அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகுகின்றன. இதற்கு காலநிலை மாற்றம் மட்டும் காரணமில்லை. அங்கு ஆய்வு செய்யச் செல்லும் விஞ்ஞானிகள், சுற்றுலாப் பயணிகள், கப்பல்கள், விமானங்கள், டீசல் ஜெனரேட்டர்களும் காரணம் என்று சமீபத்தில் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
புதைபடிவ எரிபொருள்கள் எரிக்கப்படுவதால் உண்டாகும் மாசு பனிப்படலங்களைக் கருப்படையச் செய்கிறது. இதனால் உருவாகும் கறுப்புக் கார்பன் (black carbon) காரணமாக பனிக்கட்டிகள் சூரிய வெப்பத்தை அதிகமாக உறிஞ்சி வேகமாக உருகுகின்றன.
அண்டார்டிக் பெருங்கடலில் பனி உருகுதல் குறித்த விவரங்கள் 1979-ல் பதிவு செய்யப்படத் தொடங்கின. அங்கு பனிக்கட்டிகள் இப்போது மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றன. இங்கு மற்ற இடங்களை விட ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி சென்றுவரும் இடங்களில் கறுப்புக் கார்பன் 2 முதல் 4 மடங்கு அதிகமாக உருவாகிறது.
புதைபடிவ எரிபொருள்கள் எரிக்கப்படும்போது கார்பனின் பல்வேறு அளவுகளில் நுண்துகள்கள் உருவாவதே கறுப்புக் கார்பன் எனப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடலுக்கு அடியில் இருக்கும் பனிப்படலங்களும், மேற்பரப்பில் இருக்கும் பனிக்கட்டிகளும் கறுப்பாகின்றன. இதனால் கரும்பனி (dark snow) உருவாகிறது.
இவை மற்ற கரும்பொருள்கள் போல சூரிய ஒளியை அதிகபட்சம் உறிஞ்சுகின்றன. இதனால் பனிப்படலத்தின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உருகுதல் வேகமாக நிகழ்கிறது. பனிப்பாறைகள் கரைகின்றன. இது பூமியின் தெந்துருவப் பனிக்கடல் பகுதியின் சூழலைச் சீரழிக்கிறது. வரும் காலங்களில் இது அதிகமாக நடைபெறும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
அண்டார்டிகாவிற்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு மனிதரும் 83 டன் பனிக்கட்டிகள் உருகக் காரணமாக இருக்கிறார் என்று இந்த ஆய்வு கூறுகிறது. கப்பல்கள், விமானங்கள், டீசல் ஜெனரேட்டர்கள் இயங்குவதால் உருவாகும் கறுப்புக் கார்பன் ஒவ்வொரு கோடைகாலத்திலும் அண்டார்டிகாவில் 23 மிமீ பனிக்கட்டிகள் உருகக் காரணமாக இருக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு மனிதர்கள் அதிகம் செல்லும் இடங்களிலேயே இது கூடுதலாக நிகழ்கிறது.
2019-2020 சீசனில் அண்டார்டிகாவிற்கு 72,000 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இது இரண்டு மடங்கு. ஆய்வுக்குழுவினர் 2016 முதல் 2020 வரை ஒவ்வொரு ஆண்டும் 2000 கிலோமீட்டர் பரப்பளவில் அண்டார்டிகாவில் வடமுனை முதல் எல்ஸ்வொர்த் மலை (Northern tip to Ellsworth mountains) வரை 28 இடங்களில் பனிக்கட்டி மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.
அதிக ஆய்வு நிலையங்கள் அமைந்துத்துள்ள, 95% சுற்றுலாப் பயணிகள் செல்லும் அண்டார்டிகாவின் வளைகுடாப் பகுதியை மையமாகக் கொண்டே ஆய்வுகள் நடத்தப்பட்டன. 2016-2020 காலத்தில் சராசரியாக 53,000 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
பனிப்படலங்கள் உலகில் காணப்படும் இடங்களில் அண்டார்டிகா தூய்மையானது என்று சிலி சாண்டியாகோ பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் துணை ஆசிரியர் டாக்டர் ரால் கொடேரோ (Ral Cordero) கூறுகிறார். இங்கு பில்லியனில் ஒரு பங்கு (one part in a billion) மட்டுமே கறுப்புக் கார்பன் காணப்படுகிறது.
இது இமயமலையில் இருப்பதை விட ஆயிரம் மடங்கு குறைவு. ஆண்டீஸ் மற்றும் ராக்கி மலைகளில் இருப்பதை விட நூறு மடங்கு குறைவு என்று அவர் கூறுகிறார். அண்டார்டிகாவின் மற்ற இடங்களை விட ஆய்வு செய்யப்பட்ட, மனிதக் குறுக்கீடுகள் அதிகமுள்ள பகுதியில் கறுப்புக் கார்பன் 2 முதல் 4 மடங்கு அதிகம்.
கண்ணுக்குத் தெரியாமல் உருவாகும் கறுப்புக் கார்பன் மூலம் கூடுதல் ஆற்றலைப் பெறும் பனிப்படலங்கள் வேகமாக உருகுகின்றன. ஆய்வுக்குழு ஒரு பரப்பு எந்த அளவு சூரிய ஆற்றலைப் பிரதிபலிக்கிறது என்பதை அளவிட உதவும் அல்பிடோ (Albedo) என்ற அலகைப் பயன்படுத்தி வரும் நாட்களில் பனிக்கட்டிகள் எந்த அளவு வேகமாக உருகும் என்று மதிப்பிட்டுள்ளனர். புதைபடிவ எரிபொருட்களுக்குப் பதில் காற்று ஆற்றல் போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்த வேண்டும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளை விட ஆய்வாளர்கள் பத்து மடங்கு கூடுதலாகக் கறுப்பு கார்பன் வெளியேற்றத்திற்குக் காரணமாக இருக்கின்றனர். ஒவ்வொரு அண்டார்டிகா ஆய்வாளரின் கருப்புக் கார்பன் தடமும் (black carbon footprint) அவர்கள் இந்தக் கண்டத்தில் தங்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிகரிக்கிறது.
ஒவ்வொரு ஆய்வாளரும் சராசரியாக 100 டன் பனிக்கட்டிகள் உருகக் காரணமாக இருப்பதாக ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் கப்பல், விமானம், ஹெலிகாப்டர், ஜெனரேட்டர் மற்றும் இவை இயங்கத் டீசலைப் பயன்படுத்துகின்றனர். புவி வெப்ப உயர்வு காரணமாக உருகுவதைக் காட்டிலும் இதனால் பனி உருகுவது குறைவாகவே இருக்கிறது. என்றாலும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
காற்று ஆற்றலைக் கொண்டு முழுமையாகச் செயல்படும் பெல்ஜியத்தின் இளவரசி எலிசபெத் ஆய்வுநிலையம் போலப் பிற நாடுகளின் ஆய்வு நிலையங்கள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டு செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
உலகில் பனிப்படலங்கள் காணப்படும் மற்ற இடங்களில் கறுப்புக் கார்பன் மாசிற்கும் தரை மேற்பரப்பு பனி உருகுதலுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மானஷ் (Monash) பல்கலைக்கழக புவி வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ மாக்கிண்டாஷ் (Prof Andrew Mackintosh) கூறுகிறார்.
ஆழ்கடல் பகுதியில் உருவாகும் கரும்பனியால், வெப்ப உயர்வால் பனிப்படலங்கள் உருகுகின்றன. மேற்பரப்பில் அதிகரிக்கும் வளிமண்டல வெப்ப உயர்வால் பனிக்கட்டிகள் உருகுகின்றன. வரும் நூற்றாண்டுகளில் தரைப்பரப்பு வெப்பம் அதிகரித்தாலும் கறுப்புக் கார்பன் கூடுதலாகப் பனிப்படலங்கள் உருகக் காரணமாக அமையும் என்று ஆண்ட்ரூ கூறுகிறார்.
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைத்தால் அண்டார்டிகா சூடாவதைத் தடுக்க முடியும். இதனால் பனிப்பரப்புகள் கருமையடைவது தவிர்க்கப்படும். எவ்வாறு இருந்தாலும் அண்டார்டிகாவே பூமியில் மனிதனால் அதிகம் மாசுபடுத்தப்படாத கடைசி இடமாக இன்னமும் இருக்கிறது. இப்பகுதியையேனும் இதே நிலையில் மனிதன் காப்பாற்றுவானா?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்