அது வெறும் பேச்சன்று! அழுத்தமான, ஆணித்தரமான பறைசாற்றல்! “பெரியார்தான் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அரசுதான் பெரியார் “ என்று சொல்வதற்கு ஒரு முதலமைச்சருக்கு மிகப்பெரிய தெளிவும், துணிவும் வேண்டும். அது நம் முதலமைச்சரிடம் இருப்பது கண்டு வியப்படைகிறோம், பாராட்டுகிறோம், வணங்கி வரவேற்கிறோம்! அதுவும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில், எங்கள் கொள்கை இதுதான் என்று அறிவித்ததன் மூலம், எண்ணிப் பார்க்க முடியாத உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் நம் மாண்புமிகு முதலமைச்சர்!

ஏற்கனவே இதுபோன்று ,பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் இருவரும் அறிவித்திருக்கிறார்களே - ஏன், இன்றைய முதலமைச்சரும் கூட இப்படிச் சொல்லி இருக்கிறாரே - என்று கேட்கலாம். உண்மைதான்! ஆனால் இப்போது அதற்கான தேவை கூடுதலாக இருக்கிறது என்பதோடு, கருத்துப் பகைவர்கள் களத்தில் சூழ்ந்து இருக்கிற தருணத்தில், இதனை உறுதிப்படுத்துவது மிக மிகத் தேவையாகவும் காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கிறது.k veeramani and mk stalin06.10.2023 அன்று தஞ்சையில் திராவிடர் கழகம் நடத்திய, கலைஞர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதுதான் முதல்வர் இந்தச் செய்திகளைக் குறிப்பிட்டார். “தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்பார்கள். நான் என் பார்வையில் இரண்டு கழகங்களும் உயிரும், உணர்வுமாய் இயங்குகின்றவை என்று சொல்கிறேன்” என்றும் அவர் உரத்து முழங்கினார்.

இப்போது அப்படி என்ன தேவை வந்துவிட்டது என்று நாம் கருதி விடக்கூடாது. அறநிலையத்துறை பற்றிப் பிரதமர் மோடியே பேசுகிறார் என்றால், பின்புலத்தில் ஏதோ ஒரு திட்டம் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொருள். இன்றைக்கு நேற்றைக்கு இல்லை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நடைமுறைக்கு வந்த அந்தத் திட்டம் பற்றி இங்கே இருக்கும் சில்லறைகள் சிலர் பேசுவது வேறு! ஒரு நாட்டின் பிரதமர் பேசுவது என்பது வேறு!

இரண்டு நாள்களுக்கு முன்பு நம் முதலமைச்சர் அவர்கள் இதையும் ஒரு கூட்டத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறார். அவர் பேசிய அந்த மேடையில் இருந்த தினமலர் ஆசிரியர் போன்றவர்கள் அறநிலையத் துறையை அரசு கையில் வைத்திருப்பதை எதிர்க்கிறார்கள். ஆனால் அவரே ஒரு கோயிலில் அறங்காவலராக இருக்கிறார். அப்படியானால் அவரும் கோயிலை ஆக்கிரமித்து இருக்கிறவர்களில் ஒருவர்தானா என்று நம் கழகத்தின் தலைவர் முதல்வர் கேட்டிருக்கிறார்.

1907 ஆம் ஆண்டு தொடங்கி, “தர்ம ரட்சண சபை” போன்ற இந்து மதச் சார்புடைய அமைப்புகளே, கோயில்கள் குறிப்பிட்ட ஒரு சாதியினரின் சொத்தாக மாறிக்கொண்டிருப்பதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்தத் தீர்மானங்களை அரசுக்கும் அவர்கள் அனுப்பி இருக்கிறார்கள். அவற்றை அடிப்படையாகக் கொண்டே, நீதிக் கட்சியின் ஆட்சியில் அறநிலையத் துறை என ஒன்று உருவாக்கப்பட்டது.

காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்திலும், இப்படிச் சில எதிர்ப்புகள் வந்தன. அப்போது முழுக்க முழுக்க இந்து மதச் சார்புடைய சர் சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் போடப்பட்ட குழுவும் கூட, அறநிலையத் துறையின் தேவையையும், நியாயத்தையும் வலியுறுத்தித்தான் அறிக்கை தந்தது.

இப்போது மீண்டும் அதனை எழுப்புகிறார்கள். இது போன்ற சூழலில்தான், தி.க. விற்கும், தி.மு.க.விற்கும் இடையில் உள்ள உறவை, நெருக்கத்தை, உணர்வை, முதலமைச்சர் வெளிப்படுத்தி இருக்கிறார். முதலமைச்சரின் கொள்கை உறுதிக்கும், துணிவுக்கும், நம் தலை தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுகளும்!!

- சுப.வீரபாண்டியன்

Pin It