இந்தியாவைச் சேர்ந்த Common Banded Awl என்ற வண்ணத்துப் பூச்சியினத்திற்கு அபுதாபியில் பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கிரன் கண்ணன் ஐக்கிய அரபு எமரேட்டில் அபுதாபியில் இதைக் கண்டுபிடித்த கதை இது.

நம்மைச் சுற்றி உயிர்ப் பன்மயத்தன்மையின் பரந்து விரிந்த ஒரு இரகசிய உலகம் இருக்கிறது. நாம் வாழும் இடத்தில் உள்ள பறவை, விலங்குகளில் இவற்றில் சிறிய ஒரு சதவிகிதத்தை மட்டுமே நாம் காண்கிறோம். உற்றுநோக்கும்போது மட்டுமே இவற்றின் விரிவான காட்சிகளை நம்மால் காணமுடியும்.

ஒவ்வொரு இலையின் அடியில், இரவு நேரங்களில், பாலைவனங்களில் மனித நடமாட்டம் இல்லாத கற்களுக்கு இடையில் குட்டிப் புல்வெளிப் பரப்புகளில் எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் எத்தனையோ உயிரினங்கள் வாழ்கின்றன. நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை தெரிந்து கொள்வதே நாம் வாழும் இந்த உலகை அறிய உதவும் முதல்படி. நமக்குள்ளிருக்கும் உயிர்த்துடிப்பு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அணுவிலும் ஒரு கண்டுபிடிப்பாளர் வாழ்கிறார்.common banded awlஅபூர்வ வண்ணத்துப்பூச்சியினம்

உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் இந்த வகை வண்ணத்துப்பூச்சி ஐக்கிய அரபு எமரேட்டில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. இரண்டு இறக்கைகளை விரித்து வைத்தால் இதன் நீளம் நான்கு முதல் ஐந்து செண்டிமீட்டர் வரை மட்டுமே. இது தவிட்டு நிறமுடையது.

பெரிய கண்களுடன் இருக்கும் இவற்றின் இறகுகளில் வெள்ளை நிற வரிகள் காணப்படுகின்றன. இவை மாலை மற்றும் இரவில் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றன. பகலில் சுரக்கும் பட்டு இழைகளைக் கொண்டு இலைகளை ஒட்ட வைத்து மடக்கி அதில் ஒளிந்து கொள்கின்றன. ஆபத்து வந்தால் எதிரியிடம் இருந்து மரக்கிளையில் இருந்து கீழே விழுந்து தப்பிக்க இவை இதே பட்டு இழைகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றை முதல்நோக்கில் பார்த்தால் இரவுப்பூச்சிகள் (moth) போலத் தோன்றும்.

வண்ணமயமான நிறங்கள் இவற்றிற்கு இல்லாததால் பெரும்பாலான வன உயிரியல் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த வண்ணத்துப்பூச்சியின் மீது ஆர்வம் இல்லை. கிரன் சமீபத்தில் வழக்கம்போல அபுதாபி மனமகிழ் பூங்காவில் கண்ணுக்குப் புலப்படாத சிறிய உயிரினங்களைத் தேடி நடந்து கொண்டிருந்தார்.

அந்த பூங்காவில் பல வேப்ப மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் பூக்கும் காலம் அது. எங்கும் வேப்பம்பூக்களின் நறுமணம். திடீரென்று இரவுப்பூச்சி போல ஏதோ ஒன்று பூக்களில் இருந்து பூக்களுக்கு தாவித் தாவி பறப்பதை கிரன் கண்டார். நேரத்தை வீணாக்காமல் உடனே மொபைலில் அதை படமெடுத்தார்.

அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் நன்கு அறிந்த கிரன் அதற்கு முன் அப்பகுதியில் இது போல ஒன்றைப் பார்த்ததில்லை. இந்த வகை வண்ணத்துப்பூச்சியை காண்பது அதுவே முதல்முறை. இது பற்றிய அறிவும் இதில் நிபுணத்துவம் பெற்ற வளைகுடாப்பகுதியில் சில இன வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டுபிடித்த அனுபவம் பெற்ற நண்பர் பினிஷ் ரூபஸின் (Binish Roobbas) உதவி கிடைத்தது. அது காமன் பேண்டெட் அவுல் என்று உறுதி செய்யப்பட்டது.

உயிர்ப் பன்மயத்தன்மை பற்றிய விவரங்கள் அடங்கிய இநேச்சரலிஸ்ட் (inaturalist) என்ற தகவல் தளத்தில் கிரன் இது குறித்த விவரங்களைத் தேடினார். வளைகுடாவில் இதற்கு முன்பு வேறொரு இடத்திலும் இவை காணப்பட்டதற்கான பதிவுகள் இல்லை என்று தெரிய வந்தது.

வாழிடப் பரப்பின் விரிவாக்கம்

இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் இவை எவ்வாறு வளைகுடாவிற்கு வந்தன? ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் உயிரினங்கள் மற்ற பகுதிகளுக்கும் தங்கள் வாழிடப் பரப்பை விரிவுபடுத்துகின்றன. இது வாழிட விரிவாக்கம் எனப்படுகிறது. ஒரு உயிரினம் அதன் இயல்பான புவி வாழிடத்தில் இருந்து வேறு ஒரு வாழிடத்திற்கு தங்கள் வாழ்வின் சுற்றுப்புறத்தை விரிவுபடுத்துவதையே இது குறிக்கிறது.

பல சமயங்களிலும் உயிரி ஆக்ரமிப்பு என்ற ரீதியில் பல உயிரினங்கள் படர்ந்து வளர்ந்து நிறைந்து தனது இயல்பான வாழிடத்தில் காலம்காலமாக வாழும் உள்ளூரைச் சேர்ந்த உயிரினங்களை அழிக்க முயல்வதுண்டு. உலகச் சுற்றுச்சூழல் வரலாற்றில் இதற்கு வெங்காயத் தாமரை, ஆப்பிரிக்க ராட்சச நத்தை, பழுப்பு மரப்பாம்புகள் போன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஆனால் இது போன்ற எல்லா உயிரினங்களும் ஆக்ரமிப்பு உயிரினங்களாக இருப்பது இல்லை. குடியேறிய வாழிடச் சூழலை சொந்தச் சூழல் போல கருதி அதைப் பாதுகாக்கும் உயிரினங்களும் உள்ளன. இது எந்த விதத்திலும் சூழலிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத உயிரினமாக உள்ளது.

அபுதாபி சூழல் முகமையில் (Environment Agency EPA) பூச்சியியல் நிபுணர் டாக்டர் அனிதாவின் பரிந்துரை இந்த வண்ணத்துப்பூச்சிக்கு அபுதாபியில் பாஸ்போர்ட் கிடைக்க உதவியது. இதனைத் தொடர்ந்து கிரனுக்கு ஐக்கிய அரபு எமரேட்டில் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் முன்பு காணப்படவில்லை என்ற அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்துதல் கிடைத்தது.

ஆனால் இது பதிவு செய்யப்பட வேண்டுமென்றால் அபுதாபியில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன, அங்குள்ள சூழலுடன் பொருத்தப்பட்டு வாழ்கின்றன என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இவற்றின் வாழிடத்தை அடையாளம் காண்பது கடினம். இவற்றிற்கு வாழ்வு தரும் விருந்தோம்பி தாவரத்தை (host plant) கண்டுபிடிப்பதே இதில் முதல் படி. கிரனுக்கு இதற்கான தீர்வு நண்பர்களிடம் இருந்து கிடைத்தது.

எண்ணெய் மரத்தின் இலைகள்

எண்ணெய் மரம் என்று அழைக்கப்படும் மிலேட்டியா பீனாட்டா (millettia pinnata) என்ற செடியின் இலைகளே லார்வாக்களின் முக்கிய உணவு. இது பொங்கம் மரம் (pongam) என்றும் அறியப்படுகிறது. இத்தாவரம் ஐக்கிய அரபு எமரேட்டில் குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் வளர்க்க இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இது துபாய் தாவரவியல் சவுக் (plant souq) தோட்டத்திலும் உள்ளது. பூங்காவில் வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட இடத்துடன் சேர்ந்து இந்த செடியின் நான்கு மரங்கள் இருப்பது தெரிந்தது. ஆனால் இலைகள் தலைக்கு மேல் உயரத்தில் இருந்தன. இதனால் இதை கிரனால் நுணுக்கமாக ஆராய முடியவில்லை.

இடத்தை அடையாளப்படுத்திய கிரன் மறுநாள் முயற்சியைத் தொடர்ந்தார். திடீரென்று எங்கிருந்தோ இரை பிடிக்க வந்த குளவி ஒன்று (wasp) மடங்கியிருந்த இலையைச் சுற்றிலும் எதையோ தேடியது. சாதாரணமாக வண்ணத்துப் பூச்சிகளின் லார்வாக்களைப் பிடிக்க அல்லது அவற்றின் உடலில் துளை போட்டு முட்டையிடவே இரை பிடிக்கும் உயிரினங்கள் இவ்வாறு திரிவதுண்டு.

யுரேகா நிமிடம்

இலையில் ஒரு புழுவின் நிழலை கிரன் பார்த்தார். இலை உயரத்தில் இருந்ததால் அதைப் பறிக்க அவரால் முடியவில்லை. உயரமான ஒருவர் அந்தச் செடியின் கிளையை உடைத்துக் கொடுத்தார். வீட்டிற்குச் சென்று பரிசோதித்தபோதுதான் வண்ணத்துப்பூச்சியின் லார்வாதான் அது என்பது உறுதியாயிற்று. உண்மையில் அது கிரனின் வாழ்வில் ஒரு யுரேக்கா நிமிடம்.

இதன் மூலம் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் ஐக்கிய அரபு எமரேட்டில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன என்பதை கிரன் நிரூபித்தார். இதன் லார்வாக்களைக் கண்டுபிடிப்பது கடினமான செயல். பகல் நேரத்தில் இலைகளை மடக்கி ஒளிந்து கொண்டிருக்கும் லார்வாக்கள் இரவில் மட்டுமே உணவு உண்ண வெளியில் வருகின்றன. இரண்டு இலைகளைச் சேர்த்து ஒட்டி வைத்திருக்கும் இவை ஒளிந்திருக்கும் இடம் சாதாரணமாக கண்ணில் படுவதில்லை.

ஆபத்து என்று உணர்ந்தால் கீழே இருக்கும் புல்வெளிப் பரப்பில் விழுந்து தப்பித்துக் கொள்ளும். ஒரு புதிய உயிரினம் தன் வாழிட எல்லையை அரேபிய வளைகுடாப் பகுதிக்கு விரிவுபடுத்தியிருக்கிறது என்பதை இது எடுத்துக் காட்டியது. வண்ணத்துப்பூச்சியை கிரன் அபுதாபி சுற்றுச்சூழல் முகமையில் டாக்டர் அனிதாவுக்கு அனுப்பி வைத்தார். முகமையில் இருந்து இதன் ஸ்பெசிமன் மரபணு பரிசோதனைகளுக்காக வெளிநாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆய்வு முடிவுகள் கிரனின் கண்டுபிடிப்பை உறுதி செய்தது. முகமையின் ஸ்பெசிமன் சேகரிப்பில் இது அங்கீகாரம் பெற்ற வரலாற்றுப் பதிவாக மாறியது. ஹஸாரா க்ரோமஸ் (Hasara chromus) என்ற அறிவியல் பெயருடைய இந்த உயிரினத்தின் இனப்பெருக்கத்தை அரேபிய மண்ணில் முதல்முறையாக பதிவு செய்த பெருமை கிரனுக்குக் கிடைத்தது.

இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று முகமையின் தரைவாழ் உயிரினங்கள் மதிப்பீடு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் மேலாளர் டாக்டர் சலீம் ஜேவ்ட் (Dr Salim Javed) கூறுகிறார். இதுவரை எமரேட்டில் உள்நாட்டிற்கு சொந்தமான மற்றும் குடிபெயர்ந்த ஐம்பது வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.

கிரன் போன்றவர்கள் சாதாரணமானவர்களிடம் இருந்து எதையும் வித்தியாசமாகப் பார்க்கும் இயல்புடையவர்கள். பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றி முறைப்படி ஆராய முயல்கின்றனர். அது பற்றித் தெரிந்தவர்களைத் தொடர்பு கொள்கின்றனர். தீவிரமாக ஆராய்ந்து ஆதாரங்களுடன் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

ஒவ்வொரு நாட்டின் உயிர்ப் பன்மயத் தன்மையின் செழுமைக்கு வளம் சேர்க்கின்றனர் என்று பினிஷ் ரூபஸுடன் இணைந்து ஐக்கிய அரபு எமரேட் வண்ணத்துப்பூச்சிகள் என்ற நூலை எழுதிய இணை முன்னணி ஆசிரியர் ஃப்யூல்னர் (Feulner) கூறுகிறார்.

காலநிலை மாற்றம், அதைத் தொடர்ந்து நிகழும் மாற்றங்கள் இந்த உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது. ஆனால் இவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், குறைவு பற்றி துல்லியமான ஒரு நிகழ்நிரல் தரவுவிவரம் இல்லை. இந்த வகை உயிரினங்களை காலநிலை மாற்றத்தின் அடையாளமாகக் காண வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு இன வண்ணத்துப்பூச்சியின் லார்வாவும் ஒவ்வொரு குறிப்பிட்ட செடியின் இலைகளை மட்டுமே உணவாக உண்கின்றன.

உயிர்ப் பன்மயத்தன்மை அழிந்தால் அது இந்த உயிரினங்களின் அழிவிற்கு காரணமாகும். மிதமிஞ்சிய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, காலம் தப்பிப் பெய்யும் மழை, கடுமையான கோடை, ஆக்ரமிப்பு உயிரினங்கள் போன்றவை இவற்றைப் பாதிக்கின்றன.

தனிமனித முயற்சிகள் இருந்தால் மற்றவர் கண்களுக்குப் புலப்படாத இயற்கையின் பல அதிசயங்கள் நம் கண்களுக்குத் தெரியும். கிரன் போன்றோரின் தேடல்களுக்கு வசதிகள் நிறைந்த ஆய்வுக்கூடங்கள் பரிசோதனைக் கருவிகள் தேவையில்லை. ஆராயும் மனப்பான்மை, ஆர்வம் இருந்தால் நாம் ஒவ்வொருவருமே இயற்கையை ஆராய்ந்து அதில் ஒளிந்துள்ள அற்புதங்களைக் கண்டறிய முடியும். இதன் மூலம் அழியும் இயற்கையை மட்டும் இல்லாமல் சூழல் பேரிடர்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

** ** **

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/features/common-banded-awl-have-been-recorded-in-abu-dhabi-for-the-first-time-1.8820391

&

https://www.thenationalnews.com/uae/2023/05/19/butterfly-native-to-india-wings-its-way-to-the-uae-for-the-first-time/

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It