ஆஸ்திரேலியா! பெயரைக் கேட்டாலே பெரும்பாலான இளசுகளுக்கு கங்காருகளும், இன்னும் சில பெருசுகளுக்கு இந்தியன் படத்தின் 'டெலிபோன் மணி போல்' பாட்டும், வெகு சிலருக்கு ஈழ அகதிகளின் வாழ்விடமும் என அவரவர்களின் நிலைக்கேற்ப நினைவில் வந்து போகும்.

australia fireதற்போது, அனைவரும் அங்கே பரவிக் கொண்டிருக்கும் காட்டுத் தீ, அதனால் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் குறித்தும், இனி அதன் பக்கவிளைவான சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

உலகின் நுரையீரலாக காடுகள் செயல்படுகின்றது. ஆனால் கார்ப்ரேட் முதலாளிகளுக்கோ எண்ணற்ற கனிம வளங்களை எப்படி சூறையாடலாம், எப்படி பணமாக மாற்றலாம் என்றே தெரிகின்றது. சமீபத்திய அமேசான் காடுகளில் ஏற்பட்ட கட்டுக்கடங்கா காட்டுத் தீயினை அரசே முன்னின்று ஏற்படுத்தி, அதற்கு நாட்டின் வளர்ச்சி என்னும் பக்தியினை ஊட்டி அதனை எதிர்த்தவர்களை தேச விரோதிகளாகக் காட்டியதை இன்னும் மறந்திட இயலாது.

ஆஸ்திரேலியாவிலோ கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போதுவரை நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்து வரும் காட்டுத் தீயால் அப்பகுதி வானம் முழுவதும் ரத்தச் சிவப்பு நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. காட்டுத் தீயில் பல உயிரினங்கள் உடல் கருகி இறக்கின்றன. 

"பெரிய விலங்கினங்களான கங்காரு, ஈமு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் தங்களை நோக்கி வரும் தீயைப் பார்த்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கும். ஆனால், அதிக தொலைவு செல்ல முடியாத மற்றும் அந்தக் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் சிறிய உயிரினங்கள் நிச்சயம் காட்டுத் தீயில் சிக்கியிருக்கக் கூடும்" என ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் வல்லுநரும், சிட்னி பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் கூறுகின்றார்.  

ஆஸ்திரேலியக் காடுகளில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன வாழ்வதாக கிறிஸ் டிக்மேன் கூறுகின்றார். அப்படியிருக்கையில் இப்போது நிகழ்ந்திருக்கும் பேரழிவில் கிட்டத்தட்ட 480 பில்லியன் உயிரினங்கள் இறந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகும். University of Reading பேராசிரியர் டாம் ஆலிவர், "இந்த காட்டுத் தீயில் உயிரிழந்த பல்வேறு விலங்கினங்களின் வாழ்விட அடர்த்தி குறித்த தரவுகள் கிடைக்காததால், ஏற்கனவே அறியப்பட்ட மற்ற விலங்கினங்களின் வாழ்விட அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டே இந்த கணக்கீடு மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும்" என்று கூறுகிறார். இதுவே பொருத்தமான கருத்தாக கருதிட வேண்டும். 

Chaos Theory என்று ஆய்வாளர்களால் பேசப்படும் கருத்தியலின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயினால் நமக்கு பாதிப்பு  ஏதும் இல்லை என நாம் ஒவ்வொருவரும் கருதி, கடந்திடுவோமானால் நம்மைவிட முட்டாள்கள் எவரும் இல்லை. 'எல்நினோ' காரணமாக அதிக மழையும், அதிக வறட்சியும் மாறி, மாறி சேதங்களை ஏற்படுத்தும் நமக்கு ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ சாதாரணமான ஒன்றென ஒதுக்கக் கூடியதல்ல.

காட்டுத் தீயினை அனைத்திட 4500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியும், பல்வேறு கட்ட முயற்சிகளை செய்தும்கூட அந்நாட்டு அரசால் கட்டுப்படுத்திட முடியவில்லை. இயற்கையே மழைப் பொழிவினை ஏற்படுத்தினால் ஒழிய இதனைத் தடுத்திட வேறுவழியில்லை என மக்களும் #pray_for_australia என டிவிட்டரில் டிரண்டிங் ஆக்கிக் கொண்டு வருகின்றனர். 

நமக்கும் வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை, இருக்கும் ஒரே வார்த்தை #pray_for_australiaவைத் தவிர...!

- நவாஸ்

Pin It