சத்தியமங்கலம் என்ற பேரைக் கேட்டதும் எல்லோரது மனதிலும் சட்டென்று தோன்றி மறையும் பெயர் சந்தனக் கடத்தல் வீரப்பன்! ஆனால், வீரப்பனைத் தாண்டி சத்தியமங்கலம் என்பது தமிழகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பசுமை நுரையீரல் என்பது பலருக்கும் தெரியாது. இந்த பசுமை நுரையீரல் என்ற அடைமொழிக்குக் காரணம், 1450 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட தொடர்ச்சியான காட்டுப் பகுதி தமிழகத்தில் இங்குதான் இருக்கிறது. நெடிதுயர்ந்த நீலகிரி மலைக்கும், அடக்கமான அதேநேரம் அழகான கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையிலான சமவெளிப் பகுதி இது. இப்பகுதிக்கு உயிரூட்டுவது இவ்விரு மலைத் தொடர்களின் இடையில் கரைபுரண்டு ஓடும் மாயாறும் நீலகிரியின் தென்பகுதியிலிருந்து வரும் பவானியும்.
இவையிரண்டும் சங்கமிக்கும் இடம்தான் பவானிசாகர். இந்தப் பகுதி உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் ஒரு பகுதி (Nilgiri Biospere Reserve). பல்லுயிரியம் செழித்துள்ள பகுதி. திருக்குறளில் கூறப்படுவது போல, "மண்ணும் மணிநீரும் அணி நிழற் காடும் உடையது அரண்" என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இடம். மாயாறின் மணி நீரும், நீலகிரிகிழக்கு தொடர்ச்சி மலையின் அணி நிழற் காடுகளும், பவானி மாயாற்றின் வண்டல் மண்ணும் செழித்திருக்கும் இடம். அதனால்தான் பூவுலகின் பெருவுயிர்களான யானைகளின் முக்கியமான வாழிடமாக விளங்குகிறது. எல்லா பருவ காலத்திலும் குறைந்தது 1,000 யானைகளாவது இருக்கக் கூடிய பரந்த காட்டுப் பகுதி. சர்வதேச பாதுகாப்பு வலைப்பணியம் (ஐ.யு.சி.என்) பரிந்துரைத்த பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களில் குறைந்தது 6 வகை உயிரினங்களை தன்னகத்தே கொண்டது இந்த காட்டுப் பகுதி. அவை 1. யானை, 2. புலி, 3. கழுகு, 4. நீர் நாய், 5. வெளிமான் 6. நான்கு கொம்பு மான். எனவே, இக்காட்டுப் பகுதியின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து எடை போட முடியாது. இவை மட்டுமின்றி காட்டெருமை, கடமான், முதலைகள் வாழும் கானகம். பறவைகளை பற்றி சொல்லவே வேண்டாம். கவலையின்றி பறந்து திரியும் அற்புதமான இடம் இது. இன்று வெகு அரிதாகி வரும் கழுகு வகைகளான வெண்முதுகுக் கழுகு, நீண்ட அலகு கழுகு, கோடாங்கி கழுகு, செந்தலை கழுகு போன்றவை உயிர்த்திருப்பதற்கு ஏற்றதாகத் திகழும் இடம் இது. ஒரு நல்ல பறவை நோக்கர் எந்த நேரத்திலும் குறைந்தது 120 வகை பறவைகளை இந்த காடுகளில் காண முடியும்.
இந்தியாவிலேயே, பல வகைக் காடுகளின் அணிவகுப்பாகவும் இப்பகுதி இருக்கிறது. அதாவது, பண்ணாரி மற்றும் அதையட்டிய பகுதிகள் முட்புதர், வறண்ட காடுகளைக் கொண்டுள்ளது (Tropical Dry Thorn Forest). சற்றே உயரமான மலைப்பகுதி இலையுதிர்க் காடுகளைக் கொண்டது (Deciduous Forest). அதற்கும் மேலே, சுமார் 3000 அடி உயரத்தில் பசுமையான இலையுதிர்க் காடுகளைக் கொண்டுள்ளது (Moist Deciduous Forest). நதிக்கரையோரம் அடர்ந்த மரங்களைக் கொண்ட அடுக்குக் காடுகளை உடையது (Gallery or Riverine Forest). வெகு உயரத்தில் மிஞ்சிக்குழி போன்ற சில பகுதிகளில் சோலைக் காடுகளும், புல்வெளிகளும் இருக்கின்றன (Shola Grass Land).
இதன்காரணமாக யானைகளின் வழித்தடமாக (Elephant Corridors) இது இருக்கிறது. இதை அடுத்துள்ள முதுமலை, பந்திப்பூர் சரணாலயங்களில் உணவுக்குரிய தாவர வகைகள் குறையும் பொழுது யானைகள் சத்தியமங்கலம் காடுகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன. வற்றாத பவானியும், மாயாறும் அவற்றிற்கு எப்பொழுதும் தண்ணீர் தரத் தயாராக சலசலத்து ஓடிக் கொண்டுள்ளன. அதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடங்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், அவை அழியும் பொழுது, யானைகள் கிராமங்களையும், நகரங்களையும் நோக்கி வரத் தொடங்குகின்றன. விளைவாக மனிதகாட்டுயிர் மோதல்கள் அதிகரிக்கின்றன; காட்டுயிர்களை மனிதர்கள் எதிரிகளாக கருதும் நிலையும் உருவாகிறது. இந்த வழித்தடங்களையும், காட்டையும் காப்பாற்றுவதன் மூலம் அத்தகைய மோசமான சூழ்நிலை உருவாவதை தடுக்கலாம்.
இருந்தபோதும் இந்த காட்டுப் பகுதியில் நாகரிகத்தின் விளைவாக சில சிற்றூர்கள் இருப்பதும், அவற்றின் தேவைகளுக்காக காட்டை சேதப்படுத்துவதும் தற்போது அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாது, பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் அளவு குறையும்போது ஏற்படும் வெற்றிடங்களில் பயிரிடுவதும், அதை அடுத்துள்ள காடுகளில் பயிரிடுவதும், வேட்டையாடுவதும், மணல் கொள்ளையும் அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் நிரந்தர குடியிருப்புகளும் உருவாகி இருக்கின்றன. உதாரணமாக, படுகர்களுக்காக ஆங்கிலேயர்களால் குத்தகைக்கு விடப்பட்ட தெங்குமரஹடா போன்ற சிறிய குடியிருப்பு, இன்று ஒரு நகரமாகும் ஆபத்து உள்ளது. தற்போது இங்கு படுகர்கள் அல்லாதவர்களே அதிகமாக வாழ்கின்றனர். ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் இருந்து வேலை செய்யச் சென்று குடியேறியவர்களே இன்று அங்கு அதிகம் இருக்கின்றனர். பயிர் செய்வதற்காக படுகர்களுக்கு குத்தகை பணத்தை கொடுத்து விட்டு, இவர்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர். இதைப் போன்ற ஒரு குத்தகை நிலத்தை காட்டின் நடுவில் இருக்க விடுவது எந்த வகையில் சரியானது? இப்பகுதிக்குச் செல்வதற்காக, நல்ல தார் சாலைகளும், மின் வசதிகளும் மற்ற நகர வசதிகளும் வேண்டி போராட்டங்கள் தொடங்கி விட்டன. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தக் குடியிருப்பு யானை வழித்தடத்தின் நடுவில் நின்று கொண்டிருக்கிறது. கிராமங்களில் நடப்பதைப் போல இங்கு கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக மனிதவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்பது பெரிய கேள்விக்குறி!. மனிதன் முக்கியமா? அல்லது காடுகளும், காட்டுயிர்களும் முக்கியமா என்று பல காலமாகத் தொடரும் விவாதம் இங்கு நேரடியாக அரங்கேறி வருகிறது.
ஆனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள பத்துக்கும் குறைவான பழங்குடிகளின் குடியிருப்பு இது போன்ற எந்தப் பிரச்சினையையும் உருவாக்கவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் தொன்றுதொட்டு காட்டுயிர்களோடு ஒட்டி உறவாடி வாழ்வதுதான்.ஆனால், விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் கல்வி, சுகாதாரம், மின் வசதி போன்ற எதுவும் இன்றி அவர்கள் வாழவைத்துக் கொண்டிருப்பது மற்றொரு வகையில் நமது மனப்பான்மை எப்படி இருக்கிறது என்பது பற்றியும், அரசின் அலட்சியம் குறித்தும் கோடிட்டுக் காட்டுகிறது. இயற்கையையும் சிதைக்காமல், அதேநேரம் மனிதர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வது எப்படி என்பது சற்று குழப்பமான விஷயமாகவே இருக்கிறது. இயற்கை பாதுகாவலர்களுக்கும் (Conservationist) மனித உரிமை பாதுகாவலர்களுக்கும் (Human Rights Activist) இடையே என்றென்றும் நிலவும் ஒரு தீராத பிரச்சினை இது. இதை எப்படித் தீர்த்து இயற்கையையும், மனிதர்களையும் காப்பாற்றப் போகிறோம் என்பது நம் முன்னே உள்ள மிகப்பெரிய கேள்வி!.
மனித உரிமைகளைப் பற்றி பேசும்போது உடனே எழக்கூடிய கேள்வி,காடு முக்கியமா? அல்லது மக்களின் வாழ்வு முக்கியமா என்பது தான். ஆனால் வெகு சுலபமாக எல்லோரும் மறந்துவிடுகிற ஒரு விஷயம் காடு இல்லையெனில் மனித வாழ்க்கை எப்படி நடக்கும் என்பதுதான். நல்ல தண்ணீர், காற்று, இயற்கையாக உருவாகும் வண்டல்மண் இவையில்லாமல், மனித வாழ்க்கை எப்படி நல்ல விதமாக இருக்கும்?. இதற்கு ஒரு நல்ல உதாரணம் திருப்பூர். தொழில் நலம் கருதி திருப்பூரில் விசைத்தறிகள் அதிகரித்த காரணத்தால் உருவாந கழிவு, நல்லதொரு ஆறாக ஓடிக் கொண்டிருந்த நொய்யலை முழுவதும் பாழாக்கி விட்டது. அது மட்டுமில்லாமல் அடுத்து 50 கி.மீ. தூரம் வரை உள்ள விளைநிலங்களை பாழாக்கி விட்டது. திருப்பூர் சம்பாதித்துக் கொடுத்த அந்நியச் செலாவணிக்கு எத்தனை விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை இழந்தனர் என்பது பற்றி யாராவது யோசிக்கிறோமா? இன்று ஒரத்துப்பாளையம் அணையை திறந்துவிட யாருக்கும் தைரியமில்லை. அத்தனை விஷக்கழிவுகள் அங்கே தேங்கியுள்ளன. எத்தனையோ கோடிகள் பணம் சேர்த்த திருப்பூர் தொழிலதிபர்கள், அதில் ஒரு பகுதியை செலவு செய்து சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவ ஏன் தயங்குகிறார்கள்? இதனால் மற்றவர்களுடைய தொழிலும், வாழிடமும் பாதிக்கப்படாது இல்லையா? விவசாயத்தையும், இயற்கையையும் அழிக்கும் அளவுக்கு தொழில் வளர்ச்சி வளர விடுவது சரியா?.
காடுகளை அழித்து நகரங்களை உருவாக்குவதன் விளைவுகளும் இதைப் போன்ற அமையும். காடுகள் மனித குலத்திற்காக இயற்கையிலேயே உண்டான நுரையீரல். அது மாசுபட்டால் பாதிக்கப்பட போவது மனிதர்களேயன்றி, வேறு யாரும் இல்லை. திரு.வி.க. சொன்னது போல் இயற்கைக்கு இணக்கமான, இயைந்த வாழ்வைப் பற்றி நாம் யோசிக்க வேண்டுமே அன்றி அதை அழிக்கும் எண்ணத்தை கொள்ளலாகாது. காட்டில் வாழும் உயிரினங்கள் அந்த காட்டின் நலத்தை சுட்டிக்காட்டும் ஒரு கருவி.அதன் அழிவு காட்டின் அழிவை முன்னெச்சரிக்கையாக உணர்த்துகிறது. அதனால் தான் யானை, புலி போன்ற உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறோம். அவை ஆரோக்கியமாக வாழும்போது, அந்த வாழிடம் நல்ல நிலையில் உள்ளதா என்பதையும் நாம் அறிய முடியும்.
எனவே, சத்தியமங்கலம் காடுகளை போல இயற்கையிலேயே உருவான ஒரு கருவூலத்தை தொலைத்து விடும் முயற்சியில் நாம் ஈடுபடக்கூடாது. அதை பேணிப் பாதுகாக்க முற்பட வேண்டுமே அன்றி, அழிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மனிதர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும்தான், ஆனால் இயற்கையை காவு கொடுத்து அல்ல. இதை மனதில் கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இயற்கையை பாதுகாக்க மேற்கொள்ளும் ஒரு நல்ல தொண்டு.
- சு.சந்திரசேகரன் இயற்கை ஆர்வலர், சத்தியமங்கலம்