தமிழ்நாட்டுக்கு தனிக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறது. ஒன்றிய ஆட்சியின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்பதே இது கூறும் செய்தி. பட்ஜெட் குறித்து கழக சார்பில் கழகப் பொதுச்செயலாளரும், 100 நாள் சாதனைக் குறித்து கழகத் தலைவரும் பதிவிட்ட கருத்துகள்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட கருத்து:

ஒரு கட்சி தேர்தல் அறிக்கை அளிக்கிறது என்றால், அது தனது ஆட்சி காலத்தில் இன்ன இன்ன சாதனைகளை நிறைவேற்றுவோம் என்ற திட்டங்களை அறிவிப்பது தான் தேர்தல் அறிவிப்பு. ஆனால் 100 நாட்கள் முடிவதற்கு முன்பே ஆயிரம் கேள்விகள் எழுகிறது, எதிர்க்கட்சிகளிடமிருந்து. ஆனால் அதையும் மீறி நூறாவது நாளில் ஆயிரம் சாதனைகளை செய்து முடித்திருக்கிறார்கள். ‘பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாத ஒன்று. அதை நிறைவேற்றினார்கள். பெட்ரோல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள், அதை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளார்கள். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் கூறினாரே, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்’ என்ற திட்டத்தின்படி பணி நியமனம் ஆணைகளை வழங்கியிருக்கிறார்கள்.

stalin with archakarsஆட்சியேற்ற நூறு நாட்களில் மிகச் சிறந்த சாதனைகளை பகட்டாய் சொல்லிக் கொள்ளாமல், அமைதியாய் செய்து முடித்துக் கொண்டிருக்கிற அரசாக திமுக அரசு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஒரு முறை கூறினார், ‘எங்களுக்கு வாக்களித்தோர் மகிழ்கிற வகையிலும், வாக்களிக்காதோர், அய்யோ இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே என்று ஏங்குகிற வகையிலும் இருக்கும்’ என்றார். அந்தச் சொல்லை நூறு நாட்களுக்குள் நிறைவேற்றியிருக்கிறார் என்ற மகிழ்ச்சி தான் இந்த 100 நாட்களில் எங்களுக்கு உள்ளது.

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்ட கருத்து:

தமிழக நிதி அமைச்சர் 13.08.2021 அன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பின ராலும் வரவேற்கப்படுகின்றது. எதிர்க்கட்சிகள், தேர்தல் வாக்குறுதிகளில் கொடுக்கப்பட்ட அனைத்தையும் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கிறார்களே தவிர நிதி நிலை அறிக்கை குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் ஏதும் இல்லை. கடும் கொரோனா நெருக்கடியிலே ஆட்சிக்கு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம். கடன் சுமையோ மிக மிக அதிகம். திமுக பல வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்திருந்தது. இந்த நிலையில் இந்த அறிக்கையை தயாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் இந்த நிதி நிலை அறிக்கை தமிழக அரசின் எதிர்கால பொருளாதார கொள்கையின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை திட்டவட்டமாக சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.

ஒரு அரசு கடன் வாங்குவதில் தவறில்லை, ஆனால் அந்தக் கடன் மூலதனத்திற்கு செலவிடப்பட வேண்டி யதாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கும், ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கும் இருந்தால் அது மிக மிக மோசமான நிர்வாகம். அத்தகைய ஒரு நிர்வாகத்தை எதிர்காலத்தில் நாம் நிச்சயம் நடத்தக் கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி உறுதியாக இருக்கிறது என்பதை இந்த நிதி நிலை அறிக்கை உணர்த்தி இருக்கிறது.

தமிழ்நாட்டினுடைய நிதித்துறை செயலாளர், ‘எந்தக் கண்ணோட்டத்திலே நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி யிருக்கிறார். இந்த ஆறு மாத காலத்தில் இதன் பயனை அல்லது இதன் வெற்றியை காணா விட்டாலும், இனி அடுத்தடுத்து வாங்குகின்ற கடனை, மாநிலத் தினுடைய மூலதனத்திற்கு மட்டுமே பயன்படுத்து வோம் என்ற கொள்கையில் திசை மாறாமல் இந்த அரசு நடைபோடும்’ என்று அவர் தெளிவாக கூறியிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மக்களை சந்தித்து, மக்களின் குறை கேட்டு மனுக்களைப் பெறுகின்ற ஒரு திட்டத்தைத் தொடங்கினார். 100 நாட்களுக்குள் இந்த மனுக்கள் மீதான பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என்று அவர் உறுதியளித் திருந்தார். எதிர்க்கட்சிகள் அதை கேலி செய்தனர். அவர் மனுக்களை வாங்கிப் போடும் பெட்டிகள், இறுதி வரை திறக்கப் போவதேயில்லை, மு.க. ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்றெல்லாம் கேலி பேசினர். ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வர் இதற்கான தனித் துறையைத் தொடங்கி 100 நாட்களுக்குள் இப்போது அந்தப் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு அரசின் சார்பில் இப்போது வெளிவந்திருக்கிறது.

4.75 இலட்சம் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப் பட்டன. இதில் முழுமையாக 2.29 இலட்சம் மனுக்களின் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்பட்டு, மக்களிடம், பயன்பெற்றவர்களிடம், நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும், உங்கள் பிரச்சனை இதன் மூலம் தீர்ந்திருக்கிறதா என்றும் கேட்டும் அறிந்திருக்கிறது. தீர்க்கவே முடியாத பல பிரச்சனைகள் மனுக்களாக வந்தபோது, அதுகுறித்து அவர்கள் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பையும் ஆட்சி வழங்கி யிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள், தனி நபர்கள் பட்டாக்களை பெற்றிருக்கிறார்கள், நிதி உதவிகளை பெற்றிருக்கிறார்கள் என்று அரசி னுடைய அறிவிப்புகள் கூறுகின்றன. 100 நாட்களில் சொன்னதை சொன்னவாறு செய்து முடித்திருக் கிறது, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.

நிதி நிலை அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட ‘தேசிய கல்விக் கொள்கை’ யை முற்றிலுமாக நிராகரித்து தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசே உருவாக்கும் அது தமிழ்நாட்டினுடைய தனித்துவத்தின் அடிப்படை யிலே இருக்கும். ‘இதற்காக கல்வி நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைப்போம்’ என்ற அறிவிப்பு தான் இதில் மிகவும் பிரதானமானது. இதற்காக சுமார் 32000 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியிருக் கிறது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

‘திராவிடன் மாடல்’ என்பதனுடைய அடை யாளம் விளிம்பு நிலை மக்களை அதிகாரப் படுத்துவது தான். விளிம்புநிலை மக்களை எப்படி அதிகாரப்படுத்துவது? அவர்களுக்கான கல்வி உரிமை, அவர்களுக்கான மருத்துவ கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்கான வாழ்விட உரிமைகள், அவர்களுக்கான வாழ்வுரிமை திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுதல் ஆகியவற்றின் வழியாக அவர்கள் அதிகாரப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரப்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்கள் சுயமரியாதையை இயல்பாகவே பெற்று விடு கிறார்கள். எனவே சுயமரியாதை என்ற கோட் பாட்டின் அடிப்படையில் தான் திராவிட இயக்கம் தன்னுடைய கொள்கைகளை, திட்டங்களை வகுத்து முன்னேறுகிறது என்பதை இந்த 100 நாள் ஆட்சி நாட்டுக்கு உணர்த்தி நிற்கிறது. கடந்து வந்த சாதனைகளை திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு பெருமையை இன்றைக்கு தமிழர்களுக்கு, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக இருந்து உருவாக்கி நிகழ்த்தி காட்டி இருக்கிறார். இந்தத் திட்டங்களுக்கு நாம் மக்களுடைய ஆதரவைப் பெறுவோம். புழுங்கிக் கிடக்கின்ற, பூணூல்வாதிகள், மனுவாதிகளினுடைய அழுகுரல்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கட்டும். திராவிடன் மாடல் சமூகநீதி பயணம் தொடரட்டும்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள் நீங்கியது

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் மகத்தான சமூக புரட்சி ஒன்று அமைதியாக அரங்கேறியிருக்கிறது. இந்தப் புரட்சியை தமிழ்நாடு அரசு செய்து முடித்திருக்கிறது. “பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற விரும்பிய கலைஞரின் ஆணையை இன்று நான் நிறைவேற்றினேன். பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்குப் பணி நியமனத்திற்கான ஆணைகளை பிறப்பித்தேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

ஆம், அர்ச்சகர் பயிற்சி முடித்து 13 ஆண்டுகாலத்திற்கு மேலாகப் பணிக்காகக் காத்திருந்த அனைத்து ஜாதியினரையும் சேர்ந்தவர்களுக்கு இன்றைக்கு முதல் கட்டமாக 24 பேருக்கான பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குன்றக்குடி அடிகளாரும், பேரூர் ஆதினமும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது இந்த நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய சிறப்பாகும்.

பெரியார் தொடங்கிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற போராட்டத்திற்கு தோளோடு தோள் நின்று ஆதரவு கொடுத்தவர் மறைந்த மூத்த ‘குன்றக்குடி அடிகளார்’ ஆவார். அவருடைய வாரிசு இன்றைக்கு அந்தப் பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று இருக்கிறார். பெரியார் திராவிடர் கழகம் சேலத்தில் தமிழ் வழிபாட்டு உரிமை மாநாட்டை நடத்தியபோது அதில் பங்கேற்று உரையாற்றியவர் பேரூர் ஆதீனம். அவரும் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று பெருமை சேர்த்து இருக்கிறார். நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில், பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 12 பேர், பார்ப்பனரல்லாத உயர்ஜாதி சமூகத்தைச் சார்ந்தவர் ஒருவர், இதில் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவரங்கம் ரெங்கநாதசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், வயலூர் முருகன் உள்ளிட்ட பெரிய கோவில்களிலும் இவர்கள் உப அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்க தனிச் சிறப்பாகும்.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவோம் என்று, திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை, 100 நாட்களில் செய்து முடிப்போம் என்று பதவியேற்றவுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். அதேபோல் 100 ஆவது நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் பேராதரவுடன் இந்த மகத்தான புரட்சி நிறைவேறியிருக்கிறது. சமூக சமத்துவ வரலாற்றில் இது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள். பெரியாருடைய சமூக புரட்சித் தத்துவம் வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறுவதற்கு தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்திருக்கிற நாள்.

Pin It