தமிழரும் அறிவியலும்

ஐரோப்பியர் வருகைக்கு முன் தமிழ்நாட்டில் அறிவியல் நுட்பம் தமிழர்களிடையே எப்படி நிலவி வந்தது என்பதைப் பார்க்கும் போது அவர்கள் அறிந்தது, அனுபவித்தது, பயன்படுத்தியது மற்றும் பயன்பெற்றதை, சோதனைக்கு அதிகம் ஆளாகாத நிலையில், அனுபவத்தினாலும், கூர்ந்து நோக்கினாலும் மட்டுமே பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் சங்கப் புலவர்கள் அறிவிய லாளர்கள் அல்லர் என்றாலும், தம் கூர்ந்த மதியால் பல அறிவியல் உண்மைகளைப் பாடல் களில் பொதிந்து வைத்துள்ளனர்.  இதில் உலகத் தோற்றம் பற்றிய பொருள் முதல்வாதக் கருத்துக்கள் முதல் பல்வேறு உயிரினங்கள் பற்றிய செய்திகள் வரை இடம் பெற்றுள்ளன.  இத்துடன் அக்கால இலக்கிய, இலக்கண உரைகளில் குறிக்கப்படுகின்ற பல நூல்களில் பண்டைத் தமிழரின் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனையின் ஆவணங்கள் உள்ளன. 

இத்துடன் இக்காலக் கல்வெட்டுகளில் கூட, சில அறிவியல் செய்திகளையும் காண முடிகின்றன.  இந்த மரபு சார்ந்த அறிவியல் பிறருக்குக் கற்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? இவை களை முறையாகப் பதிவு செய்தனரா? என்பது குறித்து அறிவதற்கில்லை.

சுவடியில் நூலாக்கம்

அச்செழுத்துக்கள் உருவாகாத காலகட்டத்தில் வழக்கில் இருந்த அறிவியல் கருத்துக்களை ஓலைச் சுவடிகளில் தமிழர்கள் பதிவு செய்துள்ளனர்.  தமிழகத்தில் கிடைத்த சுவடிகளில் அறிவியல் செய்திகள் பாடல் வடிவிலேயே இடம் பெற்று உள்ளன.  தமிழில் அறிவியல் எழுது முறை வரலாற்றை ஓலைச்சுவடிகளிலிருந்தே தொடங்க வேண்டும்.  தமிழகத்தில் நிலவி வந்த மருத்துவ முறைகளை டேனிஸ் மிஷனரியாகத் தமிழகம் வந்த சீகன் பால்கு தம்முடைய குறிப்பில்;

“மருத்துவப் பயிற்சியில் சுதேசிகள் நல்ல முறையில் பயிற்சியுடையவர்களாயிருக் கிறார்கள்.  அவர்களின் மற்ற நூல்களைவிட மருத்துவ நூல்களே சிறப்புத் தன்மை உடையனவாகவே இருந்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மருத்துவ தொழில் நுட்பங்களைத் தமிழர்கள் ஓலைச் சுவடிகளில் நூலாக்கம் செய் துள்ளனர் என்பது உறுதியாகிறது.  இத்துடன் இப்பாதிரியாரே கணித நூலைப் பள்ளிக் குழந்தை களுக்குத் தமிழ் மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.  இவ்வாறாக மேலை நாட்டு அறிவியல் சிந்தனைகள் மெல்ல மெல்ல தமிழகத்தில் நுழைய ஆரம்பித்தது.

முதன் முதலில் அச்சுப்பொறி கண்ட உலக மொழிகளில் தமிழும் ஒன்று.  1554-லேயே முதல் தமிழ் நூல் போர்த்துக்கீசியரினால் அச்சேறினாலும், 1835 வரை சுதேசிகளுக்கு அச்சடிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. 

ஆனால், கிறித்தவர்கள் சென்னையில் அச்சகம் தொடங்கிய பிறகு யுரேனியஸ் பாதிரியார் 1818-இல் துண்டறிக்கை சங்கத்தைத் தொடங்கி காலராவிற்கான துண்டறிக்கையை வெளியிட்டார்.  இவரே முதல் அறிவியல் நூலான பூமி சாஸ்திரத்தை, அதாவது முதல் ஐரோப்பிய அறிவியல் தமிழ் நூலைத் தமிழர்களுக்கு அறிவுண்டாகும்படி எழுதி வெளியிட்டார்.  இதனைத் தொடர்ந்துதான் அறிவியல் செய்தி களைக் கொண்ட இதழ்கள் தமிழகத்தில் வெளி வந்தன.

பிற துறைகளோடு அறிவியலை வெளியிட்ட இதழ்கள் 

இந்திய இதழியல் வரலாற்றில் தமிழ் மொழியில் தமிழ் இதழியல் வரலாறு சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது.  17-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இதழ் களில் விளம்பரங்கள் இடம்பெற்றது.  1802-இல் இலங்கை அரசின் கெசட்டில் தமிழ்ப் பகுதியாக வெளிவந்த அரசாங்க வர்தமானியே தமிழின் முதல் இதழாகும்.

இதனைத் தொடர்ந்த சென்னை துண்டறிக்கை சங்கத்தின் மூலமாக 1831-இல் ‘தமிழ் மேகசின்’ என்ற இதழ் வெளியானது.  இது சமயப் பிரச்சாரத் திற்காகத் தொடங்கப்பட்டது என்றாலும், அறிவியல் செய்திகளையும் வெளியிட்டுள்ளது.

இதே போல இலங்கையில் செயல்பட்டு வந்த அமெரிக்க கிறித்துவ சபையால் ‘உதயதாரகை’ என்னும் இதழ் 1841-இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப் பட்டது.  உதயதாரகை ஈழத்தில் மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் விற்பனை செய்யப்பட்டது.  இதன் நோக்கத்தைப் பற்றி:

“இங்கிலீஸ் பள்ளிக்கூடங்களில் படிக்க முடியாதவர்களுக்கு, இந்த அறிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை யென்றும்...  மக்கள் பலவிதமான அறிவிலும் தேற வேண்டுமென்று கொண்டதாலும், இப்படியொரு பத்திரிகையை வெளியிட முயன்றோம்” என்ற தொடர்கள் சுட்டியுள்ளது.

இவ்விதழ் அறிவியல் வினாக்களை வெளி யிட்டுள்ளது.  வினாக்களுக்குப் பதில் தெரிந்த வாசகர்கள் தங்களின் கருத்துக்களை எழுதி யுள்ளனர்.  இதைப் பார்க்கும் பொழுது சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவியல் கருத்துப் பரிமாற்றத்துக்கு இவ்விதழ் களம் அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.  ஐரோப்பிய மருத் துவத்தை, குறிப்பாக ஐரோப்பிய அறிவியலைத் தமிழில் வெளியிட்ட உதயதாரகை தமிழ் மருத் துவத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டது என்பதைப் பார்க்கும் போது கி.பி. 1841-ஆம் ஆண்டு உதய தாரகையில் மருத்துவச் சுவடிப் பதிப்பு தொடங்கப் பெற்றிருப்பது தெரிய வருகிறது.

1855-இல் பெர்சிவல் பாதிரியார் ‘தின வர்த மானி’ என்ற இதழைத் தொடங்கி வாரந்தோறும் தமிழ் இலக்கியத்துடன், அறிவியலையும் வெளி யிட்டார்.  இதன் பிறகு சமய இதழ்கள் பல வெளி வந்தன.  பின்னர் 1870-ஆம் ஆண்டில் கிறித்துவ வட்டாரக் கல்வி இலக்கியக் கழகம் 

 சார்பில் ‘ஜனவிநோதினி’ என்னும் இதழ் வெளியிடப்பட்டது.  இது ஒரு பொது இதழ் என்றாலும் அதிக அளவில் ஐரோப்பிய அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல அறிவியல் கட்டுரைகளையும், அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய துணுக்குகளையும், விவித விஷய விளக்க விடை என்ற அறிவியல் குறித்த வினா விடையை வெளியிட்டதோடு, அதன் தொடர்புடைய படங்களையும் வெளியிட்டு சாதனை படைத்தது.

  இதனைப் பார்க்கும் பொழுது ஐரோப்பியர் வருகையோடு மேலை நாட்டுத் தற்கால அறிவியல் தொழில் நுட்பத்துடன் இதழியலும் நம்மை வந்தடைந்தன.  அவற்றைத் தமிழில் சொல்லும் ஆர்வம் பலருக்கும் தோன்றவே அவை இதழ்வழி வெளிப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக... ... 1887-ஆம் ஆண்டு பெங்களூரிலிருந்து ‘சுகஜீவனி’  என்ற பொது இதழ் மருத்துவக் கட்டுரைகளுடன் அறிவியல் துணுக்குகளையும் இடம் பெறச் செய்துள்ளது.  1892-இல்‘விவேக சிந்தாமணி’ சி.வி. சாமிநாதையரால் தொடங்கப்பட்ட அறிவைப் பரப்புவதற்கான ஏஜென்சியின் சார்பில் மக்களிடம் இலக்கியம், அறிவியல், பிற துறை செய்திகளைப் பரப்பும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியது.

இச்சங்கத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது சுகாதாரம் பற்றிய பிரச்சாரத்திற்கே மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.  இவ்வமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் கிளைச் சங்கங்களில் வாரத்தில் ஒரு நாள் கூடி இவ்விதழில் வெளிவந்த கட்டுரைகளை ஒருவர் படிக்க மற்றவர் விளக்கம் அளித்துள்ளார்.  இவ்விதழ் சிறு நூல்களாக இலக்கியம், சுகாதாரம் தொடர்பான வெளியீடு களையும் வெளியிட்டுள்ளது.  இதுவே ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் போன்ற இதழ்களுக்கு நூல்கள் வெளியிடுவதில் முன்னோடியாக இருந் திருக்க வாய்ப்புண்டு.

இவ்விதழைத் தொடர்ந்து 1894-ஆம் ஆண்டு முதல் திங்களிதழாக ‘விவேக சுந்தரம்’ என்ற இதழ் விவசாயம், வைத்தியம் போன்றவைகள் வெளியாகும் என்ற அறிவிப்புடன் வெளிவந்தது.  1897-இல் ‘சித்தாந்த தீபிகை’ அறிவியலை வெளி யிடுவதை நோக்கமாகக் கொண்டு வெளியாகி உள்ளது.  ‘சித்தாந்த தீபிகை’ சமய ஞானம், தத்துவ ஞானம், கலை ஞானம், பூத பௌதிகம் முதலான சாஸ்திர ஞானம் ஆகியவற்றை மக்களுக்கு உணர்த்தும் என்பதை இதன் நோக்கமாகக் கூறு கிறது. 

1897-இல் ‘ஞானபோதினி’ இயற்பியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவம் தொடர் பான கட்டுரைகளை வெளியிட்டதுடன் டாக்டர் ஃபிஷ் கிறீன் மாணவரான ‘சாப்மானின் சீரண உறுப்புக்கள்’ என்ற தொடர் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது.

1900-இல் ‘விநோத சித்திர பத்திரிகை’ யும் ‘ஜனப்பிரியன்’ இதழும் வெளிவந்துள்ளன.  விநோத சித்திர பத்திரிகை மருத்துவம், வேளாண்மை தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.  ‘சமாசாரம்’ என்ற தலைப்பில் பல நாடுகளில் நடந்த அறிவியல் விநோதங்களை வெளியிட்டு உள்ளது.  ஜனப்பிரியன் இதழ் வாசகர்களுக்கு அறிவியலை எளிமையாகப் புரிய வைக்க கட்டுரைகளிடையே சிறிய வடிவிலான கதைகளை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் அறிவியல் செய்திகளுடன் பிற துறை செய்திகளையும் வெளியிடும் போக்கு 1831-லிருந்து 19-ஆம் நூற்றாண்டு இறுதி வரை நீடித்தது.

ஐரோப்பிய அறிவியலைத் தமிழில் கற்பிக்க முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்த இரு பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலகட்டத்தில் ஆங்கிலேய எதிர்ப்புணர்வின் காரணமாகப் பல இதழ்கள் தடை செய்யப்பட்டன.  அதனைத் தொடர்ந்து உலகப் போர் நிகழ்ந்தது.  போருக்குப் பிறகு பல இதழ்களும் அமைப்புகளும் தொடங்கப்பட்டன. 

இக்காலகட்டத்தில்தான் தமிழர் கல்விச் சங்கத்தின் சார்பில் மாதவையா போன்றோரின் முன் முயற்சியில் 1917-இல், ‘தமிழர் நேசன்’ என்னும் இதழ் தொடங்கப்பட்டது.  இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாக, ‘தமிழ்ப் பத்திரிகைகள், புத்தகங்கள், பிரசுரங்கள் முதலியவற்றின் மூலமாய் இங்கிலீஷ் தெரியாத தமிழ் நாட்டாருக்குத் தற்காலத்து நவீன அறிவைப் பரவச் செய்தன’.

இதன் காரணமாகத் தமிழர் நேசனில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், தாவரவியல், விலங்கியல் மற்றும் அடிப்படை அறிவியல் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொது இதழ் அறிவியல் தொண்டு

பொது இதழ்களில் இடம்பெற்ற கட்டுரை களில் இலக்கிய, புராண, வரலாற்றுச் சான்று களுடன் மரபு சார்ந்த கதை கூறும் தன்மை களுடனும் உரையாடல்கள் வடிவிலும் அறிவியல் கருத்துக்கள் மக்களிடம் கொண்டு செல்லப் பட்டுள்ளன.

இவ்விதழ்கள் பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் போன்று பயன்பட்டன.  தொட்டனைத் தூறும் மணற்கேணியாக மக்களின் அறிவு வளர்ச்சியே அவற்றின் நோக்கமாக இருந்தன.  தொழிலாக அல்ல ஆதாய நோக்கமற்ற இதழ்கள் நடத்தப்பட்டன.  பொழுதுபோக்கிற்காக அல்ல.  புத்தி ஆக்கத்துக்காக இதழ்கள் உலா வந்தன.  சில இதழ்கள் தனிநபர்களின்றி தொண்டு நிறுவனங்கள் மூலம் வெளிவந்துள்ளன.  இவ்விதழ்கள் கடைகளில் விற்கப்படவில்லை.  வாசகர்கள் கையொப்பக் காரர்களாகச் (சந்தாதாரர்) சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

ஒரு குறிப்பிடத்தக்க செய்தி ஐரோப்பிய சூழலில் அறிவியல் இதழ்கள் கருத்துப் பரிமாற்றத் திற்காக விஞ்ஞானிகளிடமே இருந்தன.  அதற்கு நேர் மாறாகத் தமிழ்ச்சூழலில் அறிவியல் இதழியலின் தோற்றத்தின் போதே அறிவியல் இதழ்கள் பொது மக்கள் வாசகத்தன்மையைப் பெற்றிருந்தனர்.

19-ஆம் நூற்றாண்டில் தமிழை வளர்த்தவை இதழ்களே எனில் மிகையில்லை.  தொழிற்புரட்சி, அரசியல், அறிவியல் புரட்சி, புதுமைப் புரட்சி நடந்த புரட்சிகரமான 20-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப தமிழை வளர்த்து வளப்படுத்தியவை இதழ் களே.  இதனால் அன்றாடம் பேசிய பேச்சுத் தமிழ் இதழ் மொழியானது.  ஏற்றத்தாழ்வு இல்லாது எல்லா மக்களும் இவ்விதழ்களை வாங்கிப் படித்தனர்.  இதனால் மேட்டுக் குடியினர்க்கே அறிவியல் கல்வி என்ற நிலை தகர்க்கப்பட்டது.

மருத்துவ இதழ்கள்

தமிழில் அதிக எண்ணிக்கையில் வெளியாகிய இதழ்கள் மருத்துவ இதழ்களாகும்.  தமிழில் தோன்றிய அகத்திய வர்தமானி (1870) என்பது முதல் மருத்துவ இதழாகும்.  இது தமிழ் நேசன் தொடங்கப்பட்ட பின் 40 ஆண்டுகள் கழித்தே முதல் அறிவியல் இதழாக வெளிவந்துள்ளது.

மருத்துவ இதழ்களின் வளர்ச்சி

அகத்திய வர்தமானி வெளிவந்த காலத்திற்குப் பிறகு 1887 சுகஜீவனி, 1889 ஆயுர்வேத பாஸ்கரன், 1891 சுகாதார போதினி, 1887 வைத்திய போதினி, 1897 வைத்திய விசயன் ஆகிய இதழ்கள் வெளி வந்திருந்தாலும் இவை தமிழக நூலகங்களில் காணக்கிடைக்கவில்லை.

விடுதலைக்கு முந்தைய மருத்துவ இதழ்கள்

சென்னையிலிருந்து 1906-ஆம் ஆண்டு ‘சுகாதார போதினி’ என்ற இதழும், 1908-இல் கும்பகோணத்திலிருந்து ‘வைத்திய போதினி’ இதழும் வெளிவந்தன.  பூனா ஓரியண்டல் வாட்ச் மேன் நிறுவனத்தின் சார்பில் 1912-இல் ‘நல்வழி’ மாத இதழ் வெளியிடப்பட்டு, 100 ஆண்டுகள் கடந்து, தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 

1913-ஆம் ஆண்டு ‘வைத்திய கலாநிதி’ என்ற ஆயுர்வேத மருத்துவ இதழ் சென்னையி லிருந்து வெளியிடப்பட்டது.  1921-இல் ‘தமிழ் வைத்தியக் களஞ்சியம்’ என்ற சித்த மருத்துவ இதழ் வெளிவந்தது.  1923-இல் ‘ஆரோக்கியமும், சிசுவின் வாழ்க்கையும்’ என்ற இதழ் திருநெல் வேலியிலிருந்து வெளிவந்தது.  அதே ஆண்டு சென்னை ஆயுர்வேத கல்லூரி சார்பில் ‘தன் வந்திரியும்’ வேலூர் தென் இந்திய வைத்திய சங்கத்தின் சார்பில் ‘ஆயுள்வேதமும்’ (1923) வெளிவந்தன.

1924-இல் சென்னை மருத்துவர்களான யூ. ராமராவ், யு. கிருஷ்ணராவ் ஆகியோர்களால் ‘ஆரோக்கிய தீபிகை’யும், 1926-இல் மதுரையி லிருந்து ஆர்.எஸ். பதி என்பவரால் ‘செல்வக் களஞ்சியமும்’ வெளியிடப்பட்டன.  ‘இயற்கை’ என்ற இயற்கை மருத்துவ இதழ் சுவாமி சுந்தானந்த பாரதியாரால் காஞ்சியிலிருந்து தொடங்கப் பட்டது.  பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம் ‘மருத்துவன்’ என்ற இதழை 1928-இல் தொடங்கினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து 1930- இல் வைத்தியக் களஞ்சியமும், அதே ஆண்டு ஆரோக்கிய சிந்தா மணி இதழும் வெளிவந்தன.  வைத்தியன் என்ற இதழ் 1931-ஆம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சங்கத்தின் சார்பில் வெளிவந்தது.  பண்டிட் டி.வி. எம். விஸ்வநாதையர், 1932-ஆம் ஆண்டு ‘ஆயுர்வேத சீவரட்சகம்’ என்ற இதழை வெளியிட்டார். 

1934-இல் திருநெல்வேலியிலிருந்து ‘சீதர் களஞ்சியம்’ என்ற இதழை, கே. வேலன் என்பவர் நடத்தியுள்ளார்.  பழனியிலிருந்து ‘சித்தன்’ என்ற சித்த மருத்துவ இதழ் 1935-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  திராவிட தேசிய ஆயுர்வேத மகாமண்டலம் 1938-ஆம் ஆண்டு ‘வைத்திய சந்திரிகா’ என்ற இதழைத் தொடங்கி பல ஆண்டுகள் நடத்தி வந்தது.  திருத்துறைப்பூண்டியி லிருந்து அகஸ்தியன் என்ற இதழ் 1944-ஆம்

ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.  1947-ஆம் ஆண்டு ஹோமியோபதி என்ற இதழ் கும்பகோணம் இந்தியன் ‘ஹோமியோபதி’ நிறு வனத்தின் சார்பில் வெளிவந்தது.

19-ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20-ஆம் நூற்றாண்டு ஆரம்ப காலத்திலிருந்து இடைப் பட்ட காலம் வரை மருத்துவ இதழ்கள் வைத்திய என்ற அடைமொழியோடு வைத்திய விசயன், வைத்திய போதினி எனப் பெயரிடப்பட்டுள்ளன.  இதன் பிறகு இதழ்களின் பெயர்கள் அது எந்த மருத்துவ முறையைச் சார்ந்து வருகிறதோ அதை நினைவூட்டும் விதமாக வெளி வந்துள்ளது.  (எ.கா. : சித்தர் களஞ்சியம், மூலிகைமணி.).

19-ஆம் நூற்றாண்டில் இதழ்களின் தலைப்புகள் அட்டையில் தமிழில் மட்டுமே இடம் பெற்றன.  20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலப் பெயருடன் தமிழ்த்தலைப்புகள் இடம்பெற்றன.  (எ.கா. : விவசாய தீபிகை, ). ஆரோக்கிய போதினி). 

அலோபதி இதழ், ஆரோக்கியம், என்ற அடை மொழியுடன் வந்தது.  (எ.கா. : ஆரோக்கிய தீபிகை) இதே சொல்லை ஆயுர்வேத இதழும் கையாண்டுள்ளது.  ஆனால் இதுவே நாளடைவில் இம்மாதிரியான சமஸ்கிருத சொல்லாட்சி போய், நல்வாழ்வு, நல்வழி என்ற நல்ல தமிழ்ப் பெயருடன் இதழ்கள் வெளிவந்தாலும் 1990-களுக்குப் பிறகு பெரும்பாலான பல்துறை மருத்துவ இதழ்கள் ஹெல்த் என்ற அடைமொழியுடனே வெளி வரு கின்றன.  (எ.கா. : ஹெல்த் & பியூட்டி, பேமிலி - ஹெல்த் வடமொழி இருந்த இடத்தில் ஆங்கிலம் அடைகாக்கும் நிலை வந்தது.)

அறிவியல் இதழ்கள் 20-ஆம் நூற்றாண்டில் 100-க்கும் மேற்பட்டு வெளிவரக் காரணம் என்ன வென்று ஆராய்கையில் கி.பி. 1900-ஆம் ஆண்டு முதல் சென்னை மாகாணத்தின் பல பகுதிகளில் ஐரோப்பிய அடிப்படையிலான கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் பல தொடங்கப்பட்டன.  இக்கல்வி நிறுவனங்களில் ஐரோப்பிய அறிவியல் பாடங்கள் தமிழ், தெலுங்கு மொழிகளில் கற்பிக்கப்பட்டன. 

ஐரோப்பிய அறிவியல் பாட நூல்களை எழுதி ஆசிரியர்கள் இக்கால கட்டத்தில் வெளிவந்த இதழ்களில் சுகாதாரம் மற்றும் தொற்று நோய் குறித்த மருத்துவக் கட்டுரைகளை எழுதினர்.  இது தவிர அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பாதையில்

1930-ஆம் ஆண்டை ஒரு திருப்புமுனையாகவும் கொள்ளலாம்.  இந்நூற்றாண்டின் இறுதியில்தான் கலைப்பாடங்களையும், பின்னர் அறிவியல் பாடங்களையும் தமிழில் கற்பிக்கலாயினர்.  ஏனெனில் இக்காலகட்டத்தில் தமிழ் பயிற்று மொழி ஆனது. 

இதனால் கலைப்பாட நூல்களும் அறிவியல் பாட நூல்களும் பெருமளவில் எழுதிக் குவிக்கப்பட்டன.  இத்துடன் பல அறிவியல் நூல் வெளிவந்ததோடு, இதழ்களிலும் பல அறிவியல் கட்டுரைகளும் அதிக அளவில் எழுதப்படும் சூழ்நிலை உருவானது.

1935-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொற்களை உருவாக்கு வதிலும் ஆக்கபூர்வமான முயற்சிகள் அரசு தரப்பிலும், நூலாசிரியர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள் தரப்பிலும் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வந்தன.

சிறுவர்களுக்கான அறிவியல் இதழ்கள்

1840-ஆம் ஆண்டிலேயே பாலதீபிகை என்ற இதழ் கிறித்தவ பிரச்சார சபையால் சிறுவர் களுக்கென ஆரம்பித்து நடத்தப்பட்டுள்ளது.  இதுவே சிறுவர்களுக்கான முதல் இதழாக அமைந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து பாலர்தூதன், பாலியர் மித்திரன் போன்ற சிறுவர் இதழ்கள் வெளிவந்தன.

விவேக சிந்தாமணியிலிருந்து (1892) இன்று வரை வெளிவரும் தினத்தந்தி, தினகரன், தின மலர், தினபூமி, கதிரவன் ஆகிய நாளிதழ்கள் சிறுவர்களுக்கான சிறு இணைப்புகளை அவ்விதழ் களுடன் வெளியிட்டு வருகின்றன.

இது தவிர அம்புலிமாமா, பாலமித்ரா, சுட்டி விகடன் போன்ற இதழ்கள் 5ரூ அளவில் அறிவியல் செய்திகளை வெளியிட்டுள்ளன.  இவ்வரிசையில் துளிர் (1987) இதழ் மட்டுமே எல்லாப் பக்கங்களிலும் அறிவியல் செய்திகள் வெளியாகும் சிறுவர் அறிவியல் மாத இதழாக உலா வருகிறது.  இதற்கு அடுத்தபடியாக திராவிடர் கழக வெளி யீடான பெரியார் ‘பிஞ்சு’ வைக் குறிப்பிட வேண்டும்.

சிறுவர் இதழுக்கான அவசியம் என்ன?

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக அறிவியல் பங்கு பெற வேண்டும்.  அப்பொழுதுதான் மனித சமுதாயம் நிலையான வாழ்க்கை முன்னேற்றத்தைப் பெற முடியும்.  இவ்வாய்ப்பு மனித வாழ்க்கையில் சிறு பருவம் முதல் கிடைத்தால் விளையும் பயிர்களாகிய சிறுவர் சிந்தனையைத் தூண்டி அறிவியல் வல்லுனர் களாகவும் வளருவர்.

மொழி நடை

பத்தொன்பதாம் நூற்றாண்டு அறிவியல் இதழ்களின் மொழிநடை அன்றைய காலகட்ட சமஸ்கிருத கலப்புடன் அமைந்துள்ளது.  பொது மக்களுக்கான அறிவியல் எழுதுமுறையில் அதிக குழப்பமில்லாமல் எளிய நடையில் கட்டுரைகள் அமைந்துள்ளன.

சான்றாக, “சனத்திலுள்ள சகல பொருள் களினது ஓட்டமும் மைய வீழ்ச்சியைப் பற்றி யிருப்பதென்று முதலில் நிரூபித்த ஸ்ரீ ஐசக் நியூட்டன்.  இதை அவர் ஆராய்ந்து படிக்க வந்தது அத்திப்பழம் மரத்திலிருந்து நிலத்தில் விழுவதைக் கண்ட தினமென்று சொல்லியிருக்கிறது”.  (உதய தாரகை, 1841).

இது போலவே மருத்துவ இதழ்களைப் பார்க்கும் போது ஆயுர்வேத இதழ்களில் சமஸ்கிருத சொற்கள் மிகுந்தும், சித்த மருத்துவ இதழ்களில் சமஸ்கிருத சொற்கள் மிகவும் சொற்பமாகவும், கிரந்த எழுத்துக்கள் தவிர்த்தும் காணப்படுகின்றன.  மாறாக அலோபதி மருத்துவ உரைநடையில் ஓரளவு சமஸ்கிருதச் சொற்கள் காணப்படுகிறது.

தற்கால மருத்துவ இதழ் உரைநடை

இன்றைய காலகட்டத்தில் அறிவியல் இதழ்கள் நடத்தும் ஆசிரியர்கள் அறிவியல் அறிவும் தமிழறிவும், மொழியியல் அறிவும் ஒருங்கே இணைந்தவராக இல்லாததாலும், உலகமயமாதல் என்னும் இன்றைய நிலையில் இதழ்களின் பெயர்கள் கூட ஆங்கில வார்த்தை ‘ஹெல்த்’ என்ற வார்த்தை இல்லாமல் இல்லை என்ற அளவுக்கு உள்ளது.  அது போதாது என்று அடைமொழிகள் வேறு அமைந்துள்ளன.  (எ.கா. : குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்).

மொழிப்பயன்பாடு குறித்த போக்குக் குறித்து சற்றும் கவலை கொள்ளாத நிலையில் ஒரு புதிய நடை 19-ஆம் நூற்றாண்டில் எப்படி உரை நடையில் சமஸ்கிருதம் ஆட்சி செலுத்தியதோ அதே போல வடசொல்லுக்குப் பதிலாக ஆங்கிலச் சொற்களை மிகுதியாக இவர்கள் தமிழைத் ‘தமிங்கிலம்’ என்று சொல்லும் அளவுக்கு எழுதுகின்றனர். 

இது தவிர பிற மொழிச் சொற்களும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத் தக்கது.  (எ.கா. : சவால், விசேஷ ரயில், ராஜினாமா ஆகிய சொற்கள்.  மேலும் இது போன்ற தலைப்புக்கள் ஸ்டியோ, ரவுண்ட் (அலிபாபா), லைட்ஸ் ஆன் (குமுதம்), ஆன் தி ஸ்பாட் (கல்கி). 

உரைநடை.  எ.கா. : ‘இருப்பினும் டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் சில கண்டிஷன்கள்.  இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்’...  ‘எப்பொழுதும் ஒரு டாக்டரும் அனுபவமிக்க நர்ஸ் ஒருவரும் டூட்டியில் இருப்பார்கள்.  இவர்களுக்கு உதவியாக வார்டு அட்டெண்டரும் இருப்பார்கள்’.  (குமுதம் - ஹெல்த் ஸ்பெஷல் - 2001, நவ. பக். 39).

இவ்வுரைநடையைப் பார்க்கும் பொழுது மொழிபெயர்க்க வேண்டியவை மொழி பெயர்க்கப் படவில்லை என்று தெளிவாகிறது.  மேலும் கிரந்த எழுத்துக்களும் மிகுதியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

கலைச்சொல்லாக்கம்

19-ஆம் நூற்றாண்டு இதழ்களில் அறிவியல் பொது மக்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் கட்டுரைகளில் கலைச்சொற்கள் அதிக சலிப்பு ஏற்படாத வகையில் தேவையான இடங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

(எ.கா. : “பாறையுப்பு (சுடிஉம ளுயடவ) ஒரு பெரிய கட்டியைப் பழுக்க காய்ச்சி சரியான அளவு தண்ணீரில் அதைப் போட்டால் போடப் பட்ட நிமிஷமே அந்தக்கட்டி கரைந்து போகும்.  சாராயம் முதலிய மதுக்களில் சாதாரண உப்பு கரைவது மத்திமம்’..).

இன்றைய அறிவியல் இதழ்களான களஞ்சியம், நின்றுபோன இணைப்பான தினமணியில் கலைச் சொல்லாக்க மேடைப் பகுதியைப் போல் 170 ஆண்டுகளுக்கு முன்னரே உதயதாரகை மேற் கொண்டுள்ளது என்பது ஒரு சிறப்பான செய்தியாகும்.

ஆயுர்வேத மருத்துவ இதழ்களில் ஆங்கில எழுத்தாகிய ‘உ’- க்கு ஸி என்றே எல்லா இடங் களிலும் குறிக்கப்பெறுகிறது.  இதுபோலவே கிரந்த எழுத்துக்கள் தாராளமாய் எடுத்தாளப்படு கின்றன.

(எ.கா. : ஆஹாரம், ஸுகம், புஷ்டி, ஜீவிதம் மற்றும் ‘ச’ எழுத்துக்கள் அனைத்திற்கும் ‘ஸ’ வே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.  நல்ல தமிழ்ச் சொற்களை ஆசிரியர் அறிந்திருந்தாலும் அவற்றை அடைப்புக் குறிக்குள் இட்டு வடசொல்லே பயன் பாட்டிற்கு இருந்துள்ளது.  எ.கா. : அஜீரண, (செரிமான), விஸுசிகை- (வாந்திபேதி).

சித்த மருத்துவ இதழ்களைக் கண்ணுரும் பொழுது ஓர் அதிர்ச்சி ஏற்படுகிறது.  கலைச் சொற்கள் பெரும்பாலும் வட சொற்களாகவே உள்ளது.  (எ.கா. : மந்த ஒலி, வபாசிம்புகள், நாள சஞ்சயம்).

விடுதலைக்குப் பிந்தைய அறிவியல் இதழ்கள் என்று பட்டியலிட்டுப் பார்க்கும் நிலையில், மருத்துவ இதழ்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.  இவ்விதழ்கள் ஏறத்தாழ 1970-ஆம் ஆண்டு வரை பெரும் பாலும் பொதுவாகவும், உடல்நலம், துப்புரவு என்று பொதுமையான கருத்துக்களைச் சொல்லி, அவற்றில் ஆன்மீகம் மற்றும் மனநலம் குறித்த செய்திகளைத் தவறாது எழுதி உடலுடன் மனமும், சுற்றுப்புறமும் சீராக இருக்கப் பாடுபட்டு வந்து உள்ளன.  மருத்துவ இதழ்களை விடுத்து வார மற்றும் இதழ்களும் கூடப் பொது சுகாதாரத் தையும் உடல் நலத்தைப் பேணுவதையும் கட்டுரை வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன.

அறிவியல் இதழ்கள் கொண்ட இடர்பாடுகள்

தமிழில் தொடங்கப்பட்ட ஜனவிநோதினிக்கு அரசு உதவி செய்தும், ‘ஜனவிநோதினி’ இறுதி வரை நட்டத்திலேயே இயங்கி இறுதியில் மூடப்பட்டது.  மேலும் ‘ஏல விவசாயி’ இதழை நடத்திய ஆசிரியருக்கும் அதிகமான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது போலவே ‘வைத்தியபோதினி’ இலவசமாய் இதழை வாசகர்களுக்கு அனுப்பிய பொழுது பெற்றுக் கொண்டு வி.பி.பி.யில் அனுப்பும் பொழுது திருப்பி விட்டு விடுவதுமாய் இருந்தது என்று அதன் ஆசிரியர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் இதழ்கள் நடத்துவதில் நிர்வாகச் சிக்கல்கள், பொருள் இழப்பு, வாசகர்களிடம் ஆதரவு இன்மை ஆகிய பல்வேறு தடைகளை எதிர் கொண்ட அறிவியல் இதழாளர்களுக்கு அறிவியல் கட்டுரைகளை எழுதுபவர்கள் குறிப்பாக மருத்து வர்கள், மருத்துவ நல்வாழ்வு இயக்குநரிடம் அல்லது மருத்துவக் கல்வி இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற இடையூறும் அண்மைக் காலம் வரை இருந்துள்ளது என்பது மருத்துவத்தமிழ் வளரத் தடையாக இருந்துள்ளது.

அறிவியல் இதழ்களின் இன்றைய நிலை

எந்த அறிவியல் இதழும் விற்பனையில் பொழுது போக்கு இதழ்களின் எண்ணிக்கையை எட்டவில்லை.  இப்பொழுது வெளிவருகின்ற அறிவியல் இதழ்கள் கிட்டத்தட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் சார்ந்தே வருவதால் இவைகள் இதழ்களை பெருமளவில் விற்பனை செய்ய சரியான புதிய யுக்திகளை மேற்கொள்ள வில்லை.  இதனால்தான் பல இதழ்கள் நடுவண் அரசு நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது.  (எ.கா. : கலைக்கதிர், அறிக அறிவியல்).

இருப்பினும் சமீபகாலமாக குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், மோட்டார் விகடன், டாக்டர் விகடன், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் போன்ற அறிவியல் இதழ்களை வெளியிட்டு அறி வியலைப் பரப்ப முனைந்துள்ளது பாராட்டத் தக்கதாகும். 

ஆனாலும், அவர்கள் தங்கள் இதழ்களின் பெயரிலிருந்து எழுதும் உரைநடை வரை முடிந்தவரை தமிழில் இருப்பது தமிழுக்குச் செய்யும் அருந்தொண்டாகவும், கொடையாக அமைந்து தமிழகத்திலும் மொரீசியசைப்போல் ஓர் கிரியோல் மொழி உருவாகாது  தடுக்கவும் உதவ வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் விருப்பமாகும்.

அறிவியல் இதழ்களைக் கால ஒட்டத்தில், கண்ணுறும் போது அறியப்பெரும் முக்கிய கருத்து:

Physics என்பது பிரபஞ்ச சாஸ்திரம், பௌதீகம், பூதவியல் என வழங்கப்பட்டு இன்று இயற்பியல் எனத் தரப்படுத்தப்பட்டுள்ளது.  இதைத் தரப்படுத்த நூற்றாண்டு காலம் பிடித்தது.  ஆனால் கம்ப்யூட்டர் என்பது கணிப்பொறி எனத் தொடங்கி கணினி என மிகக் குறுகிய காலத்தில் தரப்படுத்தப் பட்டுவிட்டது.  காரணம் அறிவியல் தமிழ் ஆர்வமும், கணினிப் பயன்பாட்டின் விரிவும்தான். 

எனவே ஒரு பொருள் அல்லது ஒரு கருத்தமைவு திரும்பத் திரும்ப, மீண்டும் மீண்டும் பயன்பாட்டில் இருக்கும் போது அதைக் குறித்த மாற்றங்கள் மிக விரைவில் நிகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது.  தேவை, மிகையான பயன், பயன்பாடு என்பது அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தேவை என்பது இதன் மூலம் அறியப்படுகிறது.  தமிழ் பயிற்று மொழி ஆக வேண்டிய அவசியத்தை இது நமக்குத் தெளிவாக்குகிறது.

அறிவியல் இதழ்களினால் தமிழர்கள் வாழ்வு வளம் பெறும்:

நாம் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருள்களை, கருவிகளைப் பற்றிய செய்திகளும், பிற அறிவியல் செய்திகளும், அறிவியல் நூல்களிலும், இதழ்களிலும் நம் தாய் மொழியில் தரப்படும்போது தான் நூல்கள் மற்றும் இதழ்களின் செயல்பாடுகள் பயனுடையவையாக அமையும்.  இவ்வாறு பெறப்படும் செய்திகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

ஓரளவு கல்வி அறிவு பெற்றோரும் இந்நிலையை எளிமை யாக அடைய முடியும்.  இதனால் கல்வியறிவை முறையாகப் பெற்றோருக்கும், மற்றோருக்கும் உள்ள இடைவெளி வெகுவாகக் குறையும்.  தமிழ் வழிக் கல்வி பெறும் மாணவர்களும் இவ்வறிவை எளிமையாகப் பெற்று எதிர் காலத்தை வளம் பெறச் செய்ய முடியும்.

Pin It