இன்று கல்வி என்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய அடிப்படை உரிமையாகும். ஆனால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கல்வி என்பது அடிப்படை உரிமையாக ஏற்கப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் வட்டத்திற்குள் மட்டுமே கல்வி ஒடுங்கியிருந்தது. 1920ல் நீதிக் கட்சி ஆட்சியில் தான் 'சென்னை மாகாண கட்டாய ஆரம்பக் கல்விச் சட்டம்' உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அந்தச் சட்டம்தான் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு, ஆண், பெண் இருபாலருக்கும் கல்வி கற்பதற்கான சமவாய்ப்பை உறுதி செய்தது.
படிக்க இயலாதவனைப் படிக்க வைக்கத்தான் பள்ளிக்கூடங்களும் அதன் தொடர்ச்சியாக மதிய உணவுத் திட்டம், கல்வி உதவித் தொகை, இலவசக் கல்வி, இலவசச் சீருடை, இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, எனப் பல்வேறு சமூக நலத்திட்டங்களும் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள, கல்வி வளர்ச்சிக்கு ஒருவகையிலும் உதவாத, மாறாக இருக்கிற கல்வி நிலையங்களையும் மூடுவதற்கே வழி வகுக்கிற, மாநிலத்தின் கல்வி உரிமையை மறுக்கிற 'தேசியக் கல்விக் கொள்கை' யை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆர்எஸ்எஸ் சின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் கொடுமையை அரங்கேற்றத் துடிக்கிறது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, மாநில அரசுக்குப் பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்தப் பரிந்துரையின் பல அம்சங்கள் பேராபத்தைக் கொண்டுள்ளன.
குறிப்பாக, பள்ளி கல்வித்துறை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 600 மதிப்பெண்களுக்குப் பதிலாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் வகையில் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வரசாணையில், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியல், உயிரியல் பாடங்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், இந்தப் புதிய நடைமுறை வரும் 2020--2021 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும் உள்ளது.
இதற்கான காரணமாகத் தமிழக அரசு கூறுவது: மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம், மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழி செய்தல், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்தல் என்பன. மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ மாணவர் நலன் என்பது போலத் தோன்றும். ஆனால் உண்மையில் இது மாணவச் சமுதாயத்தின் கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் செயலே.
தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கக் கூடிய வகையில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என 6 பாடங்கள் இருந்து வருகின்றன. இந்தப் பிரிவைச் தேர்வு செய்யும் நம் பிள்ளைகள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்லும் வாய்ப்பு இருந்தது.
ஆனால் தற்போது, இந்தப் பிரிவிலிருந்து கணிதப் பாடம் நீக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 பாடங்கள் மட்டுமே இருக்கும். மருத்துவப் படிப்பிற்கு மட்டும் செல்லக் கூடிய மாணவர்கள் இந்த பிரிவையும், அதே போல் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்குச் செல்லக் கூடிய மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என 5 பாடங்களைக் கொண்ட பிரிவையும், மட்டுமே படிக்க முடியும்.
இது வரை நம் பிள்ளைகளுக்கு இருந்த இரட்டை வாய்ப்புகளில் ஒன்றை பிளஸ் 1 என்று வரும் போதே பறிக்கும் சமூக அநீதியே அதிமுக அரசு அறிவித்துள்ள இந்தப் புதிய திட்டம்.
மாணவர்களின் சிந்தனையையும், படைப்பாற்றலையும் ஊக்குவித்து, அவர்களின் வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டியது, மாநில வளர்ச்சியில் அக்கறை உள்ள அரசின் கடமையாகும். அதற்கு மாறாக தம் மக்களின் உரிமையையும் வளர்ச்சியையும் தடுப்பதா மக்களுக்கான அரசு?
எப்படிப்பட்ட தரமான கல்வியை நம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர எப்படி அவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது.