தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெப்ப அலைத் தாக்குதல்கள் இயற்கை உயிரினங்களுக்கு உணவு தரும் திறனை அச்சுறுத்தலிற்கு உள்ளாக்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெப்ப அலை ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவில் இந்தியா உட்பட பல பகுதிகளையும் தொடர்ச்சியாக பாதித்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை ஒவ்வொரு நாளும் முதல் நாளை விட சாதனையளவாக உயர்கிறது.

நம் உணவுமுறை உலகளாவியது. உலகின் பல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பல முக்கிய உணவுப் பயிர்களின் விளைச்சலில் இதனால் பாதிப்பு ஏற்படும். இது உணவுப் பற்றாக்குறைக்கும் அதன் மூலம் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும். இது இப்போது உடனடியாக நிகழவில்லை என்றாலும் வரும் ஒரு சில பத்தாண்டுகளில் நிகழும் என்று லீட்ஸ் (Leeds) பல்கலைக்கழக வளி மண்டல அறிவியல் துறை பேராசிரியர் ஜான் மார்ஷம் (Prof John Marsham) கூறுகிறார்.

வசதி இருந்தால் கொளுத்தும் வெய்யிலில் இருந்து தப்ப வீட்டுக்குள் போய் நீங்கள் ஏசியைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் இயற்கையான மற்றும் விவசாயம் சார்ந்த சூழல் மண்டலங்கள் இவ்வாறு செய்ய முடியுமா? ஐரோப்பாவில் 2018ல் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் மத்திய மற்றும் வட ஐரோப்பாவில் பல பயிர்களைப் பாதித்தது. 50% பயிரிழப்பை ஏற்படுத்தியது.

2022ல் ஏற்பட்ட உயர் வெப்பம் இங்கிலாந்தில் விளைந்த எல்லா வகை காய், பழங்களையும் அழித்தது. முந்தைய பதிவுகளுடன் ஒப்பிடும்போது 2040ல் வெப்ப அலைத் தாக்குதல்கள் இப்போது உள்ளதை விட 12 மடங்கு அதிகமாக அடிக்கடி ஏற்படும். ஒரே ஒரு வெப்ப அலைத் தாக்குதல் ஒரு சூழல் மண்டலத்தையே அழித்துவிடாது.

ஆனால் நீண்ட காலம் நீடிக்கும், அடிக்கடி நிகழும் வெப்ப அலைகளை சரிசெய்ய இயற்கைக்குப் போதுமான அவகாசம் கிடைக்காது.

விவசாயிக்குத் தெரியும்

நாம் இயல்பாக வாழ உதவும் வானிலை பற்றி பொதுவாக மக்கள் கவலைப்படுவதில்லை. நமக்கு வேண்டியதை வாங்க நாம் கடைக்குச் செல்கிறோம். நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்வதில்லை. ஆனால் உலகில் எந்தப் பகுதியில் இருக்கும் எந்த ஒரு விவசாயிடம் நீங்கள் பேசினாலும் வானிலையும் காலநிலை மாற்றமும் அவர்களின் விவசாயத்திற்கு ஏற்படுத்தும் நன்மை, தீமைகள் பற்றி அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக உள்ளனர்.

காலநிலை மாற்றம் வளி மண்டல வெப்பநிலையை மட்டும் அதிகரிப்பதில்லை. கடல் வெப்பநிலையையும் அதிகரிக்கிறது. இது கடலோர சூழலைப் பாதிக்கிறது. மனித குலத்தின் மற்றொரு முக்கிய உணவு மூலத்தையும் அழிக்கிறது. மிக உயர் வெப்பநிலை உயிரினங்களை ஒட்டுமொத்தமாகக் கொல்கிறது. எடுத்துக்காட்டு ஒரு பில்லியன் கடல்வாழ் விலங்குகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த 2021 கனடிய பசுபிக் வெப்ப அலைத் தாக்குதல் நிகழ்வு மற்றும் இராக் அஷ்மான் (Ashman) நதியில் வெப்ப அலைத் தாக்குதலால் ஜூலை 2023ல் பெருமளவில் இறந்து கரையொதுங்கிய மீன் கூட்டம்.dead fish in iraqநிசப்த மரணங்கள்

சுலபமாகப் பார்க்க முடிகிறது என்பதால் நாம் நிலப்பகுதியில் நிகழும் மாற்றங்களையே காண்கிறோம். வெப்பம் அதிகரித்தால் தாவரங்கள் சூடாகின்றன, விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் பற்றி யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழிவது ஒருவகையில் நிசப்த மரணங்கள் என்று பிரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழக புவி அறிவியல் பேராசிரியர் டானியல்லா ஸ்மிட் (Daniela Schmidt) கூறுகிறார்.

வெப்ப மண்டலம் போன்றவை ஒருகாலத்தில் ஆண்டு முழுவதும் நிலையான வெப்பநிலை நிலவும் கடல் சூழல் பகுதிகளாக இருந்தன. 2 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு உலகில் இருக்கும் எல்லா பவளப் பாறைகளையும் அழித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. உலகில் உள்ள மற்ற எல்லா சூழல் மண்டலங்களையும் விட இப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன.

இப்பகுதிகள் பெரும்பாலும் ஏழை நாடுகளைச் சேர்ந்த ஐநூறு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. நாம் உடனடியாக செயல்படாவிட்டால் இவை பூமியில் இருந்தே மறையும் அபாயம் உள்ளது என்று மார்ஷம் கூறுகிறார்.

தாவரங்கள் தரும் ஆக்சிஜனைதான் நாம் சுவாசிக்கிறோம்!

ஆள்பவர்களுக்கு பவளப்பாறைகள் அழிவது பற்றி கவலையில்லை. ஆனால் எந்த ஒரு சூழல் மண்டலமும் இவை இல்லாமல் அதிக நாட்கள் நீடித்து நிலைத்திருக்க முடியாது. இன்றுள்ள நிலையில் உலகின் எந்த ஒரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்து வரும் பாதிப்புகளில் இருந்து தப்பமுடியாது. உலகில் எல்லாவற்றிற்கும் பணரீதியான மதிப்பு இல்லை. உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சுக்காற்றுக்கும் தாவரங்கள் அவசியம். அவை தரும் ஆக்சிஜனையே நாம் சுவாசிக்கிறோம்! இதை நாம் மறந்து விடுகிறோம்.

நிலப்பகுதி வெப்பம் சூழல் மண்டலங்களைப் பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் இப்போதே தொடங்கியுள்ளன. 4.4 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வில் பூமியில் இன்று வாழும் 41% நில வாழ் முதுகெலும்பிகள் 2099ல் அதி வெப்ப நிகழ்வுகளால் பாதிக்கப்படும் என்று சமீபத்தில் நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளிவந்த ஆய்வு எச்சரிக்கிறது. வெப்ப உயர்வு உயிரினங்களின் வளர்ச்சி, இனப்பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் நடத்தை போன்ற பலவற்றில் அச்சமூட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

குளிர்ச்சியான இடங்களை தேடிச் செல்லும் உயிரினங்கள்

இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 40% முதுகெலும்புள்ள உயிரினங்கள் அழிந்துவிடும். சகிக்க முடியாத வெப்பத்தில் இருந்து தப்ப உயிரினங்கள் மலைப்பகுதிகளுக்கும் துருவப் பகுதிகளுக்கும் இடம்பெயர்கின்றன. இதன் விளைவாக பல உயிரினங்கள் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்படும். வெப்பமான பூமியில் இயற்கை மெல்ல மெல்ல நிலப்பகுதிகளையும், ஏரி குளம் போன்ற நீர்நிலைகளையும் அந்த சூழ்நிலைக்கேற்ப தகவமைக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

நகரப்பகுதி வெப்ப உயர்வு 2 டிகிரி செல்சியஸ் அளவிற்குக் குறையக் காரணமாக இருந்த கொலம்பியாவில் மெடலின் (Medellin) பகுதியில் உள்ள பசுமை பெருவழிப்பாதை போன்ற திட்டங்கள் மூலம் வெப்பம் மிகுந்த வருங்கால உலகில் நிலம், நீர்நிலைகள், மரங்கள் போன்றவை பூமியைக் குளிரச் செய்ய உதவும் என்று 'பூமியின் வருங்காலக் குளிர்ச்சியடையும் போக்கு' பற்றி ஆராயும் ஆக்ஸ்போர்டு மார்ட்டின் திட்ட மூத்த ஆய்வாளர் பேராசிரியர் நிக்கோல் மிராண்டா (Prof Nicole Miranda) கூறுகிறார்.

பசுமைப் போர்வை போர்த்தப்பட்ட நிலப்பரப்பும் இயல்பான சூடுடைய கடலும் இருந்தால் மட்டுமே நாளை மனிதன் என்ற உயிரினமும் பூமியில் வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/jul/21/rampant-heatwaves-threaten-food-security-of-entire-planet-scientists-warn?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It