ஆப்பிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பிசாசு நகம் (Devil Claws) என்றொரு செடி உண்டு. இதன் வேரில் காணப்படும் (iridoid glycosides, harpagoside and harpagide) இரிடாய்டு கிளைக்கோசைடு, ஹார்ப்பபோசைடு மற்றும் ஹெர்ப்பகைடு போன்ற மருந்துப் பொருட்கள் ரூமட்டாய்டு ஆர்த்திரிட்டிஸ் என்ற முடக்குவாதம், மூட்டிவலி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. உலகில் 25 விழுக்காடு மக்கள் முடக்கு வாத நோயால் அவதிப்படுகிறார்கள். இவர்களுக்கு நல்ல மருந்து இன்னமும் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில் பிசாசு நகம் செடியின் வேர்களுக்கான டிமான்ட் பல மடங்காகிக்கொண்டிருக்கிறது. ஆனால் மோசமான வானிலையினாலும், பொய்த்துக்கொண்டிருக்கும் மழையினாலும் இந்தச் செடி அழிந்து மறைந்து போகும் நிலையில் இருக்கிறது.

மிலன் கியார்கிவ் என்பவர் இதற்கு ஐடியா வழங்கியிருக்கிறார். இந்த செடியின் வேர்களை செயற்கையாக கண்ணாடிக் குடுவைகளில் வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார். ஹேரி ரூட் வளர்ப்பு முறை ஒரு நூதன முறை. அக்ரோ பேக்டிரியம் ரைசோஜென்ஸ் என்றொரு பேக்டிரிய கிருமி, வேர்களில் வளரக்கூடியது. இது வளரும் வேர்கள் மெல்லிய முடி போல ஆகிவிடும்; ஆனால் வேகமாக மளமளவென்று வளர்ந்துவிடும்.

என்ன ஆச்சரியம்! பிசாசு நகச் செடியின் கூந்தல் வேர்கள் குடுவைகளில் வேகமாக வளருவதுடன் மருந்து கெமிக்கல்களையும் குறைவில்லாமல் சுரந்தனவாம். இதை பயோஃபேக்டரி என்று அழைக்கிறார்கள். எதிர்காலத்தில் கூந்தல் வேர் வளர்ப்பு முறை மூலிகைகளை பாதுகாக்கவும், இயற்கையில் அவற்றைத் துன்புறுத்தாமல் இருக்கவும் இந்த பயோஃபேக்டரிகள் உதவுமல்லவா.

- முனைவர் க. மணி, பயிரியல்துறை, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

Pin It