“இந்த பூமி சாகவில்லை... ஆனால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது யாரால் என்று நமக்குத் தெரியும்” என்று ஸ்வீடன் சூழல் போராளி க்ரெட்டா தன்பர்க் (Greta Thunberg) ஐந்தாண்டுகளுக்குப் பிறகு துருக்கி அண்டாலியாவில் (Antalya) நடைபெற்று வரும் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது கூறினார். உலக அரசுகள் காலநிலைக் கெடுதிகளைக் குறைக்க உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்காததைத் தோலுரித்துக் காட்டி அப்பட்டமான உண்மைகளை எடுத்துக் கூறி வலுவாக கண்டனம் செய்து அவர் பேசினார்.

greta thunbergவெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம்

23 வயதான க்ரெட்டா தன்பர்க் பள்ளி மாணவியாக இருந்தபோது காலநிலை அவசரநிலையை எதிர்த்து “வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம்” என்று ஸ்வீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்பு நின்று தன்னந்தனியாகத் தொடங்கிய இயக்கத்தின் மூலம் உலகப் புகழ்பெற்றார். “காலநிலை அவசரநிலையை ஆட்சியாளர்கள் போதுமான அளவு கண்டுகொள்வது இல்லை என்று ஆணித்தரமாகப் பேசினார்.

“நம்மைக் காப்பாற்ற வருவார்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் அதே நபர்களாலேயே இந்த பூமி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. நம் மனித உரிமைகள் அரசுகளாலும் அமைப்புரீதியான கழகங்களாலும் அச்சுறுத்தப்படும்போது ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உரத்த குரலில் நம் எல்லோரின் உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். போராடத் தயாராக வேண்டும்” என்று அவர் கூறினார்.

2026ம் ஆண்டிற்கான வருடாந்திர காலநிலை உச்சிமாநாட்டின் (COP) 31 ஆவது கூட்டம் இப்போது நவம்பர் 9 முதல் தொடங்கி நவம்பர் 20 வரை துருக்கி மத்திய தரைக் கடற்பகுதியில், கடற்கரையோர நகரமான ஆண்டாலியாவில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 190க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இதில் பங்கேற்கவில்லை.

அன்றாட வாழ்விலும் சூழல் பாதுகாப்பைப் கடைபிடிக்கவேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் செயல்பட்டு வரும் இந்தப் போராளி தன் பயணங்களின்போது சூழலை அழிக்கும் பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்விற்குக் காரணமாக இருக்கும் விமானப் பயணங்களைத் தவிர்த்து படகுகளில் பயணம் செய்கிறார். இப்போது அவரது கவனம் சூழல் பாதுகாப்பு தவிர காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து உலக மேடைகளில் பேசிவருகிறார்.

உலகம் முழுவதும் நடக்கும் சூழல், மனித உரிமை மீறல் அநீதிகளுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது. போரும் சண்டைகளும் கலவரங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதுடன் சூழலையும் பெருமளவில் பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் சமீப காலமாக கூறி வருகின்றனர். “இன்று நடைபெறுவதை விட அதிகமான படுகொலைகள், சூழல் படுகொலைகள் மற்றும் நடக்கப் போகும் ஒரு வருங்காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். நம் அடிப்படை உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்கிறோம். அடிப்படைத் தேவைகள் கூட இங்கே ஆடம்பரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. உலக உச்சிமாநாடுகள் நடக்கும் இது போன்ற இடங்களில் இது தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. இங்குள்ள தலைவர்களின் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டதாக நிலைமைகள் இருக்கின்றன. இந்த பூமி சாகவில்லை... ஆனால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது!” என்று க்ரெட்டா கூறுகிறார்.

“யு கேயில் நிலவிய கோடை வெப்பம் வழக்கமான ஒன்று இல்லை. காலநிலை அவசரநிலை தொலைதூரத்தில் இல்லை. அது நம் கண் முன் நிகழ்கிறது. எல்லா இடங்களிலும் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அது அழித்துக் கொண்டிருக்கிறது. கார்பன் உமிழ்வைக் குறைக்க யு கேயின் மின்மயமாக்கும் பொருளாதாரத் திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று வளர்ச்சியடைந்த ஜி7 நாடுகள் குழுவில் இருந்து மாநாட்டில் கலந்துகொள்ளும் ஒரே ஒரு தலைவரான பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பெர்னம் (Andy Burnham) கூறினார்.

“பிரிட்டிஷ் பிரதமரின் பங்கேற்பை நேர்மறை அறிகுறியாகக் கருதலாம். மாநாட்டில் கலந்து கொள்வது மட்டும் போதுமானதில்லை. போதுமான செயல்கள் தேவை. காலநிலையைப் புரிந்துகொண்ட ஒரு தலைவரின் உண்மையான கடமை வாக்குறுதிகளை அள்ளி வீசுவது மட்டும் இல்லை. செயலில் காட்டவேண்டும்” என்று ஆக்ஸ்ஃபோம் (Oxfam GB) அமைப்பின் காலநிலை ஆலோசகர் பெத் ஜான் (Beth John) கூறினார்.

ஆக்ஸ்ஃபோம் ஜிபி என்பது 1942ல் ஆக்ஸ்போர்டில் பஞ்சத்தை அகற்றுவதற்காக ஆக்ஸ்போர்டு பட்டினியை அகற்ற உதவும் கமிட்டி என்ற பெயரில் உலகளவில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு. பேரிடர் நிவாரணம், நீடித்த நிலையான வளர்ச்சிக்கு ஆதரவு, உலகளவில் வறுமை மற்றும் அநீதியை எதிர்த்து போராடும் ஒரு இயக்கம் இது. இருபதிற்கும் அதிகமான தொடர்புடைய பன்னாட்டு அமைப்புகளுடன் இந்த இயக்கம் இணைந்து செயல்படுகிறது.

இமயமலை சுனாமி

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.7 டிகிரி அளவுக்கு பூமியை சூடாக்கும் வகையில் இன்றுள்ள அரசுகளின் கோட்பாடுகள் உள்ளன” என்று காலநிலைச் செயல்பாடு கண்காணிப்பு அமைப்பு (Climate Action Tracker) கூறுகிறது. இது காலநிலை பகுப்பாய்வு (Climate Analytics) மற்றும் புதிய காலநிலை ஆய்வுக் கழகம் (NewClimate Institute) ஆகிய இரண்டு அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் இணைந்து சுதந்திரமாகச் செயல்படும் திட்டம். 2009ல் தோற்றுவிக்கப்பட்டது.

பாரிஸ் உடன்படிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்ட புவி வெப்ப உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த, 1.5 டிகிரிக்குள் குறைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த அரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்காணிக்கும், மதிப்பிடும் அமைப்பாகும் இது.

உலகில் அதிக அளவில் பசுமைக் குடில் வாயுக்களை உமிழும் ஒரு டஜன் நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் காலநிலை செயல்பாடுகள், உமிழ்வைக் குறைக்க ஒப்புக்கொண்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் காலநிலைக் கோட்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பு இது. இந்தக் குழு கடந்த ஆண்டு எதிர்பார்த்த வெப்ப உயர்வை விட சற்று கூடுதலாக இப்போது உள்ளது என்று அந்தக் குழு கூறுகிறது.

“பனிப் பாறை உருகியதால் சமீபத்தில் நாங்கள் அனுபவிக்க நேர்ந்த பரவலான காலநிலைப் பேரழிவை மலையில் ஏற்பட்ட சுனாமி என்றே நாங்கள் அழைக்கிறோம். ஆகஸ்ட் 2026ல் நடந்த இந்தப் பேரிடரால் 1,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நாங்கள் மக்களையும் உயிர் உடைமைகளையும் இழந்தோம். மறுவாழ்விற்காக இப்போது நேபாளம் செயல்படுகிறது. உட்கட்டமைப்புகள் மறுபடி உருவாக்கப்படுகின்றன.

இழந்த உயிர்களை மீட்க முடியுமா?

ஆனால் இழந்த சமூகங்கள், கலாச்சாரம், உயிர்களை நம்மால் மீட்கமுடியாது” என்று நேபாளத்தின் சூழல் அமைச்சர் கீடா ஷௌடரி (Gita Chaudhary) மாநாட்டில் பேசியபோது கூறினார்.

“மூன்றாண்டுகளாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தும் இன வெறித்தாக்குதல்கள் மக்களையும் சூழலையும் அழித்துவருகிறது. பாலஸ்தீனத்தின் நீர், நிலம், இயற்கை வளங்கள் மீதான ஆக்கிரமிப்பு சுரண்டல்கள் எல்லாவற்றையும் பேரழிவுக்கு உள்ளாக்குகிறது. காலநிலை மாற்றத்தின் கெடுதிகள் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது” என்று பாலஸ்தீன பிரதமர் மொஹமது முஸ்தபா (Mohammad Mustafa) மாநாட்டில் கூறினார். மாநாட்டை நடத்தும் துருக்கியின் பிரதிநிதிகள் இஸ்ரேல் இனப் படுகொலையை நடத்துகிறது என்று கூறி கூட்டத்தில் கலந்துகொள்ள அந்நாட்டிற்கு அழைப்பு விடுக்கவில்லை. கூட்டத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பாத, அதிகாரப்பூர்வமாகக் கலந்து கொள்ளாத மற்றொரு நாடு யு எஸ்.

டிரம்ப் காலநிலை குறித்த மாநாடுகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து முன்பே விலகி விட்டார். புதிய காற்றாலைகளை அனுமதிக்க மாட்டேன் என்று கூறும் அவர் அறிவியலை வெறும் புரளி என்று கூறிவருகிறார். மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் யு எஸ் உட்துறை செயலர் ஜான் கெரி (John Kerry) கடுமையாக கண்டித்தார். அவர் இம்மாநாட்டில் இருபது ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு மாகாண ஆளுநர்களுடன் பங்கேற்கிறார்.

“டிரம்ப் நிர்வாகம் ஆட்சியில் இருக்கப்போகும் இரண்டாண்டுகளில் இப்போது செய்வதை விட இன்னும் மோசமாக செய்யும். ஆனால் அதில் காலநிலை மாற்றம் பற்றிய அடிப்படை கொள்கை மாற்றங்கள் எதுவும் இருக்காது. இதை நான் உண்மைக்குப் புறம்பாகச் சொல்ல விரும்பவில்லை” என்று கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூஸாம் (Gavin Newsom) கூறினார்.

எரியும் பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவது எப்படி?

“உலகம் பற்றி எரியும்போது சமாதானத்தை நம்மால் கட்டியெழுப்ப முடியாது” என்று ஐநா செயலர் ஆண்டோனியோ குட்டரஸ் மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தியபோது கூறினார். மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக பல நாடுகளிலும் இருந்து வந்துள்ள செய்தியாளர்கள் இரண்டு நாட்களுக்கு சரியான தூக்கம் கூட இல்லாமல் உலகம் முழுவதும் உண்மையான செய்திகளை அனுப்பி பெரும் சேவை செய்து வருகின்றனர்.

இயற்கையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களைக் காட்டிலும் பன்னாட்டு புதைபடிவ எரிபொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளே கூட்டத்தில் அதிகமாகக் கலந்து கொண்டுள்ளனர் என்ற பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூழலுக்கு எதிரான செய்திகள் போலியாகப் பரப்பப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில் இவர்களின் பணி மகத்தானது.

புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மூலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை புதைபடிவ எரிபொருட்களுக்குப் மாற்றாக பயன்படுத்துவது மாநாட்டில் முக்கிய இலட்சியமாகக் கருதப்படுகிறது. இது தவிர மேலும் பல நல்ல முடிவுகளுடன் மாநாடு நிறைவுபெறும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.

(படம் நன்றி: RTC News)

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.