periyar anaimuthu 600சகோதரர்களே! நான் உங்கள் ஊருக்கு இதற்கு முன் இரண்டொரு தடவைகள் வந்திருக்கின்றேன். ஒரு தடவை ஒத்துழையாமையின்போது உங்கள் ஜில்லாவாகிய தென் ஆற்காடு ஜில்லாவில் சுற்றுப்பிரயாணம் செய்த காலத்தில், இந்த மண்டபத்துக்கெதிரில் பேசியிருப்பதாக எனக்கு ஞாபகமிருக்கின்றது. இன்னொரு தடவை காலஞ்சென்ற நமது நண்பர் திரு.ம.ரா. குமாரசாமி பிள்ளையவர்கள் இருக்கின்ற போழ்து திரு.பிள்ளை யவர்களால் அழைக்கப்பட்டு உங்களூர்வாசிகளாகிய திரு.லட்சுமணசாமி முதலியார், திரு.கிருஷ்ணசாமி பிள்ளை முதலியவர்களாலும் கடைவீதிக் காரர்களாலும் பெரிய ஆடம்பரத்துடன் வரவேற்கப்பட்டு, இவ்வூருக்கு வந்து இதே இடத்தில் பேசியிருக்கிறேன். நான் இங்கு காலஞ்சென்ற எனது நண்பர் குமாரசாமியாரவர்களின் குடும்பத்தாரைக் கண்டு எனது அனுதாபத்தைத் தெரிவித்து விட்டுப் போகலாமென வந்த இடத்தில் ஞானியார் ஆசிரமக் காரியஸ்தர் திரு.வடிவேலு செட்டியாரும் அவரது நண்பர்களும் இன்று இங்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் நானும் சம்மதித்து ஏதோ சில வார்த்தைகள் இன்று இங்கு பேச வந்திருக்கின்றேன்.

நான் எடுத்துக் கொண்ட விஷயம் பேசத் தொடங்கு முன் காலஞ் சென்ற திரு.ம.ரா.குமாரசாமியாரவர்களைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல அனுமதிக்க வேண்டுகின்றேன்.

திரு.குமாரசாமியார் சுமார் 10 வருஷமாக எனக்கு தெரிந்தவர். அவர் சற்றும் சுயநலம் கருதாத ஒரு உண்மைத் தொண்டராவார். நான் செல்லும் அநேக இடங்களுக்கு அவரும், அவர் செல்லும் அநேக இடங்களுக்கு நானும் செல்வதன் மூலம் அடிக்கடி பொது மேடைகளில் சந்தித்து வந்திருக்கின்றோம். என்னிடத்தில் அவருக்கு அதிக அன்புண்டு. என்னு டைய கொள்கைகள் பெரிதும் அவரால் ஒவ்வொரு கூட்டத்திலும், நான் இல்லா காலங்களில் கூட ஆதரிக்கப்படுவதுண்டு. அதனாலேயே எனக்கு அவரிடம் அதிகமான விசுவாசம் இருந்துவந்தது. அவரைப் பிறந்த இடமாகக் கொண்டதால் இந்த ஊருக்கு வெளியிடங்களில் அதிகமதிப்பு உண்டென்றே சொல்லுவேன். அப்பேர்ப்பட்ட பெரியார் தொடங்கிய ஆசிரம விஷயத்தில் நீங்கள் அதிக கவலை எடுத்து அவரது கொள்கையைப் பரப்ப வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டியது உங்கள் முக்கிய கடமையாகும். திரு.வடிவேலு செட்டியாரும் அதற்கு மிகுதியும் ஏற்றவர் என்றே சொல்வேன்.

நிற்க, நான் இன்று பேச வேண்டிய தலைப்பு விஷயம், “நமது முன்னேற்றம்” என்பதாகும். இந்த தலைப்பின் கீழ் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும் நான் நமது நாட்டு மக்கள் முன்னேற்றம் என்பதைப் பற்றி சொல்லும் முறையில் மற்ற நாட்டிற்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் சொல்லி பிறகு நாம் செய்ய வேண்டியவைகள் என்று எனக்குத் தோன்றுவதை சொல்லுகின்றேன். நான் சொல்லுவது பெரும்பாலும் என்னுடைய சொந்த கருத்தும் நான் மனப்பூர்வமாய் சரி என்று உணர்ந்ததுமே சொல்லுகின்றேன்.

நமது நாட்டைப் பற்றி முற்காலத்தில் இருந்த நிலை என்பதாக அதற்கு பிரத்தியக்ஷ சாக்ஷியம் இல்லாத இக்காலத்தில் எவ்வளவு பெருமையாகப் பேசிக் கொண்டாலும் இன்றைய பிரத்தியக்ஷ நிலையை உணர்ந்து இது நமது முற்போக்கா? பிற்போக்கா? என்பதை முதலில் உங்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். நமது நாடு இன்றைய நிலைமையில் விளை பொருளிலும் மூலப் பொருளிலும் வியாபாரத் துறையிலும் கைத் தொழில் வசதியிலும் இன்றைய தினம் நாமறிந்த எந்த நாட்டிற்கும் பிற்பட்டதல்ல என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்கள். அதுபோலவே மக்கள் வாழ்வில் செல்வத்திலும் அறிவிலும் ஆராய்ச்சியிலும் சமூக உரிமையிலும் அரசியல் உரிமையிலும் பிற்பட்டு அடிமைபட்டு இருக்கின்றோம் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்கள் என்று நினைக்கின்றேன்.

உதாரணமாக செல்வத்தில் நாம் பிற்பட்டவர்கள் என்பதற்கு மற்றநாட்டு சாதாரண பெண்மணிகளிடம் இருக்கும் செல்வம் நமது நாட்டு பிரபுக்கள் என்பவர்களிடம் இல்லை. அதுமாத்திரமல்லாமல் மற்ற நாட்டு ஒவ்வொரு தனிமனிதனுடைய சராசரி மாத வரும்படி 35 ரூபா வீதம் என்றால் நம்நாட்டு மனிதனின் சராசரி வரும் படி 31/2 ரூபா ஆகின்றது. மற்றும் பிழைப்பு வசதியோ நமது நாட்டில் வேலைக் கிடைக்காமலும் கூலி கிடைக்கா மலும் வாரம் ஒன்றுக்கு பதினாயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு கூலிகளாகக் கப்பலேறுகின்றார்கள். ஆனால், வெளிநாடுகளிலிருந்து நமக்கு முதலாளிகளாகவும் எஜமானர்களாகவும் அதிகாரிகளாகவும் பலர் தினம் இறங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டால் நாம் நடுங்குகின்றோம்.

மற்றபடி அறிவிலும் நமது மக்களின் சராசரி அறிவு தெரிய வேண்டுமானால் 100-க்கு 7 பேரே கையெழுத்துப் போட தெரிந்தவர்கள். பெண்களிலோ 1000-க்கு 1ஙூ பேர் கையெழுத்துப் போட தெரிந்தவர்கள். அதிலும் சிறந்த மூடர்கள் என்பவர்கள் பண்டிதக் கூட்டங்களிலேயே பெரும்பான்மையோராக இருந்தால் மற்றவர்களைப் பற்றி நாம் யோசிக்கவும் வேண்டுமா?

ஆராய்ச்சி விஷயத்தில் ஆனால் வெளிநாட்டார்களின் ஆராய்ச்சியோ மின்சாரத்தின் மூலமும் தண்ணீர் ஆவியின் மூலமும் எண்ணெயின் சூட்டின் மூலமும் அவர்கள் செய்கின்ற அற்புதங்களுக்கு அளவே இல்லை. ஒவ்வொருத் துறையிலும் நாளுக்கு நாள் முன்னேறுகின்றார்கள். செத்தவனை பிழைக்க வைக்க முயற்சித்து பலன் கண்டு கொண்டு வருகின்றார்கள். நக்ஷத்திர மண்டலத்திற்கு போக முயற்சிக்கிறார்கள். மணிக்கு 500 மைல் வேகம் பறக்கப் பார்க்கிறார்கள். ஒரு வாரத்தில் 6000 மைல் தூரமுள்ள சீமைக்குப் போகிறார்கள். ஒரு மணி நேரத்தில் 10000 மைல்களுக்கப்பாலுள்ள செய்தியை அறிகின்றார்கள். ஒரு பீரங்கி வெடியில் பதினாயிரக்கணக்கான மக்களை உயிர் வாங்கும்படியான யுத்த முறைகளைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள். கண் மூடி திறப்பதற்குள் மின்னி மறையும் மின்னலிலிருந்து மின்சார மெடுக்கின்றார்கள். தண்ணீர் வீழ்ச்சியிலிருந்தும் சூரிய வெப்பத்திலிருந்தும் மின்சாரம் உண்டாக்குகிறார்கள்.

எண்ணெய் இல்லாமல் நெருப்பில்லாமல் தண்ணீர் இல்லாமல் கடிகாரத்திற்குச் சாவி கொடுத்தால் அது ஓடிக் கொண்டிருப்பது போல் தானாக சாவி கொடுப்பதின் மூலம் ஓடும்படியான மாதிரியில் இயந்திரங்களையும் வண்டிகளையும் செய்ய முயற்சித்து வருகின்றார்கள். ஆனால், நமது நாட்டு ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களுக்கோ என்றால் புல்லிலும் பூண்டிலும் கல்லிலும் மண்ணிலும் கடவுளைத் தேடி அவைகளுக்கு எப்படி பக்தி செலுத்துவது என்கின்ற வேலையே இன்னமும் முடிவு பெறாமல் இருக்கின்றது. மோக்ஷத்திற்குப் போகின்ற வழிகளைப் பற்றியே இன்னமும் பலருக்கு ஆராய்ச்சி முடிவு பெறவில்லை.

கடவுள்களுடைய எண்ணிக்கைகளும் பெயர்களும் அவர்களுடைய லீலைகளும் பெண்டு பிள்ளை வைப்பாட்டிகளும் இன்னமும் கணக்கு கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டி இருக்கின்றது. நாமத்தின் நடுவிலும் மஞ்சள் திருச்சூரணத்திற்கும் சிவப்புத் திருச்சூரணத்திற்கும் உள்ள பெருமை சிறுமை வித்தியாசங்களுக்கும் பாதம் வைத்து இடும் நாமத்திற்கும் வளைவாய் இடும் நாமத்திற்கும் உள்ள பிரதானங்களுக்கும் உள்ள வித்தியாசம் கண்டுபிடிக்க நமது ஆராய்ச்சியால் முடியாமல் வெளிநாட்டு ஆராய்ச்சி நிபுணர்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. நம்மை மோக்ஷத்திற்கு அனுப்ப அவதாரம் செய்த சமயாச்சாரிகள் சரித்திரமும் எண்ணிக்கையும் எப்படி நமக்குக் கிடைத்தது? என்னும் விஷயம் யாரோ ஒருவர் சொல்வதை நம்புவதன் மூலம்தான் அறியக் கூடும் என்கின்ற நிபந்தனைகளை ஒப்புக் கொண்டாலும் என்ன சொல்லுவது என்கின்ற விஷயம் இன்னும் ஆராய்ச்சியில் இருந்து வருகின்றது.

எந்த எந்த பாஷை, எந்த எந்த புஸ்தகம், யார் யார் படிக்கலாம் என்கின்ற விஷயமும், எந்த எந்த ஊரில், எந்த எந்த கடவுளை யார் யார் எவ்வளவு எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கலாம், கும்பிடலாம் என்கின்ற விஷயமும், எந்த எந்த வீதியில் யார் யார் நடக்கலாம், எந்த எந்த ஜாதியார் எந்த எந்த ஜாதியாருக்கு எவ்வளவு எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்கின்ற விஷயமும் எந்த எந்த மாதிரிக் குடுமி யார் யார் வைத்துக் கொள்ள வேண்டும், எந்த எந்த மாதிரி வேஷ்டி யார் யார் கட்டிக் கொள்ள வேண்டும், யார் யார் எங்கெங் கிருந்து சாப்பிட வேண்டும் என்கின்ற விஷயமும் இன்னமும் ஆராய்ச்சி யிலும் தர்க்கத்திலுமே இருந்து வருகின்றது. மற்றும் ஒரு ஜாதி ஆணும் ஒரு ஜாதிப் பெண்ணும் கூடினால் என்ன ஜாதி மனிதன் பிறப்பான்? என்பது இன்னமும் ஆராய்ச்சியில் இருக்கின்றது. நம்மைப் போன்ற யாராவது என்ன ஐயா! மற்ற நாட்டார்கள் எவ்வளவோ முற்போக்கு அடைந்திருக்கும்போது நாம் இன்னமும் இந்த ஆராய்ச்சியில் இருப்பது சரியா என்று கேட்டால் உடனே கோபம் வந்து, உடனே அட போ! உனக்கென்ன தெரியும்? நீ எவ்வளவு படித்திருக்கின்றாய்? எங்களுக்குப் புத்தி சொல்ல வந்துவிட்டாய்! மேனாட்டு ஆராய்ச்சி இரண்டு நாளைய வாழ்வு. அது இகத்தைப் பொருத்தது. இன்றைக்கிருப்பவர் நாளைக்கு இருக்க மாட்டார்கள். இதெல்லாம் வாவென்றால் வரும் போ என்றால் போகும். மனிதன் எதற்காகப் பிறந்தான்? அவன் வந்த வேலையை அல்லவா அவன் கவனிக்க வேண்டும்? அதுதான் ஆத்மார்த்தம் மோக்ஷ சாதனம் என்று சொல்லி ஏதோ ஒன்றை தனக்கும் புரியாமல் மற்றவர்களுக்கும் புரியாமல் பேசுகிறார்கள். யாராவது தட்டிப் பேசினால் உடனே “தோஷம் தோஷம்” என்று கன்னத்தில் அடித்துக் கொள்ளுகின்றார்கள்.

எனவே, நமது நாட்டு முன்னேற்றம் எப்படி இருக்கின்றது, மற்ற நாட்டு முன்னேற்றம் எப்படி இருக்கின்றது என்பதை இதிலிருந்து யோசித்துப் பாருங்கள். பொதுவாக நமது மக்கள் முதலாவதாக 100க்கு ஏழுபேர்தான் படித்திருக்கின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? இரண்டாவ தாக நமது மக்கள் சாப்பாட்டிற்கில்லாமல் வேலையும் கூலியும் கிடைக்காமல் வெளிநாட்டிற்கு பதினாயிரக்கணக்கான குழந்தை குட்டி கர்ப ஸ்திரீகளுடன் கப்பலேறி கண்காணாததும் முன்பின் அறியாததுமான நாட்டிற்குப் போய் கஷ்டப்பட்டு மடிகின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? மூன்றாவது மனிதனுக்கு மனிதன் இழிவாகவும் அவமானமாகவும் கருதத் தக்கபடி கீழ்மேல் ஜாதி பிரித்து பஞ்சமன் என்றும் மிலேச்சன் என்றும் சூத்திரன் என்றும் அழைக்கப்படுவதும் சமூக வாழ்வில் சுயமரியாதைக்கு ஈனமான நிலையில் தாழ்த்தப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் இருக்கின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா?

நான்காவதாக அதுபோலவே ஒரு வகுப்பு மனிதர் தங்களை உயர்ந்த பிறவிகள் என்றும் பூலோக தேவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு மற்ற மக்களைத் தாழ்த்தி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா?

ஐந்தாவதாக நாட்டுச் செல்வத்தில் பெரும்பாகம் ஏழைகளுக்கும் கையாலாகாதவர்களுக்கும் தொழிலுக்கும் கல்விக்கும் உபயோகப்படாமல் வெறும் கோயில் கட்டவும் கல்லைக் கடவுளாக்கவும் அதற்கு கல்யாணம் உற்சவம், தேர், திருவிழா, தினம் பலதடவை பூஜை, அபிஷேகம், நகை, வாகனம், தீவட்டி, விளக்கு, சதுர் மேளம், ஊர்கோலம் ஆகியவைகளுக்கு செலவாகின்றது என்பதை ஒத்துக் கொள்கின்றீர்களா?

அப்படியானால் இந்த நிலைமை இப்படியே வைத்துக் கொண்டிருப்பதால் நமது நாடு முற்போக்கடைய முடியுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இவைகளைத் திருத்தி இந்தவழியில் வீண் ஆகும் செலவுகளை மற்ற நாடுகளைப் போல் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் தொழிலுக்கும் செலவிட வேண்டுமென்று சொன்னால் அதை நாத்திகம், மததர்ம விரோதம் என்று சொல்லுகிறார்கள். இது நாத்திகமா மத விரோதமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

மற்ற நாட்டாரின் ஆதிக்கமும் மததர்மமும் அவர்கள் நாட்டில் 100-க்கு 100பேரையும் படிக்க வைத்து அவர்கள் அத்தனைப் பேருக்கும் தாராளமாய் தொழில் சம்பாதித்துக் கொடுத்துவிட்டு பிச்சைக்காரர் என்பவர்களே தங்கள் நாட்டில் இல்லாமல் செய்து ஆராய்ச்சியின் மூலம் நாம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் அற்புதங்களைக் கண்டுபிடித்து வெளிநாட்டுச் செல்வங்கள் எல்லாம் தங்கள் நாட்டிற்கே வரும்படி செய்து கொண்டு மத தர்மமாக நமது நாட்டில் பள்ளிக்கூடமும் ஆஸ்பத்திரிகளும் மருத்துவ உதவிச் சாலையும் அனாதைப் பிள்ளைகள் பாதுகாப்பு நிலையமும் “தீண்டாதார்கள்” சட்டசபை மெம்பராக்கவும், மந்திரிகளாக்கவும் தக்க மாதிரியில் கல்வியும் உத்தியோகமும் கிடைக்கத்தக்க மதமாற்ற ஸ்தாபனங்களும் ஏற்படுத்தி அதற்காக கோடிக்கணக்காக செலவு செய்தும் வருகின்றார்கள்.

இதை நீங்கள் தயவு செய்து நன்றாய் கவனித்துப் பாருங்கள். நாம் இப்படியே இருந்தால் முன்னேற முடியுமா? மற்ற நாட்டார்கள் முன்னிலையில் மானத்தோடு வாழ முடியுமா? நமது எதிரிகள் பழக்க வழக்கம் என்பதையும், பெரியோர்கள் போன வழி என்பதையும், கடவுள் கட்டளை என்பதையும் ஆயுதமாக வைத்துக் கொண்டு நம்மை முன் னேறவொட்டாமல் தடுத்து வருவதற்கு நீங்கள் இனியும் இடங் கொடுக்கா தீர்கள். உங்கள் புத்திக்கு சரி என்று பட்டதை தைரியமாகச் செய்யுங்கள் அது நாஸ்திகமானாலும் மகாபாதகமானாலும் நரகம் கிடைப்ப தென்பதனாலும் கடைசியாய் ஒரு சிறிது கூட அந்த பூச்சாண்டிகளுக்குப் பயப்படாதீர்கள்.

(குறிப்பு: திருக்கோவிலூரில் 13.06.1929 ஆம் நாள் பெண்ணையாற்றில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டத்தில் நமது முன்னேற்றம் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 16.06.1929)

Pin It