ஜெய்பீம் இப்போது பேசப்படுகிற ஒரு திரைப்படமாக மாறி யிருக்கிறது. ஜோதிகா சூர்யா தயாரிப்பில் வெளிவந்து இருக்கிற ஒரு படம். ஏற்கனவே ஜாதிய வன்கொடுமைகளை ஜாதிய ஒடுக்குமுறைகளை பேசுகிற பல திரைப் படங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் இவைகள் ஜாதிய ஒடுக்குமுறைகளை பேசின என்று சொன்னால், இருளர் என்ற பழங்குடி மக்கள் மீதான ஜாதிய ஒடுக்குமுறையை பேசுகிற படமாக ஜெய் பீம் வந்திருக்கிறது.
1995ஆம் ஆண்டு இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மீது காவல்துறை பொய்யான திருட்டு குற்றம் ஒன்றை சுமத்தி, காவல் நிலையத்தில் அவரைச் சித்திரவதை செய்து அடித்துக் கொன்றதை சித்தரிக்கின்ற ஒரு படம். உண்மையான நடந்த நிகழ்வு இப்போது ஒரு திரைப்படமாக மாற்றப்பட்டிருக்கிறது. இருளர் சமூகத்திற்கான ஒரே அடையாளம் ஜாதி என்ற ஒன்று மட்டும் தான். அவர்களுக்கு அரசு அங்கீகாரம் தரக்கூடிய எந்த அடையாளங்களும் கிடையாது. ரேஷன் அட்டைகள் கிடையாது, பட்டாக்கள் கிடையாது, ஆனால் சமூகம் அவர்கள் மீது சுமத்திய ஜாதி என்ற ஒரு அடையாளத்தை மட்டும் உண்டு. அதை அவர்கள் சுமந்து கொண்டு எப்படி சமூகத்தால் ஒரு 'திருட்டு ஜாதி' என்ற முத்திரையோடு புறக்கணிக்கப் பட்டார்கள்; காவல்துறையால் எந்தெந்த திருட்டுக் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படவில்லையோ, அந்தத் திருட்டுக் குற்றத்திற்கு பலி கடாக்களாக மாற்றப்பட்டு இருந்தார்கள் என்பதை படம் சித்தரித்துக் காட்டுகிறது.
இந்த படத்தில் இந்த எளிய மக்களுக்காக வாதாட அந்த வழக்கறிஞர் சந்துரு. அவர் இந்த வழக்கில் எப்படி அனைத்து அரசு எந்திரங்களையும் எதிர்த்துப் போராடினார் என்பதை படம் அற்புதமாக சித்தரிக்கிறது. நீதிமன்றத்திற்கும் காவல் துறைக்கும் உள்ள அதிகாரம் என்பது மக்களுக்கான அதிகாரமாக மாற்றப்பட்டால் சமூகத்தில் எவ்வளவு பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற கருத்தையும் இந்த படத்தின் வழியாக நாம் உணர முடிகிறது. சிறையிலேயே நீண்டகாலமாக பிணை மறுக்கப்பட்ட 7,000 பேருக்கு ஒரே உத்தரவின் மூலம் பிணையில் விடுதலை வாங்கித் தந்த வழக்கு. அந்த உத்தரவுக்குக் காரணமாக இருந்தவர் அன்றைக்கு வழக்கறிஞர் சந்துரு அவர்கள். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் பேராசிரியர் கல்யாணி அவர்கள் இருளர் பழங்குடியின மக்களுக்காக அவர்களுடைய மேம்பாட்டிற்கான இயக்கங்களை தொடங்கி நடத்தினார் என்பதையும் படம் சித்தரிக்கிறது.
படம் முழுவதும் பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் இவர்கள் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள். சூர்யா இந்த இருளர் சமூகத்தின்மீது நடத்துகின்ற அடக்குமுறையை திரைப்படம் ஆக்கியதோடு அந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சர் வழியாக வழங்கியிருக்கிறார் என்பதும் உண்மையிலேயே பாராட்ட கூடிய ஒரு செய்தியாகும். . இத்தகைய படங்களை நாம் வரவேற்போம் போற்றுவோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் படத்தைப் பார்த்து வரவேற்றதோடு மட்டு மல்லாமல், அடுத்த மூன்று நாட்களில் இருளர் சமூகத்தின் கிராமத்தை நோக்கிப் போய் அவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். இது 'ஜெய் பீம்' படத்தின் வெற்றி விழா என்றே கூறலாம். அதற்கு முதலமைச்சர் தேர்வு செய்த நாள்; 'தீபாவளி' நாள். நரகாசூரன் என்ற திராவிட பழங்குடித் தலைவரை பார்ப்பன தேவர்கள் சூழ்ச்சியாக ஒழித்த நாள் தீபாவளி என்று புராணம் கூறுகிறது. அதே நாளை பழங்குடி மக்களின் வாழ்வுரிமை நாளாக மாற்றிக்காட்டியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர்.
- விடுதலை இராசேந்திரன்