செவிப்புலன் குறைபாடுள்ளவர்கள் பயன்படுத்தும் கருவி (hearing aid), மறதி நோய் (Dementia) ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த பத்தாண்டு காலம் விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இருந்து, முன்கூட்டியே ஏற்படும் செவிப்புலன் குறைபாட்டைக் குறைக்க கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் வாழ்வின் பின்னாட்களில் மறதி நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது உலகளவிலான மறதி நோயாளிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உதவும்.

மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்

மறதி நோய் உலக மக்களின் நல வாழ்வை பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்று. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2050ல் இப்போதுள்ளதை விட மூன்று மடங்கு அதிகரித்து 153 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வேகமாக உயர்ந்து வரும் மறதி நோய் பாதிப்பு வருங்காலத்தில் பூமியில் இருக்கும் ஒவ்வொரு சமூகம், நாடு, மற்றும் கண்டத்திற்கும் சவாலாக அமையும். மனிதர்களின் சுகாதாரம் மற்றும் சமூக நல வாழ்விற்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.hearing aidகாது கேட்க உதவும் கருவி

கருவியைப் பயன்படுத்தாமல் கேட்கும் திறனில் குறை அல்லது இழப்பு உள்ளவர்கள், இந்தக் குறைபாடு இல்லாதவர்களை விட மறதி நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தப் புதிய ஆய்வுகளின்படி, கேட்க உதவும் கருவியைப் பயன்படுத்துபவர்கள் நல்ல கேள்வித் திறன் உடையவர்கள் போலவே இந்நோய்க்கு ஆளாகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்கட்டுரை பிரபல மருத்துவ இதழான லேன்செட் பொது சுகாதாரம் (Lancet Public health) ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

மறதி நோய்த் தடுப்பு, குறைப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக 2020ல் லேன்செட் ஆய்வுக்குழு ஆராய்ந்தது. விரிவான இந்த ஆய்வு, கேட்கும் திறன் இழப்பு உலகளவில் மறதி நோய் ஏற்பட 8% காரணமாக இருப்பதைக் கண்டுபிடித்துக் கூறியது. ஒரு மனிதரின் நடுத்தர வயதில் தொடங்கக்கூடிய இந்த நோய் ஏற்படும் வாய்ப்பை கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் மிகச் சுலபமாகத் தடுக்க முடியும்.

என்றாலும் இது பற்றி தீவிர ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்த ஆய்வுகள் காது கேட்க உதவும் கருவி, மறதி நோயால் ஏற்படும் செவிப்புலன் இழப்பின் மோசமான பாதிப்புகளைக் குறைக்க பலனுள்ள, விலை மலிவான சிகிச்சை என்று சீனாவின் ஷாண்டாங் (Shandong) பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் டான்ஷெங் ழூ (Prof Dongshan Zhu) கூறுகிறார்.

உயிரித் தகவல் வங்கியில் இருந்து

இங்கிலாந்து நாட்டின் உயிரித் தகவல் வங்கியில் (Bio bank) இருந்து சேகரிக்கப்பட்ட 437,704 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இவர்களின் சராசரி வயது 56. இந்த ஆய்வுகள் சராசரியாக பன்னிரண்டு ஆண்டுகள் நடந்தன. கேட்கும் திறனுடையவர்களுடன் ஒப்பீட்டு முறையில் ஆராயப்பட்டபோது கருவியைப் பயன்படுத்தாத, கேட்கும் திறன் குறைபாடுடையவர்களிடம் மறதி நோய் 42% அதிகம் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது மறதி நோய் வருவதற்கான வாய்ப்பை 1.7% அதிகரிக்கிறது. இது குறைபாடு இல்லாதவர்கள் மற்றும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கேட்க உதவும் கருவியைப் பயன்படுத்துபவர்களிடையில் 1.2 சதவிகிதமாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஐவரில் நால்வர்

இங்கிலாந்து நாட்டில் ஐந்து பேரில் நான்கு பேர் கேட்கும் திறனற்றவர்களாக இருந்தாலும் கருவியைப் பயன்படுத்துவதில்லை. செவிப்புலன் இழப்பு ஒருவரின் நாற்பதுகளில் தொடங்கலாம். ஆனால் அவருக்கு மறதி நோய் ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடிக்க 20 முதல் 25 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்பே அவரிடம் காது கேட்கும் திறன் படிப்படியாகக் குறைகிறது. காது கேட்காதபோதே ஒருவர் கருவியைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

செவிப்புலன் இழப்பு பற்றிய விழிப்புணர்வு, மறதி நோய்க்கும் இதற்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றிய அறிவு, அனைவரும் வாங்கக் கூடிய விதத்தில் கருவியின் விலையைக் குறைப்பது, செவிப்புலன் குறைபாடு உள்ளவர்கள் பற்றிய தீவிர கணக்கெடுப்பு நடத்த ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களுக்கு கூடுதல் வசதி மற்றும் காது கேட்காதவர்களுக்கு சிகிச்சை மற்றும் கருவிகளைப் பெருமளவில் வழங்க ஏற்பாடு செய்வது போன்ற ஒருங்கிணைந்த சமூக முயற்சிகள் இதற்குத் தீர்வாக அமையும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது மிகப் பரவலாக விரிவாக நடத்தப்பட்ட ஆய்வு. ஆனால் செவிப்புலன் இழப்பிற்கும் மறதி நோய்க்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றிய இந்த ஆய்வு இத்துறையில் முடிவானதில்லை என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் முதுமை உளவியல் துறை பேராசிரியர் டாக்டர் ராபர்ட் ஹவர்ட் (Dr Robert Howard) கூறுகிறார்.

மறதி நோய் வரும் முன்பே ஒருவரின் கேட்கும் ஆற்றலில் குறைவு மற்றும் இழப்பு ஏற்படுகிறது. கருவியைப் பயன்படுத்துவது ஒருவரின் தனிமையைக் குறைக்க உதவுகிறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, பார்வைக் குறைபாடு ஏற்படுபவர்கள் கண்ணாடி அணிவது போல, கேட்கும் திறன் இழந்தவர்கள் காது கேட்க உதவும் கருவியை பயன்படுத்தத் தயங்கக்கூடாது என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/society/2023/apr/13/hearing-aids-could-help-cut-the-risk-of-dementia-study-finds?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It