிக்கும் இவற்றை பாதுகாக்க இங்கிலாந்து தேவாலயங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள் உயிரினப் பாதுகாப்பில் உலகிற்கு ஒரு முன் மாதிரி.

மேற்கோள்https://www.theguardian.com/environment/2023/oct/09/how-englands-churches-are-making-an-uneasy-peace-with-the-bats-in-their-belfries-aoe?

Pin It