உயிரினங்கள் சில குறிப்பிட்ட செடிகள் அல்லது அவற்றின் சாற்றைப் பிழிந்து பயன்படுத்துகின்றன. இது அவை தங்கள் ஆரோக்கியத்தை திரும்பப் பெறவே. அவை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி நமக்குத் தெரிவதில்லை. சில சமயங்களில் நாய்கள் புல் தின்பது வளர்ப்பவர்களுக்கு தெரியும். உட்கொண்ட உணவு பிடிக்காததால் அதை வாந்தி எடுத்து வெளியேற்றவே அவை இவ்வாறு செய்கின்றன.
கதி கெட்டு புலி புல் தின்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. கேரளாவில் இது ஒரு பழமொழி. ஒருவேளை அவை சுய டாக்டராக மாறி சிகிச்சை செய்து கொள்ளலாம். வண்ணத்துப் பூச்சிகள், அவற்றின் புழுக்கள், முதல் மனிதக் குரங்குகள் வரை இவ்வாறு சுயமாக சிகிச்சை செய்து கொள்ள பல்வேறு வழிகளை ஆராய்ந்து பின்பற்றுகின்றன.
பெரும்பாலான விலங்குகள் பச்சை இலைகளையும் தண்டுகளையும் மருந்திற்காகப் பயன்படுத்துகின்றன. 2024ல் ஒரு ஒரங்கோட்டான் தன் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக ஒரு செடியின் பச்சிலை சாற்றைப் பிழிந்து தடவியது விலங்குலகின் பிரபல செய்தியாகப் பேசப்பட்டது. இந்தோனேஷியாவில் மக்கள் பயன்படுத்தும் இந்த பொருள் காயங்களைக் குணப்படுத்த, வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
கொசுக் கடியில் இருந்து தப்ப பூனைகள் மிண்ட் குடும்பத்தைச் சேர்ந்த காட்னிப் (catnip) செடியின் இலைகள் மேல் விழுந்து புரள்வதுண்டு. சிம்பன்சிகள் பச்சிலைகளை பல சமயங்களிலும் செடியில் இருந்து பறித்து அப்படியே உண்பதாக அவை பற்றி ஏராளமான உற்றுநோக்கல்களையும் பல்வேறு ஆய்வுகளையும் செய்த ஜெயின் குடோல் (jane goodall) கூறியுள்ளார்.
இந்த இலைகள் அவற்றின் கழிவுகளில் அப்படியே வெளித்தள்ளப்படுகின்றன. வயிற்றுப் பூச்சிகளை குறைக்கவே அவை இவ்வாறு செய்கின்றன என்று கண்டறியப்பட்டது. பூச்சிகளால் சகிக்க முடியாத சில வேதிப்பொருட்கள் இந்த இலைகளில் உள்ளன. இலையோடு இவற்றையும் வெளியேற்றுவது சுலபம். இதில் சில இலைகள் கரடுமுரடானவை. நுண்ணிய பூச்சிகள் அதில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த இலைகள் சிறிய அளவில் குடலைத் தூண்டி விடுகிறது. அதனால் இவ்வாறு நிகழ்கிறது.
பூச்சிகளும் வெளியில் தள்ளப்படுகின்றன. அட்லாண்டா எமரி (Emari) பல்கலைக்கழக ஆய்வாளர் ஜாப் டெ ரூட் (Jaap de Roode) இது பற்றி பல ஆய்வுகளை நடத்தியுள்ளார். டன்ஜானியாவில் சிம்பன்சிகள் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த ஒரு குறிப்பிட்ட செடியின் தண்டை சாறு பிழிந்து குடிப்பதை ஜெயின் குடோல் முதல்முதலில் கண்டறிந்தார். இது மக்களால் இதே வயிற்றுக் கோளாறுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.
மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளும் பிஞ்ச் பறவைகளும்
மனிதக் குரங்குகள் மட்டும் இல்லாமல் பூச்சிகள், மற்ற பிராணிகள் இது போன்ற சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் அரசன் என்று அழைக்கப்படும் மோனார்க் வண்ணத்துப் பூச்சிகள் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள புத்திசாலித்தனத்துடன் ஒரு குறிப்பிட்ட வகை எருக்கு செடியைப் பயன்படுத்துகின்றன. இதன் இலைகளில் நச்சுத்தன்மை உள்ளது.
இந்த வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுவதும் அவற்றின் புழுக்கள் வளர்வதும் இந்த இலைகளில்தான். இதனால் மற்ற இரை பிடி உயிரினங்கள் இந்தப் புழுக்களை ஆக்ரமிப்பதில்லை. இதே பிரிவைச் சேர்ந்த வேறு எருக்கு செடி இலைகளில் இவை முட்டையிடுவதில்லை என்பது வியப்புக்குரியது.
கரடிப் புழுக்கள் (woolly bear caterpillar) ஆல்கலாய்டு போன்ற சில குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் அடங்கிய இலைகளை உண்டு கொசுக்களில் இருந்து தப்புகின்றன.
மர எறும்புகள் (wood ants) அல்லது தச்சர் எறும்புகள் (carpenter ants) சில குறிப்பிட்ட செடிகளில் உள்ள டானின் (tannin) என்ற சாயப் பொருளில் அடங்கியுள்ள பிசின் போன்ற பொருளை பூசி தங்கள் புற்றுகளை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கின்றன. செடிகள், பழங்கள், விதைகள், கொட்டைகள், காய்களில் காணப்படும் டானினில் இது அதிக அளவில் உள்ளது.
ஆடுகளில் வயிற்றுப்பூச்சித் தொல்லை அதிகமாகும்போது அவற்றுக்கு பொதுவாக விருப்பமில்லை என்றாலும் சில இலைகளை அவை உண்கின்றன.
நகர்ப்புற விரிவாக்கத்தால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமூட்டும் உண்மை தெரியவந்தது. மெக்சிகோ நகரில் பிஞ்ச் (Pinch) பறவைகளின் கூடுகளில் வெளுத்த, மிருதுவான பொருட்கள் அதிக அளவில் காணப்பட்டன. இது ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால் ஒரு மழை பெய்த பின் உண்மை வெளிப்பட்டது. சிகரெட்டுகளை உடைத்து தூவப்பட்டபோது கிடைத்த புகையிலைப் பொருட்களே அவை.
வாசனையில் இருந்து அது சிகரெட்டிற்குள் இருக்கும் புகையிலை என்பது உறுதியானது. தீங்கு செய்யும் உயிரினங்களை விரட்டவே பறவைகள் இவ்வாறு செய்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. தீங்குயிரிகளை கூடுகளுக்குள் அதிக அளவில் விட்டபோது பறவைகள் கூடுதல் சிகரெட்களை உடைத்து அதிக அளவில் புகையிலையை பரப்பிவிட்டன. பல பறவைகள் இது போல புகையிலைச் செடிகளைப் பயன்படுத்தி கூடுகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கின்றன.
உயிரினங்களுக்கு நோய்கள், தொற்றுகள், எதிரிகளின் தாக்குதல் போன்றவை பற்றி எப்படித் தெரியும்? புழு பூச்சிகள் பிராணிகள் எல்லாம் மனிதனை விட நுண்ணறிவில் தாழ்ந்த நிலையில் இருப்பதாக நாம் நினைக்கிறோம். சில குறிப்பிட்ட செடிகள், இலைகளை இந்த உயிரினங்கள் நலமுடன் வாழ பயன்படுத்துகின்றன என்று மனிதர்களாகிய நமக்குத் தெரிவதில்லை. அவை சிகிச்சை செய்து கொள்ளும் முறைகள் பற்றியும் தெரியாது.
நான்கு வகை வாசனைகளை வேறுபடுத்தி கரடிப் புழுக்களால் நுகர்ந்து அறியமுடியும். இதற்காக உள்ள உணர்வு நீட்சிகள் அவற்றுக்கு உதவுகின்றன. இதில் ஒன்றே இலைகளில் உள்ள ஆல்கலாய்டுகளை அறிய உதவுகிறது. நறுமணம் பற்றிய விவரங்கள் சமிஞ்ஞைகளின் மூலம் புழுக்களின் மூளைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மூளை கட்டளையிடுவதால் அவற்றிற்கு விருப்பமில்லாத இலைகளையும் அவை உண்கின்றன.
பல உயிரினங்களும் செடிகளின் வாசனையை நுகர்தலின் மூலம் அறிகின்றன, கற்கின்றன, பரிசோதனை செய்கின்றன. செடிகளுக்கும் நோய்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைத் தெரிந்து கொள்கின்றன. சிம்பன்சிகள் போன்ற பல விலங்குகள் இத்தகைய அறிவைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. அவை ஒரு குறிப்பிட்ட சிறப்பு முறையில் இலைகளை விழுங்குகின்றன. அவை இலைகளை ஒரு தனி ரீதியில் மடித்து எடுத்து உண்கின்றன. இதை அவை வயது முதிர்ந்தவர்களிடம் இருந்து பார்த்துத் தெரிந்து கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புழு பூச்சிகள் முதல் புலிகள் யானைகள் வரை இயற்கை படைத்த அணைத்து உயிரினங்களும் சிந்தித்து செயல்படும் திறனில் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்ந்தவை இல்லை என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.
மூலம்: https://www.mathrubhumi.com/technology/science/animal-self-medication-1.10504937
- சிதம்பரம் இரவிச்சந்திரன்