1969 ஜூலை 16. அப்போலோ11 திட்டத்தின்கீழ் விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோர் முதல்முறையாக நிலவில் கால் பதித்து அதன் தரையில் நடந்த நிகழ்வை மனித குலம் வியப்புடன் பார்த்தது. அன்று நடந்த விண்வெளிப் போட்டியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதத்தை நாசா இதற்காக செலவிட்டது. ஆனால் அப்போலோ11 வெற்றிக்கு முன் நிலவுக்கு மனிதரை அனுப்பும் முயற்சியில் அந்நிறுவனம் தோல்வி மேல் தோல்வி கண்டது.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பும் இப்போதும்
ஐம்பதாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட நிலவுக்கு நேரடியாகச் செல்வதும் தரையிறங்குவதும் இப்போது ஏன் கடினமாக உள்ளது என்பதற்கான சான்றுகளை இதுவரை நடந்துள்ள நிலவுத்திட்டங்களின் தகவல்கள் அளிக்கின்றன. சமீபத்தில் கேப் கெனாப்ரல் ஏவுதளத்தில் இருந்து வல்கன் செண்ட்டா ஏவுவாகனம் (Vulcan Centaur rocket) அதிகாலை இருளைக் கிழித்துக் கொண்டு பெரக்ரீன் (Peregrine) கலனை துல்லியமான பாதையில் செலுத்தியது. இது அதன் கன்னிப் பயணம்.
ஆரம்ப நொடிகளில் இந்த வெற்றி ஏவுதலுக்கு பொறுப்பான United Launch Alliance நிறுவனத்தின் தலைமை அலுவலர் டோரி புருனோ (Tory Bruno) குழுவினரிடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சிறிது நேரத்தில் கலனை உருவாக்கிய அஸ்ட்ரோபாட்டிக் (Astrobotic) நிறுவனம் என்ஜினில் எரிபொருள் கசிவதைக் கண்டுபிடித்ததால் கலன் நிலவில் தரையிறங்குவதற்கான வாய்ப்புகள் சுழியமாயின.இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி ராக்கெட் விஞ்ஞானமே இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் பயணங்களுக்கான அடிப்படையாக இன்றும் உள்ளது. பெரக்ரீன் தோல்விக்கு முன்பு தானியங்கி ஊர்திகளை நிலவுக்கு அனுப்பிய சீனா, இந்தியா, அறுபதாண்டுகளுக்கு முன்பு லூனா9 கலனை வெற்றிகரமாக நிலவில் மென்மையாக தரையிறக்கிய ரஷ்யாவின் 2023 லூனா25, இஸ்ரேலின் பெரிஷீட் (Beresheet), 2023 ஜப்பானின் இஸ்பேஸ் (Ispace போன்ற தனியார் நிறுவனங்கள் மேற்கொண்ட நிலவுப் பயணங்களும் தோல்வியிலேயே முடிந்தன.
“அதிக எடையுடன் இருந்தால் கலன் வெகுதூரம் விண்ணில் பறந்து செல்ல முடியாது. திட்டத்தின் பாதுகாப்பை இது குலைக்கிறது. கலிலியோ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வரிசை போன்ற ஒரு சில அரிய கலன்கள் தவிர பெருவாரியாக உற்பத்தி செய்யப்படாத மற்றவை ஒரே வடிவமைப்புடன் அடிப்படையில் ஒரே மாதிரியான பரிசோதனை முறைகளுடன் தயாரிக்கப்படுகின்றன. விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு அவை தானியங்கி முறையில் செயல்படுகின்றன. காரில் பழுது ஏற்பட்டால் நம்மால் அதை சரி செய்துவிட முடியும். ஆனால் விண்வெளியில் இந்த வாய்ப்பு இல்லை” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் ஜேன் வெர்னர் (Jan Wörner) கூறுகிறார்.
“விண்வெளி என்பது வித்தியாசமான தளம். நிலவு அதற்கென்று சொந்தமாக பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. அங்கு பூமியில் இருப்பது போல ஆறில் ஒரு பங்கு வலிமையான ஈர்ப்பு விசை உள்ளது. ஆனால் அதற்கு வளிமண்டலம் இல்லை. குறிப்பிட்ட இலக்கை அடைந்து பாராசூட்டைப் பயன்படுத்தி செவ்வாயில் தரையிறங்குவது போல இல்லாமல் நிலவில் கலன்கள் தரையிறங்க அவற்றின் என்ஜின்களையே அவை முழுமையாக நம்பியுள்ளன. ஒற்றை என்ஜினுடன் சிறிய கலன்கள் நிலவிற்கு அனுப்பப்படும்போது அவற்றின் வேகம் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். என்ஜினில் எரிபொருளை வழங்குவதை ஒழுங்குபடுத்தும் வால்வு உந்துவிசையை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் திறனுள்ளதாக வடிவமைக்கப்பட வேண்டும். வழக்கமான முறையில் என்ஜின் எரியூட்டப்படும்போது நிலையான உந்துவிசையைக் கொடுக்கிறது” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் நிலவு ஆய்விற்கான குழுவின் தலைவர் நீக்கோ டெட்மேன் (Nico Dettmann) கூறுகிறார்.
இயக்கத்தின்போது உந்துவிசையை மாற்றுவது சிக்கல் நிறைந்தது. முதல் நிலவுப் பயணம் 60களில் நிகழ்ந்தது. ஆனால் மனிதன் செல்வதற்கு நிலவு என்பது இன்றும் கடினமான ஒரு இடமாக உள்ளது. இது ஏன் என்பது இன்றும் ஒரு புரியாத புதிர்.
அப்போலோ பயணங்களுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கும் கலன்களின் புகழ் மங்கத் தொடங்கின. 1976ல் சோவியத்தின் லூனா 24 திட்டத்திற்குப் பிறகு 2013ல் சீனாவின் சாங்3 (Chang’e 3) கலன் நிலவில் மென்மையாகத் தரையிறங்கியது. தரை இறங்கும் கருவிகள் பல பத்தாண்டுகளாக உற்பத்தி செய்யப்படவில்லை. மற்றவர்களிடம் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை சுலபமாகக் கற்க முடியாது. பரிசோதனைகள் முக்கியமானவை.
ஏவுவாகனங்கள் திடீர் மாற்றங்களுக்கு உள்ளாகக் கூடியவை. அந்நிலையில் விண்கலன்களால் சுயமாக செயல்பட முடியாது. ஆற்றல், உந்துவிசை, வழியறியும் திறன், தகவல் பரிமாற்றம் மற்றும் கருவிகளின் செயல்திறன் மற்றும் ஆய்வுக்கலன்களின் ஆரோக்கிய நிலை போன்றவை ஒரு ஏவுதல் நிகழ்வின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள். என்றாலும் நிலவில் தரையிறங்குவதை உறுதியாக வெற்றி பெறச் செய்யும் தொழில்நுட்பம் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மற்ற விண்வெளி செயல்முறைகளைக் காட்டிலும் ஒரு நிலவுப் பயணத்தின் வெற்றிகரமான தரையிறங்கும் நிகழ்வைத் துல்லியமாக தரப்படுத்தி மதிப்பிடுவது கடினம். விண்வெளிப் போட்டி நடந்த காலத்தில் நாசா 25 பில்லியன் டாலர்களை அப்போலோ திட்டங்களுக்காக செலவிட்டது. நிலவை அடையும் முன்பு வரை அதன் பல முயற்சிகளும் தோல்வியைத் தழுவின.
ஆனால் இன்று நிலவுப் பயணங்களில் விண்கலன்களின் வடிவமைப்பு, கட்டமைப்பு, பரிசோதனைகள் போன்ற பல பிரிவுகளில் நாசாவிற்கு எழுபதாண்டு அனுபவம் உள்ளது. வணிகரீதியில் நிலவிற்கான பணிச்சுமை சேவைகள் திட்டத்தின் (Commercial Payloads Services Scheme CLPS) என்ற புதிய திட்டத்தின் கீழ் நாசா தன் செலவைக் குறைத்து கருவிகளை தயாரித்து நிலவிற்கு அனுப்ப அஸ்ட்ரொபாட்டிக், ஹூஸ்ட்டனில் செயல்படும் Intuitive Machines போன்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளது.
“இந்த தனியார் நிறுவனங்கள் புதியவை. அனுபவமற்றவை. இதனால் இவற்றின் ஆரம்பகால பயணங்கள் தோல்வியில் முடியும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் இவை தோல்வி தரும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்கின்றன. அதனால் முதலில் ஏற்படும் ஒரு சில தோல்விகள் காலப்போக்கில் வெற்றிகளைத் தரும்” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வு நிபுணர் டாக்டர் ஜாஷ்வா ரஸரா (Dr Joshua Rasera) கூறுகிறார்.
இந்த வெற்றிகள் நாளை நிலவுப் பயணங்களை சுலபமாக்கும். அப்போது அண்டவெளிக்கு செல்லும் வழியில் மனிதன் ஓய்வெடுத்துத் தங்கிச் செல்லும் இன்ப இடமாக நிலவு மாறும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்