சூரிய குடும்பம் இருக்கும் பால்வீதி நட்சத்திர மண்டலத்தின் இதயப் பகுதியில் வயதான, புதிரான ராட்சச நட்சட்திரக் கூட்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை சூரியக் குடும்பம் அளவிற்கு தூசுக்களையும் வாயு மேகங்களையும் உமிழ்கின்றன. இக்கண்டுபிடிப்பிற்கு முன்பு பல ஆண்டுகளாக இவை இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக பார்வைக்குப் புலப்படாமல் மறைந்திருந்தன.

ஒரு பில்லியன் நட்சத்திரங்களின் ஆய்வு

கடந்த பத்தாண்டுகளாக விஞ்ஞானிகள் இரவு வானத்தில் அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி ஒரு பில்லியன் நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்தக் கண்டுபிடிப்பு இப்போது நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு வரை இந்த நட்சத்திரக் கூட்டம் புகை மேகங்களாக தூசுக்களையும் வாயுக்களையும் உமிழ்ந்து கொண்டிருந்தது. “ஒரே இடத்தில் நிசப்தமாக இருந்த இவை திடீரென்று பொருட்களை வீசியெறிகின்றன. இவை புதிய வகை நட்சத்திரங்கள். இவை அனைத்தும் விண்வெளியில் ஒரே இடத்தில் திரளாக நமது பால்வீதி நட்சத்திர மண்டலத்தின் மையப்பகுதிக்கு வெகு அருகில் அமைந்துள்ளன” என்று உற்றுநோக்கல் ஆய்வுக்குழுவின் தலைவரும் ஹெர்ட்ஃபெர்ஷெர் (Hertfordshire) பல்கலைக்கழக பேராசிரியருமான பிலிப் லூக்கஸ் (Prof Philip Lucas) கூறுகிறார். அரிதாகக் காணப்படும் புரோட்டோ நட்சத்திரங்களை (Protostar) ஆய்வாளர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தபோது இந்த விண்மீன் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.star 640புரோட்டோ நட்சத்திரங்கள் எனப்படும் நட்சத்திரங்கள் அவற்றின் பெற்றோர் மூலக்கூறு மேகங்களில் இருந்து உருவாகும் இயல்புடைய இளம் நட்சத்திரங்கள். இவை ஸ்டெல்லர் வளர்ச்சி (stelllar growth) என்று அழைக்கப்படும் வளர்ச்சி நிலையை அடைகின்றன. இது ஒரு நட்சத்திரம் உருவாகும் காலத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கிறது. துடிப்புகளுடன் கூடிய இந்த வளர்ச்சி நிலையில் இளம் நட்சத்திரங்கள் சுற்றியுள்ள விண்மீன் உருவாக்கத்திற்கு உதவும் வாயுப் பொருட்களை உரசுதல் மூலம் பெறுகின்றன.

இதனால் இவை திடீரென்று பெரும் ஒளியுடன் பிரகாசிக்கின்றன. ஆய்வின்போது வெடித்தலுடன் கூடிய 32 புரோட்டோ நட்சத்திரங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் சில வழக்கத்தை விட நாற்பது மடங்கு அதிக ஒளியுடனும் வேறு சில முன்னூறு மடங்கு அதிக ஒளியுடனும் பிரகாசித்தன. பிரம்மாண்டமான மற்றொரு சிவப்பு நட்சத்திரக் கூட்டத்தை பகுப்பாய்வின்போது ஆய்வாளர்கள் எதிர்பாராதவிதமாகக் கண்டுபிடித்தனர். ஆனால் இவற்றில் ஏழு புதிய சிவப்பு பிரம்மாண்ட நட்சத்திரங்கள் (Red giant stars) உள்ளன என்பது மேலும் அவற்றை மிகப்பெரிய ஐரோப்பிய தென்மண்டல தொலைநோக்கியை (European Southern Observatory’s Very Large Telescope) பயன்படுத்தி தீவிரமாக ஆராய்ந்தபோது தெரிய வந்தது. ஆய்வாளர்கள் இவற்றிற்கு ஓல்டு ஸ்மோக்கர்கள் “old smokers” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த விண்மீன்களுக்குள் காணப்படும் நிலையில்லாத தன்மையும் வெப்பச் சலன நீரோட்டங்களும் இவை பெருமளவில் புகையை வெளியிடத் தூண்டுதலாக அமைகிறது. இதனால் இவை ஓல்டு ஸ்மோக்கர்கள் என்று அழைக்கப்படுகின்றன. தூசுக்கள் நிரம்பிய இந்த புகை ஒரே திசையில் உமிழப்படுவதாக கருதப்படுகிறது. இது சூரியக் குடும்பம் அளவு பிரம்மாண்டமானது.

மரணமடையும் நட்சத்திரங்களில் இருந்து வெளியிடப்படும் பொருட்கள் உயர் ஆற்றல் கதிரியக்கம் கொண்ட நியூட்ரினோக்கள், அணுக்கள், கரும்பொருட்கள், மின்னூட்டம் பெற்ற துகள்கள், மூலக்கூறுகள், போட்டான்கள் போன்றவற்றை பெருமளவில் நெருக்கமாக அல்லது பரவலாக காணப்படும் பகுதியில் (interstellar space) உமிழப்படும்போது அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகும் விதம் பற்றி அறிய முடியும். இதனால் இது முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்று கருதப்படுகிறது.

இவ்வகை நட்சத்திரங்கள் உலோக வளம் அதிகம் உள்ள மற்ற நட்சத்திரக் கூட்டங்களுக்கு கன உலோகங்களை பரவச் செய்ய உதவுகின்றன. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை ராயல் விண்வெளியியல் சங்கத்தின் மாதாந்திர ஆய்விதழில் (the Monthly Notices of the Royal Astronomical Society) வெளியிடப்பட்டுள்ளது.

பூமி மற்றும் சூரிய குடும்பத்தின் தோற்றம், அதன் அமைப்பு மற்றும் வரலாறு போன்றவற்றை நாம் மேலும் சிறந்தமுறையில் புரிந்து கொள்ள, மனிதனின் நாளைய விண்வெளிப் பயணங்களுக்கும் இந்த ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/jan/26/old-smokers-astronomers-discover-giant-ancient-stars-in-milky-way? 

சிதம்பரம் இரவிச்சந்திரன்