களவொழுக்கம் குறித்த இரு பிராகிருதப் பாடல் களும் இரு சங்க இலக்கியப் பாடல்களும் இக் கட்டுரையில் ஒப்பிடப்படுகின்றன.  முதலில் பிராகிருதப் பாடல்: ‘அறுவடைக்குத் தயாராகவிருக்கிற நெல் வயலில் தலைகுனித்தவாறு அழாதே! அரிதாரம் பூசிய முகத்துடன் கூடிய நடிகர்களைப் போல சணல் தோட்டம் உள்ளது’ (வஜ்ஜாலக்கம், 473).  இப்பாடல் வஜ்ஜாலக்கம் என்ற நூலில் அசதி என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.  சதி என்ற சொல் கற்புடைய மகளிரைக் குறிக்கும்.  ‘அசதி’ என்ற சொல் கற்பில்லாத (unchaste) பரத்தையைக் குறிக்கும்.  வரைவில் மகளிர் என்ற சொல்லையும் அசதி என்ற சொல்லோடு ஒப்பிடலாம்.  வள்ளுவர் குறிப்பிடும் பொருட் பெண்டிர் என்ற சொல் ÔவேசியÕ என்ற வடசொல்லோடு ஒத்தது.  ஒரு பெண் நெல்வயலைச் சாக்காக வைத்துத் தினமும் தன் காதலனைச் சென்று களவின்பம் அடைந்து வந்தாள்.  நெல்வயல் அறுவடைக்குத் தயாராகி விட்டது. அறுவடை முடிந்தவுடன் வயலுக்குச் செல்ல முடியாது. சென்றாலும் மறைந்து ஒழுக முடியாது.  இதனை எண்ணிஎண்ணிக் கலக்கமுற்றாள்; கண்ணீர் விட்டு அழுதாள்.  இதனைக் கண்ணுற்ற அப்பெண்ணுக்கு நெருக்கமான ஒருவர், ஓ! மகளே அழ வேண்டாம். நெல் வயலை அறுவடை செய்தால் என்ன கெட்டுவிட்டது?  நன்றாக வளர்ந்த சணல் தோட்டம் உள்ளது.  களவுக் கூட்டத்திற்கு அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சமாதானம் கூறுகிறார்.  சணல் தோட்டம் அரிதாரம் பூசிய நடிகர்களைப் போல வனப்பாகவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இன்னொரு பிராகிருதப் பாடல் (அபபிரம்சா) நிலவை வெறுத்து அதனைக் குறை கூறுவதாக உள்ளது.  நிலவின் துன்பத்தைக் கண்டு பெண் மகிழ்ச்சி அடை வதாகப் புனையப்பட்டுள்ளது.  இப்பாடலும் பரத்தையின் (அசதி) கூற்றாக அமைந்துள்ளது.

சந்திரகிரகணத்தைக் கண்டவுடன் பரத்தையர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.  வெட்கத்தை விட்டு கொல்லென்று சிரித்தனர், ஓ, ராகு! நிலவை விழுங்கி விடு. பிரியமானவர்களைக் கூடமுடியாமல் பிரிந்து வாழ் வதற்கு அதுவே காரணமாகவுள்ளது1 என்றும்கூறினாள்.

நிலவு பகல் போலக் காய்ந்தால் பரத்தையர் தாம் விரும்பிய ஆடவரைச் சந்தித்து இன்பமுற இயலாது.  சந்திர கிரகணத்தன்று நிலவை இராகு விழுங்குகிறது.  அதனால் ஒளி மாய்ந்து இருள் தோன்றுகிறது.  இருளில் எண்ணம் போல ஆடவரைச் சேர்ந்து உள்ளம் களிப்புற இயலும்.  இதுதான் கிரகணத்தைக் கண்டு மகிழ்ச்சி யடையக் காரணம் பகைவனுக்குப் பகைவன் நமக்கு நண்பன் என்பது போல நிலவுக்குப் பகைவனான இராகு பரத்தையர்க்கு நண்பனாகி விடுகிறான்.  இந்தப் பாடலில் இராகு சந்திரனை விழுங்குகிற தொன்மம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடல் இராகுவை நோக்கிப் பேசுவதாக அமைந்துள்ளது. பரத்தையரின் களவொழுக்கம் பகல் வேளையிலும் இரவு நேரத்திலும் நிகழும் என்பதை இரு பிராகிருதப் பாடல்களிலிருந்து உணர்ந்து கொள்ளலாம், பரத்தமை ஒழுக்கத்திற்கு உலகில் அனுமதி இல்லை. அதனால் அவர்கள் மறைந் தொழுக வேண்டிய நிலை என்பதனையும் உணரலாம்.

இனி குறுந்தொகையில் வரும் ஒரு பாடல் (375)

அம்ம வாழி தோழி இன்றவர்

வாரா ராயினோ நன்றே சாரல்

சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்து

இரவரி வாரின் தொண்டகச் சிறுபறை

பானாள் யாமத்தும் கறங்கும்

யாமம் காவலர் அவியன் மாறே

மலைச்சாரலில் தினை விளைந்த வயலில் அறுவடை நடைபெறுகிறது, அதனால் பகற்பொழுதில் தலைவனைச் சந்திப்பது சாத்தியமில்லை. இரவுப் பொழுதில் சந்திக்கலாம். ஆனால் அறுவடை பகற் பொழுதையும் கடந்து இரவு நேரத்திலும் தொடர்கிறது.  அச்சமயம் (விலங்குகளை விரட்டுவதற்காக) தொண்டகம் என்னும் சிறுபறையை அடித்து ஒலியெழுப்புகிறார்கள்.  இரவில் காவலர்களும் கண்விழித்துக் கொண்டுள்ளனர்.  இத்தகைய சூழலில் தலைவன் இன்று வராவிட்டாலும் நல்லதுதான். இப்பாடல் தோழி கூற்றாக அமைந்துள்ளது. பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் தலைவனும் தலைவியும் சேருவதற்கு வாய்ப்பில்லை என்று கருதித் தோழி களவுக் கூட்டத்தைத் தவிர்க்கிறாள்.  இரவரிவார்- இரவில் அறுவடை செய்வோர், யாமம்-இரவுப் பொழுது, நள்ளிரவு. கறங்கும்-ஒலிக்கும்.

இன்னொரு நற்றிணைப் பாடலின் கருத்தையும் பார்ப்போம். தலைவி மலர்ந்த வேங்கை மரநிழலில் தலைவனோடு ஒன்றாக இருந்தாள். கதிர் தின்ன வந்த கிளிகளை இருவரும் ஓட்டினர். அருவியில் குளித்துச் சந்தனம் பூசி மகிழ்ந்தனர். தினைப்புனம் முற்றி விளைந்தது. வேட்டுவர் அதனை அறுவடை செய்து விடுவர். எனவே புனங்காவலைச் சொல்லி வெளியே வரமுடியாது. தலைவனைச் சந்திக்க முடியாது

(நற்றிணை 259, தமிழ்க்காதல், ப.54).  முற்றிய தினை களவொழுக்கத்திற்கு முதல் இடையூறாகும்.  இதனால் பகல் நேரத்தில் சந்திப்பதும் புணர்ச்சியும் இல்லை யாகும். பின்னர் தலைவன் இரவு நேரத்தில் சந்திக்க ஏற்பாடு செய்க என்று வேண்டுவான். இரவுக் களவுக் கூட்டத்திற்கும் தொல்லைகள் உண்டு என்று சொன் னோம் அல்லவா? அதற்கு இன்னொரு எடுத்துக் காட்டுப் பாடல் (குறுந். 47).

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்

இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை

எல்லி வருநர் களவிற்கு

நல்லை அல்லை நெடுவெண் ணிலவே

வேங்கை-வேங்கை மரம், வீ-மலர்கள், உகு-உதிர்த்தல், துறுகல்-நெருங்கிய கல், குருளை-குட்டி, எல்லி-இரவு நேரம், நல்லை-நல்லது, அல்லை-அல்ல.

கரிய கால்களையுடைய வேங்கை மரத்தினுடைய மலர்கள் நெருங்கிய கற்கள் மீது உதிர்ந்துள்ளன.  அக்காட்சி புலிக்குட்டி படுத்திருப்பதைப் போல தோற்ற மளிக்கிறது. புலி என்று நினைக்கும்போதே நெஞ்சில் அச்சமும் தோன்றுமன்றோ? அத்தகைய காட்சி கொண்ட காட்டு வழியில் தலைவன் தலைவியைச் சந்திக்க வருகின்றான். நிலவொளியும் பகல்போன்று காய்கிறது. இதனால் தலைவன் தலைவியின் கள வொழுக்கத்திற்கு இடையூறு ஏற்படுகின்றது. தோழி இந்நிலையில் நிலவைப் பார்த்து நீ நல்லது இல்லை என்று கூறுகிறாள். கற்புக் காலத்தில் இன்பம் தரும் நிலவே களவிற்கு மட்டும் நல்லை அல்லை என்று தோழி கூறுகிறாள்.

இப்பாடல்களை எழுதிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. நெடுவெண்ணிலவே என்ற அழகிய தொடர் அப்பாடலை எழுதிய புலவருக்குப் பெயராக அமைந்து நெடுவெண்ணிலவினார் ஆயிற்று.  பிராகிருதப் பாடல்கள் பரத்தையரின் களவொழுக்கம் குறித்துப் பேசுகின்றன.  தமிழ்ப் பாடல்கள் களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவன்/தலைவி குறித்துப் பேசுகின்றன.  நெல் அறுவடையும், தினை அறுவடையும் பகலின்கண் காதலர் கூட்டத்திற்குத் தடைகளாகவுள்ளன.  அவ்வாறே நிலவொளி இரவுக் காலத்தில் காதலர் சேர்ந்தொழுகத் தடையாக உள்ளது.  இரு மரபுகளும் இரவும் பகலும் களவுக் கூட்டங்கள் நடைபெற்றதைக் குறிக்கின்றன.  களவொழுக்கம் தூயது, கள்ளவொழுக்கம் தீயது.  களவுக் காதலர் மன மாசற்றவர், மணந்துகொள்ளும் உள்ளத்தினர்.  வெளிப்பட்ட பின்னும் வாழ்பவர்.  கள்ளக் காதலர் தம்முள் அன்பற்றவர், மணம் என நினையா வஞ்சகர், வெளிப்படின் மாய்வர் அல்லது மாய்க்கப்படுவர் என்று வ.சுப.மாணிக்கம் குறிப்பிடுவார். பேராசிரியரின் கூற்றைக் கொண்டு பிராகிருதக் காதலரின் ஒழுக்கத்தையும் தமிழ்க் காதலர்களின் ஒழுக்கத்தையும் வேறுபடுத்திக் காணலாம்.  இருப்பினும் தொல்காப்பியரின் சூத்திரம்,

குறிஎனப் படுவது இரவினும் பகலினும்

அறியக் கிளந்த ஆற்றது என்ப (களவியல், 128)

என்பது இரு மரபுகளுக்கும் பொதுவாகவே உள்ளது.

1. When they saw the eclipse of the moon, unchaste women felt immensely elated (laughed without any restriction) and said, O, Rahu! do swallow up the moon, who is responsible for our separation from our desired person.

Pin It