மரங்களால் உருவாக்கப்பட்ட பவளப் பாறைகள் உயிர்ப் பன்மயத் தன்மையை மீட்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிரமிடு வடிவத்தில் ஏற்படுத்தப்பட்ட பேரி மரங்களால் ஆக்கப்பட்ட செயற்கை பவளப்பாறை அமைப்புகள் சில கடல்வாழ் உயிரினங்களின் வாழிடத்தை மீட்க உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. வளமிழந்த கடல் வாழிடங்களை கடலாழத்தில் அமைக்கப்படும் இந்த மர அமைப்புகள் மூலம் உயிர் பெறச் செய்ய முடியும்.

கடல்வாழ் உயிரினங்களில் 25% உயிரினங்களை பவளப் பாறைகள் காப்பாற்றுகின்றன; இந்த உயிரினங்களுக்கு வீடு, உணவு மற்றும் அவை இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து வளர்க்க பரந்து விரிந்த வாழிடத்தை கொடுக்கின்றன. பவளப் பாறைகளே நீர்வாழ் சூழலியல் சுழற்சியின் முதுகெலும்பு. 1950களில் இருந்து காலநிலை மாற்றத்தினால் பாதிக்கும் மேற்பட்ட இயற்கை பவளப் பாறைகள் அழிந்து விட்டன. இது கடல்சார் உயிர்ப்பன்மயத் தன்மையை வெகுவாகப் பாதித்துள்ளது.

உயிர்ப் பன்மயத் தன்மையில் நிகழும் இந்த பேரிழப்பைத் தடுக்க உடனடியாக எதுவும் செய்யாவிட்டால் உலகளவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழியும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க கடல்வாழ் உயிரின சமூகங்களை மீட்க விஞ்ஞானிகள் புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர். கடலின் அடித்தட்டில் மரங்கள் மூழ்குமாறு செய்யப்பட்டு செயற்கையான பவளப்பாறை திட்டுகள் உருவாக்கப்படுகின்றன.artificial reefநெதர்லாந்து கடலில்

இதில் ஒன்று, நெதர்லாந்து வாடன் (Wadden) கடற்பகுதியில் கீழே விழுந்த பேரி மரங்களால் பிரமிடு வடிவில் உருவாக்கப்பட்டு கடலின் அடித்தட்டில் மூழ்கச் செய்யப்பட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட செயற்கை பவளப்பாறை திட்டுகள்.

ஆய்வாளர்கள் இந்த அமைப்புகளை ஆறு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து கண்காணித்தனர். ஆழ்கடலில் ஜெராசிக் காலத்தில் மூழ்கியதாகக் கருதப்படும் மரபாகங்கள் பற்றிய செய்திகள் கிடைத்துள்ளன.

மரங்கள் விலை மலிவானவை. கழிவாக கைவிடப்படுபவை. கான்க்ரீட் அல்லது மூழ்கிய கப்பல் பாகங்களைப் பயன்படுத்துவதை விட மலிவானவை என்பதால் பவளப்பாறை உயிரினங்களை வளர்க்க இவை தேர்ந்தெடுக்கப்பட்டன என்று கடல்சார் ஆய்வுக்கான ராயல் நெதர்லாந்து ஆய்வு மையத்தின் விஞ்ஞானியும் முனைவர் பட்ட மாணவருமான ஜான் டிக்சன் (Jon Dickson) கூறுகிறார்.

புது வீட்டிற்கு வந்து குடியேறிய உயிரினங்கள்

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆய்வுக்குழுவினர் இவற்றை ஆராய்ந்தபோது அதில் ஆல்காக்கள், மீன்களின் முட்டைகள் மற்றும் பதினைந்திற்கும் மேற்பட்ட பார்னக்கிள்கள் (Barnacles) போன்ற இடம்பெயராத, ஒரே இடத்தில் நிலையாக வாழும் கடல்வாழ் உயிரினங்கள் (sessile organisms) வாழ்வதைக் கண்டுபிடித்தனர். மர பவளப்பாறை வீடுகள் அமைக்கப்பட்ட இடங்களில் பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகளில் இருப்பதை விட மூன்று மடங்கு அதிக மீனினங்கள் வாழ்வது தெரிய வந்துள்ளது.

மரபாகங்களால் அமைக்கப்படும் ஆழ்கடல் பவளப்பாறை அமைப்புகளின் உதவியுடன் சில குறிப்பிட்ட பவளப்பாறை உயிரினங்களை மீட்க முடியும் என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்துள்ளன என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். இத்திட்டத்தை வட கடல் போன்ற உலகின் மற்ற கடற்பகுதிகளில் அமைத்து அழிந்து வரும் உயிரினங்களைக் காப்பாற்றலாம்.

2017ல் மரக்கட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை பவளப்பாறை அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டது பற்றிய செய்திகள் வெளிவந்தன. கடலின் அடித்தட்டில் போடப்பட்ட இடத்திற்கேற்ப மரப்பகுதிகளால் பல உயிரினங்கள் கவரப்பட்டன. நெதர்லாந்து மற்றும் வட கடலில் தெளிவான நீர் அமைந்துள்ள கடற்பகுதிகளில் இந்த ஆய்வுகள் விரிவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 200 மீட்டர் ஆழத்திற்கும்

அத்தகைய இடங்களில் கடலின் மேற்பகுதியில் இருந்தே கீழ்பகுதியில் மர அமைப்புகளில் வாழும் மீன் மற்றும் இதர உயிரினங்களுக்கு இவை எவ்வாறு வாழிடத்தை ஏற்படுத்தித் தருகின்றன என்பதை விரிவாக அறிய முடியும் என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர். ஒவ்வொரு 200 மீட்டர் ஆழத்திற்கும் கடலில் வாழும் தாவர விலங்குகள் வேறுபடுகின்றன. இதனால் இந்த முறையை உலகின் எல்லா இடங்களிலும் அமைக்கப்படுவதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் உயிரினங்கள் அழிவில் இருந்து மீட்கப்படும் என்று ஜான் டிக்சன் கூறுகிறார்.

நீர்நாய்கள் உருவாக்கும் பவளப்பாறை அமைப்புகள்

உலகளவில் கடல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நீர்நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றால் உருவாக்கப்படும் பவளப்பாறை அமைப்புகள் (Oister reefs) கடற்சூழலில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து செயல்படுகின்றன. இவை சுற்றியுள்ள நீரை வடிகட்டி சுத்தப்படுத்துகின்றன. பவளப்பாறை உயிரினங்களுக்கு வாழிடம் மற்றும் உணவளிக்கின்றன. சில இடங்களில் புயல்கள், உயரமான அலைகளில் இருந்து உயிரினங்களைக் காப்பாற்றுகின்றன. மண் அரிப்பைத் தடுக்கின்றன. வளமான கழிமுகத் துவாரங்களை பாதுகாக்க உதவுகின்றன.

வட கடலின் தென்பகுதியில் முன்பு நீர்நாய்களால் உருவாக்கப்பட்ட 30% பவளப்பாறைகள் இருந்தன. ஆனால் இப்போது இது வெறும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே உள்ளது. உலகளவில் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்துவரும் நிலையில் அதிக செலவில்லாத சூழலுக்கு நட்புடைய இது போன்ற திட்டங்கள் எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.

கண்ணெதிரில் ஆறாம் இனப்பேரழிவு நிகழும் இன்றைய நிலையில் பவளப்பாறை உயிரினங்களைக் காக்க இது போன்ற உயிர்ப் பன்மயத் தன்மை செயல்முறைகளை உடனடியாக நாம் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வருங்காலத்தில் பூமி என்றொரு உயிர்க்கோளம் நீடித்து நிலைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/aug/25/reefs-made-from-trees-could-help-restore-biodiversity-study-finds?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It