சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய நான்கு நிறுவனங்களும் உலகை கட்டுப்படுத்துவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த நான்கிலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியது, மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடியது சூழலியலும், சுற்றுச்சூழலும். ஆராய்ச்சி, கல்வித் துறையிலும் சுற்றுச்சூழல் அரசியல், சுற்றுச்சூழல் பொருளாதாரம் போன்ற சிந்தனைகள் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளன. பாரம்பரியமாகவே இயற்கை சார்ந்த நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டது தமிழ்ச் சமூகம். ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழ்கிறோம். உலகமயச் சூழலில் சுற்றுச்சூழல்-சூழலியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துவிட்டன. தேசிய அளவிலான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் முக்கிய ஆக்கப்பூர்வமான, எதிர்மறையான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

உணவுப் பாதுகாப்பு

பாதுகாப்புச் சோதனைகள் முழுமையாக மேற்கொள்ளப்படாத நிலையில் மரபணு மாற்றப்பட்ட (ஜெனிடிகலி மாடிஃபைட்) பி.டி. கத்தரிக்காயை வணிக ரீதியில் பயிரிட அனுமதிக்க முடியாது என்று மரபணுப் பொறியியல் அங்கீகாரக் குழுவில் உச்ச நீதிமன்றம் நியமித்த மூலக்கூறு உயிரியலாளர் புஷ்பா எம். பார்கவா கூறியுள்ளார். மிகப் பெரிய அளவில் திறந்தவெளி பரிசோதனை நடத்துவது தொடர்பாக மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவுக்கு இது தொடர்பாக வந்த கருத்துரு பற்றி, ஜனவரி 14ந் தேதி நடந்த கூட்டத்தில் இது பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவிக்கிறார்.

பசுமைப் புரட்சி மூலம் நமது உணவு இறையாண்மையைக் கட்டுப்படுத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்கள், 40 ஆண்டுகளுக்குப் பின் அது செல்லுபடியாகாது என்று தெரிந்த பின், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்ற புது தந்திரத்துடன் இந்தியாவில் நுழைய முயற்சிக்கின்றன. முதல் உணவுப் பயிராக மரபணு மாற்றப்பட்ட கத்தரியை இந்திய வேளாண் சந்தையில் நுழைக்க மான்சாண்டோ முயற்சித்து வருகிறது.

போக்குவரத்து

இந்தியாவில் முதன்முதலில் ரயில் ஓடித் தொடங்கிய தாணே நகரம், தற்போது மற்றொரு வகையிலும் முன்மாதிரியாக மாறுவதற்கு முயற்சித்து வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக சைக்கிளில் செல்வதற்கான தனிப்பாதை அந்நகரில் அமைக்கப்பட உள்ளது.

வாகனங்கள் நகர்வதைவிட, மக்களின் நகர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தாணே நகராட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்தப் பாதை அமைக்கப்படுகிறது. 82 கி.மீ. நீளம் கொண்ட இந்த சைக்கிள் பாதையில் 52 கி.மீ. பகுதியை அமைப்பதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இந்தப் பாதை மும்பை புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளை இணைக்கிறது.

தாணே ரயில் நிலையம்-கிரீக் சாலை-சாகேத், சாகேத்-பால்கம், ஆனந்த்நகர்-ஓவாலே, மும்பை ரெதி பண்டர் ஆத்மராம் சௌக் முதல் கல்வா வரை இந்தப் பாதை அமைக்கப்பட உள்ளது. இரண்டு கி.மீ. அகலம் கொண்ட இந்த தனிப்பாதை ஏற்கெனவே உள்ள சாலைகள், சேவை சாலைகள், தனியாக பிரிக்கப்பட்ட சாலைகளைக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது.

சைக்கிள் பாதை மட்டுமின்றி போக்குவரத்துச் சிக்கலுக்குத் தீர்வு காண மோனோ ரயில், அதிவேக பஸ் போக்குவரத்து முறை (பஸ் ராபிட் டிரான்சிட் சிஸ்டம்), அதிக பேருந்துகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், ஒரே விகிதத்தில் இயங்கும் சிக்னல்கள் ஆகிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பயணத் திட்டம் என்றழைக்கப்படும் இந்தத் திட்டம் நான்கு கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. கனடாவை மையமாகக் கொண்ட லியா கன்சல்டிங் என்ற நிறுவனம் 2008-2032க்குள் ரூ. 9,419 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டம் தயாரித்துள்ளது.

முதலாளிகளின் நெருக்குதலால் கார்கள் செல்வதற்காக சாலைகள் அமைக்கும் நகரங்கள் மத்தியில், மக்களின் பயணங்கள் மீது கவனம் செலுத்தும் தாணே நகரம் மேற்கொள்ளும் முயற்சிகள் நமக்கு முன்மாதிரி.

- போக்குவரத்து துறையில் மற்றொரு வரவேற்கத்தக்க மாற்றமும் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. தங்களது காரின் எரிசக்தித் திறன் எவ்வளவு என்பதை கார் தயாரிப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய தர நிர்ணய வரையறைப்படி இந்த விவகாரத்தில் தன்னார்வ விதிமுறைகளே போதும், கட்டாயமாக்க வேண்டியதில்லை என்று கார் நிறுவனங்கள் இவ்வளவு காலம் வாதிட்டு வந்தன. இந்த விவகாரத்தில் எந்த முடிவை எடுப்பது என்பது தொடர்பாக அமைச்சகங்கள் இடையே பெரிய போரே நடந்தது. கடைசியாக குறைவாக எரிபொருள் செலவழிப்பதற்கான தரநிர்ணயம், எந்தக் கார் அதிக எரிசக்தித் திறன்மிக்கது, இது பற்றிய விவரங்களை கார் விற்கும்போதே தெரிவிக்கும் லேபிள்கள் ஒட்டுவது உள்ளிட்ட நடைமுறைகள் கட்டாயமாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. பிரதமர் அலுவலகம் தலையிட்ட பிறகே இந்த விவகாரத்தில் இணக்கமான உடன்பாடு எட்டப்பட்டது.

இதன்மூலம் ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கையில் கூறப்பட்ட தொலைநோக்குப் படி, எரிபொருள் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதன் மூலம் 2030-31ல் 50 சதவீத எரிபொருள் செலவைக் குறைக்கலாம். இதன்மூலம் தற்போது செலவிட்டு வரும் பெட்ரோலில் 65 சதவீதத்தை சேமிக்க முடியும். தற்போது கார்பன் டை ஆக்சைடை உமிழ்ந்து வரும் 70 லட்சம் கார்களை குறைப்பதற்குச் சமம் இது.

மாசுபடுதல்

இந்தியாவில் உள்ள நதிகள் சீர்கேடு அடைந்திருப்பதற்கு கோலிபார்ம் பாக்டீரியா நோய்த்தொற்றுதான் முக்கிய காரணம் என்பதை சுற்றுச்சூழல் அமைச்சகம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதிகம் மாசடைந்த நதி கங்கை. யமுனை, சபர்மதி உள்ளிட்ட நதிகளும் மோசமாக மாசடைந்துள்ளன. டிசம்பர் மாதம் (2008) வெளியிடப்பட்ட அறிக்கையில் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் பாக்டீரியா மாசு என்பது கோலிபார்ம் பாக்டீரியாவின் அளவைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. இந்த மாசுபாட்டுக்கு முக்கிய காரணம் நன்னீருடன் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதே. இதன் பலனாக நீர்மூலம் பரவும் நோய்த்தொற்று பெருகும்.

பாக்டீரியா கலப்பையும் மாசுபாடு என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் முதன்முறையாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருப்பதால், நீர் தரம் பற்றிய மதிப்பீடுகளில் இனிமேல் மாற்றம் ஏற்படும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் உள்ள 282 நதிகளை கண்காணித்து மாசுபாட்டு அளவை மதிப்பிட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மதிப்பிடும் முறையில், பெரிய மாற்றங்கள் நிகழும்.

பெரும்பாலான நகரங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் நதிகளில்தான் கலக்கவிடப்படுகிறது. இதனால் நதிகள் சீர்கேடு அடைவது தெளிவு. நம் நாட்டின் பெரும்பாலான நதிகள் வெறும் சாக்கடைகளாக மாறிப்போவது இதனால்தான். நம்மிடம் தண்ணீர் வரி, கழிவுநீர் அகற்ற வரி என ஒரு பக்கம் கறந்து கொண்டு, மறுபக்கம் அரசு அமைப்புகளே இந்த மாசுபடுத்தும் பணியை சிரமேற் கொண்டு செவ்வனே செய்து முடிக்கின்றன.

ஒவ்வொரு நாளும் முக்கிய நகரங்களில் உற்பத்தியாகும் 33,000 கோடி லிட்டர் கழிவு நீரில் வெறும் 600 கோடி லிட்டர் கழிவு நீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே ஏற்றுக் கொள்கிறது. குறைந்த அளவு சுத்திகரிப்பு செய்யும் நிலையங்களும்கூட எந்தத் தரத்தையும் கடைப்பிடிப்பதில்லை. எனவே, நதிகள் மாசுபட்டுள்ள அளவை மறுஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசின் நதிகள் பாதுகாப்புத் திட்டத்தை ஒட்டுமொத்தமாகவும் ஒருங்கிணைந்த நோக்கிலும் மாற்றியமைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பேரழிவு

நம் காலத்தின் பயங்கரமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்று போபால் விஷ வாயுக் கசிவு. அந்த விபத்து நடந்து வெள்ளி விழாக் காலம் நெருங்கிவிட்ட நிலையிலும், பழைய யூனியன் கார்பைடு நிறுவனத்தில் கைவிடப்பட்ட ஆபத்தான வேதிப்பொருட்கள் இன்னும் அகற்றப்படாமல் அங்கேயே பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன!

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக குஜராத்-மத்தியப் பிரதேச அரசுகள் இடையே மோதல் நிலவுகிறது. இது தொடர்பாக இரு மாநில தலைமைச் செயலர்கள், மத்திய வர்த்தக அமைச்சகம் இணைந்து வேதிப்பொருட்களை அகற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 8ந் தேதி (2008) உத்தரவிட்டிருந்தது. யூனியன் கார்பைடு நிறுவனத்தில் எஞ்சியுள்ள வேதிப்பொருட்களை ஜனவரி 31ந் தேதிக்குள் குஜராத் அகற்ற வேண்டும் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குஜராத்தில் உள்ள அங்கலேஸ்வர் தொழிற்பேட்டையில் உள்ள இன்சினரேட்டரில் பாருக் என்விரோ இன்ப்ரா ஸ்டிரக்சர் லிமிடட் (பி.இ.ஐ.எல்) நிறுவனத்தால் அந்த வேதிப் பொருட்கள் எரிக்கப்பட இருந்தன.

இந்த நீதிமன்றப் போராட்டத்தால் 1984ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 350 மெட்ரிக் டன் (டன்=1000 கிலோ) வேதிப் பொருட்கள் அங்கேயே இருந்தன. அணுகுண்டுகளுக்குச் சமமான வேதிப்பொருட்களை இப்படி ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு கடத்தும் வேலையையே மத்திய அரசு இவ்வளவு காலமாகச் செய்து வருகிறது. எங்கு எரித்தாலும் பாதிக்கப்படப் போவது சுற்றுப்பகுதிகளில் வாழும் மக்கள்தான். விஷ வாயுக் கசிவுக்குக் காரணமாக இருந்த நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனையும் இன்னமும் கைது செய்யவில்லை, நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேதிப் பொருட்களையும் வெளியேற்றவில்லை. இதுதான் முதலாளிகளும் ஏகாதிபத்தியமும் சேர்ந்து நடத்தும் சுற்றுச்சூழல் பயங்கரங்களுக்கு நம் நாட்டில் கிடைக்கும் நீதி.

புவி வெப்பமடைதல்-காலநிலை மாற்றம்

உத்தராகண்டில் மிக அதிக வெப்பநிலை நிலவுவதால் வசந்தகால மலர்கள் முன்பே பூத்துவிட, வசந்த கால கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளன. கோகா என்றழைக்கப்படும் வசந்தத்தை வரவேற்கும் இந்த விழா, ஜனவரி மாத இறுதியில் நடைபெறும். வசந்த காலத்தை வரவேற்கும் விழாவின்போது குழந்தைகள் அதிகாலையிலேயே எழுந்து புரன், பெய்ன்யா, பையுன்லி போன்ற மலர்களைப் பறித்து வருவது வழக்கம். "காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மலர்கள் கிடைப்பதில்லை. மலர்கள் இல்லாமல்தான் விழாவைக் கொண்டாடி வருகிறோம்" என்கிறார் இப்பகுதியிலுள்ள ஷெர்சி கிராமத்தின் ஆஷா கந்தூரி. ஒரு சிலர் கடுகுப் பூக்களை வைத்து விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

காடுகள், மரங்களுடன் குழந்தைகள் நேரிடையாக உறவாட இந்த விழா வாய்ப்பு தருகிறது. சூரியன் உதிக்கும் முன்பே மலர்களைப் பறித்து வரும் சிறுவர்கள் அவற்றை வீட்டு வாசலுக்கு முன்பே கொட்டுவார்கள். நல்ல பயிர்விளைச்சல், பருவமழை, குடும்பச் செழிப்பு போன்றவற்றுக்காக வேண்டிக் கொள்வார்கள். இது மட்டுமின்றி, வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பது நிற்கவில்லை என்றால் கால்நடைகள், வேளாண்மை என இப்பகுதியிலுள்ள அனைத்து இயற்கை வளங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாள்கள் தெரிவிக்கிறார்கள்.

- ஆதி வள்ளியப்பன், பூவுலகின் நண்பர்கள்

Pin It