• கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் மொராக்கோவில் கடும் வெப்பத்தினால் 23 பேர் உயிரிழப்பு
  • கேரளாவில் 400க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை வாங்கியது வரலாறு காணாத நிலச்சரிவு
  • உத்தர்காண்டில் மற்றும் இமாச்சல் மேக வெடிப்பினால் நிலச்சரிவு, மேற்குவங்க புயல்.
  • மும்பையில் ஒரு மாதத்தின் மழையை வெறும் 6 மணி நேரத்தில் 300 செ.மீ கொட்டி தீர்த்துள்ளது.

இந்த காலநிலை நெருக்கடி இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் காணப்படுகிறது. 2023-ல் மட்டும் உலகளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் சுமார் 3,80,000 கோடி டாலர் பொருளாதார இழப்புகள் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பாவில் மட்டும் வெப்ப அலையால் 47,000 பேர் இறந்ததாக ஆவணங்கள் கூறுகிறது.hot earthஅதீத வெப்பம் அல்லது எதிர்பாராத மழை, ’எல் நீனோ’ எனும் புவி வெப்பமாதலின் காரணமாகப் புவியின் கிழக்குப் பகுதி மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலின் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றமாகும். கடல் வெப்பமயமாகுதலால் இந்நிகழ்வு சராசரியாக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 2024-ன் தொடக்கத்தில், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் உள்ள பல நாடுகளில் கடுமையான வெப்பம் சுட்டெரித்தது. உலகளவில் கடந்த 13 மாதங்கள் இதுவரை பதிவு செய்யப்படாத வகையில் கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டது. மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் வெப்ப அலைகளாக மிகவும், கொடியதாக உள்ளது என்பதை வானிலை குறித்தான இயல்புக்கூறு ஆய்வுகள் தொடர்ந்து வெளியிடுகின்றன.

அட்லாண்டிக் நீரோட்டத்தின் மாற்றம்:

 இந்த மாற்றங்களை நாம் புரிந்துகொள்ள பெருங்கடல் நீரோட்டங்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெருங்கடல் நீரோட்டமானது கடலில் இயல்பாக ஓடும் நீராகும். இவை வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் என்று இரு வகைப்படும். மத்திய ரேகைப் பகுதி வெப்பம் மிகுந்த பகுதியாகும். இதனால் இங்கு வெப்ப நீரோட்டங்கள் இருக்கும் துருவப் பகுதி குளிர் நிறைந்த பகுதியாகும். இதனால் இங்கு குளிர் நீரோட்டங்கள் இருக்கும்.

மத்திய ரேகையிலிருந்து செல்லும் வெப்ப நீரோட்டத்தின் போது அதிக வெப்பத்தின் காரணமாக கடலின் உப்பு அடர்த்தி குறைகிறது. இதனால் மேல்மட்ட நீரோட்டம் ஏற்படும். துருவப்பகுதியில் பனிக்கட்டிகள் இருப்பதால் உப்பு அடர்த்தி அதிகமாகி ஆழமான நீரோட்டமாக மாறுகிறது. இதுவே இயல்பாக நடக்கும் நீரோட்டமாகும். இந்த சுழற்சி தான் புவியின் பல்வேறு மண்டலங்களின் வானிலையை தீர்மானிப்பதில் முதன்மை பங்கு கொள்கின்றன.

புவி வெப்பமயமாதல் அதிகமாகும் போது அட்லாண்டிக் பெருங்கடலின் இந்த சுழற்சியே மாறி விடும். வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுகிறது. இதனால் கடலில் நன்னீர் வரத்து அதிகரிக்கிறது. அதனால் உப்பு அடர்த்தி குறைகிறது. உப்பு அடர்த்தி குறைவதால், ஆழமான நீரோட்டமானது மேல்மட்ட நீரோட்டமாக மாறிவிடுகிறது. இதனால் வட மற்றும் தென் துருவங்களில் ஆழமான நீரோட்டங்களே இல்லாமல் மேல் மட்ட நீரோட்டங்களே உருவாகின்றன. இதனால் தென் துருவத்திலிருந்து வரும் சூடான நீரூம், வட துருவத்திலிருந்து வரும் குளிர்ந்த நீரூம் வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பக்கம் குவிந்து விடுகிறது. இதனால் கடல் மட்டம் உயர்கிறது.

மத்திய ரேகையிலிருந்து பாயும் வெப்ப நீர், ஆர்க்டிக் பகுதியை நோக்கி பாயாததால், பனியானது தெற்கே இங்கிலாந்து வரை விரிவடையும். மேலும் ஐரோப்பாவின் சில பகுதிகள், 1.5 டிகிரி செல்சியஸ் வரை விரைவாக குளிரடையும். இன்னும் பத்து ஆண்டுகளில் இது நடக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நீரோட்டத்தினால் வெப்பம் வட துருவம் நோக்கி அனுப்ப முடியாது என்பதால் தென் துருவம் வேகமாக வெப்பமடையும்.

இதனால் கடலோரத்தில் இருக்கும் நிலங்களில் தீவிர வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கும். மறுபுறத்தில் அதி தீவிரமான புயல்கள் மற்றும் மழைப்பொழிவை உண்டாக்கும். பல பகுதிகள் கடும் பனிப்பொழிவை சந்திக்கும். ஆசிய பருவமழை முறைகளை மாற்றும். அமேசான் காட்டின் மழை மற்றும் வறண்ட காலங்களை தலைகீழாக மாற்றும் என்றும், இந்த அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டங்களின் மாற்றங்களால் ஒரு மீட்டர் வரை கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளது எனவும் காலநிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெப்பமயமாதல் காரணம்:

ஆண்டுதோறும் புவியானது 1.5C (செல்சியஸ்) அளவு வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். உலக வெப்பமயமாதலால் உயரும் கடல் மட்டத்தினால் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்தியா மற்றும் இந்திய துணை கண்டம் சுற்றியுள்ள நாடுகளே பெரிதும் பாதிக்கப்படப் போகிறது.

தொழிற்புரட்சிக்கு பின், பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும் கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற பூமியின் வெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்களின் வெளிப்பாடு அதிகம் ஆனதால், புவி வெப்பமடைதலும் அதிகமாகியுள்ளது. புதைபடிம எரிபொருள்களை (Fossil Fuels) நாம் அதிகம் உபயோகிப்பதாலேயே இந்த வாயுக்கள் அதிகம் ஆகிறது. இதனால் அனைத்து நாடுகளும் கார்பன் சம நிலையை இலக்காகக் கொண்டு முன்னேறத் தொடங்கினர். இது வரவேற்கத்தக்க செய்தியாய் இருந்தாலும், தற்போது எங்கும் நடக்கும் போர் சூழல் நிலையை தலைகீழாக மாற்றியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர் மட்டும் 175 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைட் வாயுக்களை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தப் போரினால் நிகழ்ந்த அழிவிற்கு செய்யப்படும் புனரமைப்பின் காரணமாக அதிக பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகிறது. அதோடு போருக்கென்று உபயோகிக்கும் வாகனங்கள், போர் விமானங்களுக்கான எரிபொருள் ஆகியவை பின்னோக்கியான ஆற்றலுக்கு இழுத்து செல்கின்றது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை (Renewable Energy) மாற்றாக கொண்டு முன்னேறிய நாடுகள் இன்று மறுபடியும் புதைபடிம எரிபொருட்கள் (Fossil Fuels) பக்கம் திரும்பியுள்ள அளவிற்கு பொருளாதார விளைவுகளினால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது மேலும் பூமியை வெப்பமடைய வைத்திருக்கிறது.

அதீத வெப்பத்தினால் கடல்கள் சூடாவதால் பெரும் சூறாவளிகள் உருவாகிறது. இதனால் அதீத மழை பொழிவு ஏற்படுகிறது. உத்தர்காண்ட் மற்றும் இமாச்சலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு, மும்பையில் கொட்டி தீர்க்கும் மழை மற்றும் மேற்குவங்கத்தின் புயல்கள் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த மேகவெடிப்பு போன்ற நிகழ்வுகளினால் வெள்ளம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நிலச்சரிவு எனும் மோசமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது.

நிலச்சரிவுக்கு காரணம்:

இமயமலையில் உள்ள உத்திரகாசியில் அமைப்பட்ட சுரங்கப்பாதை நவம்பர் 2023-ல் இடிந்து விழுந்தது. இது இந்து யாத்ரீகத் தலங்களை இணைக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்ட சுரங்கப்பாதை. 20கிலோமீட்டர் அளவுக்கான பயணம் குறையும் என்பதால் இது கட்டப்பட்டது. ஆனால் பாறை மற்றும் மண்ணின் தன்மை குறித்து போதிய ஆய்வு இல்லாமல் கட்டப்பட்டதால் கட்டிக்கொண்டிருக்கும் போதே நிலச்சரிவு ஏற்பட்டு 40 தொழிலாளிகள் அதில் மாட்டிக்கொண்டனர். இதை குறித்த நெடுஞ்சாலைத் துறை தனது அறிக்கையில்,’ மெட்டா-சில்ட்ஸ்டோன் மற்றும் பைலைட்டுகள் போன்ற பலவீனமான பாறைகளில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்ததே காரணம்’ என கூறுகிறது.

இந்த பலவீனமான இடத்தில் பாதைகள், சுரங்கங்கள் உருவாக்கப்படும் போது மண் நெகிழ்வுத் தன்மையை அடைகிறது. நிலச்சரிவு பற்றி ”உத்தரகாண்ட்டில் உள்ள, புர்குண்டா, சிரோபாகர் பகுதியில், சூழலியல் நிபுணர்கள் நடத்திய ஒரு ஆராய்ச்சியில், சுரங்கங்கள் தோண்டும் பகுதிகளில், மலைகளில் உள்ள பிடிப்புத்தன்மை மென்மையாவதை கண்டறிந்தனர்”. பத்ரிநாத், கேதர்நாத் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல இங்குள்ள மலைகளில் சுரங்கங்கள் தோண்டி பாதைகள் அமைக்கப்படுகின்றன. அதனால் இந்தப் பகுதிகளில் நிலச்சரிவு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இமயமலை உருவாகி 4.50 கோடி ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையானது 150 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் பழங்குடியினர் இருந்த போது இயற்கை வளம் பாதிக்கப்படவில்லை. மண் பிடிப்புத்தன்மை கொண்ட மரங்கள் ஏராளமாக இருந்தன. ”ஆங்கிலேயர்கள் வந்து பழங்குடியினரை துரத்தி விட்டு நிலத்தை கையகப்படுத்தி மண்ணின் வளத்தை காக்கும் காடுகள் அழிக்கப்பட்டு டீ, காபி தோட்டங்கள் உருவாக்கினர். சுதந்திரத்திற்கு பிறகும் பெருமுதலாளிகளிடம் இந்த மலை சென்ற பின்பும் இதுவே தொடர்ந்தது. இதனால் மண்ணைப் பிடிமானமாக இறுக்கிய மரங்கள் குறைந்து, பிடிப்புத் தன்மையற்ற பணப்பயிர்கள் வளர்க்கப்பட்டன. இதன் காரணமாகவே மிக மோசமான பேரழிவுகள் ஏற்பட்டன”. வயநாடு நிலச்சரிவு இதற்கு தக்க சான்றாக இருக்கிறது. ’வயநாடு மட்டுமல்ல, நீலகிரி என குஜராத் மாநிலம்’ வரை நிலச்சரிவுகள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதாக அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த மலையைக் குடைந்து தான் நியூட்ரினோ எடுக்க திட்டம் தீட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்ய வேண்டிய மாற்றங்கள்:

உலக வெப்பமயமாதலால் உயரும் கடல் மட்டத்தினால் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்தியா மற்றும் இந்திய துணை கண்டம் சுற்றியுள்ள நாடுகளே பெரிதும் பாதிக்கப்படும். வருடம் 1.5C வெப்பமயமாகி கொண்டிருக்கும் இந்த வேளையில் இதற்கான எதிர்வினையை நாம் முன்னெடுத்தே ஆக வேண்டும்.

அதீத வெப்பத்தினால் நகரங்கள் நகர தீவுகளாக மாற வாய்ப்புள்ளன. இந்த விளைவை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் கட்டமைப்புகள் வேண்டும். வெப்பத்தினால் ஏற்படும் வறட்சியை தடுக்க உணவு பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். வறட்சியை தாங்கும் பயிற்களை விளைவிக்கும் ஆய்வுகளில் முதலீடு செய்ய வேண்டும். விவசாயத்தில் இதற்கேற்ற பயிர் வகைகளை விளைவித்தால் ஒழிய, வறுமையான சூழலில் இருந்து தப்பிக்க முடியாது. சிறுதானியங்கள், திணைகள் என வெப்பம் தாங்கும், நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களுக்கு மாற வேண்டும்.

கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க கடலோர ஒழுங்குமுறை மண்டலக் குறியீடுகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். நகர்ப்புற திட்டமிடுதல் அதற்கேற்ப அமைக்கப்பட வேண்டும். கடலோரத்தில் கட்டுமானங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

புவி வெப்பமாயமாதலில் 4 டிகிரி வெப்பம் அதிகமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் பனிப்பாறை உருகுகின்றன. இதன் மூலம் கங்கா-பிரம்மபுத்திரா மற்றும் சிந்துப் படுகைகள் மற்றும் ஆசியாவின் மற்ற முக்கிய நதிகளில் அதிக நீர் பாய்கிறது என்று உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் ஆற்றின் பாய்ச்சலை தேக்கும் வகையிலான நீர் சேமிப்புத் திறனில் பெரிய முதலீடுகள் தேவை.

இன்று காலநிலை மாற்றத்தின் தேவையை மனதில் கொண்டு சுற்றுச்சூழல் செயற்பாட்டளர்கள் பலர், உலகளவில் தங்கள் குரல்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர். கடந்த வாரம் 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று பணக்கார நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் போராட்டங்கள், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் விமான நிலையங்களிலும் அதைச் சுற்றியும் நடந்தன. இதில் இங்கிலாந்தில் 27 பேர், நியூயார்கில் 61 பேர் என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். காலநிலை பற்றி போராடும் இவர்களை மோசடிக்காரர்கள் என அரசுகளின் கைப்பாவைகளாக இருப்பவர்கள் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர், இவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்களாக சித்தரிக்கின்றனர். இதனால் உலகம் முழுதும் இயற்கையை காக்க போராடும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

உலகளாவிய அளவில், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களை கைது செய்யும் அரசுகளுக்கு புவி வெப்பமயமாதலைப் பற்றி துளியும் கவலையில்லை என்பதைத்தான் ஒவ்வொரு நாடும் ஆண்டு தோறும் காலநிலை சீரமைப்புக்கு ஒதுக்கும் நிதிகளை விட இராணுவத்துக்கு ஒதுக்கும் நிதிகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.

2022ன் இராணுவம், கல்வி மற்றும் சுகாதார, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற துறைகளுக்கு ஒதுக்கிய பட்ஜெட்டின் அளவுகோல்:

 

இராணுவம் (கோடி)

சுகாதாரம் (கோடி)

கல்வி (கோடி)

சுற்றுப்புற

சூழல் (கோடி)

இந்தியா

525000

83000

116428

3030

அமெரிக்கா

6798078.9

37693000

639937

7197.92

ரஷ்யா

603082

611459

184275

82023

பாகிஸ்தான்

97163

911.33

4338.843

1432.7

சீனா

1918137

10470000

7588008

661769

ஆப்கானிஸ்தான்

21778

6541.769

0.0

 

மேலே உள்ள அட்டவணையிலிருந்து இந்த நாடுகள் தங்களின் கல்வி, சுற்றுசூழல் , சுகாதாரத்தை விட இராணுவத்திற்கு அதிக செலவுகள் செய்வதை காணலாம். இன்றைய நிலையில் காலநிலை பேரிடரை எதிர்கொள்ள முடிவுகள் எடுப்பதே முக்கியமானது. ஆனால் புவியை மேலும், மேலும் வெப்பமயமாக்கும் போர் செயல்பாடுகளே முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை உலகளாவிய அளவில் நடக்கும் போர்களே உறுதிப்படுத்துகின்றன.

புதிய புதிய தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலங்கள், காடுகள் மற்றும் மலைகளையும் அழித்து வரும் வளர்ச்சிகள் இங்கு பேரழிவையே உண்டாக்குகிறது. அதுவும் மோடியின் கடந்த 10 வருட ஆட்சியில் வன சட்டம், சுற்றுச்சூழல் சட்டங்கள் என அனைத்திலும் தளர்வுகள் கொண்டு வந்து காடுகள் மலைகள் மற்றும் பல இயற்கை வாழ்விடங்கள் சிதைந்துள்ளது. இதன் விளைவாக இதுவரை இல்லாத அளவு பேரிடர்களை நாம் எதிர் கொள்ள நேர்ந்துள்ளது. இதனால் மனித உயிர்களின் பலி குறைவாக இருந்தாலும் மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்காமல் வஞ்சிக்கும் இந்திய அரசால் மக்களின் துயர் இன்னும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 2023 ல் நடந்த ஜி20 மாநாட்டில், ஒரு பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளில் இந்த நாடுகள் கவனம் செலுத்தும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இராணுவத்திற்கும், சுற்றுச்சூழலுக்கு இடையேயான வேறுபாடு நூற்றில் ஒரு மடங்கு கூட இல்லை. மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. பேரிடர்களின் மத்தியில் போருக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நிகழும் ஒவ்வொரு பேரிடரின் பின்புலத்திலும் உலகில் நடக்கும் போர்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. வல்லரசாக நிலை பெறும் போட்டியில் பூமியின் காலநிலை பலிகடாவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலக வல்லரசு நாடுகள் வருங்கால தலைமுறைக்கு பேரிடரையே சொத்தாக கொடுக்க நினைக்கிறார்கள்.

- மே பதினேழு இயக்கம்