mobilephone 360‘ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்’ என்று சொல்வதுண்டு. ஆனால் இற்றைக் காலத்தில் ‘செல்பேசி இல்லாதவன் குறைமனிதன்’ என்று கூறுமளவுக்கு செல்போனின் பயன்பாடு அதிகரித்து விட்டது. தொடக்ககாலத்தில் இந்த செல்போன்கள் வருகை என்பது பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையிலேயே இருந்து வந்தது. போன் பேசுகிறவரும் பணம் செலுத்தவேண்டும். எதிர்முனையில் காதுகொடுத்துக் கேட்பவரும் பணம் செலுத்த வேண்டும்.

செல்போனின் விலையும் பல ஆயிரம் ரூபாயாக இருந்தது. நாளடைவில் நிலைமைகள்  மாறி குறைந்த விலை செல்போன்கள் சந்தையில் புழங்கத் தொடங்கின. பேசுவதற்கான தொகையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு சாதாரண மக்களும் செல்போன் பயன்படுத்தத் தொடங்கினர். இன்றைக்கு மனித உடலுறுப்புகளில் ஒன்று போலவே கூடவே ஒட்டிக்கொண்டுவிட்டது.

செல்கிற இடங்களிலிருந்து ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு மிகச்சிறந்த வசதியாக இருந்த செல்போன் இப்போது நவீன அவதாரமெடுத்து பேசுவது தவிரவும் பல்வேறு அலங்காரமான புதிய வசதிகளைத் தருவித்துக் கொண்டே இருக்கிறது..

இதுபோன்று பெருகிக்கொண்டே செல்லும் செல்போன் வசதிகளால் அதனைப் பயன்படுத்திப் பழகியவர் எவரும் செல்போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதை எவரும் மறுக்கவியலாது. 

செல்போன் பயன்பாட்டின் எதிர்காலம் குறித்த ஒரு கற்பனையான ஆனால் நிஜத்தில் ஒரு காலத்தில் நடக்கும் சாத்தியமுள்ள அம்சங்களை கற்பனையான புனைவாக சொல்கிறது ‘ஜிமாவின் கைபேசி’ என்ற சிறிய புத்தகம். கொ.மா.கோ.இளங்கோ எழுதிய இந்நூலை புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.

இன்று பல வீடுகளில் சிறுவர் சிறுமிகளின் விளையாட்டுப் பொருளாக செல்போன் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதைப் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் இக்கதையில் செல்போன் என்னென்ன மாயாஜாலங்களைச் செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஜி.மானஸா எனும் ஒரு சிறுமிக்கு ஒரு ‘லோ ரேடியேஷன்’ கைபேசி கிடைக்கிறது. அந்தக் கைபேசியில் சிம்கார்டு கிடையாது. ஆனால் பேட்டரி உண்டு. ஜிமா என்னும் அந்த சிறுமியுடன் அக்கைபேசியில் உள்ள ‘டிப்பி’ எனும் பெண்ணுருவம் தமிழில் பேசுகிறது. செல்போனில் தெரியும் அப்பெண் ஜிமாவுக்கு காலை வணக்கம் சொல் கிறாள். ஜிமா வீட்டுப்பாடம் எழுதுவதற்கு உதவி செய்கிறாள்.

கேள்விகள் கேட்டு மதிப்பெண்ணும் போடுகிறாள். பல்வலி வராமல் இருப்பதற்கு இரண்டு முறை பல் துலக்கவேண்டும் என்று அறிவுரை சொல்கிறாள். தாங்கமுடியாத கொசுக்கடியிலிருந்து தப்பிக்கும் ஒரு மென்பொருளை பதிவிறக்கித் தருகிறாள். (Anti - mosquito repllent software). அந்த மென்பொருள் உதவியால் கொசுக்கடி இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம். அந்தக் கைபேசியில் வரும் ‘டிப்பி’ பெண் செயற்கைக்கோளிலிருந்து தகவல்களைக் கண்டறிந்து மழை எப்போது எந்த நேரத்தில் வரும் என்பதை முன்கூட்டியே ஜிமாவுக்கு சொல்லிவிடுவாள். சுனாமி வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டால்கூட செல்போன் வழியாக எச்சரிக்கை ஒலி எழுப்பி அழிவிலிருந்து காப்பாற்றிவிடுவாள். கற்பனையாக உருவாக்கப்பட்ட ஜிமாவின் கைபேசியிலுள்ள டிப்பி என்ற பெண்ணுருவம் செய்வதாக  சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு சாகசங்களும் விஞ்ஞான ரீதியில் பிற்காலத்தில் சாத்தியமாகும் நிறைய வாய்ப்புகள் உள்ளனவாகும்.

கணிப்பொறியினால் இன்று எவ்வளவு விரைவாக வேலைகளைச் செய்யமுடிகிறதோ அதைவிடவும் அதிகமாக ஒவ்வொருவரும் கைபேசியிலேயே தங்கள் தங்கள் வேலைகளைச் செய்துகொள்ளமுடியும். ஜிமாவின் கைபேசி அசாத்தியமான சாதனைகளைச் செய்வதைப் படிக்கப் படிக்க ஆர்வமும் சந்தோஷக் குதிப்பும் ஆச்சரியங்களும் பெருகியபடியே உள்ளன.

ஜிமாவின் கைபேசியின் எதிரில் ஒருவர் நின்றால் போதும். அவருக்கான  அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு மருத்துவ சோதனைகளின் அறிக்கையைப்  பெறலாம். கூடுதலாக தேவைப்பட்டால் தகுந்த மருத்துவரைப் பற்றிய ஆலோசனைகளும் அதற்கான உதவிகளும் கேட்டவுடனே கிடைக்கும். கைபேசி வழியாகவே மேல்சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற உதவிகளும் கூட ஏற்பாடு செய்யப்படும். ஒருவரது உடலில் எங்கேனும் அடிபட்டுவிட்டால் இந்தக் கைபேசியைக் கொண்டு அடிபட்ட இடத்தை அப்படியே எக்ஸ்ரே எடுக்கலாம். உடனே அதற்கான மருத்துவ அறிக்கையைப் பெற்று அதற்கான மருத்துவ சிகிச்சை ஆலோசனையையும் கேட்டுக் கொள்ளலாம்.

அறிவியல் கண்காட்சிக்காக ஜிமா தன் கைபேசியின் வழியாக எத்தனைவிதமான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறாள் தெரியுமா?

வீட்டில் கேஸ் சிலிண்டரை மூடாமல் மறந்துவிட்டு வந்திருந்தால் கைபேசியில் உள்ள மென்பொருள் உதவியால் ஒருவர் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை மூடிவைக்கும் வசதி.

பாதுகாப்பின் வலிமையைக் கூட்ட சாவிகளைக் கொண்டு அல்லாமல் பூட்டுகளை கைபேசி உதவியுடன் மட்டுமே திறக்கும்படி அமைத்துக் கொள்ளலாம்.

ஒருவர் உட்கார்ந்த இடத்திலிருந்தே ஓட்டுனரே இல்லாமல் கைபேசி ரிமோட் மூலம் இயக்கியே கார் ஓட்டிச் செல்லலாம்.

வீட்டில் உபயோகிக்கும் குடிநீரை இந்தக் கைபேசி மூலமாகவே அதன் தூய்மைத்திறனை அறிந்துகொள்ளலாம்.

எந்திரக்குருவிகளை உருவாக்கி பறக்கவிடுவதன் மூலம் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களை அயல்நாட்டுத் தாக்குதலிலிருந்து காப்பாற்றலாம்.

இப்படி எண்ணற்ற அறிவியல் சாதனைகளை ஜிமாவின் கைபேசி நிகழ்த்துகிறது. மேலும் யாரும் நினைத்துப் பார்க்கவியலாத அபூர்வமான அருஞ் செயல்களையும்கூட இந்த கைபேசியால் செய்ய முடியும் என்ற எண்ணத்தையும் அழுத்தமாகச் சொல்கிறது.

‘வெற்றுக் காகிதத்தையே கைபேசியாக உருவாக்கும் காலம் வந்துவிட்டது என்பதை டிப்பி இப்போதைக்கு யாருடனும் பகிரவில்லை’ என்று ஒரு பீடிகையும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

‘பெண்கள் வளையல்களைப் போல கைகளில் போட்டுக்கொண்டு தங்கள் கைபேசியைப் பயன்படுத்தலாம்’ என்று இப்புத்தகத்தில் கூறப் பட்டுள்ளதை நினைத்துப் பார்க்கவே திகைப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது. அசாத்தியமான கற்பனை வளம் வாய்ந்த இந்நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

குழந்தைகளுக்காக தொடர்ந்து ஏராளமாக எழுதிவரும் கொ.மா.கோ. இளங்கோவின் கற்பனையில் வடிவமைந்த ஜிமாவின் கைபேசியைப்போல நிஜமாகவே நாளைய உலகில் இப்படியான செல்போன்கள் உலவப் போவதை உறுதி செய்யும் வகையில் 20-1-2016 தேதியிட்ட ‘தமிழ் இந்து’ நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்திய கண்டுபிடிப்பான ‘ஸ்மார்ட் ஸ்டெதஸ்கோப்’ பற்றிய செய்தி அது. ஸ்மார்ட் போனைப்போலிருக்கும் இந்த ஸ்டெதஸ்கோப்பால் நாடித்துடிப்பைப் பதிவு செய்யமுடியும் என்று அந்தத் தகவல் சொல்கிறது.

ஆக கூடியவிரைவில் மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் நாமும் செல்போன் உதவியால்  செய்யமுடியும் என்பதை இப்போதே நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான மொழியில் இந்நூல் எழுதப்பட்டிருந்ததும் அனைவரும் படித்து வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னாளில் வரப்போகும் அறிவியல் கண்டு பிடிப்புகளை தனது விஞ்ஞான பூர்வமான கற்பனையால் எழுதிய கொ.மா.கோ.இளங்கோவும் அதனை வெளியிட்ட புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகமும் பாராட்டுக்குரியவர்கள்.   

ஜிமாவின் கைபேசி 
கொ.மா.கோ.இளங்கோ 
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன் 
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, 
சென்னை - 600 018 
விலை: ரூ.40/

Pin It