இந்தப் புவிப்பந்தைப் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான உலக நாடுகளின் முயற்சியை வடஅமெரிக்க வல்லரசு தனது ஏகாதிபத்தியக் கொள்ளைக்காக சீர்குலைக்கிறது. பருவநிலை மாற்றம் குறித்த கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிவதற்கான எல்லா அறிகுறிகளும் உள்ளன. வட அமெரிக்காவின் இந்த வல்லாதிக்க சூழ்ச்சிக்கு இந்திய அரசு துணை போகிறது. புவிவெப்பமாதல் ஏற்படுத்தும் கொடிய விளைவுகள் அறிவியலாளர்கள் கணக்கிட்டதை விடவும் உண்மையில் தீவிரமாக உள்ளன என்பதை இப்போதைய ஆய்வுகள் மெய்ப்பித்து வருகின்றன.

புவிவெப்பமாதல், அதன் விளைவான பருவநிலை மாற்றம் ஆகியவை நவீனத் தொழில் வளர்ச்சி, நாகரிகம் என்ற பெயரால் கண்மண் தெரியாமல் நிலக்கரி, எரி எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எரித்ததால் விளைந்ததாகும். முதலாளியத்தின் இலாப வேட்டையும், முதலாளியம் உருவாக்கும் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு வெறியும் சேர்ந்து இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகக் கருதி அதனை அளவுக்கதிகமாக உறிஞ்சித் துப்பியதால் ஏற்பட்ட விளைவு இது.

ஐ.நா. நியமித்த பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களிடை ஆய்வுக்குழு (Inter Governmental Panel on Climatic Changes – IPCC) அளித்த அறிக்கைகள் இப்போதுள்ள நிலைமை தொடருமானால் 2035 ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1990ஆம் ஆண்டை ஒப்பிட 2கு செல்சியஸ் உயரும் என்று எச்சரித்தன. இவ்வாறு வெப்ப உயர்வு ஏற்பட்டால் வடதுருவ அலாஸ்காவின் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான பன்னடுக்குப் பனிப்பாறைகளில் கணிசமான பகுதி உருகிக் கடல் மட்டத்தை அதிகரித்துவிடும். தமிழ்நாட்டின் இராமேசுவரம் பகுதியிலுள்ள சிறுசிறுத் தீவுகளும், நாகப்பட்டினம் நகரத்தின் பெரும் பகுதியும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் நீண்ட கடற்பகுதியும் குறிப்பாக, மாமல்லபுரம், வேளாங்கண்ணி, திருச்செந்தூர் கடற்பகுதிகளும் கடல் அரிப்புக்கு தீனியாகி விடும்.

புவிவெப்பமாதல் கணிக்க முடியாத தாறுமாறான பருவநிலை மாற்றங்களை உருவாக்கி பேரழிவைக் கொண்டு வரும். (விரிவிற்கு காண்க: தமிழர் கண்ணோட்டம், மே 2007). இந்தப் பேரழிவிற்கு வட அமெரிக்க வல்லரசும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், ஜப்பானும் தான் முக்கியப் பொறுப்பு - அதிலும் அமெரிக்க வல்லரசின் பொறுப்பு தான் முதன்மையானது என்று அரசாங்கங்களிடை ஆய்வுக்குழு புள்ளி விவரங்களோடு எடுத்துக் கூறியது.

இவ்வாறான புவி வெப்பமாதல் தொடராமல் தடுப்பதற்கான மாற்று வழிகளையும், மாற்று பொருளியல் வளர்ச்சிப் பாதையையும் தனது வரம்புக்குட்பட்டு இந்த ஆய்வுக்குழு எடுத்துக் கூறியது. அது மட்டுமின்றி புவிவெப்பமாதலுக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடாத ஏழை நாடுகளும் உலகம் முழுவதுமுள்ள ஏழைகளும் தான் அதிகம் இதற்கு பலியாகிறார்கள் எனவும் சுட்டிக் காட்டியது.

எனவே, பாதிப்பை உருவாக்கியவர்கள் தான் அதற்கான மாற்றைக் கொணர்வதிலும் அதிகம் பொறுப்பேற்க வேண்டும். மாசு படுத்திய நாடுகளே மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு வளர்முக நாடுகளுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என ஆய்வுக்குழு பரிந்துரைத்தது. புவிவெப்பமாதல் உயராமல் நிலைப்படுத்தப்பட வேண்டுமென்றால் 2050ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களின் அளவு 1990ஆம் ஆண்டை ஒப்பிட 80 விழுக்காடாவது குறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று
வரையறுத்தது.

இதனடிப்படையில் 1997 டிசம்பரில் ஜப்பானின் கியோட்டோ நகரில் கூடிய உலக நாடுகள் இதற்கான முதற்கட்ட செயல்திட்டத்தை விவாதித்து முடிவெடுத்தன. 1997 டிசம்பர் 11-இல் வெளியிடப்பட்ட ‘கியோட்டோ அறிக்கை’ உலக நாடுகள் குறைக்க வேண்டிய பசுமை இல்ல வாயுக்களின் அளவை வரையறுத்தது. 1990 ஆம் ஆண்டில் புவியைச் சுற்றி வளிமண்டலத்தில் இருந்த பசுமை இல்ல வாயுக்களின் அளவிலிருந்து 5.2 விழுக்காடு 2012ஆம் ஆண்டுக்குள் குறைத்துக் கொள்ள வேண்டும் என உலக நாடுகளுக்கு சராசரி வரம்பு விதிக்கப்பட்டது.

ஆயினும், இதில் ஒவ்வொரு நாடும் குறைத்துக் கொள்ள வேண்டிய அளவுகள் வெவ்வேறாக அறிவிக்கப்பட்டன. வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற மாசுபடுத்துவதில் முன்னணிப் பங்கு வகிக்கும் நாடுகளுக்குக் குறைக்க வேண்டிய அளவு அதிகம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது தான் திட்டமிட்டபடி 2012ஆம் ஆண்டுக்குள் 5.2 விழுக்காட்டு அளவிற்கு பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முடியும்.

கியோட்டோ முடிவை அமெரிக்க வல்லரசு கட்டுப்படுத்தும் விதியாக(Binding Clause) ஏற்க மறுத்தது. அதன் வற்புறுத்தலுக்கு இணங்க கியோட்டோ முடிவு வெறும் அறிக்கை(Protocol) வடிவில் ஏற்கப்பட்டது. வரம்பு ஆண்டு (2012) முடிவதற்கு முன்பாகவே அடுத்தக் கட்டம் நிறைவேற்ற வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து உரிய கால அவகாசத்தோடு பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது.

அதனடிப்படையில் இந்தோனேசியா பாலித் தீவில் 2007 டிசம்பரில் உயர்மட்ட உலக மாநாடு நடைபெற்று அடுத்தக் கட்ட செயல்திட்டத்தை இறுதி செய்வதற்கான கால அட்டவணை முடிவு செய்யப்பட்டது. 2013 தொடங்கி 2020 வரை நிறைவேற்ற வேண்டிய அடுத்தத் தவணை பசுமை இல்ல வாயுக் குறைப்பு குறித்து 2009க்குள் முடிவு செய்ய வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கேற்ப 2009 டிசம்பர் 7 முதல் 18 வரை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பருவநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு பலமாதங்களுக்கு முன்பாகவே தனது வரைவுத் திட்டத்தை முன் வைத்து விட்டது. சுமார் 180 பக்க இந்த வரைவின் மீது பல்வேறு கட்டங்களாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் முதன்மை நாடுகளின் பேராளர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன.

இந்த வரிசையில் கடைசிக் கட்டமாக 2009 அக்டோபர் 9-இல் பேங்காக்கில் முடிவடைந்த கலந்தாய்வு கூட்ட நடவடிக்கை கோபன்ஹேகனில் உருப்படியான முடிவு ஒன்றும் எட்டப்பட வாய்ப்பில்லை என்பதை எடுத்துக் காட்டியது. கியோட்டோ அறிக்கையை அடிப்படை அளவீடாகக் கொண்டு அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தையை நடத்த முடியாது என்று அமெரிக்க பேராளர் குழுவின் தலைவர் ஜொனாதன் பெர்சிங் பிடிவாதமாகக் கூறினார்.

கியோட்டோ அறிக்கை புவியின் காற்று மண்டலத்தில் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் சமஅளவு உரிமையுண்டு என்று அறிவித்திருந்தது. எனவே, தனிநபர் மாசுபாட்டு அளவு(Per Capita Pollution) என்பதை மாசுபாட்டு குறைப்பைத் தீர்மானிப்பதற்கான அடிப்படை அலகாக எடுத்துக் கொண்டது.

இந்தக் கோட்பாட்டை இப்போது அமெரிக்க வல்லரசு ஏற்க மறுக்கிறது. உலகில் மக்கள் தொகை மிகுந்த சீனாவையும் இந்தியாவையும் விட காற்று மண்டலத்தை அதிகம் மாசுபடுத்தியது ஒப்பீட்டளவில் மக்கள் தொகைக் குறைவான அமெரிக்கா தான். எனவே, அதன் தனிநபர் மாசுபாட்டு அளவு இந்நாடுகளை விட பன்மடங்கு அதிகம். அதற்கு ஏற்ப மாசுபாட்டு அளவை 1990ஆம் ஆண்டை ஒப்பிட குறைந்தது 40 விழுக்காடு அளவுக்கு 2020க்குள் அமெரிக்கா குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். இது அமெரிக்க பகாசுர முதலாளிகளின் கொள்ளை இலாபத்தில் சிராய்ப்பை ஏற்படுத்தும். வெறித்தனமான அமெரிக்கர்களின் நுகர்வில் சற்று குறைவை ஏற்படுத்தும். இதனால் தான் அமெரிக்க அரசு இதனை ஏற்க மறுக்கிறது.

இன்னொன்று, மாசுபாட்டைக் குறைப்பதில் “பொது நோக்கு - வேறுபட்ட பொறுப்பு” (Common but differential responsibilities) என்ற கோட்பாட்டை கியோட்டோ வரையறுத்திருந்தது. இப்போது இந்த பொறுப்பையும் அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. உலகு தழுவிய பலதரப்பு ஒப்பந்தம்(Multilateral Agreement) பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினையில் சாத்தியமில்லை என்று பேங்காக்கில் இறுதி நாளன்று அமெரிக்கத் தரப்பு அறிவித்தவுடன் ஜி- 77 என்ற வளர்முக நாடுகளின் அணிப் பேராளர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

ஆனால் இதே வல்லரசு தான் வணிகம் என்று வருகிற போது உலக வர்த்தக அமைப்பில் ஒரே சந்தை, ஒரே இடத்தில் பலதரப்பு ஒப்பந்தம் என்று வலியுறுத்துகிறது. கொள் என்றால் வாய்ப் பிளக்கும்; கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளும் குதிரை இது.

“அந்தந்த நாடுகளும் தங்களால் எந்தளவு பசுமை இல்ல வாயுக்களை தங்கள் சொந்த முயற்சியில் குறைத்துக் கொள்ள முடியும் என்று முடிவு செய்துவிட்டு, அவற்றின் தொகுப்பாக பசுமை இல்ல வாயுக் குறைப்பு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும்” என்று அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் பெர்சிங் அறிவித்தார். சென்ற ஆண்டு வரை பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதில், பசுமை மின்னாற்றல் பயன்பாட்டில்(அனல் மின்சாரம் அல்லாத காற்றாலை மின்சாரம், கடலலை மின்சாரம், கதிரவன் மின்சாரம் போன்றவற்றில்) முன்னோடியாக இருக்கப் போவதாக அறிவித்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பேங்காக் பேச்சுவார்த்தையில் பின்வாங்கத் தொடங்கின.

உண்மையில் அமெரிக்க - ஐரோப்பிய சதி முன்னமேயே தயாராகிவிட்டது. கடந்த மே மாதம் பருவநிலை பேச்சு வார்த்தைக்கான மாற்று ஆலோசனை என்ற பெயரால் ஆஸ்திரேலிய அரசு முன் வைத்த அறிக்கையிலேயே அக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவிட்டன. ஆஸ்திரேலிய அறிக்கை அதாவது அமெரிக்க - ஐரோப்பிய சதித்திட்டம் கியோட்டோ கோட்பாட்டையே கொல்கிறது.

ஒன்று: பொது நோக்கு - வேறுபட்டப் பொறுப்பு என்ற கோட்பாட்டையே அது கைவிடுகிறது. இவ்வளவு காலம் வரலாற்று வழியில் அதிகம் மாசுபடுத்தியவர்கள் அதிகம் பொறுப்பேற்க வேண்டும் என்ற நியாயத்தை அது காலில் போட்டு மிதிக்கிறது. மாறாக ஒத்த தன்மையுள்ள உறுதிமொழி (Similar Commitments) எல்லா நாடுகளும் வழங்க வேண்டும் எனக் கோருகிறது. தனிநபர் மாசுபாட்டு அளவு என்பதற்கு பதிலாக இப்போது வெளியாகும் மாசுபாட்டின் அளவு (Actual Emission) என்பதே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. அண்மைக் காலமாக தொழில் வளர்ச்சியில் முன்னிற்கும் சீனாவையும் இந்தியாவையும் பிரேசிலையும் குறி வைத்தே இந்த நிபந்தனையை இத்திட்டம் முன் வைக்கிறது.

கிட்டத்தட்ட அமெரிக்காவின் அளவிற்கே பிற நாடுகளின் மாசுபாட்டுக் குறைப்புக் கடமையும் வரையறுக்கப்படும் அல்லது பிற நாடுகளின் அளவிற்கே அமெரிக்காவின் பொறுப்பும் குறைவாக இருக்கும்.

இரண்டாவதாக, அந்தந்த நாடுகளே தங்கள் சொந்தப் பொறுப்பில் மாசுபாட்டுக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு அந்த செயல் திட்டத்தை பேச்சு வார்த்தையில் தமது தரப்பு முயற்சியாக முன் வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அறிக்கைக் கூறுகிறது. வளர்முக நாடுகள் மாசுபாட்டுக் குறைப்பு தொழில் முயற்சியை மேற்கொள்வதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் வழங்க வேண்டுமென்று கியோட்டோ கோட்பாடு கூறியது. ஏனெனில், திறந்த பொருளாதாரச் சூழலில் மாசுபாட்டுக் குறைப்பு நடவடிக்கையில் வளர்முக நாடுகள் ஈடுபடும் பொழுது, அவற்றின் உற்பத்திச் செலவு கூடி சந்தைப் போட்டியில் நசுக்கப்படும் ஆபத்து உண்டு.

எனவே தான் பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் மாசு நீக்கல் நடவடிக்கையில் ஏழை நாடுகளுக்கு தொடக்கத்தில் ஆகும் கூடுதல் செலவை தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் ஏற்க வேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் நோக்கம். ஆஸ்திரேலியா அறிக்கை இந்த நிதிப் பொறுப்பிலிருந்து அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் விடுவித்து விடுகிறது. அந்தந்த நாடுகளும் சொந்த செலவிலேயே இம்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதற்கேற்ப அமெரிக்க அரசு கெர்ரி - பாக்ஸர் மசோதா என்ற ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன் வைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜான் கெர்ரி - பார்பரா பாக்ஸர் ஆகியோர் பெயரால் முன் மொழியப்படுவதால் இம்மசோதா விற்கு இந்தப் பெயர்.

இதன்படி அமெரிக்கா 2020ஆம் ஆண்டுக்குள் ஏழு விழுக்காடு அளவிற்கே பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டை குறைத்துக் கொண்டால் போதுமானது. கோபன்ஹேகன் மாநாட்டுக்கான பேங்காக் வரைவு அமெரிக்கா குறைத்துக் கொள்ள வேண்டிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு 40 விழுக்காடு என்று கோரியது. இதனுடன் கெர்ரி - பாக்ஸர் குறிப்பிடும் அளவை ஒப்பிட்டால் அமெரிக்கா எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுக்கிறது என்பது தெளிவாகும்.

மூன்றாவது, இவ்வாறு மனம் போன போக்கில் ஒவ்வொரு நாடும் பசுமை இல்ல வாயுக்களின் குறைப்பை முடிவு செய்து விட்டு, அவற்றின் கூட்டுத் தொகையாக ஒரு பொது முடிவை வரையறுப்பது என்பது வெறும் சந்தைக் கூச்சலுக்கே இட்டுச் செல்லும். அறிவியல் அடிப்படையில் கூறப்பட்டுள்ள அபாய அறிவிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு இடையூறில்லாத தன்னிச்சையான அளவுகள் முடிவு செய்யப்படுவது புவிவெப்பமாதலைக் குறைப்பதற்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

ஏகாதிபத்திய நாடுகளின் தன்னலத் திட்டத்திற்கு பேங்காக் பேச்சுவார்த்தையின் போது திடீரென்று இந்திய அரசு ஆதரவளித்தது. அதுவரை ஜி-77 என்ற வளர்முக - ஏழை நாடுகளின் அணிக்கு தலைமைப் பாத்திரம் வகித்த இந்தியா பேங்காக்கில் அக்டோபர் 9-ஆம் நாள் தலைக்குப்புற விழுந்தது வளர்முக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், இந்திய அரசின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப் பவர்களுக்கு இது வியப்பளிக்காது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேசு இப்பேச்சு வார்த்தையில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய உத்தி குறித்து பிரதமருக்கு முன் வைத்த குறிப்பில் இதனை விளக்குகிறார். “இந்தியாவின் நலன்கள் ஜி-20 என்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு பின்னப்பட்டுள்ளதே தவிர ஜி-77 அணியிலுள்ள ஏழை நாடுகளோடு அல்ல. பருவநிலை பேச்சுவார்த்தையில் அமெரிக்கா எந்த அளவு வருகிறதோ அந்தளவில் ஒத்துப் போவதே நமக்கு நல்லது. அமெரிக்காவோடு ஒத்துப் போவது தான் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இடம் பெறுவதற்கு ஏற்ற உத்தி. கோபன்ஹேகன் பேச்சுவார்த்தையில் அதிகம் பேசாமல் அமைதி காப்பதே நல்லது” என்று ஜெய்ராம் ரமேசு கூறுகிறார்.

“புவிவெப்பமாதலைக் குறைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நம் நாட்டுக்குரிய சட்டதிட்டங்களை, வெளி உதவி ஏதுமின்றி நாமே மேற்கொள்வோம். அத்திட்டங்கள் நாம் ஏற்றுக் கொண்ட பசுமை இல்ல வாயுக் குறைப்பை நிறைவேற்றுகிறதா என்பதை உலக நாடுகள் கண்காணித்துக் கொள்ளட்டும்” என்பது ஜெய்ராம் ரமேசு முன்வைத்துள்ளத் திட்டம்.

அமெரிக்க - ஐரோப்பிய சதி அடிப்படையிலான ஆஸ்திரேலிய அறிக்கைக் கூறுவதும் இது தான். பருவநிலை பேச்சு வார்த்தை யை இயற்கை அறிவியல் என்ற அடிப்படையிலிருந்து மாற்றி அரசியல் ஆதிக்கப் பகிர்வு என்பதோடு முடிச்சுப் போடுகிறார் ரமேசு.

அணு ஒப்பந்தத்தை போலவே பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தையும் அமெரிக்காவின் கண்காணிப்புக்கும், கட்டுத் திட்டங்களுக்கும் உட்பட்ட இளைய பங்காளியாக இந்தியாவை நிலை நிறுத்த இந்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது. உண்மையில் ஜி-77 நாடுகளின் எதிர்ப்பை மீறி ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவால் வர முடியாது. இது ஜெய்ராம் ரமேசுக்கோ மன்மோகன் சிங்கிற்கோ தெரியாததல்ல. இந்திய மக்களில் சிலரிடம் குடிகொண்டுள்ள வல்லரசுக் கனவைப் பயன்படுத்திக் கொண்டு எல்லா நிலையிலும் இந்தியாவை அமெரிக்காவின் ஓடும் பிள்ளையாக மாற்றுவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே இது.

தனது இத்திட்டத்தை கோபன் ஹேகனில் நவம்பர் 6, 7 நாட்களில் நடைபெற்ற அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தையில் இந்தியத் தரப்பு கருத்தாக வெளிப்படையாக ஜெய்ராம் ரமேசு அறிவித்தார். அவ்வாறு அறிவிப்பதற்கு முன்னால் இந்தியத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவிடம் அவர் கலந்து கொள்ள இல்லை. அதிர்ச்சியடைந்த சிலர் இந்தியாவின் இம்முடிவு வளர்முக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தி விடாதா என்று கேட்ட போது “தனிமைப்படுவதைப் பற்றிக் கவலையில்லை. இன்றுள்ள சூழலில் யாருடன் அணி சேர வேண்டுமோ அவர்களோடு இருந்தால் போதும்” என்று தடித்தனமாக பதிலுரைத்தார் ஜெய்ராம் ரமேசு.

இந்திய அரசின் இம்முடிவு கோபன்ஹேகன் பேச்சுவார்த்தையை பயனற்றதாக மாற்றிவிடும். புவிவெப்பமாதல் - அதனால் உருவாகும் பருவநிலை மாற்றங்கள் ஆகியவை உலகு தழுவி எளிய மக்களுக்கு பேரழிவை உண்டாக்கவல்லவை. நீண்ட கடற்கரையும், பருவமழையை நம்பியிருக்கும் பாசன முறையும் உள்ள தமிழ்நாட்டிற்கு பெரும் கேட்டை உருவாக்கக் கூடியவை.

இந்தியாவை தெற்காசியாவின் இராணுவ வல்லரசாக மாற்றுவதற்கு தமிழ்நாட்டையும், இந்தியா முழுவதுமுள்ள எளிய மக்களையும் பலியிடுவதற்கு இந்திய அரசு அணியமாக இருக்கிறது என்பதற்கு கோபன்ஹேகனில் இந்திய அரசின் அணுகும் முறை மேலும் ஒரு எடுத்துக்காட்டு. அறிவியலாளர்களும், படித்த இளைஞர்களும் முக்கியமான இச்சிக்கல் குறித்து விழிப்படைந்து அமெரிக்க - இந்திய வல்லாதிக்க கூட்டணியின் சதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

- கி.வெங்கட்ராமன்

Pin It