குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு விலங்கு யானை. அதிலும் இரண்டு தந்தங்களுடன் கம்பீரமாக நடந்து வரும் ஆண் யானையை யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் இந்த யானை இனம் மிக வேகமாக அழிந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

தந்தங்களுக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுவது தான் இந்த ஆண் யானைகளின் அழிவிற்கு முக்கியக் காரணம். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆண்-பெண் யானைகளில் விகிதாச்சாரம் அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளது.

2 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்பது சரியான விகிதம். ஆனால் முதுமலையில் 30 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை எனவும், கேரளா பெரியார் காடுகளில் 115 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்ற விகிதத்திலும் இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில் ஆண் யானை வாழ்ந்த விலங்குகளின் பட்டியலில் சேர்ந்து விடும்.

யானைகளின் வழித்தடங்களில் தோட்டங்கள் அமைப்பது, யானைகளின் வாழ்விடங்களை தொடர்ந்து ஆக்ரமிப்பது போன்றவற்றால் ஊருக்குள் நுழையும் யானைகள் ரயிலில் அடிபடுவது, மின்சார வேலிகளில் சிக்குவது போன்றவற்றால் உயிரை விடுகின்றன. யானைகளின் வாழ்விடங்களை நாம் ஆக்ரமிக்காமல் இருப்பது, தந்தங்களுக்காக கொல்லாமல் இருப்பது போன்றவை தான் நாம் அவற்றுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்க முடியும்.

Pin It