ஆசிரியர்கள் இன்றி இவ்வாழ்வு துளிர்த்திருக்காது.

மாதா பிதா குரு தெய்வம்.. மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆசிரியர்கள் வாழ்வின் முக்கியமான இடத்தில் தான் எப்போதும் இருக்கிறார்கள்.

அவர்களின்றி என் அணுவில் அசைவு இல்லை என்று தான் நம்புகிறேன். அறிவை புகுத்த முடியாது. ஆனால் அறிவின் கதவைத் திறந்து விட முடியும். அதைத்தான் அவர்கள் அவரவர் பாணியில் செய்தார்கள். அவரவருக்கு தெரிந்த கதவைத் திறந்து விட்டார்கள். இருப்பதிலேயே ஒன்றாம் வகுப்புக்கு பாடம் எடுப்பது தான் மிக கடினமான செயல். ஒருபக்கம் குவியாத பார்வைகளை எங்கிருந்தெல்லாமோ கூட்டி வந்து குவிய செய்யும் ஆசிரியருக்கு குழந்தைகளின் மந்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

taminadu schoolகண்ணாடி டீச்சர்
************************
மணலில் 'அ' எழுதி போட்டு அதன் மேலே விரல்களால் எழுத்தை விரலுக்கு மனப்பாடம் செய்வித்த கண்ணாடி டீச்சரை இன்று நினைத்துக் கொள்கிறேன். வகுப்பில் இருக்கும் அத்தனை குரல்களின் வழியேயும் அன்பை விதைத்தவர். கையில் பிரம்பு இருக்குமே தவிர ஒருபோதும் அடித்ததில்லை. நன்றாக நினைவில் இருக்கிறது 'அ' போடுவதற்கு மணலில் வளைந்து நெளிந்த நாட்கள். 'அ' எழுதிய அன்று இரவு வீட்டில் ஒரு 'அ' விற்கு வாய் முளைத்தது போலவே பேசித் திரிந்தது வீட்டு வாசலில் இருக்கும் கொய்யா மரத்தில் சாம்பல் பூத்த நினைவுகள்.

கண்ணாடி வாத்தியார்
******************************
அப்படியே இரண்டாம் வகுப்புக்கு வருகையில் சில சம்பவங்கள் கை வரப்பட்டிருந்தன. நடைகூட ஒரு வகை உறுதியில் மிளிர்ந்தன. 'சொட்டைத்தலை' என்று கூட கிசுகிசுக்க கற்றுக் கொண்டோம். லத்தி சார்ஜ் செய்வதில் வல்லவர். பிரம்பை எடுத்து வெளுக்க ஆர்ம்பித்தார் என்றால்.....அடி எங்கு வேண்டுமானாலும் விழும். மதிய சாப்பாடு முடித்து விட்டு அதுவும் பெல் அடித்த பின் பள்ளிக்குள் நுழைபவர்களுக்கு கேட்டில் வைத்தே விழுமே அடி......அது.....மரண இடி. கை கால் முதுகு டிக்கி....மண்டை என்று வீங்கி வந்து வகுப்புக்குள் உட்காரும் போது வரும் அழுகையை நான் கிரேஸ் மேரிக்காக அடக்கிக் கொள்வேன். அவரவர் அடக்க அவரவருக்கு ஆள் இருக்கும். நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டது இவரிடம் தான்.

இங்கிலிஷ் டீச்சர்
**************************
மூன்றாம் வகுப்பில் தான் ஆங்கிலம் அறிமுகம். முன்னமே தெரிந்தாலும் எ பி சி டி யின் அற்புதங்கள் விளங்கிய வகுப்பு. மூணாப்பு டீச்சருக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. முடிந்தளவு என்னை மட்டம் தட்டும். கடினமானவைகளையே என்னிடம் செய்ய சொல்லும். அதுவே எனக்கு பயிற்சி ஆனது. ஆங்கிலத்தில் லெட்டர் எழுத கற்றுக் கொண்டது...இன்னும் இன்னும் என்னை ஆடை அலங்காரம் செய்து கொண்டது அப்படித்தான்.

முத்துசாமி சார்-நாலாப்பு டீச்சர்
************************************************
டீச்சர் சாது. சார் கொடூரம். நான்காம் வகுப்புக்கு இருவருமே வருவார்கள். நாலாப்பு டீச்சர் பிரம்பை வைத்து அடிப்பது போல பாவனை செய்வார். அறிவியல் சொல்லிக் கொடுப்பார். வானமும் நீளமும் நீலமும் சூரியனும் முதன் முதல் தெரிந்து கொண்டது இவரிடம் தான். முத்துசாமி சார்...... உரித்து தொங்க விட்டு விடுவார். இவரிடம் கணக்கு படித்தால்.... கணக்கு வராது என்று எவனும் சொல்ல முடியாது "அது எப்பிடிடா வராம போகும்"என்று ஒளிந்து கொண்டிருக்கும் கணக்கு சூட்சுமங்களை எல்லாம் காது திருகியே வெளிக்கொண்டு வந்து விடுவார். ஆக சிறந்த சிந்தனைவாதி.

ஐந்தாப்பு சார்
*******************
இவருக்கு தொப்பை பெரிதாக இருக்கும். காலாட்டிக் கொண்டே இருப்பார். தலைமை ஆசிரியர் இவர் தான். மற்றவர்கள் எல்லாம் கைத்துப்பாக்கி என்றால் இவர் மெஷின்கன். இவரைப் பார்த்தாலே பயந்து நடுங்கி.... இரவு எத்தனை மணியானாலும் வீட்டுப்பாடம் எழுதி விட்டு தான் படுப்போம். இவரின் குரலுக்கு அந்த பள்ளிக்கூடமே அடங்கி ஒடுங்கும். லீவு நாட்களில் கூட இவரைக் காட்டி தான் பையன்களை வீட்டில் மிரட்டுவார்கள். இவர் அங்கு வருகிறார் என்றால்.. இங்கு ஓடி சென்று புத்தகமும் கையுமாக நிற்போம். தலை ஒழுங்காக சீவவில்லை என்றால்... ஒழுங்காக சீருடை அணியவில்லை என்றால்... ஹெட்மாஸ்டர் ரூமில் பேரிடி தான். நல்ல மார்க் வாங்கி விட்டால் தோளில் தட்டி பலமாக சிரிப்பார். நடுங்கிக் கொண்டே சிரித்திருக்கிறேன்.

ஆறாம் வகுப்பு சார்
****************************
இவர் பெயரும் முத்துசாமி தான். நான் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே எ பி சி டி சரியாக சொன்னதற்கு எல்லார் முன்னிலையிலும் பாராட்டினார். மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த என்னை முதல் வரிசைக்கு வா என்று அவராகவே அழைத்து அருகில் வைத்துக் கொண்டார். க்ளோஸப்பில் கொடூரமாக தெரியும் இவர் எப்போதாவது தான் சிரிப்பார். இவர் அடிக்கடி என்னை குறிப்பிட்டு எல்லாரிடமும் இவன் மாதிரி நீட்டாக இருக்க வேண்டும் என்று கூறுவார். "யாரும் தப்பா நினைச்சுக்க வேண்டாம். எல்லாரும் அவுங்கவுங்க சாதியை தனி தனியா வந்து என்கிட்டே சொல்லிட்டு போங்க......நான் என்ன பண்றது. ஆபீஸ் ரூம்ல கேக்கறாங்கப்பா"என்ற இவரிடம்... சாதின்னா என்னன்னு நான் கேட்டது தான் இப்போது வரை அது என்னன்னு கேட்டுக் கொண்டே இருக்க காரணம் என்று நினைக்கிறேன்.

ஏழாம் வகுப்பு சார்
****************************
தீனதயாளன் சார். என் அப்பாவுக்கும் இவர் வாத்தியாராக இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நான் யாரென்று தெரிந்து விட...."உங்கப்பன் 99 மார்க் வாங்கிட்டு அழற ஆள். நீ என்னடானா கம்மி கம்மியா எடுத்துட்டு இருக்கற"என்று தனி கவனிப்பு. எதுக்குடா வம்பு என்று அதிக கவனம் எடுத்து படித்தது தான்.. நான் பள்ளியில் 5வது மாணவனாக வரக் காரணமாக இருந்தது. இவர் அடிக்கவெல்லாம் மாட்டார். தோப்புக்கரணம் போட வைத்து விடுவார். மயக்கம் போட்டு விழும் வரை தொடரும். அடுத்த நாள் எவனாவது வீட்டு பாடம் செய்யாமல் வருவானா....? நானெல்லாம் அன்றைய பாடத்தை அன்றே படித்து விடுவதை ஆரம்பித்து வைத்தவர் இவர். இன்று வரை தொடர்கிறது. இன்றைய வேலையை முடிந்தளவு இன்றே முடித்து விடுவது என்பதை பழக்கமாக்கியது இவர் தான்.

எட்டாம் வகுப்பு சார்
****************************
குகன் சார்- இவரைப்பார்த்தாலே கை கணக்கு போடும். கால்கள் சமூகவியல் படிக்கும். மற்றவர்க்கு உதவும் குணத்தை கட்டாயமாக்குவார். பின் பற்றுகிறேன். மாரியப்பனை ஒரு நாள் அடித்து துவைத்ததுக்கு, அவன் முட்டியை பிடித்து கடித்து துப்பியதற்கு அவன் குடும்ப கஷ்டத்தை எல்லாம் சொல்லி என்னை மன்னிப்பு கேட்க வைத்தவர். அதன் பிறகு மாரியப்பனோடு அந்த பள்ளியை விட்டு வெளியே வரும் வரை நட்பு கொண்டிருந்தேன். அதன் பிறகு மறு கன்னத்தை காட்டாவிட்டால் மறு கன்னத்தில் அடிப்பதை நிறுத்திக் கொண்டேன்.

சுந்தரமூர்ச்சி சார்
******************************
இமயமலை பற்றி தெரிந்து கொண்டது.... வரலாறு ரெம்ப முக்கியம் என்று தெரிந்து கொண்டது எல்லாமே ஒன்பாவதில் இவரிடம் தான். என்னையும் அபிதாவையும் கடைசிவரை அண்ணன் தங்கை என்றே நம்பினவர். (நாங்கள் ஒரே குடையில் மழைக்குள் நடப்பதை பார்த்து விட்டு, "உன் தங்கச்சியா"என்று கேட்கையில் ஆமாம் என்று தலையாட்டி விட்டேன். பிறகு காணும் போதல்லாம் அதை சமாளிக்க வேண்டியதாகிப் போனது. நல்ல உயரத்தில், அன்பின் சிலுவையை புன்னகையாக்கி சுமந்து கொண்டே இருப்பவர்.

பத்தாம் வகுப்பு சார்
******************************
பெயர் மறந்து விட்டது. ஆனால் பாதி நெற்றி மறைக்கும் ஹேர் ஸ்டைலில்... ஸ்கூட்டரில் வருவார். பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ள மாட்டார். எடுக்க வேண்டிய பாடத்தை கடகடவென எடுத்து விட்டு "படிங்க"என்று சேரில் அமர்ந்து விடுவார். விடலை பருவம் ஆரம்பிக்கும் பருவம் அது. கிசு கிசுப்பு முழுக்க பெண் பிள்ளைகள் பற்றியே இருக்கும். நூலகத்துக்கு வழி காட்டியவர் இவர் தான். கலை நிகழ்ச்சிகளில் ஆடி விட்டு வந்தால்.... மனம் உவந்து பாராட்டுவார். ஆடும் போது சிரிச்சிகிட்டே ஆடுடானு சொல்வார்.

சாந்தி அம்மா
*****************
நானும் பரிமளாவும் காதலிக்க துவங்கிய முதல் நாளே காதலை கண்டு பிடித்து விட்டார். முதல்ல படிப்பு. அப்புறம் தான் மற்றது என்றார். படிப்பதற்கு நிறைய ரெபர் செய்தவர். எனக்கு லீடர் பொறுப்பு கொடுத்து எங்கயும் என்னை விட்டுக் கொடுக்காதவர். காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மெல்ல மெல்ல புரிய வைத்தவர். சமீபத்தில் பார்த்த போது பரிமளா மீதிருந்தது இனக்கவர்ச்சி இல்லை அம்மா.... காதல் தான் என்றேன். சிரித்துக் கொண்டார். நிதானத்தின் வழி நின்று தான் பூமியை சுற்ற முடியும் என்று கற்றுக் கொடுத்தவர். தமிழை தேட சொன்னவர்.

பொங்காளி சார்
**************************
இவர் இல்லாமல் பள்ளி வாழ்வு முற்றுப்பெறாது . இன்னதென இல்லாத அத்தனை கேள்விகள் கேட்பேன். அத்தனைக்கும் முகம் சுளிக்காமல் பதில் சொல்வார். மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டே இருப்பேன். புரியும் வரை சொல்லிக் கொடுப்பார். புரிதலின் தலைப்பு பற்றியும் சொல்லிக் கொடுப்பார். மனோதத்துவ ரீதியாக நிறைய யோசனைகளை எனக்குள் விதைத்தவர்.

தங்கராஜ் பிடி மாஸ்டர்
****************************************
முடி ஒழுங்கா வெட்டு. யூனிபார்ம் போடு. செருப்பு ஒழுங்கா போடு. சரியான நேரத்து வா.. போ. தாடி ஒதுக்காத.. இன்னும் ஏராளமான கறார் பேர்வழி. கண்களிலேயே நேர்மை நீதி நியாயம் வைத்துக் கொண்டு திரிவார். உங்கப்பன் பேர கெடுக்காதடா.. உனக்கு புட்பாலெல் லாம் வராது. உங்கப்பன் வாங்கி குடுத்த கப் உள்ள இருக்கு... போய் பாரு. ஆனா... உனக்கு அது சரிப்பட்டு வராது. நீ ஆட போ... அதுதான் உனக்கு வருது என்று சொல்லி என்னை நடனத்துக்கு போக சொன்னவர். அதன்பிறகு மேடையில் ஆடிய ஆட்டமெல்லாம்... வேற லெவலுக்கு கலை இலக்கியம் என்னை இழுத்து சென்றது.

சேனாவரையன் சார்
***************************
பரீட்சையில் சொந்தமாக கவிதை எழுதியதை படித்து விட்டு, "இது உன் கவிதையா...!"என்று பாராட்டி, "இன்னும் இன்னும் எழுது"என்று ஊக்குவித்தவர். கல்லூரி முதலாம் ஆண்டு என்னில் விரவிய அறியாமையை முதலில் திமிர் என்று நினைத்து பின் அது அறியாமை தான் என்று உணர்ந்து வழி காட்டியவர். இவரின் பெயரே எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழின் வழி நின்று இலக்கியம் தேட இவரின் வகுப்புகள் என்னுள் புடம் போட்டன. சமீபத்தில் இவர் இருக்கும் மேடையில் நானும் இருந்தேன் என்பது எனக்குள் பொக்கிஷமான மன நிறைவு.

இளஞ்செழியன் சார்
*****************************
நிறைய பேரின் வகுப்புக்கு - வெளியே ஓடிக் கொண்டிருக்கும் மாணவர்கள்.. இவரின் வகுப்புக்கு வெளியே இருந்து வகுப்புக்குள் ஓடிக் கொண்டிருப்பார்கள். பிசாசு போல பாடம் எடுப்பார். பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே....அது இவரின் வகுப்பில் தான். அரை மணி நேரம் தான் வகுப்பு. ஆனாலும்.. அக்கு வேறு ஆணிவேராக பிரித்து தூக்கி தொங்க விட்டு விடுவார். அதன் பிறகு அந்தப் பாடத்தை படிக்கவே வேண்டாம். எல்லாமே பக்கம் பக்கமாக மூளைக்குள் படிந்து விடும். கல்லூரி முடியும் நாளில்.. என்னை எழுந்து நிற்க சொல்லி "நம்ம வகுப்பில் ஒரு ஆக சிறந்த படைப்பாளி இருக்கிறான். அவன் இன்னும் இன்னும் உயரம் தொட வாழ்த்துவோம்"என்று ஒரு 5 நிமிடத்துக்கு கைதட்டுகள் விழ வைத்தவர். இன்னும் அந்த சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது எனக்குள்.

ஆசிரியர்களே வாழ்வின் ஆதாரங்கள்
****************************************************
எம் பி ஏ வில்.....- நீ எழுதின பதில் தப்பு தான். ஆனா... அதுல இருந்த உன் கற்பனை..... கடைசி வரியில அந்த பதிலுக்கு செஞ்ச நியாயம் ஒரு மேனனேஜ்மேண்ட் ஸ்டூடண்ட்க்கு தேவையானது....... என்று நிற்க சொல்லி பாராட்டிய அந்த Organisation Behavior சார்.... இன்னும் இன்னும் நிறைய வாத்தியார்களால் உருவாகிக் கொண்டிருப்பவன் நான். எப்போதும் ஒரு மாணவனாக இருக்கும் பட்சத்தில் தான் இந்த உலகம் தன் கதவை திறந்து கொண்டே இருக்கும். எந்த ஒன்றிலும் ஒருவர் மாஸ்டர் ஆக முடியாது. அது மாஸ்டர் ஆன பிறகு தான் புரியும். ஒவ்வொரு ஆசிரியரிடம் இருந்தும் ஒவ்வொன்று கற்றிருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக் கொண்டே இருப்பதில் தான் இவ்வுலகு எனக்கு நிகழ்கிறது.

கற்காத நாளில்... செத்ததுக்கு சமம்.

- கவிஜி

Pin It